பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Wednesday, 6 July 2011

காக்கைக் கூட மேலேப் பறக்க பயந்தக் கோட்டை எது? "காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!" 

இந்தப் புறம் கூறும் வேந்தன்!

கட்டபொம்மனா? ஊமைத்துரையா?...

குறிப்பு: இது, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக் கதை அல்ல வேறு பல சுவையான தகவல்களும் அடங்கிய ஒரு ஆய்வு என்பதை படித்து முடித்தப் பின்பு நீங்களே கூறுவீர்கள். தொடர்ந்து படியுங்கள். நன்றி.  

பாஞ்சாலங்குறிச்சி.

வானம் பொழியுது, பூமி விளையுது
       மன்னநென் காணிக்கு ஏது பணம்
காலமழையில் முப்போகம் விளையுது
     கட்டநென் காணிக்கு ஏது பணம்?
கோடை மழையில் முப்போகம் விழையுது
     கொற்றவன் காணிக்கு ஏது பணம்?
மாறிகள் பெய்தும்பெய் யாமலும் போவதை
     மாற்றுதற்கோ பணம் வாங்குறீர்?

தென்பாண்டிச் சீமையிலே சீறிப் பாய்ந்த சிங்கம் "கெட்டி பொம்முவுன்" வீர வரலாற்று நூலில் காணும் பாடல் இது. அதென்னக் கெட்டிபொம்மு என்றால். கட்டபொம்மனின் இயற்பெயர் "பொம்மு" என்பதாம், கெட்டி என்றால் வல்லமை அதாவது வல்லமை வாய்ந்த கெட்டிபொம்மு கட்டபொம்மன் ஆனதாக வரலாறு. சரி, விசயத்திற்கு வருவோம்.

அந்தக் காலத்தில் அந்நியர்களால் தடை செய்யப்பட்ட பாடல் இதுவாம். இந்த பாடலை வீரா வசனமாகஇன்றளவும் பேசாத தமிழ் குழந்தை இல்லைத் தரணியிலே.

பேசும் சக்தி இழந்த குழந்தைகூட பிறர் கூற கேட்டால் நெஞ்சை நிமிர்த்தி; நேர்கொண்ட பார்வையோடு நீலத் தாமரையாய் விழி அகலப் பார்க்கும் என்பதில் ஐயமில்லை.

என்னை போல் இன்னும் எத்தனையோ குழந்தைகள் அன்னை மடியிலே அமர்ந்து அமுதூட்டிக் கொண்ட போதெல்லாம் இது போன்ற பாடல்களால் தேச உணர்வையும் திகட்டாமல் சேர்த்தே உண்டோம் ! 
என்றால் அதுவும் மிகையில்லை...  

கி.பி. 1798 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 -ஆம் தேதி காலை 10 மணிக்கு கும்பினியின் பேஷ்குஷ் அதிகாரியான ஜாக்ஸனுக்கும், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனான வீரபாண்டிய கட்டபொம்முவுக்கும் நடந்த சம்வாதத்தின் சாரமே இது.

ஜாக்சன் சிங்கத்தனை சிறையிடத் துணிந்தான் கலகம், கத்திமுனையில் தப்பியோடினான் கட்ட பொம்மு அன்று தொடங்கி 1801 -ஆம் ஆண்டு மே மாதம் 24 -ஆம் தேதி கும்பினியார் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை தரை மட்டமாக்கி; அவ்விடத்தே எட்டயபுரம் ஜெகவீரராம குமார எட்டப்ப நாயக்கர் 
அய்யனுக்கு கலக்டர் லஷிங்டன் உத்தரவின் பேரிலே (ஆதாரம் வம்சமணி தீபிகை என்னும் பழைய நூல்) மே 28 -ஆம் தேதி 70 கழுதைகளில் ஏர்பூட்டி உழுது தீர்த்து உப்பையும் ஆமணக்கையும் விதைத்து; பாஞ்சாலங்குறிச்சி என்னும் வீர கிராமத்தையே வரைபடத்தில் இருந்து வெள்ளையன் அகற்றும் வரை நீண்டது அந்தப் பகை. 

____________________________________________________________

சாலிகு ளத்துப் பக்கத்திலே 
    சார்ந்திடும் செம்மணல் மேட்டினிலே
காடை வேட்டைநான் ஆடையிலே
     கண்ட அதிசயம் சொல்லுகிறேன்.
முன்முயல் சென்றிடப் பின்னே நாய்
     முடுக்க மேட்டுக்குப் போனவுடன்
முன்னோடி நின்ற முயலுதான்
     பின்னோடும் நாயை விரட்டியதே
நாயை முயல் வெற்றி கொண்டதனால்
    நாமிதில் கோட்டைகள் போட வேண்டும்
ஓங்கிய பாஞ்சாலன் பக்கத்திலே
    ஓடுங்குறிச்சியைச் சேர்க்க வேண்டும்
தங்கச் சிம்மாதனம் போட வேண்டும்
   தாழ்ச்சியில்லா தரசாள வேண்டும்
எண்ணிய காரியம் ஈடேற
   எப்போதும் காப்பவள் சக்கதேவி!

இது கட்டபொம்முவின் நாட்டுப் பாடல்.

பாடலின் பொருள் படிக்கும் அனைவருக்கும் புரியும் என்பதால், விசயத்திற்கு வருவோம். கட்டபொம்முவின் மூதாதையர்களில் ஒருவரான, ஜெகவீரபாண்டியன் என்பவன் ஒருநாள் தனது சகாக்களுடன் வேட்டையாடச் சென்றபோது, தனது வேட்டை நாய்கள் முயல்களை விரட்டிக் கொண்டு ஓடியது.

அப்போது திடீர் என்று ஓரிடத்தில் ஓடிய முயல்கள் தங்களை விரட்டும் நாய்களை எதிர்த்து நின்று திரும்பி நாய்களை தாக்க முனைந்ததாம். அதைப் பார்த்த ஜெகவீரபாண்டியன் வேட்டை நாய்களையே எதிர்க்கும் அளவிற்கு முயலுக்குத் துணிச்சல் வந்த இந்த இடம்.

ஒரு வீரம் மிகுந்த இடம் என்று அங்கேயே தனது பாட்டன் பாஞ்சாலன் என்பவனின் பெயரால் கோட்டைக் கட்டி ஆட்சி செய்தானாம் என்பது கர்ண பரம்பரையானக் கதை. இந்தக் கதையை கட்டபொம்மனின் பற்றிய கூத்துக் களில் பாடப் படுவதை அறிகிறோம்.

அதையே வரலாறும் இப்படிக் கூறுகிறது.

பல்லாரி நாட்டிலே வாடிக்கோட்டையிலே குடி வாழ்ந்த கம்பளத்தார் என்றொருக் கூட்டம் பஞ்சத்தின் காரணமாக தெற்கு நோக்கிப் பயணித்து; தென்பாண்டிசீமை திருநெல்வேலி, கோவில்பட்டி தாலுகா, மணியாச்சிக்கு கிழக்கே பத்து மைல் தூரத்தில் சாலிகுளம் என்னும் பரம்புக் காட்டில் குடிசை போட்டு வாழ்ந்துஉயர்ந்து  பின்னர் அவ்விடத்தில் பாஞ்சாலங்குறிச்சி என்னும் பெயரால் கோட்டைக் கொத்தளம் அமைத்து குடியாண்டு வந்தனர்.

அவர்கள் மரபிலே வந்தவர்கள் தாம் இந்த பாளையக்காரர்கள் 18 -ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் அங்கு ஆண்டு வந்ததும் பின்னாளில் ஓட்டப்பிடாரத்திற்கு வடகிழக்கில் ஒன்றரை மைல் தூரத்தில் இருந்த அவ்வூரையே; ஆங்கிலேயர்கள் தங்களுக்கு கப்பம் கட்டாது எதிர்த்து போரிட்டு அவர்களை அழித்து அவ்வூரையே வரை படத்திலே இல்லாது செய்ய முயன்றதும் தெரியவருகிறது.

பாஞ்சாலங்குறிச்சி என்னும் ஊரும் அந்தக் கோட்டையும் ருவான சரியானக் காலம் தெரியவில்லை என்றாலும், கட்டபொம்மன் முதாதையர்களில் ஒருவன் தான் அந்தக் கோட்டையைக் கட்டியுள்ளதாகவும் இதன் மூலம் நாம் அறிக முடிகிறது.  கோட்டையின் அமைப்பும் சிறப்பும் நீண்டலா அது பல பக்கங்கள் போகும் இருந்தும் சுருக்கமாக சொல்லத் துணிகிறேன்.

இரண்டு சுற்றுச் சுவர்கள் உட்புறக் கோட்டைக்கு கார் கோட்டை என்றுப் பெயர். இது காரை மற்றும் செங்கலால் கட்டப்பட்டது. வெளிப் புற மதிலோ மண்ணால் கட்டப் பட்டது. சுமார் 500 . அடி நீளமும், 300 . அடி அகலமும் கொண்டது. உயரம் 15 . அடியாம்.

ஆக இரண்டு சுவர்களுக்கும் இடையில் கம்பம் புல்லின் உமியும், வராகுதானியத்தின் வைக்கோலும் பொதிந்து வைக்கப் பட்டதாம் இது வெள்ளையர்களின் பீரங்கியைத் தடுப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. மேலும் சுவருக்கு குழைத்த மண்ணில் பதனீர் சேர்க்கப்பட்டு கெட்டியாக அமைக்கப் பட்டு இருந்ததாம். 

மேலும் கோட்டைக்கு வெளியே அகழிகளுக்குப் பதிலாக இழந்தைச் செடிகளின் முட்புதர்களும் நான்கு மூலைகளிலும் கொத்தளங்களும், கொத்தளங்கங்களின் அருகே அலங்கங்களும் இருந்தன என்றும், கோட்டைச் சுவரில் "கிளிக்கூட்டு அலங்கம்' அதாவது சுமார் நாற்பது பேர் நின்றுக் கொண்டு எதிரிகளைத் தாக்கலாமாம்.

தெற்கு பிரதான வாசல்... இப்படி நீள்கிறது. இந்தப் பெரியக் கோட்டையைப் பற்றிய வெள்ளையர்கள் அப்போது எழுதியக் குறிப்புகளும் அவர்கள் அந்தக் கோட்டையை கண்டு பிரமித்த விதம் விளங்குகிறது....

18 -ஆம் நூற்றாண்டு, தெற்கத்தி சீமைகளில் வரிவசூலிப்புத் தொடர்பாக நவாப்புக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஒரு உடன்பாடு வரையறை.. அதன்படி பாளையத்துக் காரர்கள் வெள்ளையர்களுக்கு கிஸ்தி கட்டவேண்டும். இந்த வேளையில் ரெவின்யூ போர்டர் மாக்ஸ் வெல் என்பவரை அனுப்பி எல்லைவரையறை செய்ய அனுப்பியது வெள்ளையரசு, அவனோ பாளையத்தாரின் அருங்குளம், சிவஞானபுரம் ஆகிய இருகிராமங்களையும் எட்டயபுரத்தார்க்கு சொந்தம் என்று பிரித்து, அந்த சூழ்ச்சியால் பாலையத்தாருக்கும், எட்டயபுரத்திற்கும் பகையை ஏற்படுத்தி விட்டான்.

இதனால் எட்டயப் புரத்தார் கம்பனியாருக்கு நண்பர்கள் ஆனார்கள். இந்த எட்டயப்புரப் பகை தான் " நாம் எட்டயபுரத்தாரின் சிரிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் கட்டபொம்மு சகோதர்கள் உயிரிழக்கும் நிலைக்கு கொன்று சென்றதாம். 

இந்த நிலையில் மேஜர் ஜாக்சன் ராமநாதபுர கலக்டரிடம். எட்டயபுரத்தாரின் புகார். கட்டபொம்மு ஆட்கள்.. அருங் குளத்திலே விளைந்த கம்பு சோளம் கொள்ளை, ஆநிரைக் கொள்ளை என்றும் பிராது கூறி; அதன்பொருட்டே ஜாக்சனோடு கட்டபொம்முவின் சந்திப்பு ஏற்பாடு நடந்தது.

அந்த சந்திப்பும் திருநெல்வேலி, குற்றாலம், ஸ்ரீ வில்லிப்புத்தூர், திருசுழி, கமுதி என்று அலைக்கழிக்கப் பட்டு கடைசியாக இராமநாத புரத்தில் நடந்தது.

ஆக, கட்டபொம்மன் அதன்பொருட்டு மனதில் கசப்போடும், பாஞ்சைபதியில் முன்பே மணியாய்ச் சேவகம் செய்தவனும், அப்போது ஜாக்சனுடன் இருந்தவனுமான கோபாலையன் முன்கூட்டியே அறிவித்த ஜாக்சனின் திட்டத்தையும் அறிந்தே துணிந்து தனது மந்திரி பிரதானிகளுடன் சென்றான்.

சூழ்ச்சியில் இருந்து பொம்முவும், ஊமைத்துரையும் தப்பித்தனர்.

ஆனால், தனாதிபில்லை மட்டும் அகப் பட்டு ராமநாதபுரம் சேதுபதி பங்களாவில் சிறைவைக்கப்  பட்டார். ஊமைத்துரைக்கு மட்டும் தானாதிபதியை விட்டுவர மனமே இல்லை. இருந்தும் தனாதிபதி பிள்ளை ஜாக்சனின் பலாத் காரத்திற் கெல்லாம் பணியவில்லை. கடைசியாக தனாதிபதி பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க கைதியாக போர்டாரிடம் அனுப்பி வைக்கப் பட்டார்.

அங்கேயும் வில்லங்கமாக கட்டபொம்முவை மீண்டும் ஒரு பேட்டிக்கு ஒப்புக் கொள்ள ஏற்பாடு செய்யும் படிக் கூறி; ஒப்புக்கொள்ளச் செய்து தனாதிபிள்ளை விடுதலைச் செய்யப் பட்டார்.

எப்படியோ, வெள்ளையருக்கும் தம் மன்னருக்கும் சண்டை வருவது உறதி என்று மட்டும் தனாதிபதிக்குத் தோன்றிற்று. தனாதிபதி ஊருக்குத் திரும்பினார்...

அடுத்து நிகழ்ந்தது என்ன என்பதை நாம் அடுத்தப் பதிவில் பார்ப்போம்...

நன்றி வணக்கம்.
அன்புடன்,
தமிழ் விரும்பி. 

தொடரும்....

5 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் தமிழ்விரும்பி அவர்களே,

இந்திய சுதந்திர போராட்டத்திலே யாராலும் மறக்க முடியாத ஒரு கதாநாயகர் நமது வீரபாண்டிய கட்ட பொம்மன் அவர்களே..

இளம் வயதில் கட்டபொம்மனாய் பாவித்து விளையாண்ட கதைகள் ஏராளம் ஏராளம்..

அவர் மீது கொண்ட காதலால் நாங்கள் திருநெல்வேலிக்கு திருமுறைத் திருத்தல யாத்திரை சென்ற போது,


திருநெல்வேலி-கோவில்பட்டி நெடுஞ்சாலையில் உப்போடை ஆற்றுக்கு அருகில் உள்ள கயத்தாறு சென்று வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடத்தில் நின்று எம்மோடு வந்திருந்த அன்பர்களுக்கு ..

தாங்கள் குறிப்பிட்டது போல,
வீரபாண்டிய கட்டபொம்மனில் - நடிகர் திலகம் பேசிய
எம்மோடு வயலுக்கு வந்தாயா ?

என்னும் வசனம் பேசி மகிழ்ந்தது ஒரு காலம்.

அருமை அருமை... அருமை..

வாழ்த்துக்கள்.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

தமிழ் விரும்பி said...

/// சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…
தாங்கள் குறிப்பிட்டது போல,
வீரபாண்டிய கட்டபொம்மனில் - நடிகர் திலகம் பேசிய
எம்மோடு வயலுக்கு வந்தாயா ?

என்னும் வசனம் பேசி மகிழ்ந்தது ஒரு காலம்.

அருமை அருமை... அருமை..

வாழ்த்துக்கள்.////

உண்மை தான் நண்பரே!

இந்த உலகில் அதிகமாகப் பேசப் பட்ட வசனமே அதுவாகத்தான் இருக்கும்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் தோழரே!

Thanjavooraan said...

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை இன்றைய இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அவனது வரலாற்றைத் தங்கள் வலைப்பூவில் மலரச் செய்தமைக்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் நான் அந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குச் சென்றிருந்தேன். அரசு கட்டிய கோட்டைக்குப் பக்கத்தில் கட்டபொம்மனின் பூர்வீக மாளிகை (சிறிய வீடு மாதிரிதான் இருக்கிறது) இடிபாடுகளின் அடித்தளத்தைப் பார்த்தேன். அப்போது ராஜ உடை அணிந்த ஒருவர் வந்து தான் கட்டபொம்மன் வாரிசு என்றும், அரசாங்கம் தரும் ஓய்வூதியமும் அருகில் ஒரு சிறு வீடும் கொடுத்திருந்தும் நான் வறுமையில்தான் இருக்கிறேன் என்றார். கோட்டை பற்றிய விவரங்களை அவர் எங்களுக்குக் கூறினார். பாரதி இயக்கம் சார்பில் நாங்கள் சுமார் பத்து பேர் சென்றிருந்தோம். ராஜ உடை அணிந்து அவர் என்னிடம் உதவி எதிர்பார்த்தது என்னை என்னவோ செய்தது. அருகிலிருந்து ஒரு பாரதி இயக்க மாணவர், தாத்தா அவர் உங்களிடம் பணம் எதிர்பார்க்கிறார் என்றார். நான் அவரிடம் ஒரு தொகையைக் கொடுத்ததும் நன்றி சொல்லிவிட்டு வழிஅனுப்பி வைத்தார். கட்டபொம்மன் செய்த தியாகத்துக்கு அவன் வாரிசு கையேந்தும்படி வைத்தது யார் தவறு? சிந்திப்போம். உங்கள் பணி தொடரட்டும். அது சரி! தமிழ் விரும்பி புது முகமாகத் தெரியவில்லையே. ஏற்கனவே பழக்கமுள்ள ஒருவர் புது உருவில் வந்திருப்பதாகத் தெரிகிறது. யார் அவர்? தெரிந்து கொள்ளலாமா?

தமிழ் விரும்பி said...

////Thanjavooraan சொன்னது…
வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை இன்றைய இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அவனது வரலாற்றைத் தங்கள் வலைப்பூவில் மலரச் செய்தமைக்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் நான் அந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குச் சென்றிருந்தேன். அரசு கட்டிய கோட்டைக்குப் பக்கத்தில் கட்டபொம்மனின் பூர்வீக மாளிகை (சிறிய வீடு மாதிரிதான் இருக்கிறது) இடிபாடுகளின் அடித்தளத்தைப் பார்த்தேன். அப்போது ராஜ உடை அணிந்த ஒருவர் வந்து தான் கட்டபொம்மன் வாரிசு என்றும், அரசாங்கம் தரும் ஓய்வூதியமும் அருகில் ஒரு சிறு வீடும் கொடுத்திருந்தும் நான் வறுமையில்தான் இருக்கிறேன் என்றார். கோட்டை பற்றிய விவரங்களை அவர் எங்களுக்குக் கூறினார். பாரதி இயக்கம் சார்பில் நாங்கள் சுமார் பத்து பேர் சென்றிருந்தோம். ராஜ உடை அணிந்து அவர் என்னிடம் உதவி எதிர்பார்த்தது என்னை என்னவோ செய்தது. அருகிலிருந்து ஒரு பாரதி இயக்க மாணவர், தாத்தா அவர் உங்களிடம் பணம் எதிர்பார்க்கிறார் என்றார். நான் அவரிடம் ஒரு தொகையைக் கொடுத்ததும் நன்றி சொல்லிவிட்டு வழிஅனுப்பி வைத்தார். கட்டபொம்மன் செய்த தியாகத்துக்கு அவன் வாரிசு கையேந்தும்படி வைத்தது யார் தவறு? சிந்திப்போம். உங்கள் பணி தொடரட்டும். அது சரி! தமிழ் விரும்பி புது முகமாகத் தெரியவில்லையே. ஏற்கனவே பழக்கமுள்ள ஒருவர் புது உருவில் வந்திருப்பதாகத் தெரிகிறது. யார் அவர்? தெரிந்து கொள்ளலாமா?////

முதலில் தங்களின் வருகைக்கு நன்றிகள் ஐயா! தாங்கள் கூறிய செய்தியை அடுத்தப் பகுதியில் குறிப்பிட்டுள்ளேன். எனக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நேர்ந்தது தங்களுக்கும் நேர்ந்துள்ளது... உயிரோடு இருந்த போதே தனது உடமை, ஆவி பொருள் அத்தனையும் இந்த சமூகத்திற்கு செலவழித்த வ.உ.சி யின் கடைசி காலத்திலும் இந்த சமூகம் என்ன செய்தது என்பதை யாவரும் அறிகிறோம்.. இன்றைய சூழலில்
என்னத்தைச் சொல்வது...

எப்படியோ தாங்கள் என்னை அடையாளம் கண்டு விட்டீர்கள்.

அன்புடன் உங்கள்,
ஆலாசியம் கோ.

Unknown said...

நல்ல வரலாறு

Post a Comment