பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Thursday 4 October 2012

வேதமுனிகள் தொழும் தேவியே!



வெள்ளை உள்ளம் கொண்டவருக்கு
வேண்டும் வரம் தருபவளே!
எல்லையில்லா பிரபஞ்சம் தனை 
தன் னகத்துள் கொண்டவளே!

கல்லா மில்லா உள்ள
மதைக் கொண்ட முனிவர்களின்
சொல்ல முதாய் திகழ்பவளே 
இச்சா ஞான கிரியாசக்தியே

வல்லமைத் தாரோயோ வாழ்வெலாம்
தெள்ளுத் தமிழ் கவிப்பாடி
சித்தம்நிறை தேவியுனை நித்தமும் 
நின் பாதம் பணிந்திடவே!

நீயின்றி நானில்லை நினது
நினைவின்றி எனது யிரில்லை
கனவிலும் பிரிவதில்லை நினைக்
காணும்வரை நான் ஓய்வதில்லை...

ஐம்பொருளின் ஆக்கமானாய் -என்
ஐம்புலனின் தாக்கமும் ஆனாய்
ஐயத்திற்கு அப்பால் நிற்கும்
ஜெயத்திற்கு ஆதாரமும் ஆனாய்

பேரொளியில் பிறந்தாயோ! எந்தை 
பேரொளியாய் பிறந்தாயே; எந்தாயே!  
பேரொலி எழுப்பும் மின்னல்கொடியே
பேரொலி எந்தன் மனப்
பேய் தனைக் கொள்ளுமோ!

கூறடி!; ஆனந்த பைரவி
யாரடி?; நானென்று எனக்கு;
பாரடி!; நான் உந்தன்
காலடி!; நின்றேக் கதறுகின்றேன்.

சேவடிதனை எந்தன் சிரமீதே 
ஓரடி யாவது வைப்பாயோ!
பூவடிதனை போன்று கின்றேன் 
கேளடித் தாயே யுனைக்
கெஞ்சிப் பணி கின்றேன்   

கூறாயோ ஒருபதில் கூறாயோ
பாராயோ கடைக்கண் கொண்டு
பாவம் யாவும் பொடிப் பொடியாக! 
இரங்காயோ இறங்கி என்
உயிருக்குள் உயிராய் உறங்கிக்கிடக்கும்
பேரொளி யினைத் தீண்டாயோ!

எங்கெங்கும் காணினும் நீயென்றால்
என்னுள் ளிருப்பதும் நீயன்றோ!
என்னுள் இருப்பதும் நீயென்றால்
எப்படிக் காண்பேன் நானின்றே.

அல்லும் பகலும் அல்லல்படும்
பிள்ளை யான் வேண்டுவது 
தில்லைக்கு எட்ட வில்லையோ!
கள்ளமில்லா எனதுள்ளம் கதறுவதும்
உன்செவிகளில் விழவும் இல்லையோ!

பிள்ளையான் பேயாய் உழல்கிறேன்
பேசாது இனியும் இருப்பாயோ!
சொல்லடி சிவசக்தி நிந்தன்
சோதனை இன்னும் நீளுமோ!

வேதனைத் தீர்ப்பாயோ இவ்வுடல்
வெந்தே தீயுமுன்னே எந்தன்மன  
வேள்வி தனை ஏற்பாயோ
வேண்டியதை வேண்டி நிற்கின்றேன்
விரைந்தே வந்தெனைக் காப்பாயோ!

வேதமுனிகள் தொழும் தேவியே!
வேதங்களை பாதமாக கொண்டவளே!
வேதநாயகியே! வினைகள் தீர்ப்பாயே
ஊனில் உறைந்தவளே! எந்தன்
உயிரில் கலந்தவளே அருள்வாயே!

கொல்லடி எந்தன் மனம்தனை;
வில்லோடு வரும் மன்மதனை
நில்லடா நீயங்கே என்றுநிறுத்தி
வல்லனாய் வென்றிடவே; எனக்கிங்கே
வல்லமைத் தாரோயோ -பத்ர
காளீ! நீலீ!! திரிசூலீஇ!!!

அக்னியால் சுட்டெரிப்பாய் எந்தன்
ஆனவமதையே; ஆவேசமுடனே 
ஆணிவேரோடு பெயர்த் தெடுப்பாய்
ன் கந்தை தனையே
நித்தமும் நினைப்பணிகின்றேன்; நீயே
நிமலன்பாதம் சேர்ப்பாய் என்தாயே!