"பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே"
அவனுள்ளும் இருப்பதும் அந்த
பேரொளி என்னும் பிரம்மமே என்றான்
மானுடம் போற்றிய மகாகவி....
போராளிகள் அல்ல யாராகிலும் சரி
சுட்டுப் பொசுக்கு, கொத்துக் கொத்தாய்
கூண்டோடு வெடித்துச் சிதறவே
வேண்டிய அளவுத் தாக்கு என்றே
ஈவு இறக்கமின்றியே கொலைவெறியோடு
பூ, பிஞ்சு,காய், கனி அனைத்தையும்
அடியோடு அழிக்கவே ஆணையிட
எங்கிருந்தது வந்தது ஆணை..
ஐயகோ! ஈசனுக்கும் அடுக்குமோ?...
மனிதநேயம் தான் செத்துப் போனதோ?
ஓ மனமே!.. அது மனிதருக்கு மாத்திரம்
இருக்கும் குணம் அன்றோ?...
கச்சத்தீவில் குச்சிக் கட்ட...
காட்டுமிராண்டிகளின் துணை கொண்டே
மஞ்சளாற்றுக்கு மஞ்சம் போட்டு தந்து
தந்திரமாய் வரலாறு தெரியாத
வந்தேறிகளின் துணைகொண்டே
தஞ்சம் என்றே எங்கும் விரைந்து
நெஞ்சம் கொதிக்க மண்ணின் மைந்தர்களை
தரணியெல்லாம் பரவ செய்து விட்டார்கள்!...
கெஞ்சிக் கேட்க பிச்சை அல்லவே - மனம்
துஞ்சியும் போகவில்லை எனினும் யாருக்கும்
அஞ்சியும் இருக்க வில்லை
மிஞ்சிப் போனால் இன்னும் எத்தனைக்காலம்
கொஞ்சம் பொறுத்திருப்போம் ஓரினத்தையே
வஞ்சித்த பாவிகளை நிந்திக்க நெடுகாலம் இல்லை
வஞ்சித்திணை பாட வேலும் விவேகமும் தாங்கிய
விடியலுக்கு வெகுதூரம் இல்லை!!!....