பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Wednesday, 4 January 2012

என் தமிழ்மொழி மேல் உனக்கு ஏனிந்தக் கொலைவெறிடா?
உணர்ச்சிப் பெருக்கை உள்ளக் குமுறலை 
எரிமலையென பொங்கியக் கோபக் கனலை 
பேய் முரசாகக் கொட்டாமல் மிகவும் மெல்லிய 
வரிகளில் யாழின் இசையாக வழிந்தோட 
வைத்திருக்கிறான் என் சகோதரன்... 

அது தான் அவன் யாழ்பாணத்தில் 
வாழ்வதின் நியதியோ!!!....  
என்னுயிர் சகோதரர்களே...
உங்களின் தமிழ் பற்றுக்கு 
நான் தலைவணங்குகிறேன்...

கொலைவெறியுடன் தமிழை கூறுபோட்ட தமிழ் சினிமா "கொலைவெறிப் பாடலை மனதில் வைத்து தனது உள்ளக் குமுறலை ஒரு எச்சரிக்கை சங்க நாதமாக எமது சகோதரர்கள் எழுப்பிய அற்புதத்தைப் பாருங்கள்!!!..


இதோ காணொளியைக் கண்டு ரசியுங்கள்.பாடல்.

என் தமிழ்மொழி மேல் உனக் ஏனிந்தக் கொலைவெறிடா?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா!
கல்தோன்றி மண்தோன்றா முன்வந்த தமிழ் மொழிடா!- நீ
தமிழன் என்றா(ல்) கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா!

செம்மொழிப் போற்றும் செந்தமிழ் நாட்டில் 
தமிழுக்கு ஏன் பஞ்சம்?
தமிழை விற்றுப் பதக்கம் வாங்கும் 
தமிழா! கேள் கொஞ்சம்...

கம்பனின் வரிகள் வள்ளுவன் குறள்கள்
பாரதிக் கவிகள் எங்கே?...
தொன்று தொட்டு பழமை பாடும் 
தமிழனின் பெருமை எங்கே?... 

என் தமிழ்மொழி மேல் உனக் ஏனிந்தக் கொலைவெறிடா?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா!

ஏசு, புத்தன், காந்தி சொன்ன அஹிம்சை 
வழியைக் கேளு -தினம்
தமிழின் செழுமை படிச்சு வந்தா 
தணியும் கொலைவெறி பாரு! 

ஆஸ்கார் வாங்கியத் தமிழன் சபையில் 
பெருமை சேர்த்தான் தமிழில்!
செம்மொழிப் பாடிய புரட்சிக் கவிஞன்
தன் னுயிர்க் கலந்தான் தமிழில்!...

தமிழை வாழவை! இல்லை வாழவிடு!
இன்னும் தாங்காதடா மனசு...
தமிழன் என்று சொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அது மட்டும் தான் இருப்பு...

தமிழுக்காக உழைத்தவன் எல்லாம் 
வாய்ப்பை இழந்து நின்றான்...
தமிழை விற்று பிழைத்தவன் எல்லாம் 
நான் தான் கலைஞன் என்றான்...

பணத்திற்காக படைத்தவன் எவனோ 
உண்மைக் கலைஞன் இல்ல -அவன் 
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்  
அவனும் ரசிக னில்லை...

என் தமிழ்மொழி மேல் உனக்கு ஏன் இந்தக் கொலைவெறிடா
தமிழா!...
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா!
தமிழா!...

யாழ்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா!
தமிழா!என் தாய்மொழி தமிழைக் காப்பது 
தமிழனின் கடமை யடா!...

பாடல் ஆக்கம்: எஸ்.ஜே ஸ்டாலின், யாழ்பாணம்.
ஒலி, ஒளி வடிவம்: வர்ணன் மற்றும் அமலன். யாழ்பாணம்.

****************************************************************************
"இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை 
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" 
- மகாகவி பாரதியார்.

செந்தமிழ் நாட்டுத் தமிழன் மறந்தாலும் 
யாழ்ப்பாணத் தமிழா! என் சகோதரா... 
இப்போது தான் புரிகிறது இயற்கை ஏன்
உன்னை உலமெல்லாம் பரவச் செய்தது என்று...
அடுத்த ஜன்மம் இருந்தால் - அது 
உங்கள் வீட்டில் எனக்கு அமையட்டும்... 


நன்றி: ATHIRVU.COM & www.yazhmusic.com 

17 comments:

மதுமதி said...

யாழ்ப்பாண காணொளியை நான் முகப்புத்தகத்திலேயே கண்டேன்..சிறப்பு..அருமையான வரிகளைக் கொண்டிருக்கிறது..அதை பதிவில் இட்டதற்கு நன்றி..
ஈரோட்டு சூரியன்

தமிழ் விரும்பி said...

///மதுமதி said...
யாழ்ப்பாண காணொளியை நான் முகப்புத்தகத்திலேயே கண்டேன்..சிறப்பு..அருமையான வரிகளைக் கொண்டிருக்கிறது..அதை பதிவில் இட்டதற்கு நன்றி..
ஈரோட்டு சூரியன்///

தங்களின் பின்னூட்டத்திற்கும் அன்பிற்கும் நன்றிகள் நண்பரே!

Ramani said...

உணர்வுப் பூர்வமான கவிதை வரிகள்
காணொளியில் கேட்க சிலிர்ப்பு நேர்ந்தது நிஜம்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி

Ramani said...

த.ம 2

krishnar said...

///யாழ்ப்பாணத் தமிழா! என் சகோதரா...
இப்போது தான் புரிகிறது இயற்கை ஏன்?
உன்னை உலமெல்லாம் பரவச் செய்தது என்று...
அடுத்த ஜன்மம் இருந்தால் - அது
உங்கள் வீட்டில் எனக்கு அமையட்டும்...///

தம்பி! பதிவிற்கு நன்றி.
மேலும் தகவலாக.....
http://groundviews.org/2012/01/03/why-not-sing-kolaveri-di-in-jaffna-tamil/

தமிழ் விரும்பி said...

////Ramani said...
உணர்வுப் பூர்வமான கவிதை வரிகள்
காணொளியில் கேட்க சிலிர்ப்பு நேர்ந்தது நிஜம்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி
4 January 2012 20:00///

உண்மைதான் ஐயா!...
மிகவும் அற்புதமாக எழுதி இசையமைத்தும் இருக்கிறார்கள்
அதோடு அவர்களின் மொழிவுனர்வு தான் மிகவும் பாராட்டுக்குரியது...
நன்றி.

தமிழ் விரும்பி said...

////krishnar said...
///யாழ்ப்பாணத் தமிழா! என் சகோதரா...
இப்போது தான் புரிகிறது இயற்கை ஏன்?
உன்னை உலமெல்லாம் பரவச் செய்தது என்று...
அடுத்த ஜன்மம் இருந்தால் - அது
உங்கள் வீட்டில் எனக்கு அமையட்டும்...///

தம்பி! பதிவிற்கு நன்றி.
மேலும் தகவலாக.....
http://groundviews.org/2012/01/03/why-not-sing-kolaveri-di-in-jaffna-tamil/
5 January 2012 10:53 ////

நன்றிகள் அண்ணா!

ஷைலஜா said...

ஆஹா அருமையாய் பாடறாரே...கம்பன் வள்ளுவன் பாரதி வரிகள் பற்றி கூறீ....அதே மெட்டில்////பிரம்மாதம்!

தமிழ் விரும்பி said...

////ஷைலஜா said...
ஆஹா அருமையாய் பாடறாரே...கம்பன் வள்ளுவன் பாரதி வரிகள் பற்றி கூறீ....அதே மெட்டில்////பிரம்மாதம்!
5 January 2012 14:11 ////

உண்மை தான் அவர்களின் வரிகளும் இசையும், தமிழ் மொழியின் மீது கொண்டுள்ளப் பற்றும் என்னை மிகவும் அதிசயித்தது... அதற்கு மேலும் அவரின் குரலில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது... அதற்காகவே நான் பலமுறை அந்தப் பாடலைக் கேட்டேன். தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் சகோதிரி..

minorwall said...

யாழ் தமிழ்ப் பாடல் கேட்டேன்..

ஆனால் தனுசுவின் கொலைவெறி பாடல் கேட்டதில்லை..ஒருமுறைகூட கேட்கவில்லை..படு ஹிட் ஆகியிருக்கிறது என்பது வரை தெரிந்திருந்தும் ஏனோ நாட்டமில்லை..
ஆனாலும் பெருமளவில் இணையத்தில் தமிழுக்கு எதிராக பாடப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறபடியால் அப்படி என்னதான் இருக்கிறது என்று இப்போதுதான் கேட்டேன்..

எனக்கென்னவோ தமிழை இழிவுபடுத்தி அதிலே ஏதும் வசனங்கள் இருப்பதாக தெரியவில்லை..

'ஒன்லி இங்கிலீஷ்' என்று சொல்லி இருக்கும் இடத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு அதை தமிழை இழிவுபடுத்தியதாக நான் நினைக்கவில்லை..வேறெங்கும் ஏதும் உள்ளதா என்று அன்பர்கள் தெரிவித்தால் தெரிந்துகொள்கிறேன்..

தெளிவுபடுத்தும் விதமாக தனுசுவின் கொலைவெறிப் பாடலையும் எழுத்துவடிவில் வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

வெறும் பாடல்கள் என்ன பெரிய மாற்றத்தைக் கொடுக்குமென்று எனக்குத் தோன்றவில்லை..

நாடாளுமன்றத்துக்கு பலமாக நுழைய பிரதமர் கனவோடு அம்மா அடிஎடுத்துவைத்திருக்கும் பொதுக்குழு விஷயங்கள்தான் தமிழகத்தின் எதிர்வரும் காலத்தின் எதிர்காலம் நோக்கிய பார்வையாக இருக்கமுடியும்..இந்தியாவிலே தொடர்ந்து தமிழன் எந்த நிலையில் இருக்கமுடியும் என்பதற்கு தமிழனின் தற்போதைய ஒட்டுமொத்த பிரதிநிதி அம்மாவின் இந்த எதிர்காலக் கனவுதான் நிதர்சனமான பதில்....
ஒன்றுமே பிரகாசமாகத் தோன்றவில்லை..

தமிழ் விரும்பி said...

பொதுவாக பிற மொழிக் கலப்பு என்பது தவிர்க்க முடியாது, அது உலக இலக்கியங்களில் அல்லது இன்றையப் புதுக் கவிதைகள் வரை சொல், பொருள், ஓசை நயத்திற்காக வார்த்தைகள் கலக்கும் ஆனால் இங்கே அப்படி இருப்பதாகத் தெரியவில்லை... அதோடு இது போன்று பாமரனையும் சென்று அடையும் மிகப் பெரிய ஊடக சாதனன் இந்த திரைத் துறை... அது நமக்கு பொழுது போக்கு என்றுக் கருதினாலும் அதன் தாக்கம் சமுதாயத்தில் பெரும் அரசியல் மாற்றத்தையே உருவாக்கி இருப்பதை யாவரும் மறுக்க முடியாது..

அப்படி இருக்க திரைத்துறையில் இருப்பவர்களின் கவனம், மொழி, இனம், பாரம்பரியம் இவைகளை மொத்தமாக காலி செய்துவிடும் செயலை செய்யாது இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்புரிய வேண்டும்... இப்போது இன்னொரு சகலகலா வல்லவன் என்று சொல்லிக் கொள்ளும் தாடி வளர்த்த ஆஞ்சநேயப் பக்தரான ஒரு திரை படைப்பாளரின் மகனும் இந்தப் பாடலுக்குப் போட்டியாக எதோ எழுதி கிளம்பி இருப்பதாக கேள்விப் படுகிறோம்!?...

எனினும், இந்தப் பாடலை எழுதி பாடி இருப்பவருக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் தங்களது ஆக்கத்திலே சில கேள்விகளை வைத்து இருக்கிறார்கள் அது தான் இந்தப் பாடல் தமிழை எப்படி பாதிக்கும் என்ற தொலை நோக்குப் பார்வையில் விளையும் கவலை கலந்த உண்மை...

நவீன நீச்சல் உடையில் இருந்துக் கொண்டு பாரத நாட்டியம் அதுவும் தனி அறையில் ஆடிக் கொண்டால் அதில் குறைகூற அவசியம் இல்லை... அதையே பொதுவான மேடையிலே ஆடினால் ஆட்சேபத்திற்கு உரியதே!.... இதையே அதிகபட்ச உதாரணமாக கூறலாம்.... அப்படிப் பட்ட செயலாகவே தெரிகிறது... இதோ அந்த வருத்தமேவும் கேள்விகள்..

செம்மொழிப் போற்றும் செந்தமிழ் நாட்டில்
தமிழுக்கு ஏன் பஞ்சம்?
தமிழை விற்றுப் பதக்கம் வாங்கும்
தமிழா! கேள் கொஞ்சம்...

கம்பனின் வரிகள் வள்ளுவன் குறள்கள்
பாரதிக் கவிகள் எங்கே?...
தொன்று தொட்டு பழமை பாடும்
தமிழனின் பெருமை எங்கே?...

நன்றி மைனர்வாள்...

மகேந்திரன் said...

உலகம் முழுதும் பிரபலம்
பாடியவரை தேசத்து பிரதம மந்திரி அழைத்து
விருந்து கொடுத்தார்
என்பதையெல்லாம் தாண்டி...
ஏனோ??? அந்தப் பாடலை கேட்க மனம் வரவில்லை ஐயா...
நான் பலநாட்டினர் பணிபுரியும் இடத்தில் பணிபுரிகிறேன்
அனைவரும் என்னிடம் இது உங்க தமிழ்நாட்டுப் பாடல்
அருமையா இருக்குது என்று சொல்கையில் சிறு ஓரப் புன்னகையை உதிர்த்து
மனம் வேதனைபட்டதுண்டு...
தமிழே உன்னிடம் வார்த்தைகள் குறைந்துவிட்டதா..
உன்னிடம் இருக்கும் வளம் இவ்வளவுதானா..
உன் கைகால்களை முறித்துப்போட்டுவிட்டு
இப்படி ஒரு பாடலை புனைந்துள்ளனரே..
இந்தப் புகழும் மரியாதையும் உனக்கு தேவைதானா????
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.

இப்போது இந்த காணொளி கேட்டேன் ஐயா.
மனதுக்கு மகிழ்ச்சி
மகிழிசியை கொடுத்த அன்பர்களுக்கும்
அதைப் பகிர்ந்த உங்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

தமிழ் விரும்பி said...

////மகேந்திரன் said...
உலகம் முழுதும் பிரபலம்
பாடியவரை தேசத்து பிரதம மந்திரி அழைத்து
விருந்து கொடுத்தார்
என்பதையெல்லாம் தாண்டி...
ஏனோ??? அந்தப் பாடலை கேட்க மனம் வரவில்லை ஐயா...
நான் பலநாட்டினர் பணிபுரியும் இடத்தில் பணிபுரிகிறேன்
அனைவரும் என்னிடம் இது உங்க தமிழ்நாட்டுப் பாடல்
அருமையா இருக்குது என்று சொல்கையில் சிறு ஓரப் புன்னகையை உதிர்த்து
மனம் வேதனைபட்டதுண்டு...
தமிழே உன்னிடம் வார்த்தைகள் குறைந்துவிட்டதா..
உன்னிடம் இருக்கும் வளம் இவ்வளவுதானா..
உன் கைகால்களை முறித்துப்போட்டுவிட்டு
இப்படி ஒரு பாடலை புனைந்துள்ளனரே..
இந்தப் புகழும் மரியாதையும் உனக்கு தேவைதானா????
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.

இப்போது இந்த காணொளி கேட்டேன் ஐயா.
மனதுக்கு மகிழ்ச்சி
மகிழிசியை கொடுத்த அன்பர்களுக்கும்
அதைப் பகிர்ந்த உங்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
6 January 2012 18:21////

உண்மைதான் கவிஞரே!
தங்களின் உணர்வுகளை என்னால் உணரமுடிகிறது...
எனக்கும் அதே உணர்வு தான்...
வார்த்தைக்கா பஞ்சம் ஏனிந்த வேலை...
ஒருத் தமிழன் என்றும், ஒருக் கலைஞன் என்றும் தனக்குள்ள
பொறுப்பை உணராதது தான் வருத்தமளிக்கிறது... ஒருநாள் அவரே நிச்சயம்
இந்த செயல் தவறானது என்று வருந்துவார் என்றே நம்புகிறேன்...

ஆனால் திறமை இருக்கிறது அதை திறம்பட செய்திருந்தால் நாமும் சேர்ந்து அனுபவித்து இருக்கலாம்...
தங்களின் கருத்துப் பரிமாற்றத்திற்கு நன்றிகள் நண்பரே!

blaker71 said...

இப்போது இந்த காணொளி கேட்டேன் ஐயா.
மனதுக்கு மகிழ்ச்சி
மகிழிசியை கொடுத்த அன்பர்களுக்கும்
அதைப் பகிர்ந்த உங்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

krishnar said...

நல்ல கருத்துள்ள படங்களுக்கு விளம்பரங்கள் கிடைப்பதில்லை.

"உச்சிதனை முகர்ந்தால்" படம் பார்த்தல் நல்லது.இதனை ஒரு தகவலாகத் தருகின்றேன்.

விமர்சனம்..
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1501

தமிழ் விரும்பி said...

/////blaker71 said...
இப்போது இந்த காணொளி கேட்டேன் ஐயா.
மனதுக்கு மகிழ்ச்சி
மகிழிசியை கொடுத்த அன்பர்களுக்கும்
அதைப் பகிர்ந்த உங்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.
9 January 2012 03:15////

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் நண்பரே!

தமிழ் விரும்பி said...

krishnar said...
நல்ல கருத்துள்ள படங்களுக்கு விளம்பரங்கள் கிடைப்பதில்லை.

////"உச்சிதனை முகர்ந்தால்" படம் பார்த்தல் நல்லது.இதனை ஒரு தகவலாகத் தருகின்றேன்.

விமர்சனம்..
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1501
9 January 2012 09:35 ////

தகவலுக்கு நன்றி அண்ணா.. விமர்சனத்தை முழுதுமாகப் படிக்க வில்லை படம் பார்க்கவேண்டும் என்பதற்காக... பொதுவாக நல்லக் கதை அம்சம் இருந்தால் அவைகள் இன்றைய ரசனைக்கு உனாவது இல்லை.. உடல் இச்சை உணர்வுகளுக்கு உரமிடும் சாக்கடைகள் சந்தனங்களாகப் பூசிக் கொள்ளப் படுகிறது என்பதே கவலை அளிக்கிறது..

Post a Comment