பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Friday 20 January 2012

என் உயிரின் கீதம் நீ!




என் உயிரின் கீதம் நீ!

என் உணர்வுகளின் நாதம் நீ!
என் ஆனந்தத்தின் ஆரோஹனம் நீ!
என் ஆசைகளின் அவரோகணம் நீ!

சுருதி நீ! சுலோகம் நீ! சுரத்தோடு தாளம் நீ!
பெருகி ஓடும் இசையின் இனிமை நீ!
வீணையின் ஒலியில் வாழும் நீ!
வேணு கானம் நீ! வேதங்களின் சாரமும் நீ!

காலை மாலை கடும்பகல் யாவும் நீ!
இரவின் கருமை நீ! இரவியின் ஒளியும் நீ!
கடலின் ஆழம் நீ!
கவின்மிகு மலைமுகடும் நீ!

தேடல் நீ! பாடல் நீ!
தேனூறும் மலரும் நீ!
தில்லையின் அம்பலம் நீ!
திகட்டாத அமுதம் நீ
தேவாதி தேவன் நீ!

நடனம் நீ! நடராஜனும் நீ!
நடமாடும் நதியலையும் நீ!
நர்த்தனமாடும் கடலும் நீ!
நாரத கானமும் நீ!

தென்றல் நீ! திசையெல்லாம் நீ!
திங்கள் நீ! எனது கண்கள் நீ!
மங்கலப் பொருள்கள் யாவும் நீ!
மங்காத சங்கொலியும் நீ!
மணியோசை நீ! 
மாணிக்கப் பேரொளியும் நீ!

உயிர்களின் மூலம் நீ!
உயர் பிரபஞ்ச சக்தி நீ!
அன்பின் வடிவினன் நீ!
ஆனந்த மயமானவன் நீ!

வானம் நீ! வான் மேகம் நீ!
நீரும் நீ! நெருப்பும் நீ!
நிஜமான இருப்பும் நீ!
இயக்கம் நீ! காட்சிகளில் மயக்கம் நீ!
அணுவும் நீ! அண்டமும் நீ!
காணும் யாவும் நீ!

இல்லாததும் நீ! இருப்பதுவும் நீ!
சொல்லில் நில்லாதவனும் நீ!
சொல்லின் அழகானவனும் நீ!
இடியும் மின்னலும் நீ!
அமைதியும் அதனாழமும் நீ!


எல்லாமும் நீ! எல்லாவற்றிலும் நீ!
எல்லையில்லாப் பிரபஞ்ச இதயம் நீ!
காரணம் நீ! காரியம் நீ! காலமும் நீ!
காரண காரிய காலம் கடந்தவனும் நீ!

தாயும் நீ! சேயும் நீ!
தண்மையும் நீ! உண்மையும் நீ!
அன்பும் நீ! அறிவும் நீ!
பண்பும் நீ! பரிவும் நீ!

எல்லையில்லா பேருரு நீ!
என்னுள் உறையும் நீ!
என் உயிரோவியம் நீ!
என்னுள் ஒளிர்வாய் நீ!
என்னுயிரானவனே நீ!
என்னுயிரே நீ!நீ!நீ!.... 




Sunday 15 January 2012

நீயின்றி எதுவும் இல்லை!



உலகத்தை வாழ்வித்துக் காப்போன் -நல்
உலகமதை ஒளியில் நிறைப் போன்
பிரபஞ்ச படைப்பின் ஆதியவன் -அவன்
கரம், நமைப்பற்றி அணைக்கவே -நன்றியோடு 
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் -சிக்கென
அவன் தாள் பிடித்தே பணிந்திடுவோம் !
சிவனே போற்றி! சீவன் காக்கும் 
தேவனே! தேவாதிதேவனே !! போற்றி!!!

பொங்கலோ பொங்கல் என்றே -புவியோர்
மங்களம் பொங்க; அன்போடு, நன்றியும்
ஆனந்த வாழ்வதும் எங்கும் பொங்கிடவே! 
வானம் பொய்க்காது வையமெல்லாம் செழிக்கவே!
தானதர்மங்கள் சிறந்து தரணியெல்லாம் மகிழவே! 
நாளும் நானிலம்காக்கும் நாயகனை - நம் 
பாலும் மனத்தை பரிசுத்த மாக்கியே
பரந்தாமன் சூரிய நாராயணன் -அவன் 
கரம்பற்றி அணைக்கவே கனிவோடு வணங்குவோம் 
எமைக் காப்பாய் கருணைக்கடலே! 

சூரியனே போற்றி! சுடர் மிகு தேவனே போற்றி!!
நாதனே போற்றி! ஆதி மூலனே போற்றி!
நல்லோர் தீயோர் என்னும் பேதமிலாது
எல்லோரும் இன்புற்று வாழவே - எந்நாளும் 
அருளும் ஏகாந்த மூர்த்தியே போற்றி!
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
போற்றி!! போற்றி!! போற்றி!!

இனியப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Thursday 12 January 2012

மகான் உன்னை நினைக்கின்றேன்!



மகான் உன்னை நினைக்கின்றேன் -என்
மனமார நினைப் போற்றுகின்றேன்!

உலகம் செழிக்க உன்னதம் பெற்றிட
உலகமக்கள் உண்மையில் உறைந்திட
புதுநெறி புகுத்திய புதுமைத் துறவியே!

புதியஉலகம் படைக்க வேண்டியே
புவியெல்லாம் வலம் வந்தே -பல
புனிதர்களை படைத்த பிரம்மாவே! 

புண்ணிய பூமியின் புனிதம் காக்க
மண்ணின் மைந்தர்கள் நல்மனத்தை துளைத்து 
கருணை பொங்கும் மகத்துவம் செய்து...

மானுடம் வாழ மறுபிறவி சிறக்க
பிறப்பின் லட்சியம் அதை -இப் 
பிறவியிலே அடைய தியான மென்னும்
மெஞ்ஞான வழி காட்டிய ஞானப் பெருங்கடலே! 
இளைஞர் கூட்டத் தளபதியே! 

நீயும், நின் சிந்தனைத் தந்த அமுதமும் 
தேனுடன் பாலும் சேர்த்தாற் போலே
தேவனே! நீயுமென் சிந்தையில் சேர்ந்து...

நீ புவிக்கு வந்த அந்தப் புனித நாளின்
நினைவில் திளைத்து களித்து -மனம்மயங்கி 
விழித்து நின்னையே நினைத்து நினைத்து 
பேருவகை பெற்றிடும் இப்பொழுதில்...

பிறவிப் பெருங்கடல் நீந்த -என்னுள் 
பேரொளி பெருக அந்தப் பரமனை 
பேராவலில் உருகி வேண்டுகிறேன்.




Wednesday 4 January 2012

என் தமிழ்மொழி மேல் உனக்கு ஏனிந்தக் கொலைவெறிடா?




உணர்ச்சிப் பெருக்கை உள்ளக் குமுறலை 
எரிமலையென பொங்கியக் கோபக் கனலை 
பேய் முரசாகக் கொட்டாமல் மிகவும் மெல்லிய 
வரிகளில் யாழின் இசையாக வழிந்தோட 
வைத்திருக்கிறான் என் சகோதரன்... 

அது தான் அவன் யாழ்பாணத்தில் 
வாழ்வதின் நியதியோ!!!....  
என்னுயிர் சகோதரர்களே...
உங்களின் தமிழ் பற்றுக்கு 
நான் தலைவணங்குகிறேன்...

கொலைவெறியுடன் தமிழை கூறுபோட்ட தமிழ் சினிமா "கொலைவெறிப் பாடலை மனதில் வைத்து தனது உள்ளக் குமுறலை ஒரு எச்சரிக்கை சங்க நாதமாக எமது சகோதரர்கள் எழுப்பிய அற்புதத்தைப் பாருங்கள்!!!..


இதோ காணொளியைக் கண்டு ரசியுங்கள்.



பாடல்.

என் தமிழ்மொழி மேல் உனக் ஏனிந்தக் கொலைவெறிடா?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா!
கல்தோன்றி மண்தோன்றா முன்வந்த தமிழ் மொழிடா!- நீ
தமிழன் என்றா(ல்) கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா!

செம்மொழிப் போற்றும் செந்தமிழ் நாட்டில் 
தமிழுக்கு ஏன் பஞ்சம்?
தமிழை விற்றுப் பதக்கம் வாங்கும் 
தமிழா! கேள் கொஞ்சம்...

கம்பனின் வரிகள் வள்ளுவன் குறள்கள்
பாரதிக் கவிகள் எங்கே?...
தொன்று தொட்டு பழமை பாடும் 
தமிழனின் பெருமை எங்கே?... 

என் தமிழ்மொழி மேல் உனக் ஏனிந்தக் கொலைவெறிடா?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா!

ஏசு, புத்தன், காந்தி சொன்ன அஹிம்சை 
வழியைக் கேளு -தினம்
தமிழின் செழுமை படிச்சு வந்தா 
தணியும் கொலைவெறி பாரு! 

ஆஸ்கார் வாங்கியத் தமிழன் சபையில் 
பெருமை சேர்த்தான் தமிழில்!
செம்மொழிப் பாடிய புரட்சிக் கவிஞன்
தன் னுயிர்க் கலந்தான் தமிழில்!...

தமிழை வாழவை! இல்லை வாழவிடு!
இன்னும் தாங்காதடா மனசு...
தமிழன் என்று சொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அது மட்டும் தான் இருப்பு...

தமிழுக்காக உழைத்தவன் எல்லாம் 
வாய்ப்பை இழந்து நின்றான்...
தமிழை விற்று பிழைத்தவன் எல்லாம் 
நான் தான் கலைஞன் என்றான்...

பணத்திற்காக படைத்தவன் எவனோ 
உண்மைக் கலைஞன் இல்ல -அவன் 
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்  
அவனும் ரசிக னில்லை...

என் தமிழ்மொழி மேல் உனக்கு ஏன் இந்தக் கொலைவெறிடா
தமிழா!...
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா!
தமிழா!...

யாழ்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா!
தமிழா!என் தாய்மொழி தமிழைக் காப்பது 
தமிழனின் கடமை யடா!...

பாடல் ஆக்கம்: எஸ்.ஜே ஸ்டாலின், யாழ்பாணம்.
ஒலி, ஒளி வடிவம்: வர்ணன் மற்றும் அமலன். யாழ்பாணம்.

****************************************************************************
"இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை 
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" 
- மகாகவி பாரதியார்.

செந்தமிழ் நாட்டுத் தமிழன் மறந்தாலும் 
யாழ்ப்பாணத் தமிழா! என் சகோதரா... 
இப்போது தான் புரிகிறது இயற்கை ஏன்
உன்னை உலமெல்லாம் பரவச் செய்தது என்று...
அடுத்த ஜன்மம் இருந்தால் - அது 
உங்கள் வீட்டில் எனக்கு அமையட்டும்... 


நன்றி: ATHIRVU.COM & www.yazhmusic.com