பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Friday 8 July 2011

நல்ல விலை கொண்டு நாயை விற்பார்,அந்த நாயிடம் யோசனை கேட்ப துண்டோ ?

---------------------------------------------------------------------------------

சுதந்திரம் வாங்கி வெகுநாளாச்சு - வாங்கிய 
சுதந்திரம் இப்போது என்னாச்சு?
---------------------------------------------------------------------------------

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு: 4-வது இடத்தில் இந்தியா

First Published : 15 Jun 2011 10:16:27 AM IST


புதுதில்லி, ஜூன்.15: கருவிலேயே அழிப்பது, பிறந்தவுடன் கொன்றுவிடுவது, கடத்திச் செல்வது ஆகியவை அதிக அளவில் நடைபெறுவதால் உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக காங்கோ குடியரசு, பாகிஸ்தான், இந்தியா, சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.
மகளிர் உரிமைகளுக்கான தாம்ஸன் ராய்ட்டர்ஸின் ட்ரஸ்ட்லா விமன் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் 3 நாடுகள் தெற்கு ஆசியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


- நன்றி தினமணி.


எந்த ஒரு நாட்டில் நள்ளிரவிலே நகைகள் பல அணிந்து எந்தவித ஆபத்தும் இன்றி தன்னந்தனியாக பெண்ணொருத்தி நடந்து செல்கிறாளோ அந்த நாடு முழு சுதந்திரம் பெற்ற நாடு என்றார் மகாத்மா காந்தி.


பாரத மாதாவிற்கு ஜே!?...

பூமியைத் தாயென்றோம்...
சாமியை தாயென்றோம்
நதியைத் தாயென்றோம்
நதி சென்றுச் சேரும் 
கடலைத் தாயென்றோம்
மாரியைத் தாயென்றோம்

எல்லாம்
தாயாய்ப் பார்த்தும்
தாயின் ரூபமான பெண்களை
தாயாகப்பார்த்தோமா?
காத்தோமா?...

பெண்ணென்றால் ஏளனம்!....  நீ
பெண்ணென்பதை மறவாது 
வாழனும் - எனப்
பெற்றவர்களே கூறும் 
அவலம் போகணும்.

பெண் என்பவள் என்ன
பிள்ளை ஈனும் எந்திரமா?

தொல்லைகள் அனைத்தையும்
வெளியே சொல்லாமல் 
தன்னுள்ளே புதைத்துகொள்ளும்
துயரச் சுரங்கமா?

கற்பு என்போம் 
சிறப்பென்போம் 
அதைக் காப்பது பெண்ணின் 
பொறுப்பு என்போம்...

பெண்ணினும் ஆண் 
உயர்வென்றால் அதை
பேணுவதில் அவனுக்கு ஏன்?
விதிவிலக்கு...

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்."


சான்றோர் அவையிலே சான்றோன் என்று சான்றோரால் தனது மகன் (மகள் அல்ல) பாராட்டப் பட்ட காட்சியைக் காண வழியில்லை! அதனால் அதைக் கேட்டத் தாய் என்கிறார் வள்ளுவர். பெண்ணினம் அப்படி வீட்டிலே பூட்டி வைக்கப் பட்டக் காலமது... அதுவும் மகனென்றும், ஆண்மகனுக்கே கல்விபலக் கற்று சான்றோனாகும் தகுதி கொடுக்கப் பட்டது என்பதும்; அன்றைய சமூகச் சூழலை பெண்கல்வி இல்லாத நிலையை  அறிய முடிகிறது. இதை வள்ளுவரும் அப்படியே ஏற்கிறாரா? என்பது ஆராய்ச்சிக்கு உரியது. அதை வேறுபல சான்றோடு ஆய்ந்து தெளிவோம் பிறகு..

கல்லாத அடிமைப் 
பெண்ணின் அன்றைய 
நிலைமையை 
மனதில் கொண்டு 
பேதைமை எது என்று
பேராசான் வள்ளுவனும்

"பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து."

"அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்."

பெண்வழிச்சேறலிலே 
முன்மொழிந்து சென்றானவன்.

முன்மொழிந்த காலமாறி போச்சு
முண்டாசுக் கவியின் முயற்சியாலே!
முடங்கிப் போன பெண்கள் கூட்டம்
முயன்று முதுகலை கற்று 
முன்னேறியாச்சு.....

சான்பிள்ளை என்றாலும்
ஆண்பிள்ளை  அவன் 
எதுசெய்தாலும் தப்பில்லை 
கற்பென்பது அவனுக்கில்லை
என்ற கொடியநிலை
இன்னும் இங்கு போகவில்லை.

காலமாறிப் போனதால்
கம்பனையும் வள்ளுவனையும் ஏன் 
இளங்கோவையும் மனம் நிறுத்தி
புதியதாய் வழக்காடுகிறான் 
புதிய நிவேதிதா பாரதி !...

"ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?"

"கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;".

கல்வி தந்தோம் எதற்கு?
கடமைகளோடு 
காசும் சம்பாதிக்க...

கலவி கொண்டோம் எதற்கு?
கைநிறைய ஆண்
குழவி மட்டுமே பெறுவதற்கு....

பெண்ணாய்ப் போனால்
பிறக்கும் முன்னே கருவறுப்போம்
தவறிப் போனால்
பெற்றவளை அருவருப்போம்

பிறந்து வளரும் போது
பெண்ணை வீண் செலவென்று சொல்லி
அவளின் சந்தோஷ வேரறுப்போம். 

ஆணென்றும் பெண்ணென்றும் 
தரம் பிரிப்போம்
ஆணுக்கே உரிமையென்று
ஆர்பரிப்போம்.

இத்தனயும் போதாதென்று 
இன்னுமொரு பிரச்சனை

கருவிலே பெண்சிசுவை
கொன்றொழிக்கும் 
கொடுஞ் செயலும் நடக்கிறது 

 பெண்சிசுவை தேடி பிடித்து அழித்திட
கோடிஸ்வர குடும்பங்களே
அரபுநாடு பறக்குது.

சரியுது சரியுது
பிறப்பு விகிதம் சரியுது
அழியுது அழியுது
பெண்ணினமே அழியுது.

காணும் அத்தனையும்
சக்தியின் வடிவென போற்றிடும்
இந்தியர் வீட்டிலே தான் 
இந்த அவலமெல்லாம் தொடருது.

இப்படியே தொடருமானால்
வருங்காலத்தில்...
சுயவரமும் அதன் பொருட்டு
கடுங் கொலையும்
மறுப்பதற்கு இங்கில்லை.

மெல்லச் சாகும் மனிதநேயம்
இனி வெள்ளமேனவே 
விரைந்து அழிந்து போகும்…..

மீண்டுமிங்கே கண்ணுறுவோம்
மகாகவியின் கவிதையினை
கண்ணுற்ற கவிதையின்
கருத்ததனை
சிந்தையிலே பயிரிடுவோம்.
  
பெண் விடுதலை

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்;அதற்குரிய பெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,
மனையாளும் தெய்வமன்றோ?மதிகெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,
விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.45”

தாய் மாண்பு

பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
''
கண்டார்க்கு நகைப்'பென்னும் உலக வாழ்க்கை
காதலெனும் கதையினுடைக் குழப்பமன்றோ?
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோ?உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஔவை ''அன்னையும் பிதாவும்,''
பாரிடை ''முன் னறிதெய்வம்''என்றா: அன்றோ?46

தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ ?
தாய்பெண்ணே யல்லளோ?தமக்கை,தங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவியொருத் தியையடிமைப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைத் படுத்த லாமோ?
''
தாயைப்போ லேபிள்ளை''என்று முன்னோர்
வாக்குளதன் றோ?பெண்மை அடிமை யுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ? 47

வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்;
நாட்டினிலே
நாடோ றும் முயன்றிடுவான் நலிந்து சாவான்;
காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம்,அப்பா!
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை;
பாட்டினிலே காதலை நான் பாட வேண்டிப்
பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே. 48”

சமூகம் நோக்கும் 
அவலநிலை மாறனும் 
அடிமைத்தனம் போகணும் 

எந்திரமாகிப்போன வாழ்வில்  
ஆணுக்கு பெண்
சமமென்று ஆகணும்

நடித்தது போதும் 
நானிலம் செழிக்கவே 
நன்றியோடு பெண்ணினத்தைப்
போற்றுவோம்.

பெண்கல்வி கற்பது மாத்திரம் அல்ல. அவள் சரிநிகர் சமானமாக மதிக்கப் படவேண்டும். உயர்ந்த வளர்ந்த நாடு என்பது ஆணுக்கு சமமான நீதி பெண்ணுக்கும் கிடைக்கும் போது தான்.

மேல்கண்ட கொடுமையெல்லாம் அரங்கேற ஆண் மட்டும் அல்ல, தன் இனத்தை தானே முன்னின்று புதைகுழியில் தள்ளும் பெண்களும் உணர வேண்டும். அப்படி உணர்ந்து செயல் பட்டால் அவர்கள் தாம் இந்த சமூகத்தில் கண்கள். இல்லையேல், அவர்கள் சமூகத்திற்கு ஆறாத முகப் புண்களே.

பெண்ணின் சாயல் கொண்ட யாவரும் தாயென காக்கப்பட வேண்டியவர்களே அதுவே ஒவ்வொரு இந்தியனின் கடமையும் கூட... பெண்ணை தெய்வமென இந்த உலகிற்கே கூறியது நாம் தான் என்பதை நாமே மறக்கலாகுமோ!?.. 


இந்த சிந்தனையைத் தூண்டிய தினமணிக்கு மீண்டும் நன்றி வணக்கம்.

அன்புடன் 
தமிழ் விரும்பி.


2 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவோம்.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

Unknown said...

அன்புடன் வணக்கம்,
"யுக புருஷனின் சத்தியமான வாக்கு"

பின்னூட்டத்திற்கு நன்றிகள் தோழரே!

Post a Comment