பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Friday 30 December 2011

மனைவியின் அருமை...!




நீரின் அருமை பயிரில் தெரியும்!
நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும்!
கல்வியின் அருமை பதவியில் தெரியும்!
காசின் அருமை வறுமையில் தெரியும்!
தாயின் அருமை அன்பினில் தெரியும்!
தந்தையின் அருமை அறிவினில் தெரியும்!
நண்பனின் அருமை உதவியில் தெரியும்!
அண்ணனின் அருமை அன்பளிப்பில் தெரியும்!
அக்காவின் அருமை அரவணைப்பில் தெரியும்!
தம்பியின் அருமை தயவில் தெரியும்!
தங்கையின் அருமை விருந்தில் தெரியும்!
மகளின் அருமை மரியாதையில் தெரியும்!
மகனின் அருமை சுமையில் தெரியும்!
மனைவியின் அருமை அனைத்திலும் தெரியும்!
ஆனால்!... இது... 
அவளின் மறைவிற்கு பின்பே பலருக்கும் புரியும்!


Monday 19 December 2011

பச்சை வண்ண மேலாடை -அதில் பால் அன்ன நீரோடை!...



ச்சை வண்ண மேலாடை -அதில் 
பால் அன்ன நீரோடை -மனம் 
இச்சை கொள்ளும் பூஞ்சோலை -அதன் 
இடை இடையே சிறு பாறை...!

நெட்டை நெடிய மரங்களின் ஊடே
நிலையில்லா வாழ்வைப் போலே
அலை அலையாய் பனி மூட்டம்...!

கடலில் குளித்து எழுந்ததுமே தனது 
கரங்களை நீட்டும் கதிரவனும் -அவன்  
இரவெல்லாம் பிரிந்த விரகதாபம் தீர
பச்சைமலை நோக்கிப் பரவுகின்ற அற்புதக்காலை...!



நெடுதுயில் போட்டத் இளந் தென்றலோ 
நெட்டை மரங்களுக்கு விடைகொடுத்தே
நெளிந்து; விரிந்து; நறுமலர் அமர்ந்து,
தணிந்து உயர்ந்து; சுருங்கி அகண்டு
சுகந்தமாய் பறந்தே கிளம்பும் போதே...!

பனிப் போர்வை மூடித் தூங்கும் 
மலை யவளின் முகத்திரையை -மிகப் 
பவ்வியமாக நீக்கியே; தாய்ப்பாசம் பொங்கி 
அவளின் உச்சி முகர்ந்து  புறப்பட்டபோது...!



இரவெல்லாம் காத்து கடுங்குளிர் கோர்த்து 
இரங்கக்கேட்டே; இராவண ஏக்கம் -ஏங்கிக் 
கிடந்த பனி மூட்டமோ -இளம் 
இரவியின் வரவால் வியர்வைத்
துளிகளை விடுத்தே மிக வேகமாக 
விரைந்து சென்று மறைந்ததுவே...!


காதலன் அவனைக் கண்டதால் -அழகு
இராமனைக் கண்ட சீதையைப் போல் 
பச்சைவண்ண மலையோ மொத்தமும் பூத்து 
பலவண்ண ஓவியம் ஆகியதே -அதில்
இச்சை கொண்டே இளங்குயில் ஒன்று
இனிதே, மிகஇனிதே; தேன்சொட்டும்
பாடல் ஒன்றை இசைத்ததுவே...!

மனம் கொள்ளை போகும் பாடலுக்கோ... 
மனமயங்கிய தும்பிகள் யாவுமே -ஆங்கே 
மறந்தே போயின மது உண்ண...!




தும்பிகளே மயங்கிய தென்றால் -அதைச் 
சொல்லவும் வேண்டுமோ!, மெல்லியத் தளிர்  
அரும்பும், மொட்டும், போதுகளான -வண்ண 
நறும் பூக்கள் யாவும் அதுபோலவே...!


மதுக் குடம் ஒத்த மலர்க் கூட்டம் -அம்
மலர்களது மடிகள் கனக்க தேனூறி 
ஊரியத் தேனும் பெருக் கெடுத்தே 
மடை திறந்த அருவியைப்போல் -மலர்க்
காம்புகள் வழியே பாய்ந்தோடும்…  


தேன் பாயும்; தேனாறு அதுவும்
தேங்காமல் குளிர் நீரோடை 
உடுத்தும் மேலாடையாக -அங்கே
குளித்து எழும் பூங்காத்தையும்
மது மயக்கம் தந்தே தான் ஓடும்…! 


ஓடை யாவிலும் குதித்து தாவி 
ஓடிவரும் நீர்த் திவலை களை
ஓடி உடைக்க எதிர்த்து; முட்டிமோதி
அங்கே குஞ்சுகளோடு கொஞ்சி விளையாடும்
செக்கச் சிவந்த கெண்டை கயலோடு,
கெளுத்தியும்; அயிரையும்; கருத்த விராவும்;
பெருத்த வாழையும் சேர்ந்தே -அசுரவேகம்
பாயும் ஆராவுமாக அத்தனையும் சேர்ந்தே
ஆனந்தக் கூத்தாடும்மின்னலொளி மின்னும் 
அழகு வெள்ளி ஓடையதை காண்பார்தம்
மனம் கொள்ளை போம்...!

இத்தனை அழகும் இனிதாய் பெற்ற
அற்புத எழில் மலை!... அழகாய்.... 
என் கற்பனையில் வளர்ந்தே -இப்போது
அழகுக் கவிதையாய் மலர்ந்ததே!... 


Friday 16 December 2011

என் நிழலாய் வரும் நிஜமே ஏனிந்த இடைவெளி என்றே ஏங்குது எந்தன் மனமே!



என் இதயமதைப் பற்றியே
எங்கும் வந்தாய் எனைச் சுற்றியே 
வாசல் தெளிக்க வரும்போதே
தினமென் வாசல் எதிரே வருவோனே
நேசமதை நானறிவேன் - உனது
நித்திய தவமதை ஊரறியும்
சத்தியமாக சொல்கிறேன் - நீ
சாமர்த்தியமாகப் போய்விடு 
என் அப்பன் எழுந்து வருமுன்னே
என்முன் இல்லாது மறைந்து விடு



அத்தை மகனுக்கே மணமுடிப்பேன் -என்
சொத்தை முழுவதையும் சீர் கொடுப்பேன்
நித்தமும் இதையே கூறித் திரியும் -என்
அண்ணன் இங்கே வந்திடுவான் - அதனாலே 
விரைந்து இப்போதே போய்விடு - நம் 
வீட்டு நிம்மதி காத்துவிடு




கோவிலுக்குப் போனால் கூடவே வருகிறாய்!
குளியலுக்குப் போனால் குளக்காவலன் என்கிறாய்!
விடியலுக்கு முன்னே வீட்டு வாசல் வந்தவனே
வேலைவெட்டி இல்லையா?; ஏனிந்தத் தொல்லையா!
கல்லூரிக்கு போகும்போது கடையோரம் நிற்கின்றாய்!
கல்லூரி போனபோது எனக்கும் முன்னே காத்திருந்தாய்
பேரூந்தில் ஏறும்போது பின்புறமே நிற்கின்றாய்!
வேறுயாருடனும் பேசும்போதும் என்னையேப் பார்கின்றாய்...



உன்மௌன பாஷையதை, என் உள்ளம் அறியும் 
என் உள்ளமதின் ஆசையதை நீ அறிவாயோ?
என் உள்ளம் கவர்ந்தக் கள்வனே;
என்னை கொள்ளை அடித்துப் போனவனே
என் உயிர்க் காதலனே.... 

என்னுயிர் உனை, எப்போதும் காண்கிறேன்
எனினும் என்னுயிரே!.... சிலநேரம் என்னுயிர் 
நீ, இல்லாமல் இங்கு ஏனோ? வாழ்கிறேன்


என் நிழலாய் வரும் நிஜமே!
ஏனிந்த இடைவெளி என்றே
ஏங்குது எந்தன் மனமே

கனவில் வருகிறாய் தினமே 
பிரிவின் துயரால் படுக்கையில்
இறந்துக் கிடக்கும் நானே - அந்த 
நினைவில் உயிர்கிறேன் மறுகணமே
இன்னும் எத்தனைக் காலம்
இப்படியே இருப்போம் நாமே


உனக்கு மட்டும் தானே இந்த சிறுக்கி
எனைக் கட்டி முத்தம் தந்துவிடு நெருங்கி
இன்னும் ஏன்? தயக்கம் வீணே 
நம்முள் நாம் கலந்தப் பின்னே!

ஒன்று சொல்வேன் அதற்கு முன்னே
பரிசம் போடு பரவசத் தோடு 
எதிர்ப்பு இருப்பின்! பொறுப்பான் ஏன்

என் மாமன் மகன் நீ தானே! - என்னை 
அள்ளிக் கொண்டு போ விண்மீனே!







Thursday 15 December 2011

வஞ்சித்திணை பாட வேலும் விவேகமும் தாங்கிய விடியலுக்கு வெகுதூரம் இல்லை!


"பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே"
அவனுள்ளும் இருப்பதும் அந்த 
பேரொளி என்னும் பிரம்மமே என்றான்
மானுடம் போற்றிய மகாகவி....

போராளிகள் அல்ல யாராகிலும் சரி
சுட்டுப் பொசுக்கு, கொத்துக் கொத்தாய்
கூண்டோடு வெடித்துச் சிதறவே
வேண்டிய அளவுத் தாக்கு என்றே
ஈவு இறக்கமின்றியே கொலைவெறியோடு
பூ, பிஞ்சு,காய், கனி அனைத்தையும்
அடியோடு அழிக்கவே ஆணையிட 
எங்கிருந்தது வந்தது ஆணை..
ஐயகோ! ஈசனுக்கும் அடுக்குமோ?...

மனிதநேயம் தான் செத்துப் போனதோ?
ஓ மனமே!.. அது மனிதருக்கு மாத்திரம் 
இருக்கும் குணம் அன்றோ?...

கச்சத்தீவில் குச்சிக் கட்ட...
காட்டுமிராண்டிகளின் துணை கொண்டே 
மஞ்சளாற்றுக்கு மஞ்சம் போட்டு தந்து 
தந்திரமாய் வரலாறு தெரியாத
வந்தேறிகளின் துணைகொண்டே 
தஞ்சம் என்றே எங்கும் விரைந்து
நெஞ்சம் கொதிக்க மண்ணின் மைந்தர்களை 
தரணியெல்லாம் பரவ செய்து விட்டார்கள்!...

கெஞ்சிக் கேட்க பிச்சை அல்லவே - மனம்
துஞ்சியும் போகவில்லை எனினும் யாருக்கும்
அஞ்சியும் இருக்க வில்லை
மிஞ்சிப் போனால் இன்னும் எத்தனைக்காலம்
கொஞ்சம் பொறுத்திருப்போம் ஓரினத்தையே 
வஞ்சித்த பாவிகளை நிந்திக்க நெடுகாலம் இல்லை
வஞ்சித்திணை பாட வேலும் விவேகமும் தாங்கிய
விடியலுக்கு வெகுதூரம் இல்லை!!!....




Wednesday 14 December 2011

என் உள்ளம் கவர்ந்த கள்வனே! எருதமர்ந்து ஏகிய இமய வரதனே!



திருமுறைச் சாரம் பாடல் இரண்டு.

என் உள்ளம் கவர்ந்த கள்வனே!
எருதமர்ந்து ஏகிய இமய வரதனே!
முதிர் ஆமை ஓட்டையும் அதனுடனே
சதிர் வராக முளைப் பல்லையும்
கதிர் நின் மேனியெல்லாம் படர்ந்ததால்

சதுர வேத நாயகனே - நின் 
மதுர மார்பில் மாலை யானதால் 
முதிர் என்றும் அடையா - இளம்
நாகத்தையும் திருமார்பில் ஆரமாய் சூடியே

திருவோடு தாங்கியே சுந்தரஉருவோடு 
அருவமுமான குருவே என் இதயம்
நிரம்பிய அமுதே; நின் பூங்கழல் 
போற்றும் சான்றோர் தமக்கே தீங்கிலா
ஏற்றம் அளிக்கும் பொருட்டே - எழில்
பெற்றம் அமர்ந்து ஏகிய ஈசனே!

பிரமப்புரம் ஆளும் பெருந்தேவனே -நின்
பொற்பாதம் பணிகிறேன் நித்திய தேவனே
தப்பாமல் எனைத் தடுத்தாண்டு கொள்வாயே
கயிலை மலை நாதனே!- மாசற்ற
கனக மணி மார்பனே; கட்டழகனே; 
பார்வதிநாதனே எம்மை பரிந்துக் காப்பாய் 
பார்போற்றும் இப்பிரபஞ்சத் தலைவனே! 

திருச்சிற்றம்பலம்.

Monday 12 December 2011

மகாகவியின் 130 -ஆவது பிறந்தநாள் விழா!



மகாகவி ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் 130- ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம். தமிழுலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு வருகிறது.
அப்படி நமது மகாகவிக்கு திருவையாறு பாரதி இயக்கமும், திருச்சி வானொலி நிலையத்தாரும் சேர்ந்து, பாரதியின் 130- ஆவது பிறந்தநாள் விழாவை அதி விமர்சியாக கொண்டாடி இருப்பதை அறிந்து அன்னைத் தமிழின் சார்பாக மகிழ்ச்சியை தெரிவிப்பதோடு, அவ்விழாவிற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மகாகவிக்கு ஒரு இனியவிழா!
மகத்தான அறிஞர்கள் கூடியவிழா!
மாணிக்க ஒளியவன் கவிதையிலா,
மாமன்ற பேச்சும் மனதில் நில்லா!

கவிதை வானில் அவன் கவிநிலா,
காலங்கள் கடந்தும் வந்திடும் உலா!
வேதங்கள் புதுமைச் செய்த கலா!
வேதாந்த லட்சியம் விளம்பிய முழா!

அவன்கவி வேரிலே பழுத்தப் பலா,
வெடித்து தேனிலே நனைந்தச்சுளா! 
அடிமைத் தலையை அசைத்ததிலா
ஆணோடு பெண்ணையும் அமர்த்தியதிலா

அன்னைத் தமிழை போற்றியதிலா 
அகிலமெலாம் உயர எண்ணில்லா
அறிவுத்தரவே மண்ணில் வந்தநிலா 
மகாகவி இவனோ உலக கவிஉலா!

மகாகவி பாரதி! ஒரு யுகபுருஷன் இவன் புகழ் 
வாழிய! வாழிய!! வாழியவே!!!

அவ்விழாவைப் பற்றி அறிய விரும்புவோர் கீழ்கண்ட தளங்களுக்குச்  சென்று பார்க்கலாம்.



நன்றி வணக்கம்.