பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label கவிதை.. Show all posts
Showing posts with label கவிதை.. Show all posts

Thursday, 4 October 2012

வேதமுனிகள் தொழும் தேவியே!



வெள்ளை உள்ளம் கொண்டவருக்கு
வேண்டும் வரம் தருபவளே!
எல்லையில்லா பிரபஞ்சம் தனை 
தன் னகத்துள் கொண்டவளே!

கல்லா மில்லா உள்ள
மதைக் கொண்ட முனிவர்களின்
சொல்ல முதாய் திகழ்பவளே 
இச்சா ஞான கிரியாசக்தியே

வல்லமைத் தாரோயோ வாழ்வெலாம்
தெள்ளுத் தமிழ் கவிப்பாடி
சித்தம்நிறை தேவியுனை நித்தமும் 
நின் பாதம் பணிந்திடவே!

நீயின்றி நானில்லை நினது
நினைவின்றி எனது யிரில்லை
கனவிலும் பிரிவதில்லை நினைக்
காணும்வரை நான் ஓய்வதில்லை...

ஐம்பொருளின் ஆக்கமானாய் -என்
ஐம்புலனின் தாக்கமும் ஆனாய்
ஐயத்திற்கு அப்பால் நிற்கும்
ஜெயத்திற்கு ஆதாரமும் ஆனாய்

பேரொளியில் பிறந்தாயோ! எந்தை 
பேரொளியாய் பிறந்தாயே; எந்தாயே!  
பேரொலி எழுப்பும் மின்னல்கொடியே
பேரொலி எந்தன் மனப்
பேய் தனைக் கொள்ளுமோ!

கூறடி!; ஆனந்த பைரவி
யாரடி?; நானென்று எனக்கு;
பாரடி!; நான் உந்தன்
காலடி!; நின்றேக் கதறுகின்றேன்.

சேவடிதனை எந்தன் சிரமீதே 
ஓரடி யாவது வைப்பாயோ!
பூவடிதனை போன்று கின்றேன் 
கேளடித் தாயே யுனைக்
கெஞ்சிப் பணி கின்றேன்   

கூறாயோ ஒருபதில் கூறாயோ
பாராயோ கடைக்கண் கொண்டு
பாவம் யாவும் பொடிப் பொடியாக! 
இரங்காயோ இறங்கி என்
உயிருக்குள் உயிராய் உறங்கிக்கிடக்கும்
பேரொளி யினைத் தீண்டாயோ!

எங்கெங்கும் காணினும் நீயென்றால்
என்னுள் ளிருப்பதும் நீயன்றோ!
என்னுள் இருப்பதும் நீயென்றால்
எப்படிக் காண்பேன் நானின்றே.

அல்லும் பகலும் அல்லல்படும்
பிள்ளை யான் வேண்டுவது 
தில்லைக்கு எட்ட வில்லையோ!
கள்ளமில்லா எனதுள்ளம் கதறுவதும்
உன்செவிகளில் விழவும் இல்லையோ!

பிள்ளையான் பேயாய் உழல்கிறேன்
பேசாது இனியும் இருப்பாயோ!
சொல்லடி சிவசக்தி நிந்தன்
சோதனை இன்னும் நீளுமோ!

வேதனைத் தீர்ப்பாயோ இவ்வுடல்
வெந்தே தீயுமுன்னே எந்தன்மன  
வேள்வி தனை ஏற்பாயோ
வேண்டியதை வேண்டி நிற்கின்றேன்
விரைந்தே வந்தெனைக் காப்பாயோ!

வேதமுனிகள் தொழும் தேவியே!
வேதங்களை பாதமாக கொண்டவளே!
வேதநாயகியே! வினைகள் தீர்ப்பாயே
ஊனில் உறைந்தவளே! எந்தன்
உயிரில் கலந்தவளே அருள்வாயே!

கொல்லடி எந்தன் மனம்தனை;
வில்லோடு வரும் மன்மதனை
நில்லடா நீயங்கே என்றுநிறுத்தி
வல்லனாய் வென்றிடவே; எனக்கிங்கே
வல்லமைத் தாரோயோ -பத்ர
காளீ! நீலீ!! திரிசூலீஇ!!!

அக்னியால் சுட்டெரிப்பாய் எந்தன்
ஆனவமதையே; ஆவேசமுடனே 
ஆணிவேரோடு பெயர்த் தெடுப்பாய்
ன் கந்தை தனையே
நித்தமும் நினைப்பணிகின்றேன்; நீயே
நிமலன்பாதம் சேர்ப்பாய் என்தாயே! 


Thursday, 23 February 2012

வங்கக் கடலோரம் வந்துதித்த ஞானச்சுடரே!

(நன்றி தினமலர்)

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 175 -ஆவது பிறந்தநாளான இன்று அவரை வணங்கி பேரருள் பெருவோம்.

வங்கக் கடலோரம் வந்துதித்த ஞானச்சுடரே!
எங்கள் எண்ணமெல்லாம் நிறைந்த அன்புச்சுடரே!
தங்க குருவே தரணிபோற்றும் திருவே!
சங்கடமில்லா வாழ்வைமுழங்கிய வேதச் சங்கநாதமே! 
காளியின் பக்தனே! வங்காளச்சித்தனே! -அன்
பாழிப் பித்தனே! ஜீவமுக்தனே!

பாரதத்தாயின் இடது இடுப்பில் இருகமர்ந்தோய்!
பாரெல்லாம் பணிந்துப் போற்ற உயர்ந்தோய்!
தேனினும் இனிய அன்பைப் பொழிந்தோய்!
'ஊனைஉருக்கி உள்ளொளி' பொங்கிப் பெருகியே 
மானுடம் செழிக்க, மகத்துவம் புரியவே 
மாணிக்க மாணவன் நரேந்திரனை பயந்தே
மாநிலம் உய்ய மாதவம் செய்தோய்!

கருணைக்கடலே! களங்கமில்லா அன்பின் ஊற்றே!
அருள்வாய் எந்தையே! நானுனை -மானசீகக் 
குருவாய் நினைந்தே நினதடிப்போற்றுகிறேன்!.



Monday, 20 February 2012

கூடலில் முக்கூடலில் தேடலில்...!




போற்றிடு மனமே பொல்லா வினையறுக்கும் 
பொற் பாதம் தினமே.

தினமும் யாதொரு கணமும் எந்தன்
மனமும் நினைமறக்கவும் கூடுமோ?

கூடலில் முக்கூடலில் தேடலில் -தேடுவோர்
பாடலில் தித்திக்கும் அமுதே!

அமுதே ஆருயிரே ஆலகாலம் உண்டே
குமுதக் குவலயம் காத்தோனே!

காப்பாய் கதிரொளி நிறைமதி நிமலா
பா(ர்)ப்பாய் என்றே பணிந்தோமே.

பணிந்தோம் நின்பாத மலர் -எனவே 
துணிந்தோம் நினைச்சேர தூயனே!

தூயனே மாயையின் மணாளனே -எங்கள்
நேயனே தடுத்தாள்வை தேவதேவனே!

ஈசனே எந்தையே என்னிலை யானுறுனிம்
நேசனேநினை நினைக்கையில் சிந்தையில் தேனூறும்
பூசனை வேறொன்றும் யான்புரியேன் -அல்லால்நின் 
தாசனாய் கமலப்பாதம் போற்றியே!


Monday, 13 February 2012

பாராமுகமேனோ? ஆராமுதனே! ஆறுமுகனே!






விநாயகர் காப்பு!

ஆனை முகத்தோனே ஆறுமுகனுக்கு மூத்தோனே  
வினைதீர்க்கும் நாயகனே வேத முதல்வனே 
சுனைக் கடிகமலமலர் பூத்தக் கற்பகமே 
நினைச் சரணமென்று பணிகிறேன்!

வெண்பாவின் சாயலில் எழுதியக் கவிதை.

தண்ணீர்மலை உறையும் முருகா! -நாங்கள்
வேண்டும் வரம்தர வேண்டும் இறைவா! 
வெள்ளை மனம்வேண்டும் முருகா! -வீணான  
தொல்லை தரும் இருள் நீங்கவேசிறு
பிள்ளை குணமது வேண்டும் முருகா! -நெஞ்சில் 
கள்ளமில்லா எண்ணமதை நாளும் பெறவே 
உள்ளன்போடு தொழுகிறோம் முருகா! -உணர்வில் 
உயிரில் உறைந்திடுவாய் குமரா!                                       (1)

சத்தியத்தின் திருவுருவே முருகா! -சலிப்பில்லா
சத்திய மனம் தருவாய் சக்திகுமரா!
சங்கடம் தீர்ப்பவனே முருகா! -ஒப்பில்லா
சங்கரனின் புத்திரனே முத்தமிழ் குமரா!
சரவணப் பொய்கையிலே உதித்தவனே முருகா! 
சரணகோஷம் பாடிப்பணிகின்றோம் தலைவா! -சிவ
சக்தியின் மைந்தனே முருகா! -அளவிலா
சக்தியைத் தருபவனே சுவாமிநாதா!                                  (2)

கருணையில்லையோ? என்மேல் உனக்கு கனிவுமில்லையோ?
கருத்தநாயகியின் கணவனேத் தொந்திபெருத்த நாதனின்சோதரனே!
வறுத்து எடுக்குதையா! வறுமையது -எனையாவரும்
வெறுத்து ஒதுக்கிடவே; நொறுக்கியே போட்டதையா! 
தடுத்து நிறுத்துமையா! எந்தன் தரித்திரியம் போய்விடவே 
விடுத்து எழுந்திடேன் நிந்தன் பாதமலர்தனையே! 
பொறுக்க முடியலையே முருகா! நீயுமின்னும் 
பொறுப்பதேனோ? எனைக்காக்க மறுப்பதேனோ?                   (3)   

நோய்தீர்ப்பாய் முருகா! மனப் பேயால் -வந்த
நோய்தீர்ப்பாய் முருகா! காணும் யாவிலும்
மெய்யதையே கண்டுணரும் வழியதைக் கூறாயோ!
ஐய! தேனினும் இனியனே தென்பழனி முருகனே
மெய்யா! ஊனிளுறைந்து உயிரில் கலந்தோனோ! 
பொய்யர்தம் பொய்யுரையை பொறுக்கும் மனமதை 
மையல் கொள்ளச் செய்வாயே மயில்வாகனனே!
தையல் நாயகியின் புதல்வனே!                                                      (4)

வேலை வேண்டும்; வேலையா! ஏதாவதொரு 
வேலை வேண்டும் முருகையா! -நாங்கள்
தங்கவோர் வீடுவேண்டும் வேலையா! தங்கவேலையா!
அங்கமெல்லாம் மின்னவே தங்கவைர நகைவேண்டும்
தங்கமான வேலையா! வைரவேலையா! -உந்தன்
மயில்மேய நன்புஞ்சைக் காடுவேண்டும் கதிர்வேலையா! 
மயிலோடுவந்த சேவல்கூவ கேணிமேடுவேண்டும் கந்தையா!   
மயிலேரிவந்தேநீ வாழ்த்தவேண்டும் சுப்பையா!                         (5)

இல்லறம் நல்லறமாம் முருகா! -அந்த 
நல்லறம் எனக்குமின்னும் வாய்க்கவில்லையே -திருக்குமரா!
சொல்லறம் கொண்டிங்குனைப் பணிகின்றேன் -நீயெனக்கு
நல்லதைச் செய்வாயென நம்பியுனை போற்றுகின்றேன் 
கள்ளமில்லா நல்லோனை கடமைத்தவறா வல்லோனை
உள்ளமெல்லாம் நினைத்தவிர வேறொன்றை நினையாதானை
நல்கணவனை யான்பெற்றிடவே -எல்லையிலா நினது
நல்கருணை பொழிவாய் தேவதேவனே!                                       (6)

பிள்ளையொன்று வேண்டிநின்றோம் முருகா! -நீயும்
பேசாமல் இருப்பதேன் முத்துக்குமரா
கிள்ளைமொழி  கேட்டிடவேங்கும் நெஞ்சம் -எந்தன்  
சொல்லை நீயும்கேளா மலிருப்பதேனோகந்தா!
கொள்ளை இன்பம் கோடிப்பணமிவை -எல்லையில்லா 
பிள்ளையன்பு முத்தத்திற்கு ஈடாகுமோ? நாதா!  
சொல்லித்தான் தெரியுமோ? முருகா! -உந்தன்
பிள்ளைநான் படும்பாடறியாயோ! சிவபாலா!                             (7)

பாராமுகமேனோ? ஆராமுதனே! ஆறுமுகனே! -பதில்
கூறாயோ! நினது திருவாய் மலர்ந்தே!
தீராயோ! ஏழையென் பாவங்களை வேரோடுப்பிடிங்கி 
ஆரத்தழுவாயோ! உயிர்கசிய ஊனுருக்கி பணிகின்றேன் 
தாராயோ! என்தொப்புள்க் கொடிமுல்லை துயர்போக்கி 
பார்த்தாயோ! பாவிநான் படும்பாட்டை -அன்புக்கடலே 
அருள்வாயோ! அற்பமான வாழ்வதையும் ஆனந்தமாக்க
உதறுவாயோ! இறுகப்பிடித்தேனின் மலர்ப்பாதத்தை.              (8)

ஆணவம் போக்கவேண்டும் முருகா! -வாழ்வில்
ஆனந்தம் பூக்கவேண்டும் ஆறுமுகா! - கொடும்
அகந்தையை அழிக்கவேண்டும் முருகா! -மனதில்
அகமாயையை நீக்கவேண்டும் மாயோன் மருகா! 
கர்வம் களையவேண்டும் முருகா! -இப்பிறப்பில்
கர்மவினை யாவும்கரைந்தோட
வேண்டும் கந்தா!
சர்வமும் நீயானாய் முருகா! -அந்த 
சர்வேசன் செல்லமான சிவகுமரா!                                                  (9)

ஊனமதை போக்குவாய் முருகா -மனயீன
ஊனமதை போக்குவாய், கோபமும்; குரோதமும் 
தானென்ற அகந்தையும்; தகமையில்லா ஆணவமும்;
வீணான ஆசையும்; வேண்டாத மோகமும் 
தானாகப்போகவே தயைசெய்வாய் எந்தையே! ஞானவேலா!
தேனான பாடல்களை தினந்தோறும் வார்த்திடவே
கானமழையில் நாளும் நானுனை நனைத்திடவே 
ஞானமதை எனக்கருள்வாய் ஞானக்கடலே!                                (10)

எங்கும் நிறைந்தவனே முருகா! இங்கில்லாமல் போவாயோ!
சங்கடத்தில் மூழ்கித் தவிக்கின்றேன் -நான்வலம்புரி
சங்கெடுத்தூதி அழைகின்றேன்நின் சங்குப்பூக் காதில்விழவில்லையோ?
அங்கமெல்லாம் சிலிர்க்கவே ஆறுமுகனுனை நினைகின்றேன் 
தங்கமயிலேறி வாராயோ! வெகுதூரம் சென்றுமறைவாயோ?
பொங்கிப் பெருகும் துக்கத்தால் நெஞ்சடைத்து நிற்கின்றேன்
கங்கையெனப்பெருகும் கண்ணீரால் நின்தங்கப்பாதம் நனைக்கின்றேன்
தயங்காமல் வந்தென்னைக்காவாய் பெம்மானே!                                                (11) 

கனவா இல்லை நினைவா கந்தையா
கணநேரம் கண்டக் காட்சியது முருகையா!
மனமது உன்னினைவில் மஞ்சத்தில் படுத்திருந்தேன் 
மணக்கோல உன்படத்தில் மல்லிகைப் பூக்கக்கண்டேன் 
மணம்பரப்பும் மல்லிகைவாசம் என்னுயிர்வரை வீசகொண்டேன் 
நினது கோளவிழிகள் அசையக்கண்டேன் -நினதிருக்கர
ஞானவேலது பறந்தெனைவலம் வந்துனை அடையக்கண்டேன்
தேனான அனுபவமது தேனினுமினியனே!                                              (12)






Sunday, 15 January 2012

நீயின்றி எதுவும் இல்லை!



உலகத்தை வாழ்வித்துக் காப்போன் -நல்
உலகமதை ஒளியில் நிறைப் போன்
பிரபஞ்ச படைப்பின் ஆதியவன் -அவன்
கரம், நமைப்பற்றி அணைக்கவே -நன்றியோடு 
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் -சிக்கென
அவன் தாள் பிடித்தே பணிந்திடுவோம் !
சிவனே போற்றி! சீவன் காக்கும் 
தேவனே! தேவாதிதேவனே !! போற்றி!!!

பொங்கலோ பொங்கல் என்றே -புவியோர்
மங்களம் பொங்க; அன்போடு, நன்றியும்
ஆனந்த வாழ்வதும் எங்கும் பொங்கிடவே! 
வானம் பொய்க்காது வையமெல்லாம் செழிக்கவே!
தானதர்மங்கள் சிறந்து தரணியெல்லாம் மகிழவே! 
நாளும் நானிலம்காக்கும் நாயகனை - நம் 
பாலும் மனத்தை பரிசுத்த மாக்கியே
பரந்தாமன் சூரிய நாராயணன் -அவன் 
கரம்பற்றி அணைக்கவே கனிவோடு வணங்குவோம் 
எமைக் காப்பாய் கருணைக்கடலே! 

சூரியனே போற்றி! சுடர் மிகு தேவனே போற்றி!!
நாதனே போற்றி! ஆதி மூலனே போற்றி!
நல்லோர் தீயோர் என்னும் பேதமிலாது
எல்லோரும் இன்புற்று வாழவே - எந்நாளும் 
அருளும் ஏகாந்த மூர்த்தியே போற்றி!
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
போற்றி!! போற்றி!! போற்றி!!

இனியப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.