பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Tuesday 20 September 2011

பொத்தி பொத்தி வளர்த்தேனே! -மனப் பொந்தையிலே வைத்தேனே!



வாங்கி வந்த வரமோ? -இல்லை
தாங்கி வந்த சாபமோ

இப்படியும் செய்வானோ? -இனி
இங்கு வந்தென்னைக் காண்பானோ?

என் முந்தானையையே பிடித்து
திரிந்த என்மகனே, உனை அவள் 
முந்தானையில் முடிந்தே -எனை   
முதியோர் இல்லம் அனுப்பினாளே!

அண்ணன் மகள் என்று தானே 
ஆசையோடு எடுத்து வந்தேன்.

திண்ணை கூட இல்லை யென்று  
எனை இங்கனுப்பி -என்
இதயம் அறுத்தே எறிந்தாளே! 

வாங்கி வந்த வரமோ -இல்லை
தாங்கி வந்த சாபமோ

பிள்ளைமனம் மாருமுன்னே -என்அப்பன் 
மாப் பிள்ளைப்பார்த்து கட்டி வைத்தான்.
பிள்ளை ஒன்று கொடுத்துவிட்டு -அவனும் 
கொல்லையிலே படுத்து விட்டான்

தொல்லை பல நேரிடினும் -இப்பாழும்
சமூகம் இளம் விதவை எனக்கே
அல்லல் பல தந்திடினும்

எல்லையில்லா அன்பூட்டி - என்
பிள்ளை உன்னை நான் வளர்த்தேனே!... 

பொத்தி பொத்தி வளர்த்தேனே! -மனப்
பொந்தையிலே வைத்தேனே!
அப்ப னில்லா பிள்ளை என்றே 
அக்கறை யோடு வளர்த்தேனே

பள்ளிக் கூடம் அனுப்பினேனே!  
காலேசுக்கும் அனுப்பினேனே!
உத்தியோகம் கிடைத்ததுமே
ஊரே அசந்து போய்விடவே -தாய் 
மாமன் மகளுக்கே -உனை
திருமணமும் தான் செஞ்சேனே!… 

ஒய்யாரமாய் வளர்த்தவனும் - இப்படி 
ஓரிரு நாளிலே மாறிடு வான்னு
ஒருத்தரும் சொல்ல லேயே!..

நான் வாங்கி வந்த வரமோ - இல்லை
தாங்கி வந்த சாபமோ?

அஞ்சாறு வயசுக்கும் அசராமல் - நான் 
ஆசை ஆசையா பால்கொடுத்தேன்.
ஆடி வரும் பிள்ளைக்கே அன்பாலே 
ஆட்டுப்பாலும் கொடுத்து வளர்த்தேனே!

மட மடன்னு வளரட்டும், என்றே
மாட்டுப் பாலும் கொடுத்தே  
பாசத்தோடு நேசமும் ஊட்டி
பாங்குடனே  வளர்த்தேனே!...

சொல்லும் படியே கேட்கிறேனப்பா -நீ 
சொல்லாத எதையும் செய்வேனோ? யப்பா
பொல்லாப்பு ஏதும் இல்லை -எனை
புறத்தாளாய் நடத்தாதே, உனக்கு
புண்ணியம் கோடி கிடைக்கட்டும்
எண்ணிய காரியம் செயிக்கட்டும்.

எனை ஒதுக்கித் தள்ளாதே
காலமெல்லாம் சுமந்தவளை 
காணா தேசம் அனுப்பிடாதே!

முன்னூறு நாள் மட்டுமா? -இல்லை 
முப்பது வருடம் சுமந்தவள் -வீட்டு
மூலையில் முடக்கிக்கொள்ள கூடாதென்றே
(முச்சந்திக்கே) முதியோர் இல்லம் அனுப்பினாயே!



இனி எதிரிக்கும் வர வேண்டாம் 
இப்படி ஒரு நிலமையடா! ...

உனைப் பார்த்ததெல்லாம் போது மென்றே 
சலிப்பால் தள்ளி விட்டுப்போகிறானே! -எனக்கு 
அவன் கள்ளிப்பாலேத்  தந்திருக்கலாமே!

நான் வாங்கிவந்த வரமோ? -இல்லை
தாங்கி வந்த சாபமோ?.

இனியும் வாழ்வேனோ! இப்படியே வீழ்வேனோ!
இனிஎன் உயிரும் போகாதோ? - இறைவா!
இன்னல்களும் தீராதோ?...

ஒண்ணா நடத்த வேண்டாமையா 
ஒரு மூலையில் நான் இருக்கேன்.
காஞ்சி தண்ணி வேண்டாமையா - அத 
காச்சி நானே குடுச்சிகிறேன்.
காசு பணம் வேண்டாமையா - எரு
ராட்டி தட்டி வித்துக்கிறேன்

பண்டம் பாத்திரம், ஒண்ணா வேண்டாமையா
பையில் தனியா வச்சுக்கிறேன் - நீ 
பாசம் காண்பிக்க வேண்டாமையா; 
பாவி உன்னை நான் பார்த்திருந்தா 
பொதுமையா!...

என்னப் பெத்தவனே! ஏ ராசா!
கட்டையும் வேகாதுடா… 
காட்டுக்கு போகும் முன்னே,

வீட்டைவிட்டு அனுப்பிடாதே -ஒரு 
வேலைக்காரியா நினைத்திடடா
வாசலிலே இருந்திடுறேன்
வாய் மூடி நிண்டிடுறேன்
நாயோடு படுத்துக் கிறேன் -உன்னப்
பெத்த தாயாக கேட்டுக்கிறேன்

ஏ ராசா! வேண்டாம்னு சொல்லிறாதே 
வீட்டைவிட்டுத் தள்ளிராதே
பாசம்வச்ச என்மனசு புரியாம - வெறும் 
வேஷம் என்று சொல்லாதே...

விஷம் கொஞ்சம் தந்துவிடு -  என் 
வேஷம் கலைஞ்சு போயி டுறேன்

அனாதைன்னு சொல்லி - அங்கே 
ஆசிரமத்தில் தள்ளி டாதே
பிள்ளைகளை பெத்துப் போடு
பீ மூத்திரம் அள்ளி - அதிலே
பேரானந்தம் பெத்துக்கிறேன்...

இத்தனையும் சொல்லியும் 
இப்படி ஏன் செய்தாயடா?

நான் பெத்த மகனே - இப்ப 
நாதியத்தேப்  போனேனடா! 

வாங்கி வந்த வரமோ? -இல்லை
தாங்கி வந்த சாபமோ?...




அன்புடன்,
தமிழ் விரும்பி ஆலாசியம் கோ.


8 comments:

mohammed said...

Very nice and thoughtful.
Nowadays we forgot affections in the name of modernism.
Thanks for wonderful thoughts.

கா.ந.கல்யாணசுந்தரம் said...

சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்.

காந்தி பனங்கூர் said...

தாய் தந்தையை கடைசி காலத்தில் நம் குழந்தையை போல பாத்துக்கனும். அருமையான கவிதை. மனதை வருடி செல்கிறது.

Unknown said...

///mohammed சொன்னது…
Very nice and thoughtful.
Nowadays we forgot affections in the name of modernism.
Thanks for wonderful thoughts.///

பேசும் தெய்வம் அவள் தாமேஎன்றும்
பேணி நம்மைக் காத்திடுவாள்.
தங்களின் வருகைக்கும் முபாரக்கிற்கும் நன்றிகள் நண்பரே.

Unknown said...

////கா ந கல்யாணசுந்தரம் சொன்னது…
சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்.///

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கவிஞரே!

Unknown said...

///காந்தி பனங்கூர் சொன்னது…
தாய் தந்தையை கடைசி காலத்தில் நம் குழந்தையை போல பாத்துக்கனும். அருமையான கவிதை. மனதை வருடி செல்கிறது.///

தங்களின் வருகையும் மகிழ்ச்சியும் மன
சாந்தி தருகிறது காந்தியாரே!

Shakthiprabha (Prabha Sridhar) said...

///வீட்டைவிட்டு அனுப்பிடாதே -ஒரு
வேலைக்காரியா நினைத்திடடா
வாசலிலே இருந்திடுறேன்…
வாய் மூடி நிண்டிடுறேன்
நாயோடு படுத்துக் கிறேன் -உன்னப்
பெத்த தாயாக கேட்டுக்கிறேன்…
//

மிகுந்த வலியைத் தந்த வரிகள். கவிதையும், முதியோர்கள் படமும் மனதை பிசைகிறது. இது போன்ற கணங்கள் யாருக்கும் வராமல் இருந்தால்...நன்று.

Unknown said...

////Shakthiprabha said...
///வீட்டைவிட்டு அனுப்பிடாதே -ஒரு
வேலைக்காரியா நினைத்திடடா
வாசலிலே இருந்திடுறேன்…
வாய் மூடி நிண்டிடுறேன்
நாயோடு படுத்துக் கிறேன் -உன்னப்
பெத்த தாயாக கேட்டுக்கிறேன்…
//

மிகுந்த வலியைத் தந்த வரிகள். கவிதையும், முதியோர்கள் படமும் மனதை பிசைகிறது. இது போன்ற கணங்கள் யாருக்கும் வராமல் இருந்தால்...நன்று.
24 December 2011 22:02/////

உண்மைதான் சகோதிரி...
அது போன்ற மகன்களைப் பெற்றத் தாய்களை....
அவளின் உணர்வுகளைப் புரியாத சில மகன்களை...
கேள்வியுறும் போது வலித்தது...
அதனின் வெளிப்பாடுதான் இது.
தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும்
நன்றிகள் சகோதிரி...

Post a Comment