பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label விவேகானந்தர். Show all posts
Showing posts with label விவேகானந்தர். Show all posts

Tuesday, 16 August 2011

முகத்தைத் தேர்ந்தெடுக்கும், நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை.



ஆன்மா; ஓர் உடலை எடுத்துக் கொண்டு அதைப் பயன் படுத்துகிறது;
அந்த உடல் நலிந்துப் போகும் போது வேறு ஒரு உடல் எடுத்துக் கொள்கிறது.


1.    மனித வாழ்க்கையில் நிலையானது ஏதாவது உண்டா?

2.    இந்த உடல் அழிந்தப் பின்னும் அழியாமல் இருப்பது என்ன?

3.    இந்த உடற்கூடு மாய்ந்து சாம்பலானப் பின்னும் ஏதோ ஒன்று வாழ்ந்துக் கொண்டிருப்பதில்லையா?

4.    உடலை எரித்து சாம்பலாக்கும் நெருப்பினால் பாதிக்கப் படாத ஏதோ ஒன்று இல்லையா?


5.    அப்படி ஒன்று இருக்குமானால் அது என்ன ஆகிறது?

6.    எங்கே போகிறது?

7.    அது எங்கிருந்து வந்தது?

இப்படிசென்றக் கட்டுரையில் எழுந்த ஏழு கேள்விகளுள் ஐந்திற்கு அங்கேயே பதில் கண்டோம். கடைசி இரண்டுக் கேள்விகளுக்கு இங்கே பதில் காண்போம்.

உடல் அழிந்ததும். அழிவில்லாத ஆன்மா மீண்டும் பிறக்கிறது...

மறுபிறவி என்பதைப் புரிந்துக் கொள்ள, இந்தப் பிரபஞ்சத்தில் சூன்யத்திலிருந்து எதையும் உருவாக்க முடியாது.

காரணம் சூன்யத்திலிருந்து உருவாகினால் அதனுள் மீண்டும் போய்விடும். ஆரம்பம் உள்ள எதற்கும் முடிவு என்று ஓன்று நிச்சயம் இருந்தே தீரும்.

ஆன்மாக்கள் என்ற நிலையில் நமக்கு ஆரம்பமும் இருந்திருக்க முடியாது. நாம் எப்போதும் இருக்கிறோம்.

மீண்டும் இங்கு ஞாபகப் படுத்திக் கொள்வோம். இந்த பிரபஞ்சத்தையே தனது உடலாகக் கொண்ட, அதாவது இந்த பிரபஞ்சத்தின் மனமாகிய அந்த பரபிரமத்தில் இருந்து வெளிப்பட்ட மிக நுண்ணிய ஒரு பிரிவுதான் இந்த ஆன்மா.

ஒளிப் பெருங்கடலின் சிறு நீர் திவலைகள் தாம் இந்த ஆன்மாக்கள். 

மறுபிறவியைப் பற்றி சொல்கையில்....

மேலும், நாம் முன்பு இருக்கவில்லை என்றால், இப்போது நாம் இருப்பதையும் விளக்கமுடியாது.

மறுபிறவி என்பதனால் மாத்திரமே கீழ் காணும் விசயங்களை விளக்க முடியும். 

காரணங்களாகிய மூட்டையுடன் தான் குழந்தை மண்ணில் பிறக்கிறது. அப்படி பிறக்கும் குழந்தைகளிடம் எத்தனையோ விசயங்களைக் காண்கிறோம். உதாரணமாக, மரண பயம், வேறு எத்தனையோ இயல்பான போக்குகள்.


தனது தாயிடம் பால் குடிப்பதற்கும், அதை ஒருக் குறிப்பிட்ட விதத்தில் குடிப்பதற்கும் குழந்தைக்கு யார் கற்றுத் தந்தார்கள்? இந்த அறிவை அது எங்கிருந்துப் பெற்றது?

அனுபவமில்லாமல் அறிவு வரமுடியாது. அப்படி இருக்க இந்த அறிவு குழந்தையிடம் ஏற்கனவே இருக்கிறது.

இதற்கிடையில் ஒரு சிலர் இதை இயல்புணர்ச்சி என்பர். இது தர்கமுறைப் படித் தவறாகும்.

சரி, குழந்தைகளிடம் எப்படி இந்த இயல்பான போக்குகள் உள்ளன? என்பது தான் கேள்வி.

மரணத்தையே அறியாத அதனிடம் மரண பயம் ஏன் இருக்க வேண்டும்

இப்போது தான் அது, முதன் முதலில் பிறந்திருக்கிறது என்றால், தாயிடம் பால் குடிக்க அது எவ்வாறு அறிந்திருந்தது?. அது தான் இயல்புணர்ச்சி என்றால்... பழக்கத்தைத் தவிர இயல்புணர்ச்சி என்று வேறு ஒன்று கிடையாது.  

பழக்கம் தான் இயல்பு. நமது இயல்பில் உள்ள அனைத்தும் பழக்கங்களின் விளைவே. அனுபவத்தின் மூலம் இல்லாமல் எந்த அறிவும் உண்டாக முடியாது.

எனவே, இந்தக் குழந்தைக்கு ஏதோ அனுபவம் இருந்திருக்கிறது.

நவீன விஞ்ஞானம் கூட இந்த உண்மையை ஒத்துக் கொள்கிறது.

குழந்தை தன்னுடைய அனுபவ மூட்டையுடனே பிறக்கிறது என்பதை இன்றைய விஞ்ஞானம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

ஆக, குழந்தை அறிவின் ஒருமூட்டையோடே வருகிறது. இதுவரை சரி.

குழந்தை தன்னுடன் கொண்டு பிறக்கும் அறிவு அனுபவத்தின் மூலம் பெற்றது தான், என்பதை நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது......

அதேவேளையில் அந்த அறிவு அதன் சொந்த அறிவல்ல; அதனுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் என்று அவர்களிடமிருந்து தான் அறிவு வருகிறது.

பரம்பரை மூலம் அறிவு வருகிறது என்றுக் கூறும் விஞ்ஞானம்..... இது போதாது. ஏன் அப்படி?

பெளதீகமாக ஒன்றை ஒருவர் மற்ற ஒருவருக்குத் தருவது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.

ஆனால், மானசீக நிலையில் ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பது என்பது புரிந்துக் கொள்ள முடியாதது. 

நான் ஓர் ஆன்மா; நான் ஒரு தந்தையின் மூலம் பிறக்க வேண்டும், அவர் எனக்குச் சில குறிப்பிட்ட குணங்களைத் தர வேண்டும் என்பதற்குக் காரணம் என்ன?

நான் மீண்டும் பிறந்ததற்கு காரணம் என்ன?

தந்தைக்கு என்று சில குறிப்பிட்ட குணநலன்கள் இருக்கலாம், அவர் நான் பிறப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் ஒரு தனி ஆன்மாவாக ஏற்கனே இருக்கிற நான், பிறக்க விரும்பும் பொது, என்னை ஒருக் குறிப்பிட்ட மனிதனின் உடம்பில் புகச் செய்வது எது?

அவரிடம் இருந்து எனக்கு ஆற்றல் வருகிறது என்றாலும் கூட, நான் ஏற்கனே இருக்கிறேன் என்பதை ஒத்துக் கொண்டால் தான் இதையும் சரியாக விளக்க முடியும்.

ஒருவன் பிச்சைக் காரனுக்கு மகனாகப் பிறப்பதற்கும், வேறொருவன் பில்கேட்டின் வீட்டில் பிறப்பதற்கும் எதுக் காரணம்?

இது தான் கர்மம் அல்லது காரியகாரண நியதி என்று அழைக்கப் படுகிறது.

எனது முந்தையப் பிறவியின் செயல்கள் குடிப்பழக்கத்தைச் சார்ந்ததாக இருக்குமானால், அத்தகைய குணம் கொண்ட ஒருவனை நோக்கியே இப்போது நான் ஈர்க்கப் படுவேன்.

எத்தகைய பெற்றோர்களின் உள்ளே புகுந்தால் எனது முந்தைய செயல்களின் ஆதிக்கத்திற்குப் பொருத்தமாக இருக்குமோ அவர்களின் உள்ளேயே நான் புகுவேன்.

இவ்வாறு தந்தையிடமிருந்து சில பரம்பரை அனுபவங்கள் ஏற்கனவே இருந்ததோடு சேர்த்து இப்போது அவரின் மகனுக்குக் கொடுக்கப் படுகின்றன என்பது உண்மையாக இருப்பதைக் காண்கிறோம். 

அதே வேளையில் குறிப்பிட்ட இந்தப் பரம்பரை அனுபவங்களைப் பெறுவதற்கான இடத்துடன் என்னை இணையைச் செய்தது எனது கடந்தக் கால (முற்பிறவி) அனுபவங்கள்.....  

ஒரு தந்தை குழந்தைக்கு எண்ணத்தைக் கொடுப்பதில்லை.

எண்ணம் தான் எண்ணத்தைக் கொடுக்க முடியும். 

(இப்போது எனது எண்ணங்கள் எழுத்தாகி நீங்கள் அதைப் படிக்கும் பொது உங்களுள் ஒரு எண்ணமாகிறதே அதைப் போல) 

இப்போது பிறந்துள்ளக் குழந்தை, முன்பு எண்ணமாக இருந்தது.

எண்ணங்களாக நாம் என்றென்றும் இருந்தோம். இனியும் எண்ணமாக இருப்போம்.

நாம் என்ன நினைக்கிறமோ, நமது உடம்பு அதுவாகிறது...

எல்லாமே எண்ணத்தால் உருவாக்கப் படுகிறது; எனவே நமது வாழ்க்கையை உருவாக்குபவர்கள் நாமே.

நாம் என்ன செய்கிறோமோ அதற்கெல்லாம் பொறுப்பு நாம் மட்டுமே. "நான் ஏன் துன்பப் படுகிறேன்?" என்றுக் கதறுவது முட்டாள்த் தனம்.

எனது துன்பத்தை நானே உருவாக்குகிறேன் இது இறைவனின் தவறு அல்லவே அல்ல.

நாம் விதைத்தையே நாம் அறுக்கிறோம். நாம் படுகின்ற துன்பங்கள், நாம் போராடுகின்றத் தளைகள் எல்லாம் நாம் உருவாக்கியவை.

அதற்கு பிரபஞ்சத்தில் உள்ள யாரையும் குறை சொல்ல வேண்டியதில்லை. கடவுளை குறை சொல்வதில் அர்த்தமே இல்லை.

' இத்தகைய, ஒரு தீய உலகத்தைக் கடவுள் ஏன் படைக்க வேண்டும்? ' அவர் படைத்த நல்ல உலகத்தை நாம் தான் தீய உலகாக்கினோம்.

' நான் இவ்வளவு துன்பப் படும் படி என்னை ஏன் கடவுள் படைத்தார்?' அவர் அப்படிப் படைக்க வில்லை.

எல்லா உயிர்களுக்கும் எவ்வளவு ஆற்றலை வழங்கியுள்ளாரோ அதே அளவை தான் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ளார்.

நமது இந்த நிலைக்கு நாமேக் காரணம்.

நாம் செய்த ஒன்றிற்கு கடவுளை குற்றம் சொல்லவதா?

அவரின் கருணை எப்போதும் ஒன்றுப் போலவே இருக்கிறது.

அவரின் சூரியனும், காற்றும், தண்ணீரும், பூமி எல்லாம் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் ஒன்று போலவே உதவுகின்றன.

அவர் அனைவருக்கும் கருணை உள்ள தந்தையாகவே தான் இருக்கிறார்.

முந்தய செயல்களின் மூலம் நீ சேர்த்த எதையும் உன்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது.

உனக்கு செல்வம் சேரவேண்டும் என்று இருந்தால், நீ காட்டில் போய் உன்னைப் புதைத்துக் கொண்டாலும் அது உன்னைத் தேடி வரும்.

நல்ல உணவும் உடையும் கிடைக்க வேண்டியிருந்தாலும் நீ வட துருவத்தில் இருந்தாலும், அங்கு காணும் வட துருவ கரடியே அதனைக் கொண்டு வந்து சேர்க்கும்.

இல்லை என்றால், நீ உலகம் முழுவது வென்றாலும் கூட பட்டினிக் கிடந்தது சாக நேரிடும்.

அப்படி இருக்கஇந்த விசயங்களை நினைத்து ஏன் கவலைப் படுகிறாய்?

அவற்றால், அப்படிக் கவலைப் படுவதால் தான் என்னப் பயன்.

கர்ம வினைகளால் பிறவி அமைகிறது... கர்மம் தீர வேண்டும். இதில் நம் விருப்பு வெறுப்பு என்பதற்கே இடம் இல்லை. விதைத்ததேயே அறுக்கிறோம்.

கவலை துறந்து. மற்ற இயற்கைப் பொருள்களை போல தனக்கென வாழாது, பிறர்க்கென வாழ்ந்து, நமது வாழ்வில் நமக்கு உள்ள தலையாய கடமைகளை செய்வோம்.

இது தான் நாம் செய்ய வேண்டியது. இயற்கையின் மூலம், கடவுள் நமக்கு உணர்த்தும் உண்மையும் அது தான். கூர்ந்து நன்கு கவனித்தால் நன்கு விளங்கும்.


பூவில் உள்ளத் தேன் பூவிற்காக வைக்கப் பட்டதல்ல. காய்களும், கனிகளும், தானியங்களும் இப்படி யாவும் ஒன்று மற்றதற்காகப் படைக்கப் பட்டவைகள்.

மனிதனும் அப்படியே, என்பது தான் உண்மை

கடமையை செய்வோம்! அந்தக் கடமையானது தான், எங்கும் நிறைந்தக் கடவுளின் பிரபஞ்சத்தை, எல்லா உயிர்களின் உள்ளே ஒளிவிடும் அப் பரம்பொருளை அன்பால் போற்றி; அந்தப் பேரொளியோடு  இணைந்து; துயர்மிக்க வாழ்வை வெல்வோம். 

எங்கிருந்து வெளிப் பட்டமோ! அங்கேயே அதுவாக அதனோடு அதனருளாலே இரண்டறக் கலப்போம்.
அதுவே அமரத்துவம். அதை நோக்கி தான் நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ முயன்றுக் கொண்டிருக்கிறோம்.

அந்த அற்புதமான அவசியமான செயலை / வீடுபேறு / சாகா நிலை / ஜீவன் முக்தி , பெறும் முறையை வேதாந்தம் கூறும் செயல் முறையை விவேகானந்தரின் வழியிலே..... மற்றொருமுறை பகிர்ந்துக் கொள்வோம். 

நன்றி வணக்கம்,

அன்புடன்,
தமிழ் விரும்பி.

Monday, 8 August 2011

ஜோதியை ஜோதி எப்படி எரிக்கும்? - விவேகானந்தரின் சிந்தனைகளோடு...



மனித வாழ்வின் பல்வேறு கூறுகள் பற்றி யோசிக்கப் போகும் முன் இந்த சில வார்த்தைகளையும் அதனை பற்றிய நமது அறிவையும் மனதில் கொண்டு மேலே செல்வோம்.

மனித உடல் (உடல் உறுப்புகள்),
புலன்கள் (அதாவது நாம் கூறும் ஐம் பொறிகளின் மூலம் உணரப் படுகின்ற விஷயம் கொண்டு சேர்க்கப் படும் முதலிடம்)
மனம்,
புத்தி,
அறிவு அல்லது ஆன்மா. 
இந்த ஐந்தையும் மனதில் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 

இதன் பாகுபாடுகளை, பயன்களை, குணங்களை, அதன் சங்கிலித் தொடர் இணைப்புகளை
எதனால் எது இயங்குகிறது என்பதைப் பற்றிப் பேசும் போது மிக எளிதில் விளங்கும்.  

1.    மனித வாழ்க்கையில் நிலையானது ஏதாவது உண்டா?

2.    இந்த உடல் அழிந்தப் பின்னும் அழியாமல் இருப்பது என்ன?

3.    இந்த உடற்கூடு மாய்ந்து சாம்பலானப் பின்னும் ஏதோ ஒன்று வாழ்ந்துக் கொண்டிருப்பதில்லையா?

4.    உடலை எரித்து சாம்பலாக்கும் நெருப்பினால் பாதிக்கப் படாத ஏதோ ஒன்று இல்லையா?


5.    அப்படி ஒன்று இருக்குமானால் அது என்ன ஆகிறது?

6.    எங்கே போகிறது?

7.   அது எங்கிருந்து வந்தது?

இப்படிப் பலக் கேள்விகள் படைப்பின் காலம் தொட்டேக் கேட்கப் பட்டக் கேள்விகள். மனித மனங்கள் இருக்கும் வரை இந்தக் கேள்விகள் இருக்கத்தான் செய்யும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவைகளுக்கு முடிவானப் பதில் கிடைத்தது.

அந்தப் பதிலே திரும்பத் திரும்பத் எடுத்துக் கூறப் பட்டது. நமது அறிவுக்கு எட்டும் படியாக (தெளிவாகப் புரியும் படியாக கூறப் படுகிறது) இதுவும் அது போன்ற ஒரு முயற்சியே.

முப்போதும் உள்ள உண்மையை... புதிய மொழியில் எடுத்துச் சொல்கிறோம். கடவுளின் மொழியைப் பாமர மக்களின் மொழியில் சொல்கிறோம்.

இந்தக் கருத்துக்கள் எந்த தெய்வீக சக்தியிலிருந்து தோன்றியனவோ! அது, அந்த தெய்வசக்தி எப்போதும் மனிதனில் இருக்கிறது. ஆம், அது மனிதனில் இருக்கிறது.

ஆகவே, மனிதனாகிய நம்மால் இந்தக் கருத்தை எப்போதும் புரிந்துக் கொள்ள முடியும்.

மனித மனம் இயல்பாகவே வெளியில் காணும் அனைத்துப் பொருட்களிலும் தன்னை செலுத்துகிறது. ஐம்புலன்கள் வழியில் அதை அடைகிறது.

கண் பார்க்கவேண்டும், காது கேட்க வேண்டும்.. இப்படி மற்ற புலன்களும் இந்த உலகை உணரவேண்டும்.

இந்த இயற்கையின் அழகும், நுட்பமும் மனிதனின் கருத்தைக் கவர்ந்தன...

அவன், இதன் மர்மத்தை அறிய, தீர்வு காண விரும்பினான் என்பதற்கான ஆதாரம் பல மதங்களிலும் உள்ளன.

சரி இப்படி ஆராய்ந்த மனித மனங்கள்... இந்த வானம், நட்சத்திரம், கிரகங்கள், பூமி, நதிகள், மலைகள், கடல் இவையாவும் தெய்வமென ஒவ்வொன்றையும் ஒருக் கடவுளாக வைத்துக் கொண்டன.

இன்று நாம் இயற்கையின் சக்திகள் என்று சொல்லக் கூடிய யாவற்றையும், பழங்கால மனிதன், தெய்வங்களாகவும், தேவர்களாகவும் உருவகப் படுத்திக் கொண்டான்.

ஆராய்ச்சியின் ஆழம் அதிகமாக போக போக மனித மனத்திற்கு திருப்தி அளிக்காததால், மனிதனின் அகத்தை நோக்கித் திரும்பினான்.
_____________________________________________________________________

சரி விசயத்திற்கு வருவோம்.

நான் உங்களைப் பார்க்கிறேன். கண்கள் அதற்கு உதவுகின்றன, இவைகளை கருவி, அதாவதுக் கேமிரா என்று சொல்லலாம். 

கண்கள் பார்க்கும் உறுப்புகள் இல்லை, அதனால் தான் அதை காமிரா என்றேன் / அதாவது பொறிகளே. 

நான் இப்படி கூறவுது உங்களுக்கு குழப்பமாகத் தோன்றலாம். இதை இன்னும் சுலபமாகக் கூற வேண்டுமென்றால். 

இடையில் பார்வைப் போனவனுக்கு, பார்வைப் போன பிறகும், அவன் முதலில் கண்ட எந்தக் காட்சியையும் அவனால் உடனே மனத்தால் நினைத்து உணர முடியும். 

ஆக, கண்கள் / காமிரா கெட்டுப் போனாலும், அந்த காமிராவால் படம் பிடிக்கப் பட்ட விஷயங்கள் வேறு ஒரு இடத்தில் இருப்புக் கொள்கிறது. 

அதையே இப்படிக் கூறலாம், கண்களில் விழுந்தக் அந்தக் காட்சியைத் தாங்கிச் செல்வது பார்வைப் புலன்கள். 

அதாவது உண்மையான பார்வைப் புலன்கள் மூளைக்குப் பின்னால் இருக்கும் நரம்பு மையமே. 

இவைகள் கெட்டுப் போனால், நல்லக் கண்களைக் கொண்டவன் கூடப் பார்க்க முடியாது.

புலன்கள் கெட்டுப் போனால் / அல்லது செயல் படாது செய்தால் கருவிகளால் எந்தப் பயனும் இல்லை. 

இதை நாம் அனைவரும் அறிந்த சிறு உதாரணம் மூலம் கூறலாம்.

நாம் ஒரு நூலகத்தில் இருந்து கொண்டு நமக்குப் பிடித்த ஒருப் புத்தகத்தை ஆழ்ந்துப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். 

அப்போது மணி அடிக்கிறது, அது நமது காதில் விழுவதில்லை. 

மணிச் சத்தம் எழுகிறது,
அது காற்றில் பயணம் செய்கிறது,
காதுகளின் மூலம் செவிப் புலனையும் அடைகிறது.
ஆனாலும் நாம் அதைக் கேட்கவில்லை.
இப்போது எதில் குறைபாடு?
மனம் அதில் ஈடுபடவில்லை என்பதே உண்மை.

ஆகவே, ஒன்றை நாம் உணரமுதலில் பொறி / கருவி, அதன் பிறகு இரண்டாவதாக புலன் (மூளையோடு கூடிய நரம்பு மண்டலம்), மூன்றாவதாக மனத்தின் ஈடுபாடு அவசியம். 

அதாவதுபுறக் கருவிகள் / பொறிகள் / உடல் உறுப்புகள்;

பின்னர் உணர்சிகளை கொண்டு சேர்க்கின்ற மையமாகிய புலன்;

கடைசியாக புலன்களோடு இணைந்த மனம் இவை மூன்றும் தேவை.


சரி இத்தோடு இந்தச் செயல் முடிவடை கிறதா? இல்லை.

பொறி, புலன், மனம் என்ற இந்த நிலையில்....

மனம் அதைத் தாங்கிக் கொண்டு புத்தியின் முன்பு வைக்கிறது.

புத்தி, தன் முன்பு வைக்கப் பட்டது என்ன என்பதைத் தீர்மானம் செய்கிறது.

அதோடும் முடிவதில்லை...

இந்தப் புத்தி எல்லாவற்றையும் தாங்கிச் சென்று, உடலுக்கு அதிபதியாக சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஆன்மாவாகிய அரசனின் முன்பு வைக்கிறது.
இதைச் செய்யவேண்டும், இதைச் செய்யவேண்டாம் என்று கட்டளை அவனிடம் இருந்துப் பிறக்கிறது.

அப்படி அந்தக் கட்டளை, புத்தி, மனம், புலன்கள் என்று அதே வழியாக பொறியை அடைகிறது.

அதன் பிறகு தான் செயல் முழுமை அடைகிறது.

__________________________________________________________________

பொறிகள் அல்லது உறுப்புகள் அவைகள் நமது உடலில் இருக்கின்றன.

மனமும், புத்தியும் எங்கே இருக்கின்றன?

மனமும் புத்தியும் இந்துக்கள் சூட்சும உடலில் இருக்கின்றன என்றும் கிறிஸ்துவர்கள் ஆன்ம உடலில் இருக்கின்றன என்பார்கள்.

இந்த சூட்சும உடல், தூல உடலை விட மிகவும் நுட்பமானது. ஆனால் இந்த சூட்சும உடல் ஆன்மா அல்ல.

தூல உடல். அதாவது, நமது பூத உடல் சில வருடங்களில் அழிந்து விடுகிறது.

சூட்சும உடல் அவ்வளவு சுலபமாக அழிவதில்லை. ஆனால் அவைகள் சில வேளைகளில் சக்தியை இழக்கிறது, பல வேளைகளில் வலிமையாக இருக்கிறது.

இதை விளக்க சில உதாரணங்களைக் கூறலாம்.

வயதானவர்கள் மனம் பலவீனம் அடைகிறது.
போதைப் புலங்கிகளின் மனம் பாதிக்கப் படுகிறது.

ஆக, உடலைப் போல மனமும் எழுச்சியையும், வீழ்ச்சியையும் அடைகிறது. 

ஆனால்,ஆன்மாவுக்கு அழிவோ, வீழ்ச்சியோ இல்லை.

அது எப்படி நமக்குத் தெரியும்?

இந்த மனத்திற்கும் பின்னால் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது நமக்கு எப்படித் தெரியும்

என்றக் கேள்விக்கு பதில்....

மந்தமான, உணர்வற்றதுமான............... திடப் பொருள்களில்............ சுய ஒளி படைத்த ஞானமும் + அறிவின் அடிப்படையும் இருப்பதில்லை. 

அதனால் தான் அறிவே உருவான ஜடப்பொருளை நாம் என்றும், எங்கும் காண்பதில்லை.

ஜடப் பொருளும் சுயமாக ஒளிர முடியாது. அந்த ஜடப்பொருளையும் ஒளிரச் செய்வது அறிவுதான்.

உதாரணம் வேண்டும் என்றால் நமக்கு முன்பு ஒரு மாளிகை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

இந்த பெரிய மாளிகை இருப்பதற்கு அறிவுதான் காரணம். ஆம், ஏதோ அறிவுப் பொருள் இதைக் கட்டிரா விட்டால் இங்கே இருக்க முடியாது.  

அதைப் போலவே உடலும் சுய ஒளி பெற்றது அல்ல. அப்படி அதற்கு சுய ஒளி இருக்கும் என்றால், இறந்துப் போன உடலிலும் சுய ஒளி இருக்க வேண்டும். 

இதை போலவே சூட்சும உடலுக்கும் கூட சுய ஒளி இல்லை. 

சூட்சும உடல் கொண்ட; மனமும், புத்தியும், சந்திரனைப் போல தேய்ந்து வளரக் கூடியது. 

சந்திரனைப் போலவே, வேறு ஒன்றிலிருந்து தான் ஒளியைப் பெறுகிறது.  அதனால் தான் சில நேரங்களில் மனம், புத்தி பலமாகவும், பலவீனமாகவும் இருக்கிறது. 

மனதிற்கு கிடைக்கும் ஒளி..... நிரந்தரமான, அழிவில்லாத அந்த அறிவான, இருப்பான, ஆனந்தமான ஆன்மாவில் இருந்து தான் கிடைக்கிறது. 

சரி இந்த ஆன்மாவின் குணம் தான் என்ன என்றால்? அதற்கு பதில்.

ஆன்மாவிற்கு குணங்கள் இல்லை. 
ஆம், இந்த அறிவு, இருப்பு, ஆனந்தமே தான் ஆன்மா. 
இவைகள் தாம் ஆன்மாவின் சாரம். (நிர் குணமானது)

சரி இப்படி கூறும் போது... இந்த ஆன்மாவிற்கு ஒளி எங்கிருந்தது கிடைத்தது என்று வாதிட்டோம் என்றால்.

அது தொடரர்ந்து போய் கொண்டிருந்தால், அது ஒரு சுய ஒளி உள்ள ஒருப் பொருளில் இருந்து தான் பெறப் பட்டது என்பதில் தான் முடியும் அதிலே, இந்தத் தர்கத்தையும் முடிப்போம்.

இப்போது ஒரு தெளிவை நாம் பெற முடியும்....

உடலின் குணங்களும், சக்திகளும் மனத்தில் இருந்துப் பெறப் படுகின்றன.

சூட்சும உடல் சக்தியையும், ஒளியையும், அதற்குப் பின்னால் உள்ள ஆன்மாவிடமிருந்துப் பெறுகிறது.

அப்படி என்றால் இந்த ஆன்மாப் படைக்கப் பட்டதா?

ஆன்மா சுய ஒளி பெற்றது; ஆன்மா அறிவு, இருப்பு, ஆனந்தம் இவற்றை சாரமாக கொண்டது; அதாவது சச்சிதானந்தமானது. ஆகவே ஆன்மாப் படைக்கப் பட்டது அல்ல.

காலம் (Time frame) என்பது மனம் சிந்திக்கத் தொடங்கும் போது தான் ஆரம்பம் மாகிறது....

அந்த மனமே இந்த ஆன்மாவால் தான் ஒளி பெறுகிறது என்பதால் காலத்தை ஆன்மாவிற்குள் அடக்க முடியாது. 

ஆகவே, ஆன்மா, பிறப்பு இறப்பற்றது என்பது உறுதியாகிறது. 

ஆன்மா பிறப்பு இறப்பு அற்றதுஆனால், இந்தக் கீழ்காணும் பல்வேறு நிலைகளின் வழியாகவும் செல்கிறது.

ஆன்மா; தாழ்ந்த நிலையில் இருந்து சிறிது சிறிதாக தன்னை வெளிப்படுத்தியவாறு உயர்ந்த நிலைக்குச் செல்கிறது;
(இதை ஒரு செல் உயிரின் நிலையில் இருந்து உயர்ந்து மனிதனாகப் பிறந்தும், பிறகு அது இன்னும் உயர்ந்து முக்தி அடைவது)

ஆன்மா; மனத்தின் மூலமாக, உடலை இயக்கியவாறு, தனது மகிமையை வெளிப்படுத்துகிறது;

ஆன்மா; உடலின் மூலமாக வெளி உலகத்தைப் புரிந்துக் கொள்கிறது

ஆன்மா; ஓர் உடலை எடுத்துக் கொண்டு அதைப் பயன் படுத்துகிறது;
அந்த உடல் நலிந்துப் போகும் போது வேறு ஒரு உடல் எடுத்துக் கொள்கிறது. 

இவ்வாறு இது நடந்துக் கொண்டே இருக்கிறது. 

இப்போது கட்டுரையின் தொடக்கத்தில் எழுப்பியக் கேள்விகள்,

1.    மனித வாழ்க்கையில் நிலையானது ஏதாவது உண்டா?

2.    இந்த உடல் அழிந்தப் பின்னும் அழியாமல் இருப்பது என்ன?

3.    இந்த உடற்கூடு மாய்ந்து சாம்பலானப் பின்னும் ஏதோ ஒன்று வாழ்ந்துக் கொண்டிருப்பதில்லையா?

4.    உடலை எரித்து சாம்பலாக்கும் நெருப்பினால் பாதிக்கப் படாத ஏதோ ஒன்று இல்லையா?


5.    அப்படி ஒன்று இருக்குமானால் அது என்ன ஆகிறது?

6.    எங்கே போகிறது?

7.    அது எங்கிருந்து வந்தது?

இந்த ஏழில் முதல் ஐந்துக் கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது.

ஒரே வரியில் சொன்னால், உடல் அழிகிறது ஆன்மா அழிவதில்லை.... எரியும் நெருப்பு ஆன்மாவைத் தீண்டுவதில்லை... ஜோதி ஜோதியை எப்படி எரிக்கும்?




கடைசி இரண்டுக் கேள்விகளுக் காணப் பதில்களின் சுருக்கத்தை பிறகு பார்ப்போம்... 

என்ன ஏதாவது புரிகிறது மாதிரி இருக்கிறதா?...

எந்திர வாழ்வில் இது போன்ற விசயங்களை புரியும் படி படிக்க எங்கே நேரம் என்கிறீர்களா? அப்படி நினைக்க வேண்டாம்.

இவைகளை நாம் நிச்சயம் ஒரு நாள் புரித்துக் கொண்டே ஆக வேண்டும். இது அவசியமானது. இப்போது பயன்படுவதாகத் தோன்றாது.

ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, ஒவ்வொரு ஜீவராசியும் இதை செய்துக் கொண்டு தான் இருக்கின்றன. என்ன கடைசியாக ஆறறிவுப் படைத்த, நாம் தான் புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஆக, அதனாலே எல்லா உயிரிலும் மனிதப் பிறவியே சிறந்தது என்பர் சான்றோர்.

தயவு செய்து ஒரு முறைக்கு இரண்டு முறை படியுங்கள்.... நிச்சயம் எனக்கு விளங்கியவைகள் உங்களுக்கும் விளங்கும்.

நன்றி வணக்கம்,

அன்புடன்,
தமிழ் விரும்பி.