பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Thursday, 14 July 2011

சுவாமி விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம் - பகுதி - 2
சென்ற திங்கள், 11- ஜூலை, 2011 அன்று வெளிவந்த  பதிவின் தொடர்ச்சி.....

மனம், ஆன்மா, நம்பிக்கைகளை பற்றி விவேகானந்தர் கூறுவதன் சுருக்கத்தைப் பார்ப்போம்.


தயவு செய்து மெதுவாக கூர்ந்து இடைவெளி விட்டுப் படிக்கவும். புரியாதது போல் இருந்தாலும் மேலும் படிக்கவும். கொஞ்ச நேரம் விட்டுப் படிக்கவும்.
புரிந்தவைகளை மட்டும் ஞாபகத்தில் கொண்டு மேலும் படித்துக் கொண்டே போகவும்.

வேத விளக்கங்களை நாம் அறியப் பெறுவது என்பது நமக்கு கிடைத்த வாய்ப்பு. அதை கொஞ்சம் சிரமப் பட்டாவது தெரிந்து கொண்டால் இன்னும் சிறப்பு. மற்ற மதத்தார் பெரும்பாலும் அவரவர் மதம் கூறும் நெறிகளை வெளிப்படையாக பேசுகிறார்கள்.

ஆனால் உலகில் உள்ள அனைத்து மதங்களின் மூலமும் நம்முடைய வேதங்களில் இருந்து தான் பிறந்து இருக்கின்றன என்பதை நாம் எப்படி மற்றவர்களுக்கு சொல்லுவது. அல்லது மற்றவர்களுக்காக இல்லை என்றாலும். நம்முடைய மன திருப்திக்காக வாது தெரிந்து கொள்ளலாம் அல்லவா.

எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வரவேண்டும் என்பார்கள். ஏன் அப்படிக் கூறுகிறேன் என்று நினைக்கலாம். இந்த விஷயங்கள் அடங்கிய விவேகானந்தரின் "ஞான தீபம் சுடர் 4 " வாங்கி சுமார் பத்துவருடம் கழித்து தான் நான் படிக்கிறேன் என்பதால். சரி மேலும் பயணியுங்கள். மனமிருந்தால் மார்க்கமுண்டாம்.  சாங்கிய மன இயலின்படிஒரு பொருளை அறிவது என்பதை எடுத்துக் கொள்வோம். 

உதாரணமாகபார்ப்பது- இதில் முதலில் பார்க்கும் கருவிகளாக கண்கள் உள்ளன.

இந்தப் பொறிகளுக்குப் பின்னால் பார்வைப் புலன்கள் (பார்வை நரம்புகளும், மையமும்)  இருக்கின்றன. இவை புறக்கருவிகள் அல்ல, இருந்தும் இவைகள் இல்லாமல் நாம் பொருள்களை காண இயலாது.

இந்தப் பொறியும் புலனும் போதாது.

இதற்கு மேலாக இந்த உணர்ச்சி (பார்வை), மனத்தின் நிர்ணயிக்கும் பகுதியான புத்திக்குப் போகவேண்டும்.

மனத்தின் தீர்மானிக்கின்ற நிலையே, எதிர்செயல் (எதிராக அல்ல... ஆனால், புத்திகெட்டால் எதிராக செயல் புரியும்) புரிகின்ற நிலையே புத்தி.

புத்தியில் எதிர்செயல் நிகழ்ந்தவுடன் பிரபஞ்சமும், அகங்காரமும் வெளிப்படுகின்றன, அதன்பிறகு சங்கல்பம்.

(பிரபஞ்சமும், அகங்காரமும் என்பதை பொருளின் வடிவமும் அதனால் நம்மனதில் ஏற்படும் உணர்வும் என்று நான் கொள்கிறேன் / அதாவது ஒரு பொருளை நாம் கண்ணால் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் உணர்வு.)

ஆயினும் பார்க்கும் செயல் முற்று பெறவில்லை.

ஒரு பொருளின் பிம்பம் என்பது ஒளியின் படிப்படியான இயக்கத்தால் உருவாவது.

இந்த இயங்கும் பிம்பம், இயங்காத ஒருப் பொருளின் மீது வைக்கும் போதுதான் அப்பொருளைக் காண முடிகிறது.

அதைப்போலவே, மனத்தில் ஏற்படும் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு, நிலையான ஒன்றின் மீது வைக்கப்படும் போது.......

(புறப்பொருளில் வைத்து அதன் உண்மையைக் காண்பவன் விஞ்ஞானி. அகப் பொருளில் வைத்து உண்மையை உணர்பவன் மெஞ்ஞானி என நான் புரிந்து கொள்கிறேன்)

ஆக விஞ்ஞானி காண்கிறான், நமக்கும் காட்டுகிறான்.

மெஞ்ஞானி உணர்கிறான், ஆக நாமும் உணரத்தான் முடியும்.

ஒப்பிட அதைப் போல வேறு ஒன்று இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை.

அப்படி முயன்றால், அது பிறவிக் குருடனுக்கு, வெள்ளை நிறத்தை புரிய வைக்க முயல்வது போல் என நான் உணர்கிறேன்).

ஆக, இயங்கும் உடம்பையும், மனத்தையும் நிலையாக இருக்கும் ஒன்றின் மீது குவிக்க வேண்டும்.

நிலையாக இருக்கும் அந்த ஒன்று தான் புருஷன் அல்லது ஆன்மா.

(இங்கே சாங்கியர்களுக்கும்துவைதிகளிக்கும், அத்வைதிகளுக்கும் உள்ள சிறு வேறு கருத்தை சுவாமியின் வழி நின்று சுருங்க கூறுகிறேன்) 

 சாங்கியர்கள்:

பிரபஞ்ச மனத்திற்கு ("மகத்" / Cosmic Mind ) அப்பால்

அவ்யக்த நிலையில் / தோன்றாநிலை ஒன்று இருப்பதாகவும்

அங்கே மனம் கூடத்தோன்றா நிலையிலேயே இருப்பதாகவும்,
 ஆனால் தோன்றுவதற்கான காரணங்கள் இருப்பதாக சாங்கியத் தத்துவம் கூறுகிறது.

அதாவது இந்த நிலையை "பிரகிருதி" என்கிறது.

அதற்கும் அப்பால் மேல் கூறியதுடன் எந்த தொடர்பும் இல்லாமல்,

குணமற்றதான, எங்கும் நிறைந்த புருஷன் / சாங்கியர்கள் கூறுகின்ற ஆன்மா இருக்கிறது.

புருஷன் எதையும் செய்பவன் அல்ல. சாட்சி மட்டுமே.

அது  அதன் முன்பு வைக்கும் பொருளின் நிறத்தை பிரதிபலிக்கும் படிகம் போல் என்கிறார்கள்.

துவைதிகள்:

ஆன்மா அல்லது இறைவன். இந்த பிரபஞ்சத்திற்கு நிமித்தக் காரனும், அவனே உபாதானக் காரனாகவும் இருக்கிறான் என்பர்.

(அதாவது பானை செய்யும் குயவன், மண்பாண்டங்கள் செய்வதற்கு நிமித்தக்காரன்.

மண்ணும், சக்கரமும் உபாதானக் காரணம் என்பதாகும்.

ஆக, பானையும் அதைச்செய்ய பயன்படும் கருவிகளும் இவனில் இருந்து வேறு என்பதாகும்.

அதாவது எளிதாகப் புரிந்து கொள்ளும் படி சொன்னால். பானை செய்யும் குயவன் வேறு. பானை வேறு, பானை செய்யப் பயன்படும் கருவிகள் வேறு என்பதாம்).

ஆக, இவர்கள் (துவைதிகள் கூறுவது, இயற்கையும் (திடப்பொருள்), ஆன்மாவும், இறைவனின் உடல் போன்றது என்கிறார்கள்.

இந்தக் கூற்றுப் படி இறைவனும், பிரபஞ்சமும் ஒன்று எனக்கூறலாம்.

ஆக, இந்த இயற்கையும், அதில் பல்வேறு ஆன்மாக்களும்என்றும் ஒன்றுக்
கொன்று வேறுபட்டன.

ஒரு படைப்பின் (கல்பத்தில்) ஆரம்பத்தில் வெளிப்பட்டு, பிறகு படைப்பின் முடிவில் (பிரபஞ்சம் அழியும் நிலையில்) நுட்பமாகிநுட்ப நிலையிலே இருந்து விடுகின்றன என்கிறார்கள்.


அத்வைதம்:

அத்வைதம், இந்தக் கருத்துகளில் இன்னும் சற்று உள்நோக்கி சென்று மாறுபட்டு (இல்லை மேம்பட்டு என்று நான் கருதுகிறேன்) கூறுகின்றது.

ஏறக்குறைய எல்லா உபநிடதங்களும் இவர்களுக்கு (அத்வைதிகளுக்கு) சாதகமாக இருப்பதாலும், அவற்றையே தங்களின் தத்துவத்திற்கு முற்றிலும் அடிப்படையாகக் கொள்கிறார்கள்.

அதாவது பிரபஞ்சம் முழுவதும் ஒன்றேஒரே பரம்பொருள் தான் இப்படிப் பல உருவங்களாக வெளிப்படுகிறார் என்பது அவர்களின் கருத்து.

அதாவது மற்றவர்களும் கூறும் இயற்கைதான், இறைவன் என்பதை அத்வைதிகள் ஏற்றும்,

"ஸத்" என்ற இந்தப் பரம் பொருள் தான் எல்லாமாக; பிரபஞ்சம், மனிதன், ஆன்மா, பிறப் பொருள்கள் அனைத்துமாக  மாறுகிறார். 

மனம், மகத் (காஸ்மிக் மைன்ட் / தியானத்தில் அடையும் அறிவுநிலை) 
இரண்டுமே அந்த "ஸத்" என்ற ஒன்றின் வெளிப்பாடு.

ஆக இந்த பிரபஞ்சம் இறைவனின் பரிணாமம்

என்றும் மாறாத அந்தப் பொருள், மாறுவதாக நமக்குத் தெரிவதெல்லாம்.
தேசம்காலம்நிமித்தம் இன்னும் சொல்லப் போனால் நாமரூபங்களே.
இந்த வரிகள் புரியவில்லையா?. கீழே பாருங்கள் புரியும்.

(பெயரும்உருவமும் தான் வேறு வேறு. இதில் மனிதனின் நாடு, நிறம், மொழி, இன்னும் பல பிரிவுகள், மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் அங்கமாகி; அவைகளே கயமையின் பிடியில் பங்கமாகி; கடைசியில் துயரத்தில் சங்கமமாகி விட்டது.

கடைசியில் தங்கம், தகரமாகி விட்டது எனக் கூறத் துணிகிறேன். இவைகள் அனைத்து உயிர்களுக்கும் எனலாம்.

பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை. குதிரை என்பதால் கர்வமோ,
கழுதை என்பதால் தாழ்வோ கொள்ளவேண்டாம். 

பெரிய ஓங்கி உயர்ந்த மரத்தைப் படைத்தவன் சிறிய காயை அதிலே காய்க்கவைத்தான்.

நிற்கமுடியாதக் கொடிகளில் அவ்வளவுப் பெரிய பரங்கி பழத்தை வைத்தான்.

இறைவா! இவ்வளவு பெரிய மரத்தை படைத்து அதிலே இவ்வளவு சிறியக் காயைப் வைத்தாய் என்றால்.

இறைவனோ மகனே நீயோ, மரத்தையும், அதன் காயின் அளவையும் பார்க்கிறாய். நானோ, வெயிலின் கொடுமையில் சற்று இளைப்பாற அம் மரத்தின் அடியில் வந்து அமரும் மற்ற ஜீவன்களைப் பார்க்கிறேன் என்கிறார்.

பெரிய மரத்தில் பூசணி போன்றக் காய் காயத்தால், அதன் அடியில் ஓய்வெடுக்கும் உயிர்களின் நிலை என்ன? சிந்திக்கத் தான் வேண்டும். 

ஒவ்வொன்றுக்கும் தனி சிறப்பு, காரணம், அவசியம் உண்டு அது அனைத்திலும் தெய்வீகம் இயங்குகிறது என்றும் கூறுவேன்).  

பரம்பொருள் உண்மை தோற்றம் என்ற இரண்டல்ல, ஒன்றே.
அது மாறாதது என்பதே வேதாந்திகள் கூறுவதும் ஆகும். மாறும் தோற்றம் என்பது மாயை.

அறியாமையில் இருக்கும் போது,

(இங்கு அறியாமை என்பது, நமது சாதாரண புத்தியாகிய மனமும் அல்ல அல்லது அதனுக்கு உதவும் இந்த உடலும் அல்ல)

பிரபஞ்சத் தோற்றத்தை மட்டுமே ஒருவன் காண்கிறான்; இறைவனைக் காண்பதில்லை.

இறைவனைக் காணும் (உணரும்) அந்தக் கணமே அவனைப் பொறுத்தவரையில் பிரபஞ்சம் மறைந்துவிடுகிறது.

மாயை என்று சொல்லப்படும் அறியாமையே இத் தோற்றங்களுக்கெல்லாம் காரணம். 

பரம்பொருள், ஒன்றானது மாறாதது.

அப்படிப்பட்ட ஒரேத் தன்மையாக உள்ள ஒன்றை, பிரபஞ்சமாகத் தோன்றச் செய்வது இந்த மாயை மட்டுமே.

மாயை என்பது சுத்த சூன்யமோ, அல்லது இல்லாத ஒன்றோ அல்ல.

சரி பிறகு, இருப்பது என்றோ அல்லது இல்லாதது என்றோ கூறமுடியாது.

இவ்வகையில் இருப்பது அல்ல; ஏனெனில்பூரணமான, மாறுதலில்லாத இறைவனைப் பற்றிமட்டுமே இப்படிச் சொல்லமுடியும் இருப்பதாக.

சரி, இல்லாதது என்றால். இல்லாத ஒன்றால் எப்படி தோற்றத்தை உண்டுபண்ண முடியும்.

ஆக மாயை என்பது, இருப்பதுவும், இல்லாததுவுமான இந்த இரண்டும் அல்லாத ஒன்று.
அதை வேதாந்தத் தத்துவத்தில் அநீர்வசனியம் அல்லது விளக்கமுடியாது (உணரவேண்டியதை இப்படிக்கூறலாம்) என்கிறார்கள்.

இந்த மாயையே பிரபஞ்சத்திற்கு உண்மையானக் காரணம்.

இறைவன் பிரபஞ்சத்திற்கு அடிப்படைப் பொருளைத் தருகிறார், மாயை அதற்கு நாம ரூபங்களைத் தருகிறது.

அத்வைத வேதாந்தத்தில் தனி ஆன்மாவுக்கு இடமில்லை.

தனி ஆன்மாவைப் படைத்தது (இருப்பதாக உண்டாக்கியது) இந்த மாயை என்பது அவர்களின் வாதம்.

உண்மையில் தனி ஆன்மாவெல்லாம் இருக்கமுடியாது, இருப்பது உண்மையில் ஒன்றே என்றால் நான் வேறு, நீங்கள் வேறு என்றெல்லாம் எப்படி இருக்கமுடியும்? நாம் அனைவரும் ஒன்றே.

பன்மையைக் காண்பது தான் தீமைக்கானக் காரணம்

(இந்த இடத்தில் இன்னொரு விசயத்தையும் கூற முனைகிறேன் ஆதி சங்கரருக்கு, ஈசனே ஒருப் புலயனாக வடிவம் கொண்டு வந்து,

இந்த அவர் எழுதிய வேத விளக்கத்திற்கு;
எதையோ தின்று வளர்ந்த இந்த உடலைக் கண்டு பேதம் காணாதே.

அனைவருள்ளும் நானே இருக்கிறேன்., என்று நர்மதா நதிக்கரையில் பாடம் புகுத்தி விட்டுச் சென்றார் என்ற வரலாற்றை ஞாபகத்தில் கொள்வோம்)  

நான் வேறு, பிரபஞ்சம் வேறு என்று உணர ஆரம்பித்த உடனேயே முதலில் பயம் தோன்றுகிறது.

அதைத் தொடர்ந்து துன்பம் உண்டாகிறது.

எங்கே தன்னை அல்லாமல் மற்றவனைப் பார்கிறானோ (வேறுபடுத்தி),
அவன் வார்த்தையே அது என்றும் வேறுபடுத்திக் கேட்கிறானோ, அது சிறியது.

எங்கே பிறரைக் காண்பதில்லையோ, கேட்பதில்லையோ. அது பெரியது.

அங்கே பேரானந்தம் இருக்கிறது. சிறியதில் இந்த இன்பம் இல்லை.

அத்வைதத் தத்துவத்தின் படி, பிரபஞ்சத்தில் காணும் இந்த வேறுபாடு, இந்தத் தோற்றம் சில காலம் மனிதனின் உண்மை இயல்பை மறைத்து நிற்கிறது.

ஆனால், இந்த இயல்பு என்னவோ மாறுவதே இல்லை.  

மிக தாழ்ந்த புழுவிலும், மிக உயர்ந்த மனிதனிலும் ஒரே தெய்வீக இயல்பு இருக்கிறது.

இந்த தெய்வீக இயல்பு மனிதனைவிட புழுவிடம் (விலங்குகளிடம்) அதிகம் இருக்கிறது.

( இந்த இடத்தில் நான் கூற விரும்புவது சுனாமியில்; மனித அறிவுக்கு எட்டும் முன்.

(இவன் தான் கண்ணால் காண்பதை மட்டுமே நம்புகிறவனாயிற்றே)

தனது அற்புத சக்தியால் விலங்குகள் அதை (சுனாமி என்னும் பேராபத்தை) அறிந்து அந்த பேராபத்தில் தங்களைக் காப்பாத்திக் கொண்டதை நாம் அனைவரும் அறிவோம்.

உதாரணமாக, தாய்லாந்தின் கடற்கரையில் கட்டிவைத்திருந்த குதிரை ஒன்று திடீர் என்று கனைப்பதையும், விசும்புவதையும், சிறிது நேரத்தில் சுனாமி என்னும் ஆழிப் பேரலை வந்ததையும் எதேச்சியாகப் பதிவு செய்யப்பட்ட காமராவில் பதிவானக் காட்சியை பிறகு காண நேரிட்டது என்பதை நினைவு கூறுகிறேன்).

இப்படி வொவ்வொன்றுக்கும் பின்னணியாக அந்த தெய்வம்.... அல்ல (தெய்வம் என்றால் அது நமக்குள் இல்லாத மூன்றாவதான ஒன்றைக் கூறுவதாகிவிடும்) தெய்வீக இயல்பு இருக்கிறது.

எனவே நன்னெறி அடிப்படையில். ஒருவருக்கும் தீங்கு செய்யாதேஅது உனக்கு நீயே செய்வதாகும்.

பிறரை நேசிக்கும் போது நம்மையே நாமும் நேசிப்பதாகும்.

(இதை நமது வேதம் சொன்னது என்றால் இதை கூறாத வேறு மதம் இந்த உலகில் உண்டா? அப்படி கூறும் அத்தனை மதங்களும் இந்த வேதத்திற்குள் அடக்கம் அல்ல. அவைகளுக்கெல்லாம்இதுவே சாரம் என்றும் சொல்ல துணியலாம்.

இடம், காலம்சூழல் இவைகளின் நிலைக்கு ஏற்ப பரம்பொருளால் 
உண்டாக்கப் பட்டதே உலகில் உண்டான அத்தனை, தத்துவங்களும்.
அதனைத் தழுவும் மதங்களும்.

இதில் உயர்வு தாழ்வு ஏது? என்பதே எனது பார்வை ) 

இதிலிருந்து அத்வைதநெறியே உண்டாகிறது.  இதை தன்னல மறுப்பு எனச் சொல்லலாம். 

இந்தச் சிறியநான் என்பதே நமது எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று அத்வைதி சொல்கிறான்.

இந்த நான் என்பதன் காரணமாகத் தான் வெறுப்பும்பொறாமையும்
துன்பமும்போராட்டமும்பிற தீமைகளும் தோன்றுகின்றன.

இந்த நான் எப்போது ஒழிகிறதோ அப்போது துன்பமும் நம்மை விட்டு 
ஒழியும்

(இங்கே சமூக பார்வை வேண்டாம் நம்மைப் பற்றி மட்டும் யோசிப்போம் ஒவொருவரும் மாறினால் சமூகம் மாறும். உடனே அவன், இவன் அரசாங்கம் என்று யோசித்து பாதை மாற வேண்டாம். நாம் எதற்கெடுத்தாலும் பிறரை காண்பித்து நம்மை மறைத்து வாழ்ந்து பழகுகிறோம்) 

நான் எப்போது அழிந்தது. எப்போது ஒரு சிறு பிராணிக்காகக் கூட தன் உயிரையே எவனொருவன் தரத் துணிகிறானோ

(சிபி சக்ரவர்த்தியையும், தேர் தந்த பாரியையும் நான் இங்கே நினைவு கொள்கிறேன்.)

அப்போது அந்தக் கணமே அவன் அத்வைதிகளின் லட்சியமான பூரண நிலையை அடைகிறான்.

அறியாமைத் திரை விலகுகிறது. அவனும் பிரபஞ்சமும் ஒன்றே என்ற நிலை வந்துவிடுவதொடு, அந்தத் தோற்றம் மறைந்து விடுகிறது.

தான் யார் என்ற உண்மையை அறிந்த பின்......!!!! 

(எனக்குத் தோன்றிய வரை, தான்’, தான் அந்தப் பரம்பொருள் அன்பது தானே அந்த உண்மையாக இருக்க முடியும்).

பிறகு என்ன? அழைப்பு வரும் வரை இந்த உடலிலேயே இருக்க வேண்டியது தான்.

இது தான் ஜீவன் முக்தி என்பதாகும். இப்படி ஜீவன் முக்தி அடைந்தவர் முன்பு மீண்டும் இந்த மாயைத் தோன்றினாள் அவர்கள் அதில் மயங்க மாட்டார்கள்.

(படம் பார்ப்பவனுக்கு மாத்திரமே இந்த நுனி இருக்கை அமர்வெல்லாம்.
மாறாகபடத்தை இயக்கும்  இயக்குனருக்கும், அந்தப் படத்தை முன்பே பார்த்துவிட்டு இது தான் முடிவு என்ற தெரிந்தவர்களுக்கும் ஏது இந்த நுனி இருக்கை அமர்வு. கண்ணீரும் கவலையும் என்று கூட எளிமையாக நான் கூறுவேன்).

அவர்கள் அது கானல் நீரென்பதை அறிந்தவர்கள், கண்களும், புலன்களும் வேலை செய்யும் வரை அவன் அந்த கானல் நீரைப் பார்ப்பான்.
பிரபஞ்சம் மறைந்து விட்ட நிலையில் அவனை, இந்த மாயையானத் துன்பம் ஒன்றும் செய்யாது.

என்றும் அவன் "சத் - சித் ஆனந்தமாக, தனியிருப்பாக, தனியறிவாகதனி ஆனந்தமாக மாறிவிட்டான்.

இந்த நிலையை அடைவது தான் அத்வைத வேதாந்தத்தின் லட்சியம் என்கிறார் சுவாமி. 

சுவாமி விவேகானந்தர் அவர்கள் கூரியவைகளைஎல்லாம் மிகவும் 
சுருக்கி கருத்து சிதையாமல் எழுதியிருப்பேன் என நம்புகிறேன்.


சுவாமியின் இந்த உரையாடலுக்குப் பின்னால் கேள்வி பதில் அங்கம் நடந்துஅதற்கும் அருமையான விளக்கத்தை 
சுவாமி தந்துள்ளார்கள். அவைகளை  பிறகு தருகிறேன்.


நன்றி வணக்கம்.

அன்புடன்,

தமிழ் விரும்பி.


2 comments:

vidivelli said...

உண்மையில் தனி ஆன்மாவெல்லாம் இருக்கமுடியாது, இருப்பது உண்மையில் ஒன்றே என்றால் நான் வேறு, நீங்கள் வேறு என்றெல்லாம் எப்படி இருக்கமுடியும்? நாம் அனைவரும் ஒன்றே.எனவே நன்னெறி அடிப்படையில். ஒருவருக்கும் தீங்கு செய்யாதே, அது உனக்கு நீயே செய்வதாகும்.

பிறரை நேசிக்கும் போது நம்மையே நாமும் நேசிப்பதாகும்.

அற்புதமான பகிர்வு...சுவாமி விவேகானந்தரை
பற்றி அழகாக சொல்லியிருக்கிறீங்க...
மனிதர்கள் எப்படி வாழவேண்டுமென்பதை..
வாழ்த்துக்கள்..

தமிழ் விரும்பி said...

////vidivelli சொன்னது…
உண்மையில் தனி ஆன்மாவெல்லாம் இருக்கமுடியாது, இருப்பது உண்மையில் ஒன்றே என்றால் நான் வேறு, நீங்கள் வேறு என்றெல்லாம் எப்படி இருக்கமுடியும்? நாம் அனைவரும் ஒன்றே.எனவே நன்னெறி அடிப்படையில். ஒருவருக்கும் தீங்கு செய்யாதே, அது உனக்கு நீயே செய்வதாகும்.

பிறரை நேசிக்கும் போது நம்மையே நாமும் நேசிப்பதாகும்.

அற்புதமான பகிர்வு...சுவாமி விவேகானந்தரை
பற்றி அழகாக சொல்லியிருக்கிறீங்க...
மனிதர்கள் எப்படி வாழவேண்டுமென்பதை..
வாழ்த்துக்கள்..////

அன்புடன் வணக்கம்,

வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றிகள் விடிவெள்ளியாரே!

Post a Comment