பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Friday 29 July 2011

இரட்டை சூரியன்கள்! காலத்தால் வேறுபட்டாலும் கருத்தால் ஒன்றுபட்ட இவர்கள்...


பாரதியும் ஷெல்லியும்..

மஹாகவி பாரதியை ஆராய்ந்த மிகச்சிறந்த இலக்கியவாதிகள் எண்ணிலடங்கா! அது பழைய சோவியத் அறிஞர்களையும் தன்னுள்  அடக்கும். தனது வாழ்நாளில் பெரும்பாலான பகுதியை, பாரதியை பற்றி ஆராய்ச்சி
செய்து இந்த இலக்கிய உலகிற்கு, கவியோகி பாரதியின் மகாகவித்துவத்தை பறைசாற்றியவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர்  இலக்கியச் செம்மல். திருவாளர் ரகுநாதன் அவர்கள்.

காலத்தால் வேறுபட்டாலும், கருத்தாலும், வாழ்வாலும் பல விதங்களில் ஒற்றுமை பொருந்திய இருபெரும் மகாகவிகளை ஒப்பீடுசெய்து அதை பாரதியும் ஷெல்லியும் என்ற நூலாக்கி வெளியிட்ட ரகுநாதன் அவர்கள்

அந்தப் புத்தகத்தின் முன்னுரையிலே மிகவும் அருமையாக, ஆய்ந்து தெளிந்து, இலக்கிய அமுது படைத்திருக்கிறார்கள்.

(
பாரதியும் ஷெல்லியும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு. முதற்பதிப்பு 1964 எனக்கு ஐந்தாண்டுகாலம் முந்தியே பிறந்தது. என்னிடம் இருப்பது 1985 -ஆம் ஆண்டு வெளிவந்த மூன்றாம் பதிப்பு. இந்த அமுதத்தை முழுவதுமாக பருக நினைப்பவர்கள் புத்தகத்தை கடைகளில் வாங்கி படித்து இன்புறலாம்.

(
இரண்டு மாதங்களுக்கு முன்பு திருச்சி சிங்காரத்தோப்பில் பூம்புகார் நிலையத்திற்கு முன்பு இருக்கும் NCBH சென்று இந்த புத்தக உடன்பிறப்புகளை (siblings) தேடினேன். அங்கே இப்போதெல்லாம் வேறேதோ தான்
விற்கிறார்கள் என்ற விரக்தியில் விமானம் ஏறினேன்)

பிறகு ஏன் இந்த வீண் வேலை என்கிறீர்களா? இந்த எந்திர வாழ்க்கையில் எந்திரன் படம் பார்க்க கூட நேரமில்லா அவசர யுகத்தில் முழுவதும் பருக இயலாத பலருக்கும், இந்த அமுதத்தை ஒரு மடக்கு ஊத்தி விட்டால் போதை தலைக்கு ஏறி புத்தகத்தை வாங்க மாட்டீர்களா? என்ற அற்ப ஆசையே..

சரி வாங்கி என்ன செய்யப் போவது?.. என்ன! எனக்காக சோத்துக்கு கூட வழியில்லா நேரத்தில் கூட எனது  தந்தை வாங்கிவைத்த நூற்றுக் கணக்கான புத்தகங்களை; வயிற்றை நிரப்பிய பின் வாழ்வின் பாதியில் என்னைப்
போல் நீங்களோ உங்கள் பிள்ளைகளோ யாரோ ஒருவர் படித்து இன்புறலாம் அல்லவா அதனால் தான்  கூறுகிறேன்... படிக்க வேண்டாம், வாய்ப்பு இருக்கும் போது வைப்பாக வாங்கி மட்டும் வையுங்கள்... படிக்க ஆள் வரும்..)

அப்படி அவர்கள் உலக இலக்கியக் கடலில் மூழ்கி முக்குளித்து, குவித்த முத்துக் குவியலில் ஒரு சில  முத்துக்களை கோர்த்து நானும் அணிந்துக் கொண்டு உங்களையும் அணிந்து பார்த்து பரவசம் அடைய, வேண்டிக் கொள்கிறேன்.

".....
நன்மையையும் அறிவும்
எத்திசைத் தேனினும், யாவரே காட்டினும்
மற்றவை தழுவி வாழ்வீ ராயின்
அச்சமொன் றில்லை........"


"
தமிழ் சாதி" என்ற தலைப்பில், நமக்குக் கிடைத்துள்ள அரைகுறையான பாட்டொன்றில் மகாகவி மேற்கண்டவாறு  கூறுகிறான்.

இவ்வாறு கூறிய பாரதி 'நன்மையும் அறிவும்' வழங்கும் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பலவற்றையும்  தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினான்; அவற்றில் பலவற்றைக் கற்றுத் தெளிந்தான்; அவற்றில் காணக் கிடைத்த நல்ல பல கருத்துக்களைத் தேனீயைப்போல் திரட்டி சுவீகரித்து தனதாக்கிக் கொண்டான்; கவிதைகளைப்  பொறுத்த வரையில் அவனே சில பிற நாட்டுக் கவிதைகளைத் தமிழாக்கித் தந்தான்; சீன, ஜப்பானியக் கவிதைகள்
சிலவற்றையும், அமெரிக்கக் கவி விட்மன் முதலானோர் கவிதைகள் சிலவற்றையும் தெரிந்து, அவற்றை நமக்கு  அறிமுகப்படுத்தினான்; மேலும், அவனுக்கு ஆங்கில அறிவும் புலமையும் இருந்த காரணத்தால், ஆங்கிலக்
கவிஞர்கள் பலரையும் அவன் கற்றரிந்திருந்தான்; ஆங்கில நாட்டுக் கவிஞர் பெருமக்களான ஷேக்ஸ்பியர்டென்னிசன், வோர்ட்ஸ்வொர்த் முதலானவர்களை அறிந்திருந்தான்; ஆங்கிலக் கவிஞர்களில், குறிப்பாக,
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், கிட்டத்தட்ட ஏககாலத்தில் தமது அழியாத கவிதைகளை  ஆக்கிப்  படைத்து, துர்பாக்கிய வசமாக அற்பாயுளில் மாண்டுபோன கவிஞர்களான பைரன், கீட்ஸ், ஷெல்லி ஆகிய

மூவரிடத்திலும் அவன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான்; இவர்களிலும் அவனுக்கு செல்லியிடம் தான் மிகப் பெரிய ஈடுபாடும், கருத்தொற்றுமையும் இருந்ததெனலாம்.  (விடிவெள்ளிகள் விடியும்வரையே இருக்கும் அதன் ஒளிகள் அந்தர்யாமி! அழிவற்றவைகள் அவைகள்.) ஷெல்லியின் புரட்சிகரமான கருத்துக்களை ஒப்புக் கொள்ள மறுப்பவரும், முழு நூல் வடிவத்தில் அவன் முதன்  முதலில் எழுதிய 'ராணி மாப்' (Queen Mab ) என்ற புரட்சிக் கவிதையை, "ஆனால் ராணி மாபைப் படித்துப்

பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்ற ஒரே வரியில் ஒதுக்கி தள்ளி விடுபவருமான எட்மன்ட்ஸ் என்ற  விமர்சகர், செல்லியைப் பற்றி பின் வருமாறு எழுதுகிறார்: "வேறு எந்த ஒரு பெருங் கவிஞனைக் காட்டிலும்,
ஷெல்லி தன கவிதையிலேயே வாழ்ந்தான். அது மூர்க்கமாக, உணர்ச்சி வேகம் மிக்கதாக, எதிர்ப்புக் குணத்ததாக, முற்றிலும் காரிய சாத்திய மற்றதாக இருந்தால், அவனும் அவ்வாறே இருந்தான்." மேலும் பிறிதோரிடத்தில் அவர்,
"
அவன் எப்படி வாழ்க்கையில் தனித்து நின்றானோ, அதேபோல் ஆங்கிலக் கவிஞர்கள் மத்தியிலும் தனித்தே  நிற்கிறான்" என்றும் கூறுகிரா (Shelley and His Poetry  - E. W. Edmunds).

உண்மையான கவிஞன் 'காலத்தின் கண்ணாடி' ('கவிஞன் ஞானோ காலக் கணிதம்' - கண்ணதாசன்) என்று  சொல்வார்கள். கவிஞனை, அவன் வாழும் காலம், சூழ்நிலை தான் உருவாக்குகிறது என்றால் அது மிகையாகாது.

ஆம் , ஷெல்லி 1789 -ம் ஆண்டு நிகழ்ந்த பிரஞ்சுப் புரட்சியின் குழந்தை. "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்"  என்ற முப்பெரும் கோஷங்களோடு பிறந்த பிரஞ்சுப் புரட்சி குடியரசுத் தத்துவத்தை நிலைநாட்டவே வெடித்தது....

அதே நேரம் மன்னரின் 'தெய்வீக அரசுரிமை' க்கு எதிராக, பாராளுமன்ற உரிமைக்காகவும், ஓட்டு  உரிமைக்காகவும் போராடி ஓரளவு வெற்றியும் பெற்ற 1688 - ம் ஆண்டின் ஆங்கிலப் புரட்சியின் நூட்ட்றாண்டு
விழாவும் பிரஞ்சுப் புரட்சியை ஒட்டிக் கொண்டாடப் பட்ட நேரம்... முடியரசை ஒதுக்கி குடியரசை அரியணை அமர்த்தியக் காலத்தில் 1792 -ம் ஆண்டு ஆகஸ்ட் 4 -ம் தேதியன்று சசெக்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த பீல்ட்  பிளேஸ் என்னுமிடத்தில் ஷெல்லி பிறந்தான்; வளர்ந்தான். பேராசிரியர் உட்பெர்ரி             ( Woodberry ) என்பவர் கூறுவார்... "ஷெல்லி சிந்திக்கவும், உணரவும் தொடங்கிய பொழுது; உயிர் துடிப்புள்ள ஆத்மாவாக மாறியபொழுது,

(
பிரஞ்சுப் புரட்சியின்) முதல் செக்கரொளி கடந்து போய்விட்டது; ஆனாலும், அதே நம்பிக்கை நிறைவுதான்  அவனுள் துள்ளி எழுந்தது; அது தவிர்க்க முடியாததாக இருந்தது; அது அந்தப் புரட்சியின் குழந்தையான  அவனை, அதன் கவிஞனாகவும் மாற்றியது (புரட்சிக் கவிஞனாக)..." ( The Greater English Poets of 19th Century-  W. M. Payne).



ஷெல்லி பரம்பரையான பிரபுக் குடும்பத்தில், பிரபு வீட்டுப் பிள்ளையாகப் பிறந்தான்; அவனுடைய தந்தையான  திமோதி ஷெல்லி ஒரு பெரிய நிலப்பிரபு; அத்துடன் பாராளுமன்ற அங்கத்தினரும் கூட, சொல்லப் போனால்,
ஷெல்லி இரண்டு லட்சம் பவுனுக்கு மேற்பட்ட சொத்துக்கு வாரீசாகப் பிறந்தான்; வரிவிலக்கு இருந்த அந்தக்  காலத்தில் இந்தச் சொத்து குபேர சம்பத்து என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் ஷெல்லியின் புரட்சிப்
போக்கு இந்தச் செல்வத்தை மட்டுமல்லாமல், அந்த சீமான் குடும்பத்தையும் விட்டு, அவனது ஆயுட் காலம்  முழுவதும் விலகி இருக்கச் செய்து விட்டது.

செல்வக் குடும்பத்தில் பிறந்தவனான போதிலும், ஷேல்லியிடம் பிறவியிலே மனிதாபிமானமும், கருணையுள்ளமும்  அமைந்திருந்தது. மேலும் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகள் புனையவும் தொடங்கிவிட்டான் என்றேத்
தெரிகிறது.

ஷெல்லியின் பத்தாவது வயதுக் காலத்திலேயே அவனிடம் தென்பட்ட மனிதாபிமானத்தையும் புரட்சிப்  போக்கையும் சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்ச்சியை எட்மன்ட் பிளண்டன் என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்;

அதனளவில் அத்தனை முக்கியமில்லாத, எனினும் ஒரு தாராளமான துணிச்சலைக் காட்டும் ஷெல்லியின் ஒரு  செங்கை, அதாவது ஒரு நாட்டிய நிகழ்ச்சியின் போது, ஷெல்லி கடைபிடித்த அன்றைய சம்பிரதாயத்திற்கு
விரோதொமான ஒரு நடத்தை ஹோர்ஷாம் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியது.

கூடியிருக்கின்ற பெண் மக்களில் அந்தஸ்த்திலும் நாகரிகத்திலும் உயர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு  பீல்ட்பிலேசைச் சேர்ந்த இளங் கனவான்கள் நடனமாடும் நிகழ்ச்சி அது.  அந்தப் பெண்களைத் தவிர, மற்றவர்களின் கவனத்திலிருந்து தப்பாவிட்டாலும்; ஒரு யுவதி தனிமையாக ஒதுங்கி  அமர்ந்திருந்தாள். அவள் கற்பழிக்கப்பட்டவள். இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியும். ஷெல்லிக்கோ  இவ்வளவே போதுமானது. எவரது அனுதாபத்தையும் பெறாத, துரதிருஷ்டசாலியான அந்த யுவதியை நோக்கி,
ஷெல்லி சென்றான்; தனது இனிமை நிறைந்த பாணியில் அவளிடம் கை கொடுத்து அழைத்தான் " (Shelley - Edmund Blunden).

இனி சுருக்கமாக அவரின் வாழ்வைப் பார்ப்போம்...

ஷெல்லி பால்யத்தில் ஸியான் ஹவுஸ் அகாடமி என்றப் பள்ளியில் கல்வி பயின்றான் பிறகு 1805 - ஆம்  ஆண்டில் ஈட்டநிலுள்ள உயர்நிலைப்பள்ளியிலும் கல்வி கற்றான்.

பிரஞ்சு புரட்சி இளைஞர்களின் சிந்தனையை கெடுக்காது இருக்க வேண்டும் என்பதற்கும்..... முக்கியமாக  பிரபுக்களின் வாரிசுகளுக்கு அதன் தாக்கம் இருக்கக் கூடாது என்பதில் கல்வித்துறை எச்சரிக்கையாக இருந்தது...

ஆனால் ஷெல்லி இந்த கல்விமுறையையும் கட்டுப்பாட்டையும் எதிர்த்தே வந்தான்.. சூரியனை எப்படி கைகளைக் கொண்டு மறைக்க முடியும்? பள்ளிகளில் நடந்தக் கொடுமைகளைக் கண்டு கண்ணீர் வடித்தான்....அதன் வேதனையை தான் எழுதிய Revolt  of  Islam என்ற புரட்சிக் காவியத்தின்
சமர்பத்தில் பின்வருமாறுக் கூறுகிறான்:

(And then I clasped my hands and looked around
   But none near to mock my streaming eyes,
Which poured their warm drops on the sunny ground
   So without shame, I spake:- 'Iwill be wise,
And just, and free, and mild, if in me lies
   Such power, for I grow weary to behold
The selfish and the strong still tyrannise
   Without reproach and check.'I then controlled
My tears, my heart grew calm, and I was meek and bold
And from that hour did I with earnest thought
   Heap knowledge from forbidden mines of lore
Yet nothing that my tyrants knew or taught
   I cared to learn, but from that secret store
Wrought linked armour for my soul, before
   It might walk forth to war among mankind....) (Poem 4:5)


ஈட்டனில் பள்ளிப் படிப்பில் தொடங்கி 1810 -ல் ஆக்ஸ்போர்டில் கவியும் கருத்தும் தாங்கிய நூல்களை  வெளியிடத்தொடங்கினான்.

அது அன்றைய பிரபுக்களுக்கும், பாதிரிமார்களுக்கும் கோபத்தை ஏற்படுத்திற்று... அந்த புத்தகம் நாஸ்த்திகத்தின்  அவசியம் (The  Necessity of Atheism ) என்பதாகும்.....

அதில் கோபமுற்ற கல்லூரி நிர்வாகம் ஷெல்லியை அழைத்து ஜெரிமியா ஸ்டக்லி என்ற புனைப் பெயர் எனதல்ல  இந்தப் புத்தகமும் நான் எழுதியதல்ல என்று கூறிவிடு, நாங்கள் விட்டுவிடுகிறோம் என்று கூறியது...

ஷேல்லியோ ஐயா உங்கள் மதம் என்ன கூறுகிறதோ எனக்குத் தெரியாது..... பொய் சொல்வது தவறு என்று  எனது கொள்கை எனக்குக் கூறுகிறது ஆக நான் பொய் சொல்லப் போவதில்லை நான் தான் இதை எழுதினேன் என்று கூறினான்.

(
நல்ல ஆத்திகனும், நாத்திகனும் கருத்தில் எதிரானவர்களாகத் தோன்றலாம். இல்லை! இரவும் பகலும் (உளதாய்.. இலாதாய் போன்று) போன்றவர்கள் இருப்பு ஓன்று தான் என்பதாக நான் உணர்கிறேன்)

கல்லூரியும் ஷெல்லியை வெளியே அனுப்பிவிட்டது.... ஷெல்லியின் நடவடிக்கை அவனின் தந்தையின்  கோபத்திற்கு ஆளாகி கடைசியில் தந்தை மகன் உறவும் பாதிக்கப் பட்டுவிட்டது...வறுமையின் கையில்  மாட்டிக் கொண்டான் ஷெல்லி... உணவும், உடையும், இருப்பிடமும் கூட இல்லாது திண்டாடினான்... அதை  கேள்வியுற்ற தந்தை ஒரு சிறு தொகையை அனுப்ப முன்வந்தார்....

தனது தாத்தாவின் இறப்பிற்கு பின் கிடைத்த சொத்துக்களையும் மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு  இவனும் பெரு  வாழ்வு வாழவில்லை....பிறகு லண்டனில் தங்கினான்... அங்கு தனது சகோதிரியின் தோழியோடு பரீச்சயம்  ஏற்பட்டது.....

பாரதி சொல்வது போல் "காதலினால் இல்லை", கருணையினால்" செய்துவிட்டக் காரியமாக தன்னை விரும்பிய  Harriet Westbrook என்ற பெண்ணையும் அவளது வீட்டில் செய்யும் கொடுமையில் இருந்து காப்பதற்காகவும் எந்த  ஒரு ஜீவனும் தவிப்பதைப் பொறுக்காத ஷெல்லி, தனது வாழ்க்கையை அவளுடன் பகிர்ந்துக் கொண்டான்....

இரண்டு மூன்று ஆண்டுகள் தாம் குழந்தைகளைப் பெற்றும் கருத்து வேறுபாடுகள் அதனால் பிரிவும் ஏற்பட்டது...

(
இனி முழுவதுமாக எனது நடையில் இருக்கும்...)

இந்த சந்தர்பத்தில் தான் அந்தக் காலத்தில் ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த; பிரஞ்சு புரட்சி  ஈன்ற; சிறந்த எழுத்தாளர் William Godwin - ; ஆம் ஷெல்லி, வெகுகாலமாக ஏகலைவ பக்தி செலுத்தி வந்த
வில்லியம் காட்வின்னை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது...

கிட்டத்தட்ட அவர் இறந்திருக்க கூடும் என்று மக்களால் நம்மபப்பட்ட நிலையில், ஷெல்லி பேருவுவகையுடன்  கடித தொடர்பும், நேரடி தொடர்பும் கொண்டிருந்தான்... அப்போது அவர் வீட்டில் அவரின் முதல் மனைவியின்
மூலம் அவர் பெற்ற அவரின் மூத்த மகள் பதினாறு அகவையான Mary என்ற பெண்ணிடம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது...

மேரியின் தாய் Mary Wollstonecraft என்பவர். இவர் தான் இங்கிலாந்தில் பெண்விடுதலைக்காகப் போராடிய முதல் பெண்மணி எனலாம்..  ஆம், இந்த மேரி அந்த மாபெரும் இரு முற்போக்குச் சக்திகளின் உருவாக்கம் அவளும்
ஷெல்லியின் முற்போக்கான கருத்துக்களில் ஒன்றிப் போவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

இவள் ஹாரியட்டைப் போல் இல்லை, மேலும் அவளின் பிரிவின் துயரில் இருந்த ஷெல்லிக்கு இவளின் கருத்துசிந்தனை அனைத்தும் தென்றலில் கலந்த நறுமணமாய் இதயம் நிறைந்தது. கருத்தொருமித்தார்கள் ; அதனாலே
காதல் உற்றார்கள். ஆம்,இது ஆத்ம சங்கமம்.

1814 -
ல் ஷெல்லியும் மேரியும் ஐரோப்பாவிற்கு சென்று வாழ்ந்தார்கள். தனது முதல் மனைவிக்கு 1816 -ல் அவள்  நீரில் மூழ்கி இறக்கும் வரை, வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை அனுப்பியதோடு, அதன் பின்பே மேரியையும்  மணந்து கொண்டான் ஷெல்லி. தனது இறுதிக் காலம் வரை மேரியுடனேயே வாழ்ந்தான். ஷெல்லியின் இறப்பிற்கு  பின்பும் ஷெல்லியின் நினைவாலே மேரியும், மேரி ஷேல்லியாகவே வாழ்ந்து வந்தாள்.

இங்கிலாந்திற்கு திரும்பி வந்து தனது குழந்தைகளை தன்னோடு அனுப்ப மறுத்த நீதிமன்றத் தீர்ப்பில்  (இவனைப்போல் அந்தக் குழந்தைகளும், முற்போக்கான ஜனநாயக சிந்தனையால் கெட்டுப் போய்விடுவார்கள்

என்பது தான் காரணமாக கூறப்பட்டதாம்) மணம் நொந்து மீண்டும் மேரியோடு தனது தாயகமான இங்கிலாந்தை  விட்டு விட்டு, இத்தாலிக்கே சென்று ஒரு தேச பிரஷ்ட வாழக்கையை வாழ்ந்தான்.

இத்தாலியில் லெரிசி என்ற இடத்தில் தான் வாழ்ந்து?!  இல்லை தங்கியிருந்து  வந்தான். ஷெல்லிக்கு நீந்தத் தெரியாது, ஆக அவனுக்கு கடலின் மீது படகில் செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். ஒருமுறை தனது  நண்பர்களோடு ஸ்பெனியா குடாக் கடலில் படகில் சென்ற பொது புயல் அடித்து மூழ்கிய படகோடு ஷெல்லியும்  தனது முப்பது வயது முடியுமுன்னே அற்ப ஆயுளிலே 1822 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 தேதியன்று மூழ்கி  இறந்தான். சில தினங்கள் கழித்து கரை ஒதுங்கிய அவனின் உடல் எரி ஊட்டப்பட்டு அஸ்தி ரோமாபுரியில்  அடக்கம் செய்யப்பட்டது.

அற்ப ஆயுளில் முடிந்து போன இந்த ஷெல்லி அப்படி என்ன செய்தான்; இவனை ஏன்?... தனது குருவாக  எட்டயபுரத்தான், நமது மஹாகவி, யுகபுருஷன், கவிச் செஞ்சூரியன் சி.சுப்ரமணிய பாரதி ஏற்றுக் கொண்டு தன்னை  ஷெல்லிதாசன் என்றான்.

இருவேறு கண்டங்களில் இருவேறுபட்ட காலங்களில் வாழ்ந்த இந்த இரு மகாகவிகளின் கவின்மிகு கவியும்கயமையை சுட்டெரிக்கும் புரட்சிப் பொறியும்; அது தரும் ஆழ்ந்தக் கருத்தும்; அதிலே ஜீவித்து இருக்கும்

பிரமத்தின் சாயலான மானுடமும் பின்னாளில் மீண்டும் இந்த மன்றத்திலே  மஞ்சரியாய்ப் பூக்கும்.

கவியரசர் கண்ணதாசன் இறந்தபோது, கவிஞர் வாலி இவ்வாறு சொன்னார்.   “காலன் ஒரு படிக்காதவன்.  கண்ணதாசன் என்ற அருமையான புத்தகத்தைக் கிழித்துப்போட்டுவிட்டான்.

உண்மைதான். காலன் கிழித்துப்போட்ட மாபெரும் புத்தகங்களில் பாரதி & ஷெல்லி என்ற இரண்டு  புத்தகங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்!

நன்றி... வணக்கம்...

(2011 -ஆண்டு பிப்ரவரி இருபதாம் நாள் வாத்தியாரின் வகுப்பறையில் எனது ஆக்கமாக வெளிவந்ததன் மீள்பதிவு இந்தக் கட்டுரை)

அன்புடன்,
தமிழ் விரும்பி.




2 comments:

Unknown said...

நல்ல பதிவு தம்பீ!
நான் அறிந்த பாரதியும் அறிய
வேண்டிய ஷெல்லி என்ற கவிஞரும்
இங்கே இணையாக தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்

Unknown said...

////புலவர் சா இராமாநுசம் சொன்னது…
நல்ல பதிவு தம்பீ!
நான் அறிந்த பாரதியும் அறிய
வேண்டிய ஷெல்லி என்ற கவிஞரும்
இங்கே இணையாக தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
29 ஜூலை, 2011 7:31 pm////

அன்புடன் வணக்கம்,
தங்களின் வருகைக்கும்
பின்னூட்டத்திற்கும்
நன்றிகள் ஐயா!

Post a Comment