பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Friday, 20 January 2012

என் உயிரின் கீதம் நீ!




என் உயிரின் கீதம் நீ!

என் உணர்வுகளின் நாதம் நீ!
என் ஆனந்தத்தின் ஆரோஹனம் நீ!
என் ஆசைகளின் அவரோகணம் நீ!

சுருதி நீ! சுலோகம் நீ! சுரத்தோடு தாளம் நீ!
பெருகி ஓடும் இசையின் இனிமை நீ!
வீணையின் ஒலியில் வாழும் நீ!
வேணு கானம் நீ! வேதங்களின் சாரமும் நீ!

காலை மாலை கடும்பகல் யாவும் நீ!
இரவின் கருமை நீ! இரவியின் ஒளியும் நீ!
கடலின் ஆழம் நீ!
கவின்மிகு மலைமுகடும் நீ!

தேடல் நீ! பாடல் நீ!
தேனூறும் மலரும் நீ!
தில்லையின் அம்பலம் நீ!
திகட்டாத அமுதம் நீ
தேவாதி தேவன் நீ!

நடனம் நீ! நடராஜனும் நீ!
நடமாடும் நதியலையும் நீ!
நர்த்தனமாடும் கடலும் நீ!
நாரத கானமும் நீ!

தென்றல் நீ! திசையெல்லாம் நீ!
திங்கள் நீ! எனது கண்கள் நீ!
மங்கலப் பொருள்கள் யாவும் நீ!
மங்காத சங்கொலியும் நீ!
மணியோசை நீ! 
மாணிக்கப் பேரொளியும் நீ!

உயிர்களின் மூலம் நீ!
உயர் பிரபஞ்ச சக்தி நீ!
அன்பின் வடிவினன் நீ!
ஆனந்த மயமானவன் நீ!

வானம் நீ! வான் மேகம் நீ!
நீரும் நீ! நெருப்பும் நீ!
நிஜமான இருப்பும் நீ!
இயக்கம் நீ! காட்சிகளில் மயக்கம் நீ!
அணுவும் நீ! அண்டமும் நீ!
காணும் யாவும் நீ!

இல்லாததும் நீ! இருப்பதுவும் நீ!
சொல்லில் நில்லாதவனும் நீ!
சொல்லின் அழகானவனும் நீ!
இடியும் மின்னலும் நீ!
அமைதியும் அதனாழமும் நீ!


எல்லாமும் நீ! எல்லாவற்றிலும் நீ!
எல்லையில்லாப் பிரபஞ்ச இதயம் நீ!
காரணம் நீ! காரியம் நீ! காலமும் நீ!
காரண காரிய காலம் கடந்தவனும் நீ!

தாயும் நீ! சேயும் நீ!
தண்மையும் நீ! உண்மையும் நீ!
அன்பும் நீ! அறிவும் நீ!
பண்பும் நீ! பரிவும் நீ!

எல்லையில்லா பேருரு நீ!
என்னுள் உறையும் நீ!
என் உயிரோவியம் நீ!
என்னுள் ஒளிர்வாய் நீ!
என்னுயிரானவனே நீ!
என்னுயிரே நீ!நீ!நீ!.... 




19 comments:

சசிகலா said...

படித்து முடிக்கையில் கோவிலுக்குள் இருபதைப் போன்ற உணர்வு அருமை

Unknown said...

///sasikala said...
படித்து முடிக்கையில் கோவிலுக்குள் இருபதைப் போன்ற உணர்வு அருமை
20 January 2012 13:46 ////

தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் சகோதிரி...

Radhakrishnan said...

நான் இல்லவே இல்லையே ஐயா. அருமை.

ஆரோகணம், அவரோகணம் அதிகப்படியாக ரசித்தேன்.

என்னுயிரே நீ, அப்படி எனில் உயிர் அற்ற நிலைதனில இறை இல்லையா?

மகேந்திரன் said...

பொய்யான மெய்க்கு
மெய்யான மெய்யாய்
மெய்ப்பொருளாய்
விளங்கும் ஆதி அந்தத்தின்
அழகிய கருப்பொருளாய்

பக்தி மனம் கமழலும் இனிய பாமாலை ஐயா...

Unknown said...

///V.Radhakrishnan said...
நான் இல்லவே இல்லையே ஐயா. அருமை.

ஆரோகணம், அவரோகணம் அதிகப்படியாக ரசித்தேன்.

என்னுயிரே நீ, அப்படி எனில் உயிர் அற்ற நிலைதனில இறை இல்லையா?
21 January 2012 00:13////

நானே நீ! நீயே நான் இந்த நிலை ஞானிகளான நிலையிலே உணரும் நிலை என்கிறார்கள் பெரியவர்கள்... அதனாலே அதை இங்கே சொல்லாமல் இருந்திட்டேன். இருந்தும் இவைகள் எல்லாமும் உணர்ந்து தான் சொல்லப் படுகிறதா என்றாலும்.... ஆம் என்றும் இல்லை என்றும் சொல்லாத இடை நிலையிலே நிற்கவும் செய்கிறேன்...
நான் நேற்று பணிக்கு வழக்கம் போல் சீக்கிரம் (என் பெண்ணை பள்ளியில் விடுத்து) பயணித்தேன் அப்போது சிற்றூந்து நிறுத்தும் இடத்திலே சற்று ஓய்வு எடுத்த போது... மலேசிய வானொலியில் ஒருப் பாடல்...

காதலே ஜெயம்... நீதான் எந்தன் தேசிய கீதம் ரஞ்சனா.. ரஞ்சனா... அந்தப் பாடல் கவிஞர் ஒரு பக்தனின் நிலையில் நின்று இந்த உடல் எனது ஆசையல்ல.. அதை விடுத்து ஆத்மார்த்தமான சில வற்றையே பற்றிப் பேசுவதாக இருந்தது தோன்றியது. அந்த சிந்தனையிலே அலுவலகம் வந்து மினஞ்சல் கூடப் பார்க்காமல் எழுத நினைத்து பிறந்தது இந்த வரிகள்... பழைய, புதிய என் ஆழமான ஞாபகம் அவ்வளவே...
///என்னுயிரே நீ, அப்படி எனில் உயிர் அற்ற நிலைதனில இறை இல்லையா? ////
உயிர் அற்ற நிலை என்று ஒன்று இல்லவே இல்லை.... அது சற்று முன்னர் தாங்கிய உடலுனுள் இல்லை என்பதே உண்மை... காரணம் நான் இறப்பதே இல்லை.... இப்பிரவியினும் ஒரு கீழான அல்லது மேலான நிலையில் பிறக்கும் (அவைகள் பழைய புதிய கர்ம வினைகளின் நல்லது கேட்டதின் நிலுவையைப் பொறுத்து)... அல்லது முக்தி பெற்று இறைவனோடு ஒன்றிவிடுதல்... அப்படிப் பட்டவர்களை இந்த உலகம் தெய்வமாக போற்ற ஆரம்பித்து விடுகிறது...

அத்வைதம் கூறுவது (நீயும் நானும் கடவுள் அதனாலே ஒருவரை ஒருவர் வணங்குவதாக... ஏசு மறு கன்னத்தை திருப்பிக் காண்பிக்க சொன்னார்... (ஆழம் பார்த்தால் வேறாக தோன்றும் மேலாகப் பார்த்தால் பைத்தியமாக தோன்றும்)... மகாகவியோ "பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே" என்றான்... எது இல்லாதபோதும் அது மட்டும் இல்லாது போவதில்லை... அது பிறப்பு இறப்பு அற்றது என்பர்... இன்னொரு விஷயம் இறந்த உடன் அந்த உடலிலே இருந்த ஆத்மா... ஒரு அருவ உடலுடன் வெளியேறி அடுத்த உடலை எடுப்பதற்கு ஒரு மண்டலம் ஆகும் என்பதாகவே ஒரு இடத்தில் விவேகானந்தர் கூறுகிறார்... அதவும் யாரின் மகனாகப் பிறக்க வேண்டும் அவனின் உணவு விளையும் பயிரின் விதை வழியே அவனது உடலுனுள் புகுவதாக கூறுகிறார்... இதைப் பற்றி விரிவாக அவர் பேசி இருந்தால் அதை நானும் இன்னும் அறிய வில்லை... மற்றப் படி பேய் பிசாசு என்பது எனக்குத் தெரியவில்லை... தூல உடலில் செய்ய முடியாத ஒருவன் பேயான உடன் சர்வ சக்தியும் பெறுவான் என்றால்... இந்த உலகில் அயோக்கியர்களாக அழிந்த பேய்களின் ராஜ்ஜியமாகத்தான் இருக்கும்....

பழைய பேய்களின் பயத்தைப் போக்க இறந்தும் காக்கிறார்கள் என்றக் கருத்தும் பிறந்து இருக்கலாம் அல்லவா! ஆராய வேண்டியது அதைப் பற்றி அறிய வில்லை இது வரை. நன்றி.

Unknown said...

////மகேந்திரன் said...
பொய்யான மெய்க்கு
மெய்யான மெய்யாய்
மெய்ப்பொருளாய்
விளங்கும் ஆதி அந்தத்தின்
அழகிய கருப்பொருளாய்

பக்தி மனம் கமழலும் இனிய பாமாலை ஐயா...
21 January 2012 02:59 ///

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் கவிஞரே!

ஷைலஜா said...

சிவராத்திரி தினமான இன்று சிவனை இங்கு உங்கள் கவிதைவரிகளில் கண்டேன் பொன்னார் மேனியனுக்கு பொன்னான கவிதை அளித்திருக்கிறீர் சகோதரரே!

Unknown said...

/////ஷைலஜா said...
சிவராத்திரி தினமான இன்று சிவனை இங்கு உங்கள் கவிதைவரிகளில் கண்டேன் பொன்னார் மேனியனுக்கு பொன்னான கவிதை அளித்திருக்கிறீர் சகோதரரே!
21 January 2012 14:31/////

தங்களின் வருகைக்கும் மகிழ்ச்சிக்கும் நன்றிகள் சகோதிரி...

Shakthiprabha (Prabha Sridhar) said...

அருமை....

Unknown said...

///Shakthiprabha said...
அருமை....
24 January 2012 19:05 ////

நன்றிகள் சகோதிரி..

krishnar said...

உங்கள் புலமையில் மெய்யியல் மெருகு பெறுகின்றது.

krishnar said...

///தில்லையின் அம்பலம் நீ!
...........
.........
.......! நடராஜனும் நீ!///

இவற்றை நீக்கிப் பார்த்தால்
மதபேதம் இல்லாப் பாடலாக‌
திகழ்கின்றது.

Unknown said...

///krishnar said...
உங்கள் புலமையில் மெய்யியல் மெருகு பெறுகின்றது.
27 January 2012 12:26///
///krishnar said...
///தில்லையின் அம்பலம் நீ!
...........
.........
.......! நடராஜனும் நீ!///

இவற்றை நீக்கிப் பார்த்தால்
மதபேதம் இல்லாப் பாடலாக‌
திகழ்கின்றது.
27 January 2012 12:57////

மிக்க நன்றி அண்ணா!

Marc said...

ஆம் எல்லாம் அவன் தான் உணர்ந்து பார்த்தால் தான் தெரியும்.அருமை கவிதை வாழ்த்துகள்

Shakthiprabha (Prabha Sridhar) said...

அன்புச் சகோதரர் தமிழ்விரும்பி,

எனக்கு பிடித்தமான உங்கள் எழுத்துக்கு என்னாலான
ஒரு சிறு அங்கீகாரமாக, liebster விருதை உங்களுக்கு
அளிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். தொடர்ந்து நிறைய
எழுதுங்கள்.

விருது வழங்கிய சுட்டி கீழே:
http://minminipoochchigal.blogspot.in/2012/02/liebster.html

ராஜி said...

எல்லாம் அவனே என்று உணர்ந்தேன் உங்க கவிதையில்...,

Unknown said...

////dhanasekaran .S said...
ஆம் எல்லாம் அவன் தான் உணர்ந்து பார்த்தால் தான் தெரியும்.அருமை கவிதை வாழ்த்துகள்////

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே!

Unknown said...

////Shakthiprabha said...
அன்புச் சகோதரர் தமிழ்விரும்பி,

எனக்கு பிடித்தமான உங்கள் எழுத்துக்கு என்னாலான
ஒரு சிறு அங்கீகாரமாக, liebster விருதை உங்களுக்கு
அளிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். தொடர்ந்து நிறைய
எழுதுங்கள்.

விருது வழங்கிய சுட்டி கீழே:
http://minminipoochchigal.blogspot.in/2012/02/liebster.html////

ஆஹா! மிக்க நன்றி சகோதிரியாரே!
தங்களின் அங்கீகாரத்திற்கும், பாராட்டிற்கும், விருதுக்கும் மிக்க நன்றி...

Unknown said...

///ராஜி said...
எல்லாம் அவனே என்று உணர்ந்தேன் உங்க கவிதையில்...,///

தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் சகோதிரியாரே!

Post a Comment