சுவாமி விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம்.
சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிய விரும்பி தேடியபோது கிடைத்தது.
(இவைகளை பள்ளிப் பாடத்தில் இவ்வளவு காலம் வைத்து கற்றுத்
தந்திருந்தால்! எத்தனையோ மெஞ்ஞானிகள் அல்ல நல்ல மனிதர்களையாவது நாடு
பெற்றிருக்கும் என்பது எனது ஆதங்கம். உலக மதங்களுக்கெல்லாம்; கருவும், கருவறையும் நமது வேதங்கள் என்றால் அது
மிகையாகாது.
மேலைநாடுகளையும் அம்மக்களையும் இறைவன்
விஞ்ஞானத்திற்கான கூரோடுப் படைத்திருக்கிறான் என்றால்.... கீழைநாடுகளையும்
அம்மக்களை யும் ... குறிப்பாக இந்தியாவையும்
இந்தியர்களையும் மெஞ்ஞானத்திற்காகப் படைத்திருக்கிறான்
என்று சொல்லத் துணிகிறேன்).
வேதாந்தத் தத்துவம்
(ஹார்வர்ட் பல்கலைகழகத்தில், 25 மார்ச் 1896
-ல் சுவாமி விவேகனந்தர் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்)
வேதாந்தத் தத்துவம் என்று இன்று பொதுவாகக் கூறப்படுவது, உண்மையில், தற்போது இந்தியாவிலுள்ள எல்லாப்
பிரிவுகளையும் (மதங்களையும்) தன்னுள் அடக்கியதாகும். (ஏன்? உலக
மதங்களும் இதில் அடக்கம் என்று பிற்பகுதியில் அவரே குறிப்பிடுகிறார்).
எனவே அதற்குப் பல்வேறு விளக்கங்கள்
இருந்திருக்கின்றன. இவை துவைதத்தில் துவங்கி, அத்வைதம் வரைப் படிப்படியாக முன்னேறி இருக்கவேண்டும் என்று நான்
நினைக்கின்றேன். துவைதிகள் புராணங்களைப் பெரிதாகப் போற்று கின்றனர், அத்வைதிகள் வேதாந்த நெறிகளையே முதன்மையாகக் கொள்கின்றனர்)
வேதம் அதற்கு எழுதப்பட்ட உரை வேதாந்தம். வேதாந்தம் என்ற சொல்லின்
பொருள் வேதங்களின் முடிவு என்பதாகும். வேதங்கள் இந்துக்களின் சாஸ்திரங்கள்.
வேதங்கள் என்பவை துதிப் பாடல்களும், சடங்குகளும் மட்டுமே
என்று பலராலும் சிலவேளைகளில் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்தப் பகுதிகள் தற்போது
ஏறக்குறைய உபயோகத்தில் இல்லை.
பொதுவாக வேதம் என்றால் வேதாந்தம் என்றுதான் தற்போது இந்தியாவில்
பொருள் கொள்ளப் படுகிறது. "வேதாந்தம்" என்பது "சுருதி" என்றத்
தனிப் பெயராலும் அழைக்கப் படுகிறது.
("சுருதி" ஒரு பிரபல நடிகரின் மகள்
ஒரு பெண் இசை அமைப்பாளரை நமக்கு நினைவுப் படுத்தும். அவரும் இதன் பொருட்டே தனது
மகளுக்குப் பெயர் வைத்து இருக்கலாம் காரணம் அவரும் வேதங்கள், அத்வைதம் சார்ந்த கருத்துக்
களில் நம்பிக்கைக் கொண்டவர் என்பதை அவருடைய திரைப் படங்களும் அவரிடம் நேர்காணலின்
பொது அவர் தரும் பதில்களும் நமக்கு உணர்த்தும். சரி சர்ச்சை வேண்டாம் விசயத்திற்கு
வருவோம்).
நடைமுறையில் இந்துக்களின் சாஸ்திரங்களாக இருப்பது வேதாந்தமே.
வைதீகத் தத்துவங்கள் எல்லாம் வேதாந்தத்தையே அடிப்படையாக கொள்ள வேண்டும்.
தங்களுக்கு ஒத்துவருகின்ற வேதாந்தக் கொள்கைகளை மேற்கோளாகக் காட்ட பெளத்தர்களும்,
சமணர்களும் கூடத் தயங்குவதில்லை.
இந்தியத் தத்துவப் பிரிவுகள் எல்லாம், வேதங்களே
தங்களுக்கு அடிப்படை உரிமை என்றுக் கொண்டாடினாலும், அவைகள்
தங்களின் நெறிகளுக்கு வெவ்வேறு பெயர்கள் வைத்துக் கொண்டன.
இந்த நெறிகளுள் கடைசியானது வியாசருடையது.
வியாசருக்கு முந்திய சிலவைகள் இருந்தும், வியாசரின் நெறிதான் சிறப்பாக வேதாந்தத்
தத்துவம் என்று அழைக்கப் படுகிறது.
பொதுவாக இந்தியாவில் மூன்று விளக்க உரைகள் அதன் பொருட்டு மூன்று
தத்துவப் பிரிவுகளும் அதனால் மூன்று நெறிகளும் தோன்றி இருக்கின்றன.
(வேதங்களின் விளக்க உரைகள் பாஷ்யம், டீகா, டிப்பணி,
சூர்ணி என்று பலவகைகள் இதில் பாஷ்யமே மூலப்பாடத்தை ஆதாரமாகக்
கொண்டு ஒரு கோட்பாட்டு முறையை நிலைநாட்டும்
முயற்சி.)
மூன்று நெறிகள்:
முதலில்
துவைதம் (இரண்டு என்பது அதன் பொருள் அதாவது பரமாத்மா, ஜீவாத்மா
என இரண்டு ஆத்மாக்கள் இருப்பதை நிலை நிறுத்தும் தத்துவம்),
இரண்டாவது விசிஷ்டாத்வைதம், மூன்றாவது அத்வைதம்
(அத்வைதம் இரண்டல்ல ஒன்றே அதாவது பரமாத்மாவும், ஜீவாத்மாவும்
ஒன்றே எல்லா ஜீவன்களிலும் பரமாத்மாவே இருக்கிறதாக
கொள்வது) ஆகும். இதில் இந்தியாவில் அத்வைதிகள் குறைவு.
எல்லா வேதாந்திகளும் / வேதாந்த நெறிகள் பொதுவாக சில கருத்துக்களில்
மட்டும் வேறுபடுகின்றன. ஆனால் மூன்று விசயங்களில் ஒத்துப் போகின் றன.
அவைகள்: 1. கடவுள், 2. வேதங்கள்
(வேதங்கள் என்பது வேதாந்திகள் மூலம் அந்தப்
பரம் பொருளிடம் இருந்து வெளிப்பட்ட அருள் வெளிப்பாடு, அதாவது ஞானிகள்
மெஞ்ஞானத்தினால் உணர்ந்தவைகள். நமக்கு புரியும் படி கூறினால் அது ஒருத் திரைப்படமாக
அவர்களுக்கு தெரிந்தது எனக் கொள்வோம். அப்படியானால், அவைகள் எத்தனைனாட்கள்
நிற்காமல் ஓடி இருக்க வேண்டும் எனத் தோன்றலாம்.
இதை விளக்க யோகி ஓசோ அவர்கள் அற்புதமான
விளக்கத்தைக் கூறுவார். பகவத் கீதையில் போர்களத்திலே அவ்வளவு பேர் கூடிய அந்த வேளையிலே
எப்படி பரமாத்மாவும், அர்சுனனும் அவ்வளவுப் பேசிக்கொண்டார்கள், அது நம்பும் படியான
கால அவகாசம் இல்லையே என்பதற்கு அருமையான விளக்கம்.
அது நாம் பிறந்து வளர்ந்து, கல்யாணம் முடித்து என்றுத் தொடரும்
வாழ்க்கையை எப்படி அரைமணிக் கனவில் கண்டு விடுவோமோ அதைப் போன்ற ஒரு நிலையில் நடந்த
விவாதம் எனக் கொள்ளவேண்டும் என்று. எவ்வளவு அற்புதமான விளக்கம்.)
3. படைப்புச் சுழற்சி - இந்த
மூன்றையும் அவர்கள் நம்புகிறார்கள்.
படைப்புச் சுழற்சிப்பற்றிய நம்பிக்கை பின்வருமாறு;
ஆகாசம் என்ற மூல ஜடப்பொருள் (உயிரற்றப் பொருள்) ஒன்றிலிருந்து
தோன்றியது தான் பிரபஞ்சம் முழுவதும் காணப்படும்
ஜடப்பொருள்கள் அனைத்தும்.
புவியீர்ப்பு சக்தி, இணைக்கும் சக்தி, விளக்கும் சக்தி போன்ற எல்லா சக்திகளும், உயிர்
சக்தியும் பிராணன் என்ற ஓர் ஆதி சக்தியிலிருந்து தோன்றியவை.
பிராணன் ஆகாசத்தின் மீது செயல் படுவதால்
பிரபஞ்சம் படைக்கப் படுகிறது, அல்லது வெளிப்படுகிறது. படைப்பின் தொடக்கத்தில் ஆகாசம் அசைவின்றி, மாறுதல் இன்றி இருந்தது. அதன்மீது பிராணன் அதிக அளவில் செயல் பட்டு,
அதிலிருந்து செடிகள், பிராணிகள், மனிதர்கள், விண்மீன்கள், போன்ற
தூலப் பொருட்கள் படைத்தது.
அடுத்தது பிரபஞ்ச மறைவு பற்றியதையும் இங்கேயே அவர் கூறியதை நினைவு
கூறுவோம்.
கணக்கிட முடியாத காலத்திற்குப் பின்னர் இந்த விரிவு அல்லது தோற்றம்
ஒடுங்கத் தொடங்குகிறது. ஒவ்வொன்றும் தூலநிலையில் இருந்து படிப் படியாக சூட்சும
நிலைக்கு மாறி, கடைசியில் முதற்பொருளான ஆகாசமும் பிராணணுமாக
மாறி ஒடுங்கிவிடுகிறது.
பிறகு, மீண்டும் ஒரு புது சுழற்சி
தொடங்குகிறது. இந்த ஆகாசத்திற்கும் பிராணணுக்கும் அப்பால் ஏதோ ஒன்று இருக்கிறது.
இந்த இரண்டையும் மூன்றாவது பொருளாகிய "மகத்" என்பதற்குள்
சுருக்கலாம். இந்த மகத் என்பது தான் பிரபஞ்ச மனம் (Cosmic mind ). இந்த பிரபஞ்ச மனம், ஆகாசத்தையும்,
பிராணனையும் படைப்பதில்லை: தானே அவையாக மாறுகிறது.
மேலும்… மனம், ஆன்மா, இறைவன்
பற்றிய நம்பிக்கைகளை பற்றி சுவாமி விவேகனந்தர் கூறியதன் சுருக்கத்தை தொடர்ந்து
பிறகு பார்ப்போம்.
(நான் எழுதிய
இந்தக் கட்டுரை ஏற்கனவே வகுப்பறையில் வெளிவந்தது ஆகும். இங்கே அதை
மீண்டும் பதிவிடுகிறேன்)
நன்றி வணக்கம்,
அன்புடன்,
தமிழ் விரும்பி.