பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Tuesday 13 September 2011

கம்பனும் கண்ணதாசனும்...



கம்பனும் கண்ணதாசனும்

செந்தமிழ்நாடெனும், தென் தமிழ் நாட்டிலே - செட்டிநாட்டுச் சீமையிலே ஒரு குட்டிக் கிராமம். சிறுகூடற் பட்டி என்பது அதன் பெயர்.

அந்த சிங்கார ஊரிலே சாத்தப்பன் விசாலாட்சி என்னும் தம்பதியர்  இல்லற மென்னும் நல்லறத்தை இனிதோடே நடத்தி வந்தார்கள். ஏழு பிள்ளைச் செல்வங்களைப் பெற்று இல்லறத்திற்கு எழில் சேர்த்தனர். இத்தனை பெற்றும் சலிக்காது; இன்பக்கடலிலே முக்குளித்து எட்டாவதாக முத்தொன்றை கொண்டுவந்தார்கள்...

"கற்பூரத்தில் கடைத்தோர் மேனியும்
கனகம ணிச்சரம் காட்டிடும் கண்களும்
அற்புத வடிவிலே அமைந்தநற் றோள்களும்
கொண்டதோர் மகனைக் குறைவிலா தீன்றனள்!" 

(
இயேசு காவியத்தில் கவியரசின் வரிகள்)

சிலம்பையும், மணிமேகலையும், குண்டலத்தையும், செம்பொன்
வளையல் களையும்... சிங்கார மணியார மென்னும் சிந்தாமணி
யையும் கொண்டு அன்னைத் தமிழை அலங்கரித்த தமிழ் பெரும்
புலவர் வரிசையிலே...முத்தமிழிலே மூழ்கி நற்றமிழ் என்னும்
அனுபவ முத்துக்களை அழகுடனே கோர்த்து.... முத்து மகுடத்தை
அன்னை முடியிலே ஏற்றிவைக்க முத்தொன்று பிறந்து வந்தான்...
ஆம் முத்தையா என்பதே அவன் நற்பெயராம்...

அன்னைத் தமிழுக்கு அத்தனை அணிகலன்களையும் கொடுத்துவிட்டு மகுடத்தை அவர்கள் மறந்தேனோ? என்று மாண்புடனே சிந்தித்தானோ? இந்த சிகப்புச் சூரியன் என்றே எண்ணத் தோணுகிறது எனக்கு எப்பொழுதும்...

முத்து பிறந்தான் ஆம், "முத்தான முத்தல்லவோ"..என்று அன்னை விசாலம் அவள் முத்தமிடும்; எங்கள் தமிழ் சொத்து பிறந்தான்....

"துல்லிய பட்டுப் போன்ற
தூயவள் சாலின் கையில்
மெல்லிய பாலன் முத்து
விளக்கெனவே புன்னகைத்தான்" 

அன்னை விசாலாட்சி பெற்றெடுத்தாள் அருமைத் தமிழ் மகனை....

"மாளிகைச் செல்வம் தோற்கும்
மாணிக்கத் தொட்டில் தோற்கும்
தூளியிளல்ல தூய அன்னை மடியில்
தூங்கி னான் பாலன் முத்து.... 

(
இ-காவியத்தில்  இதுவும் கவிஞர் வரிகளே)

தமிழோடும் அவன் தன் குலதெய்வமான அன்னை மலையரசியின் அருளோடும் முத்தையா இப்படி வளர்ந்தான்!!!

"அடுத்தவர் இடத்தில் அன்பு காட்டியும்
ஆடல் பாடல் அணுகா திருந்தும்
இழந்தோர் இடத்தே இரக்கம் மிகுந்தும்
ஈகை உதவி இதயம் மலர்ந்தும்
உறவோர் இடத்து உள்ளன்பு வைத்தும்
ஊரார் புகழப் பணிவுடன் நடந்தும்
என்றும் தந்தை எதைச் சொன்னாலும்
ஏற்று முடித்தும் இயல்புற வாழ்ந்தும்
ஐயம் தவிர்க்க ஆசானை அணுகியும்
ஒத்த வயதே உடையோர் இடத்து
ஓதும் பொருளில் உயர்ந்தே நின்றும்"

(
அகர வரிசையில் தொடங்கியப் பாடல் கவியரசுவின் கைவண்ணம்)

அமராவதி குருகுலம்; எட்டாவதாக பிறந்த இந்த முத்துவிற்கு ஏட்டுக் கல்வி என்பது எட்டாண்டுக் கல்விக்கு மேல் எட்டாக் கனியாகிவிட்டது அதைக் கவிஞன் கூறக் கேட்போம்...

"
எட்டாம் வகுப்பை எட்டத்தான் என்பெற்றோர் இட்டார்: பின்ஏழ்மையிலே என்னை உலகில் விட்டார்".


!!!!
வாருங்கள் கவிஞரே!... ஏனிந்த ஏக்கம்?,  வந்த வேலை அது அல்ல.... நீவீர் பள்ளிப் பாடம் படித்து; பகட்டான தொழில் செய்து; பொருள் அள்ளிக் குவிக்க அவதரிக்கவில்லை.

வந்த வேலை என்ன?. செய்யும் வேலை என்ன?. நீர்! படிக்க வேண்டிய பாடம் நிறைய உண்டு. அதுவே, உமது  வாழ்க்கையும் ஆகும்.

கடைசியில் அந்த, உமது  வாழ்க்கையே மற்றவருக்கு பாடமும் ஆகும் என்ற பின்பு - பெரிதாக பள்ளிப் படிப்பு இல்லை. ஆனால், நீவீர் பார்க்காத ஊர் இல்லை, பழகாத ஆள் இல்லை, நுழையா வழி இல்லை, நுகரா பொருள் இல்லை, ஆடாத ஆட்டம் இல்லை, பாடாதப் பாட்டும் இல்லை, அதிலே பாடாதப் பொருளும் மீதமும் ஏதும் இல்லை.

பதிமூன்றாம் வயதிலே மதிநிறை தமிழ் செல்வனே நீவீர் பாடியக் கவிதையை நானும் ஒரு முறை சொல்லிப் பார்க்கிறேன்....

"வீணா கானம் விடியுமுன் கேட்டது
கர்ணா மிர்தம் காதுக்கு இனிமை (?சேர்த்தது?)
தூக்கம் கலைந்தது துள்ளி எழுந்தேன்
படுக்கையில் இருந்தே பருகினேன் அமுது"

இல்லைக் கவிஞரே! நீர் அன்றைய  படுக்கையில் இருந்தல்ல.... அன்னையின் கருவிலிருந்தே பருகிய அமுதம் அது.... மறந்து போனதா?.. எத்தனை காலம், இந்த வீணை நாதம் உன்னுள் ஒலிக்கிறது என்று.... நீ கலை வாணியின் அருளோடு அவளின் கையில் இருந்த மயிலிறகையும் அல்லவா பரிசாகப் பெற்று வந்தாய்...

உணர்ச்சியின் மிகுதியால் பிறப்பது கலை. அறிவின் மிகுதியால் பிறப்பது ஞானம். இதை இரண்டையும் பெற்றவன் நீ! உணர்ச்சி மிகுந்ததால்... உள்ளக் கிளர்ச்சியால்... உன்னை வெட்டி உன்னையே வேக வைத்து கவிதை கறி சமைத்து  வாழ்ந்தவன் அல்லவா நீ!...

அது பாதி என்றால் மீதி உன் (காயங்)கள் உனக்குத் தந்த அனுபவ அறிவு பாடம்; ஞானமாய் மிகுந்து. தத்துவமும், ஆன்மீகமும் கலந்து.... சங்கப் பாடல்களையும், கம்பனையும், வள்ளுவனையும், பாரதியையும், பாரதிதாசனையும்...

உரை கல்லாய்க் கொண்டு நீ கலந்தரைத்து!.. சாந்து (சந்தம்) செய்த ஆன்மீகத் தத்துவ கலவையை....  உன் காயங்களுக்கு பத்து போட்டு.... பற்று விட்டவனல்லவா நீ!

தீயில் வெந்து தீயின் அருமை உணர்த்தியவன்.....

அப்படி இனியும் யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அன்புக் கட்டளையும் இட்டவன் நீ-உடல் நலிந்தது…. உள்ளிருக்கும் ஜோதி அறிவு பெற்று அழியாக் கவிதை வடித்தது.

அது இந்த பூமி உள்ள மட்டும் எங்கும் பரவி வியாபித்து நிற்கும் என்பது உறுதியே!...

நீ, பெற்ற அனுபவம் உன் கருத்தில் கருதெரித்து உடனுக்குடன் கவிதையாய் பிரசவித்தது...

யார் தந்தது?... இந்த வரம் உனக்கு.... சாகா வரம் வாங்கி வந்தாயே!  அது உன் கவிகளுக்கு மாத்திரமா….? உனக்கில்லையா……?

அதையும் தான் நீயேப் பாடிவிட்டாயே!,,

"
ஒரு கவிஞன் மரணத்திற்கு பின்பே ஜனனம் ஆகிறான்என்று....

விண்ணைப் பாடினாய்... மண்ணைப் பாடினாய்.... ஆதவனைப் பாடினாய்.... மாதவனைப் பாடினாய்....

"என் மனைவி என் வீடு
என் மக்கள் என்றெல்லாம்
என் "பேனா" ஓர் நாளும்
எழுதியதே இல்லை: அறிவீர்! என்று அறுதியிட்டுக் கூறினாய்...

அன்னைக்குப் பாடினாய்....அன்னையாய்ப் பாடினாய்...

குழந்தைக்குப் பாடினாய்.... குழந்தையைப் பாடினாய்...

கம்பனையும், வள்ளுவனையும் பாடினாய்...

பாரதியை விண்ணிலே பார்த்து வந்த்ததாய்ப் பாடினாய்.....

அறம், பொருள், இன்பம், வீடுபேறு; அத்தனையும் பாடினாலும்.....

காமத்துப் பாலில் அத்தனை பேரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டாயே!.

சீவகனைக் கொண்டு சிந்தாமணிப் பாடிய திருத் தக்கத் தேவர் கூட தெரு ஓரம் நின்று விட்டார் உன்னோடு போட்டியிட முடியாமல்.  நானும் அதைக் கொஞ்சம் பாடிப் பார்க்கிறேன்.....

"ஆலிலை மேலொரு மேகலை ஆட,
ஆசைக் கனிகள் மாலையில் வாட,
பாதி விழிகள் காதலில் மூட,
பாலில் விழுந்த பழம்போல் ஆட,
நீதர வேண்டும் நான் பெறவேண்டும்.....

இந்த ஆலிலையை! இந்த பதத்தை உன்னிடம் வாங்கிக் கொண்ட கவிஞர் வாலி... உன் நினைவால் எப்போது தன் வார்ப்பில் சேர்த்துக் கொள்கிறார் என்பதை நீவீர் அறிவீரோ….!

முன்னையவர்கள் அனைவரும் முன் ஜன்ம ஞாபகத்தில் வார்த்தது... நீவிரோ! பச்சை மணம் மாறாது... அப்போதே வார்த்தது அல்லவா!.

புளிப்பரியாப் புதுதேனல்லவா நின் கவிதை.... நீ, செப்பு மொழியாவிலும் நின் அனுபவ முத்தல்லவா ஆழ்ந்து கிடக்கு....

கண்ணனுக்கு தாசனான... நீ, அந்தக் கண்ணனையும்... அவன் மருமகன்.... கந்தனையும் முன் ஜென்ம பாவம் தீர பாடி தீர்த்து! தேவ குமாரனான இயேசுவிற்கும்புதுக் காவியம் படைத்தவனே..... அத்தோடு நில்லாமல் அல்லாவையும் அன்புடனே பாடி எம்மதமும் சம்மதம் என்று பாடினாயே....

கவிஞனுக்கும், கவிதைக்கும் ஏது கடவுள் பேதம் என்கிறாயா!  நீர் உரைத்தால் மறுப்பது யார்?

எங்கு புறப்பட்டு விட்டாய்..? என்னது!!! கம்பனைப் பாடவா! என்றதற்கு கம்பனாய்ப் பாடப் போகிறேன் என்கிறாயே!!!...

சரி நானும் வருகிறேன் உம்மோடு நீ கூடு விட்டு கூடு பாயும் வித்தையில் சிறந்து கம்பனாய் நின்று சொற்திறத்தில் சித்திரம் காட்டும் அற்புதம் காண - கி.பி. 1974  ஆம் ஆண்டு புதுவை கம்பன் விழாவில் கண்ணதாசர் கம்பராக மாறி பொழிந்தக் கவிதைகள்...

காவிரிச் சோழ நாட்டுக் கரையிலே காகம் பாடும்
தேவர்செந் தமிழிற் பாட திருவழுந் தூரில் வந்தேன்.

பத்துநூற் றாண்டின் முன்னே
பள்ளி வீழ்ந்த என்னைச்
செத்தவன் என்றே எண்ணிச்
சிதையிடைக் கனல் குவித்தார்
செத்தவன் மீண்டும் தோன்றும்
ஜென்மத்தை நம்பும் இந்து-
பத்துநூற் றாண்டின் பின்னே
பாண்டியில் பிறந்து விட்டேன்.

பாத்திரம் படைத்தோன் அன்று
படைத்தது சரியா என்று
பாத்திரம் காட்ட வந்தார்
பாவலர் பதின்மர் இங்கே
சாத்திரம் பொய்யா னாலும்
சரித்திரம் பொய்யா காது!
நாத்திறம் படைத்தோர் சொல்ல
நான் கேட்கும் நாளிதன்றோ?

கோபுரம் இறப்ப தில்லை
கொள்கைகள் மறைவ தில்லை
நூபுர ஒளியில் ஆடும்
நுண்ணிடைத் தேவி தனை
ஓர்புறம் வைத்த இராமன்
உயர்கதி காட்டி வைத்தேன்
மாபுரம் எனது பாடல்
மடிந்ததாய்க் கேள்வி இல்லை

கண்ணதாசனார் தசரதனாய் மாறுகிறார்...

திசைமுகந் தோறும் எந்தன்
திருத்தேரை ஒட்டுகிறேன்
தசரதன் என்பேர் !
அந்தத் தையலாள் சீதை மாமன்;
இசையுரும் இராமன் தன்னை
ஈன்றதால் இறந்த மன்னன்
வசையுறும் பழியொன் றுண்டு
மாதர் சொல் மதித்த தாக!

மனையாள் ஒருத்தி என்றால்
மடையனென் றுரைப்பர், அந்த
மனைவியர் இருவர் என்றால்
மகத்தான மூடர் என்பார்
சனியென மூன்றும் வந்தால்
தற்கொலை என்பார், அந்த
மனிதரில் நானே மூத்தோன்
மனைவியர் மூவர் பெற்றேன்!

கையுள விரல்கள் ஐந்தும்
கணக்கு ஒன்றாய் இருப்பதில்லை
மைவிழி மங்கை மூன்றும்
மனத்தினால் வேறு வேறு
கையளவு இருந்தாற் கூட
கோசலை கனிந்து ஏற்பாள்!
வையகம் கிடைத்தால் கூட
கைகேயி வாழ்த்த மாட்டாள்.

அறுபதினாயிரம் ஆண்டுகள் மாண்டுற
உறுபகை ஒடுக்கி இவ்வுலகை ஓம்பினேன்
பிறிதொரு குறைவிலை; என் பின் வையகம்
மறுகுறும் என்பதோர் மயக்கம் உண்டரோ?

காதலைப் படைத்த பூமி
கற்பம் படைத்த தாலே
மாதர்கள் மகவை பெற்றார்
மன்னன்யான் மரணம் பெற்றேன்
சோதனை; மனைவிக் காகத்
தூயனைக் காடுப் போக்கி
வேதனை கொண்ட என்னை
வியப்புடன் பார்க்கின்றீர்கள்.

சொல்வாக்கு அனைத்தும் வாழ்வில்
சுத்தமாய் இருப்ப தொன்றே
செல்வாக்கு என நினைத் தேன்;
சென்றது வாக்கு; அந்த
நல்வாக்கு பட்ட பாடே
நாயகன் கதையாய் நிற்கும்
கொல்வாக் கினாலே தானே
கோமகன் கதையைக் கேட்பீர்.

உண்மையையே பேசிப் பேசி
உண்மைக்கே வாழ்ந்து வாழ்ந்து
பெண்மையாய் பேத லித்து
பெற்றது மரணம் ஒன்றே
திண்மையாய் நானும் அந்த
சீர்கெட்ட அரசி யற்கு
நண்பனாய் வாழ்ந்தி ருந்தால்
நான் சாகத் தேவை இல்லை....... 

கொஞ்சம் இருங்கள் என்னை அழைத்து வந்தக் கவியரசுக்கு நன்றி சொல்லி வருகிறேன்!!!

இத்துடன் இங்கே கவிச்சரம் நிற்கிறது... நான் மேலும் தொடுக்க எனக்கு முழுதாய் கிடைக்கவில்லை முத்தையாவின் முல்லைத் தமிழ்ப் பாக்கள்......

கவியரசர் புலவர்களிலே கம்பனைத் தான் அதிகமாக புகழ்ந்துப் பாடியிருக்கிறார்....அவருக்கு கிட்டத்தட்ட முன்னூறு பாடலுக்கும் மேலாக கம்பரின் பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும் (குற்றாலக் குறவஞ்சியிலும் இது போன்று நிறையப் பாடல்களையும் சொல்லலாம்) என பள்ளியில் எனது தமிழாசிரியர் கூறக் கேள்விப்பட்டுள்ளேன்....

கடைசியாக கம்பனுக்கும் தனக்கும் ஒரு தொடர்பு இருக்குமோ!... என்றே தான் நம்புவதாக கூறுகிறார் கண்ணதாசனார் அந்த வரிகளோடு முடிக்கிறேன்...

'எப்படியோ கம்பனுக்கும் எனக்கும் தொடர்புண்டு'
செப்புவதெல்லாம் கம்பன்
செந்தமிழாய் வருவதனால்;
அக்காலம் அப்பிறப்பில்
அழகு வெண்ணை நல்லூரில்
கம்பனது வீட்டில்
கணக் கெழுதி வாழ்ந்தேனோ?
நம்புகிறேன்; அப்படித்தான்...

வாழ்க! வளர்க!! கவியரசரின் புகழ்!!! 
கம்பனும் கண்ணதாசனும் என்ற எனது ஆக்கம் ஏற்கனவே திருவாளர் சுப.வீர.சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை வலைப்பூவில் 05.03.2011 அன்று வெளியிடப்பட்டது.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
தமிழ் விரும்பி.

4 comments:

கா.ந.கல்யாணசுந்தரம் said...

கம்பனும் கண்ணதாசனும் சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள்.

Kaa.Na.Kalyanasundaram,
www.kavithaivaasal.blogpost.com
www.haikukavithaigal.blogpost.com
www.thesmileofhumanity.blogpost.com

Unknown said...

///கா ந கல்யாணசுந்தரம் சொன்னது…
கம்பனும் கண்ணதாசனும் சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள்.////

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே!

Anonymous said...

தம்பி நன்றாக உள்ளது.

கிருஸ்ணர்

Unknown said...

///தம்பி நன்றாக உள்ளது.

கிருஸ்ணர்///

அண்ணா தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் பல...

Post a Comment