பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

Tuesday, 16 August 2011

முகத்தைத் தேர்ந்தெடுக்கும், நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை.



ஆன்மா; ஓர் உடலை எடுத்துக் கொண்டு அதைப் பயன் படுத்துகிறது;
அந்த உடல் நலிந்துப் போகும் போது வேறு ஒரு உடல் எடுத்துக் கொள்கிறது.


1.    மனித வாழ்க்கையில் நிலையானது ஏதாவது உண்டா?

2.    இந்த உடல் அழிந்தப் பின்னும் அழியாமல் இருப்பது என்ன?

3.    இந்த உடற்கூடு மாய்ந்து சாம்பலானப் பின்னும் ஏதோ ஒன்று வாழ்ந்துக் கொண்டிருப்பதில்லையா?

4.    உடலை எரித்து சாம்பலாக்கும் நெருப்பினால் பாதிக்கப் படாத ஏதோ ஒன்று இல்லையா?


5.    அப்படி ஒன்று இருக்குமானால் அது என்ன ஆகிறது?

6.    எங்கே போகிறது?

7.    அது எங்கிருந்து வந்தது?

இப்படிசென்றக் கட்டுரையில் எழுந்த ஏழு கேள்விகளுள் ஐந்திற்கு அங்கேயே பதில் கண்டோம். கடைசி இரண்டுக் கேள்விகளுக்கு இங்கே பதில் காண்போம்.

உடல் அழிந்ததும். அழிவில்லாத ஆன்மா மீண்டும் பிறக்கிறது...

மறுபிறவி என்பதைப் புரிந்துக் கொள்ள, இந்தப் பிரபஞ்சத்தில் சூன்யத்திலிருந்து எதையும் உருவாக்க முடியாது.

காரணம் சூன்யத்திலிருந்து உருவாகினால் அதனுள் மீண்டும் போய்விடும். ஆரம்பம் உள்ள எதற்கும் முடிவு என்று ஓன்று நிச்சயம் இருந்தே தீரும்.

ஆன்மாக்கள் என்ற நிலையில் நமக்கு ஆரம்பமும் இருந்திருக்க முடியாது. நாம் எப்போதும் இருக்கிறோம்.

மீண்டும் இங்கு ஞாபகப் படுத்திக் கொள்வோம். இந்த பிரபஞ்சத்தையே தனது உடலாகக் கொண்ட, அதாவது இந்த பிரபஞ்சத்தின் மனமாகிய அந்த பரபிரமத்தில் இருந்து வெளிப்பட்ட மிக நுண்ணிய ஒரு பிரிவுதான் இந்த ஆன்மா.

ஒளிப் பெருங்கடலின் சிறு நீர் திவலைகள் தாம் இந்த ஆன்மாக்கள். 

மறுபிறவியைப் பற்றி சொல்கையில்....

மேலும், நாம் முன்பு இருக்கவில்லை என்றால், இப்போது நாம் இருப்பதையும் விளக்கமுடியாது.

மறுபிறவி என்பதனால் மாத்திரமே கீழ் காணும் விசயங்களை விளக்க முடியும். 

காரணங்களாகிய மூட்டையுடன் தான் குழந்தை மண்ணில் பிறக்கிறது. அப்படி பிறக்கும் குழந்தைகளிடம் எத்தனையோ விசயங்களைக் காண்கிறோம். உதாரணமாக, மரண பயம், வேறு எத்தனையோ இயல்பான போக்குகள்.


தனது தாயிடம் பால் குடிப்பதற்கும், அதை ஒருக் குறிப்பிட்ட விதத்தில் குடிப்பதற்கும் குழந்தைக்கு யார் கற்றுத் தந்தார்கள்? இந்த அறிவை அது எங்கிருந்துப் பெற்றது?

அனுபவமில்லாமல் அறிவு வரமுடியாது. அப்படி இருக்க இந்த அறிவு குழந்தையிடம் ஏற்கனவே இருக்கிறது.

இதற்கிடையில் ஒரு சிலர் இதை இயல்புணர்ச்சி என்பர். இது தர்கமுறைப் படித் தவறாகும்.

சரி, குழந்தைகளிடம் எப்படி இந்த இயல்பான போக்குகள் உள்ளன? என்பது தான் கேள்வி.

மரணத்தையே அறியாத அதனிடம் மரண பயம் ஏன் இருக்க வேண்டும்

இப்போது தான் அது, முதன் முதலில் பிறந்திருக்கிறது என்றால், தாயிடம் பால் குடிக்க அது எவ்வாறு அறிந்திருந்தது?. அது தான் இயல்புணர்ச்சி என்றால்... பழக்கத்தைத் தவிர இயல்புணர்ச்சி என்று வேறு ஒன்று கிடையாது.  

பழக்கம் தான் இயல்பு. நமது இயல்பில் உள்ள அனைத்தும் பழக்கங்களின் விளைவே. அனுபவத்தின் மூலம் இல்லாமல் எந்த அறிவும் உண்டாக முடியாது.

எனவே, இந்தக் குழந்தைக்கு ஏதோ அனுபவம் இருந்திருக்கிறது.

நவீன விஞ்ஞானம் கூட இந்த உண்மையை ஒத்துக் கொள்கிறது.

குழந்தை தன்னுடைய அனுபவ மூட்டையுடனே பிறக்கிறது என்பதை இன்றைய விஞ்ஞானம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

ஆக, குழந்தை அறிவின் ஒருமூட்டையோடே வருகிறது. இதுவரை சரி.

குழந்தை தன்னுடன் கொண்டு பிறக்கும் அறிவு அனுபவத்தின் மூலம் பெற்றது தான், என்பதை நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது......

அதேவேளையில் அந்த அறிவு அதன் சொந்த அறிவல்ல; அதனுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் என்று அவர்களிடமிருந்து தான் அறிவு வருகிறது.

பரம்பரை மூலம் அறிவு வருகிறது என்றுக் கூறும் விஞ்ஞானம்..... இது போதாது. ஏன் அப்படி?

பெளதீகமாக ஒன்றை ஒருவர் மற்ற ஒருவருக்குத் தருவது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.

ஆனால், மானசீக நிலையில் ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பது என்பது புரிந்துக் கொள்ள முடியாதது. 

நான் ஓர் ஆன்மா; நான் ஒரு தந்தையின் மூலம் பிறக்க வேண்டும், அவர் எனக்குச் சில குறிப்பிட்ட குணங்களைத் தர வேண்டும் என்பதற்குக் காரணம் என்ன?

நான் மீண்டும் பிறந்ததற்கு காரணம் என்ன?

தந்தைக்கு என்று சில குறிப்பிட்ட குணநலன்கள் இருக்கலாம், அவர் நான் பிறப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் ஒரு தனி ஆன்மாவாக ஏற்கனே இருக்கிற நான், பிறக்க விரும்பும் பொது, என்னை ஒருக் குறிப்பிட்ட மனிதனின் உடம்பில் புகச் செய்வது எது?

அவரிடம் இருந்து எனக்கு ஆற்றல் வருகிறது என்றாலும் கூட, நான் ஏற்கனே இருக்கிறேன் என்பதை ஒத்துக் கொண்டால் தான் இதையும் சரியாக விளக்க முடியும்.

ஒருவன் பிச்சைக் காரனுக்கு மகனாகப் பிறப்பதற்கும், வேறொருவன் பில்கேட்டின் வீட்டில் பிறப்பதற்கும் எதுக் காரணம்?

இது தான் கர்மம் அல்லது காரியகாரண நியதி என்று அழைக்கப் படுகிறது.

எனது முந்தையப் பிறவியின் செயல்கள் குடிப்பழக்கத்தைச் சார்ந்ததாக இருக்குமானால், அத்தகைய குணம் கொண்ட ஒருவனை நோக்கியே இப்போது நான் ஈர்க்கப் படுவேன்.

எத்தகைய பெற்றோர்களின் உள்ளே புகுந்தால் எனது முந்தைய செயல்களின் ஆதிக்கத்திற்குப் பொருத்தமாக இருக்குமோ அவர்களின் உள்ளேயே நான் புகுவேன்.

இவ்வாறு தந்தையிடமிருந்து சில பரம்பரை அனுபவங்கள் ஏற்கனவே இருந்ததோடு சேர்த்து இப்போது அவரின் மகனுக்குக் கொடுக்கப் படுகின்றன என்பது உண்மையாக இருப்பதைக் காண்கிறோம். 

அதே வேளையில் குறிப்பிட்ட இந்தப் பரம்பரை அனுபவங்களைப் பெறுவதற்கான இடத்துடன் என்னை இணையைச் செய்தது எனது கடந்தக் கால (முற்பிறவி) அனுபவங்கள்.....  

ஒரு தந்தை குழந்தைக்கு எண்ணத்தைக் கொடுப்பதில்லை.

எண்ணம் தான் எண்ணத்தைக் கொடுக்க முடியும். 

(இப்போது எனது எண்ணங்கள் எழுத்தாகி நீங்கள் அதைப் படிக்கும் பொது உங்களுள் ஒரு எண்ணமாகிறதே அதைப் போல) 

இப்போது பிறந்துள்ளக் குழந்தை, முன்பு எண்ணமாக இருந்தது.

எண்ணங்களாக நாம் என்றென்றும் இருந்தோம். இனியும் எண்ணமாக இருப்போம்.

நாம் என்ன நினைக்கிறமோ, நமது உடம்பு அதுவாகிறது...

எல்லாமே எண்ணத்தால் உருவாக்கப் படுகிறது; எனவே நமது வாழ்க்கையை உருவாக்குபவர்கள் நாமே.

நாம் என்ன செய்கிறோமோ அதற்கெல்லாம் பொறுப்பு நாம் மட்டுமே. "நான் ஏன் துன்பப் படுகிறேன்?" என்றுக் கதறுவது முட்டாள்த் தனம்.

எனது துன்பத்தை நானே உருவாக்குகிறேன் இது இறைவனின் தவறு அல்லவே அல்ல.

நாம் விதைத்தையே நாம் அறுக்கிறோம். நாம் படுகின்ற துன்பங்கள், நாம் போராடுகின்றத் தளைகள் எல்லாம் நாம் உருவாக்கியவை.

அதற்கு பிரபஞ்சத்தில் உள்ள யாரையும் குறை சொல்ல வேண்டியதில்லை. கடவுளை குறை சொல்வதில் அர்த்தமே இல்லை.

' இத்தகைய, ஒரு தீய உலகத்தைக் கடவுள் ஏன் படைக்க வேண்டும்? ' அவர் படைத்த நல்ல உலகத்தை நாம் தான் தீய உலகாக்கினோம்.

' நான் இவ்வளவு துன்பப் படும் படி என்னை ஏன் கடவுள் படைத்தார்?' அவர் அப்படிப் படைக்க வில்லை.

எல்லா உயிர்களுக்கும் எவ்வளவு ஆற்றலை வழங்கியுள்ளாரோ அதே அளவை தான் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ளார்.

நமது இந்த நிலைக்கு நாமேக் காரணம்.

நாம் செய்த ஒன்றிற்கு கடவுளை குற்றம் சொல்லவதா?

அவரின் கருணை எப்போதும் ஒன்றுப் போலவே இருக்கிறது.

அவரின் சூரியனும், காற்றும், தண்ணீரும், பூமி எல்லாம் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் ஒன்று போலவே உதவுகின்றன.

அவர் அனைவருக்கும் கருணை உள்ள தந்தையாகவே தான் இருக்கிறார்.

முந்தய செயல்களின் மூலம் நீ சேர்த்த எதையும் உன்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது.

உனக்கு செல்வம் சேரவேண்டும் என்று இருந்தால், நீ காட்டில் போய் உன்னைப் புதைத்துக் கொண்டாலும் அது உன்னைத் தேடி வரும்.

நல்ல உணவும் உடையும் கிடைக்க வேண்டியிருந்தாலும் நீ வட துருவத்தில் இருந்தாலும், அங்கு காணும் வட துருவ கரடியே அதனைக் கொண்டு வந்து சேர்க்கும்.

இல்லை என்றால், நீ உலகம் முழுவது வென்றாலும் கூட பட்டினிக் கிடந்தது சாக நேரிடும்.

அப்படி இருக்கஇந்த விசயங்களை நினைத்து ஏன் கவலைப் படுகிறாய்?

அவற்றால், அப்படிக் கவலைப் படுவதால் தான் என்னப் பயன்.

கர்ம வினைகளால் பிறவி அமைகிறது... கர்மம் தீர வேண்டும். இதில் நம் விருப்பு வெறுப்பு என்பதற்கே இடம் இல்லை. விதைத்ததேயே அறுக்கிறோம்.

கவலை துறந்து. மற்ற இயற்கைப் பொருள்களை போல தனக்கென வாழாது, பிறர்க்கென வாழ்ந்து, நமது வாழ்வில் நமக்கு உள்ள தலையாய கடமைகளை செய்வோம்.

இது தான் நாம் செய்ய வேண்டியது. இயற்கையின் மூலம், கடவுள் நமக்கு உணர்த்தும் உண்மையும் அது தான். கூர்ந்து நன்கு கவனித்தால் நன்கு விளங்கும்.


பூவில் உள்ளத் தேன் பூவிற்காக வைக்கப் பட்டதல்ல. காய்களும், கனிகளும், தானியங்களும் இப்படி யாவும் ஒன்று மற்றதற்காகப் படைக்கப் பட்டவைகள்.

மனிதனும் அப்படியே, என்பது தான் உண்மை

கடமையை செய்வோம்! அந்தக் கடமையானது தான், எங்கும் நிறைந்தக் கடவுளின் பிரபஞ்சத்தை, எல்லா உயிர்களின் உள்ளே ஒளிவிடும் அப் பரம்பொருளை அன்பால் போற்றி; அந்தப் பேரொளியோடு  இணைந்து; துயர்மிக்க வாழ்வை வெல்வோம். 

எங்கிருந்து வெளிப் பட்டமோ! அங்கேயே அதுவாக அதனோடு அதனருளாலே இரண்டறக் கலப்போம்.
அதுவே அமரத்துவம். அதை நோக்கி தான் நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ முயன்றுக் கொண்டிருக்கிறோம்.

அந்த அற்புதமான அவசியமான செயலை / வீடுபேறு / சாகா நிலை / ஜீவன் முக்தி , பெறும் முறையை வேதாந்தம் கூறும் செயல் முறையை விவேகானந்தரின் வழியிலே..... மற்றொருமுறை பகிர்ந்துக் கொள்வோம். 

நன்றி வணக்கம்,

அன்புடன்,
தமிழ் விரும்பி.