பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Wednesday, 27 July 2011

யார் வர கவிகள்?
பாஞ்சாலி சபதம் மகாகவியின் அற்புத சொற்பதத்திலே, கவிநயத்திலே விழைந்த அருமையான காவியம்.

மகாகவி தனது நூல் முகவுரையிலே இப்படி எழுதுகிறான்; எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துக் கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோனாகிறான் என்கிறான் அந்த மகாகவி சுப்ரமணிய பாரதி. 

மேலும் கூறுவான்; ஓரிரண்டு வருட தமிழ் நூல் பயிற்சி கொண்டோரும் எளிதில் படித்து புரிந்துக் கொள்ளும் அளவிற்கும், அதே வேளையில் காவியத்திற்குள்ள நயங்கள் குறைவுப் படாமலும் நடத்துதல் வேண்டும் என்கிறான். செந்தமிழ் நாடு போற்றி தீந்தமிழ் கவி சமைத்த கவிவீரத் தமிழன் பாரதி.

இதிலே காரியம் பெரியது. எனது திறமை சிறிது என்று கூறுகிறான். அதை அவனது தன்னடக்கக் கூற்றாகக்  கொள்வோம்.

எனினும் இந்தக் கவிச் சூரியன் சிறியதா!?. இல்லை, இல்லவே இல்லை; அது பார்ப்பவர் இருக்கும் தூரத்தை பொறுத்தே இருக்கிறது. அருகில் செல்லச் செல்ல அதன் அளவு அளவிட முடியாததாய் இருக்கிறது.

ஜாதியில் பெருமை இல்லையடி பாப்பா!  என்று எழுதிய பொதுவுடைமை சித்தன்.

தமிழ்ஜாதிக்கு புதிய வாழ்வுதர வேண்டு மென்று கங்கணங் கட்டிநிற்கும் பராசக்தியே, என்னை இத்தொழிலிலே தூண்டினால் ஆதலின், இதன் நடை நம்மவர்க்குப் பிரியந்தருவதாகும் என்றே நம்புகிறேன் ஓம் வந்தேமாதரம். என்ற தமிழ் பெருங்கவி. தனது இந்தக் காப்பிய சமர்ப்பணத்தை இப்படி எழுதியுள்ளான்.

தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும்
இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற
வர கவிகளுக்கும்
அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப் போகிற
பிரபுக்களுக்கும் (செல்வந்தர்களுக்கும்)
இந்நூலைப் பாத காணிக்கையாகச் செலுத்துகிறேன்.

சமர்ப்பணத்தில், எத்தனை பெரிய விசயங்களை எல்லாம் சொல்லியுள்ளான். தமிழ் மொழி உயிரும் ஒளியும் இன்னும் உயர்ந்தோங்க புதிய பலக் காவியங்கள் செய்யவேண்டும் அப்படிச் செய்கிறவர்கள் தாம் வர கவிகள்.

அவர்களுக்கு செல்வந்தர்கள் பொருளுதவி செய்து உதவ வேண்டும் என்றும் கூறுகிறான்.

 இன்றைய நிலையில் வரவுக்காக கவி செய்பவர்களின் கண்ணில் இந்த வரிகள் இன்னும் படவில்லை போலும். ஒருவேளை அவர்களுக்கு உதவ செல்வந்தர்கள் யாரும் முன் வரவில்லையோ?. எது எப்படியோ...

வரவுக்காக கவிசெய்தால் கூட பரவாயில்லை... வரவிற்காக தமிழன்னையே முகஸ்துதி பாட வைக்காமல் இருந்தால் மட்டும் போதும்.


சரி, பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வீமன் பொங்கி எழும் காட்சியை, பாரதி படம் பிடித்துக் காட்டும் அற்புதக் காட்சியைப் பார்ப்போம்.

வீமன் சொல்வது

வேறு

சூதர் மனைகளிலே - அண்ணே!
தொண்டு மகளிருண்டு
சூதில் பணயமென்றே - அங்கோர் 
தொண்டச்சி போவதில்லை.

ஏது கருதிவைத்தாய்? - அண்ணே
யாரைப் பணயம் வைத்தாய்
மாதர் குலவிளக்கை - அன்பை
வாய்ந்த வடிவழகை.

பூமி யரசரெலாங் - கண்டே
போற்ற விளங்குகிறான்,
சாமி புகழினுக்கே - வெம்போர்ச்
சந்தனப் பாஞ்சாலன்.

அவன் சுடர்மகளை,  அண்ணே
ஆடி யிழந்துவிட்டாய்
தவறு செய்துவிட்டாய் - அண்ணே
தருமங் கொன்றுவிட்டாய்.

சோரத்தில் கொண்டதில்லை - அண்ணே
சூதில் படைத்ததில்லை.
வீரத்தினால் படைத்தோம் - வெம்போர்
வெற்றியினால் படைத்தோம்.

சக்கர வர்த்தியென்றே - மேலாந் 
தன்மை படைத்திருந்தோம்;
பொக்கென ஓர் கணத்தே - எல்லாம்
போகத் தொலைத்துவிட்டாய்.

நாட்டையெல் லாந்த்தொலைத்தாய் - அண்ணே
நாங்கள் பொறுத்திருந்தோம்.
மீட்டும் எமையடிமை - செய்தாய் 
மேலும் பொறுத்திருந்தோம்.

துரு பதன்மகளைத் - திட்டத்
துய்ந னுடற்பி றப்பை ,
இருபகடை என்றாய் - ஐயோ!
இவர்க்கு அடிமை என்றாய்.

இதுபொறுப்ப தில்லை - தம்பி!
எரிதழல் கொண்டுவா
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம். 


நன்றி வணக்கம்,

அன்புடன்,
தமிழ் விரும்பி.

4 comments:

புலவர் சா இராமாநுசம் said...

நல்ல பதிவு தம்பீ!
பொருள் வரவு கருதி பாடும்
புலவர்களுக்கு நல்ல சாட்டையடி

புலவர் சா இராமாநுசம்

தமிழ் விரும்பி said...

///புலவர் சா இராமாநுசம் சொன்னது…
நல்ல பதிவு தம்பீ!
பொருள் வரவு கருதி பாடும்
புலவர்களுக்கு நல்ல சாட்டையடி

புலவர் சா இராமாநுசம்
27 ஜூலை, 2011 7:55 pm///

தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றிகள் ஐயா!...

minorwall said...

'வர காப்பி' கேள்விப்பட்டிருக்கோம்..கிராமங்களில் வழக்கத்தில் உள்ளதுதான்..
'வர கவி' இப்போதான் புதுசா..

தமிழ் விரும்பி said...

///minorwall சொன்னது…
'வர காப்பி' கேள்விப்பட்டிருக்கோம்..கிராமங்களில் வழக்கத்தில் உள்ளதுதான்..
'வர கவி' இப்போதான் புதுசா..
29 ஜூலை, 2011 9:18 pm////

வருகைக்கும் பின்னூட்டத்திற்கு நன்றிகள் மைனர்வாள்

Post a Comment