பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Monday 5 September 2011

பொய்யோ? மெய்யோ?



பொய்யோ? மெய்யோ?

மகாகவி பாரதி எழுதிய ஒரு கவிதாக் கட்டுரையைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம் 

  
பாரதியார் முன்னுரை.

எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மைதான். ஆனால் எல்லோருக்கும், எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்துவராது. சின்ன திருஷ்டாந்தம் சொல்லுகிறேன்.

ஒரு செல்வர். கிழவனார்; ஒரு வேலை ஆகாரம் செய்து கொண்டு லெளகிக (உலகில் புலன்களால் அனுபவிக்கும் புற இன்பங்களில் நாட்டம் இல்லாமல்) விசயங்களைத் தான் கவனியாமல், பிள்ளைகள் கையிலே கொடுத்து விட்டு, நியம நிஷ்டைகள் ஜப, தபங்களுடன் சுந்தரக் காண்டத்தையும் கடோபநிஷத்தையும், பாராயணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதே மேலான வழியென்ற கொள்கை இந்தக் கிழவனாருக்கு சரிப் பட்டு வரும்.

ஒரு பதினாறு வயது ஏழைப் பிள்ளை; தகப்பினில்லை; வீட்டிலே தாயாரும் தங்கைக்குமாக எங்கேனும் போய் நாலு பணம் கொண்டு வந்தால் தான் அன்றன்று அடுப்பு மூட்டலாம். இவன் மேற்படி சுந்தரம் காண்ட வழியைப் போய் பிடித்தால் நியாய மாகுமா?

"இந்த உலகமே பொய்" என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது. சந்நியாசிகள் இதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும். அதைப் பற்றி, இந்த நிமிஷம், எனக்கு வருத்தமில்லை. 

குடும்பத்தில் இருப்போருக்கு அந்த வார்த்தைப் பொருந்துமா? நடு வீட்டில் உச்சரிக்கலாமா? அவச் சொல்லன்றோ? நமக்குத் தந்தை வைத்து விட்டுப் போன வீடும் வயலும் பொய்யோ? தங்கச் சிலைப் போல் நிற்கிறாளே மனைவி, நமது துயரத்திற்கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந்தாள். நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள். நமது குழந்தைகளை வளர்த்தாள். 

அவள் பொய்யா? குழந்தைகள் பொய்தானா? பெற்றவரிடம் கேட்கிறேன் குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?.

வீடுகட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்கு மேற்படி சாஸ்திரம் பயன் படாது. நமக்கு இவ்வுலகில் வேண்டியது நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்கும். இவற்றைத் தரும்படி தத்தம் குலதெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். 

எல்லா தெய்வங்களும் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்ற மூன்றிலும் தெய்வ ஒளி காணவேண்டும் (அனைத்திலும் உண்மையை கொண்டு, அன்பையே அச்சாகக் கொண்டு வாழ்வென்னும் சக்கரத்தை சுழற்றுதல் தான் அது). தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானேக் கிடைக்கும். 



நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ? - பல
தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே நீங்களெல்லாம் 
அற்ப மாயைகளோ? - உம்முள்
ஆழ்ந்தப் பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலின் நீரோ? - வெறுங்
காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைதழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ - இந்த
ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒருநினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? - அங்குக்
குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? - இதைச்
சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பதெல்லாம் மறையுமென்றால், மறைந்ததெல்லாம் காண்பமென்றோ?
வீண்படும் பொய்யிலே - நித்தம்
விதிதொடர்ந்திடுமோ?
காண்பதுவே உண்மை கண்டாய், காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக்
காட்சி நித்தியமாம்.

பாரதியார் பின்னுரை.

முதற் பாட்டிலே, 'நிற்பது',  'நடப்பது' முதலியன் உலகத்தில் தோன்றும் வடிவங்கள். கற்பது, கேட்பது முதலியன செய்கைகள். மூன்றாம் பாட்டிலே 'கோலமும் போகளோ, அங்குக் குணங்களும் பொய்களோ?' என்பது தெளிவாகச் சொன்னால் தேளின் உருவம் மாத்திரம் பொய்யோ? அது கொட்டுவதும் பொய்தானோ? என்றக் கேள்வி.  

என்று கட்டுரையை முடிக்கிறார் மகாகவி பாரதியார்.

வாழ்வென்பது வாழ்வதற்கே உள்ளும் புறமும் இன்பம் பெருக வாழ்வதே சிறந்த வாழ்க்கை... ஆக, இயற்கை நமக்கு அளித்துள்ள இன்பங்களை எல்லாம் முழுமையாக அனுபவிக்கவே வேண்டும் இவைகள் தான் புற இன்பம். இவைகள் யாவும் உண்மையே. 



ஓசோ அவர்களும் இப்படிக் கூறுகிறார்கள். " முழு ஆன்மீக உயிர்ப்புடன், ஒரு முழு உலகாயத வாதியாக (materialist) வாழ்வது தான் முழுமையாகும். அது தான் உங்களுக்கு எனது செய்தியாகும். ஆன்மீக லோகாயத வாதியாக அல்லது உலோகாயத ஆன்மீக வாதிகளாக (spritualist) வாழுங்கள். ஏனெனில் என்னைப் பொறுத்தவரை இரண்டுமே வேறானதல்ல. அகமுக நோக்கமானது ஆன்மிகம். புறமுக நோக்கமானது லோகாயதம். ஏனெனில் இரண்டுமே அங்கே இருக்கின்றன... பொருளும் உண்டு, அதன் உள்ளுணர்வும் உண்டு... தர்க்க இயலாளர்கள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப் பவர்களாகவே உள்ளார்கள்.

ஆன்மீக வாதிகள் இந்த உலகம் மாயை, ஆன்மா நிலையானது, உலகம் நிலையற்றது. அது உண்மையானது அன்று. கனவில் காணும் காட்சிகள் போன்றது என நிரூபிக்க முயல்கிறார்கள். 

லோகாயத வாதிகள் எதிர் துருவத்தில் இருந்து இதே செயலைத்தான் செய்து வருகின்றார்கள். லோகாயத வாதிகள் உள்ளுணர்வு என்ற ஒன்று இல்லை என்கின்றார்கள்.

ஆனால், உண்மையான ஞானி, உபநிஷத ஞானி, இரண்டையும் ஒப்புக் கொள்கிறார். அவர் அவற்றை இரண்டு என்றுக் கூடச் சொல்வதில்லை. ஒன்றே இரண்டாகத் தோற்றமளிக்கின்றது என்கிறார். ஒரே உண்மையின் இரண்டு கூறுகள். அகமும், புறமும், லோகாயதமும், ஆன்மீகமும் என்பதே அவை. பூர்ணம் என்பது அது தான். 

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ. அளவிட முடியாத ஒன்று உள்ளது. ஞானிகள் மட்டும் அல்ல, பெளதீக அறிவியலாளரும் அளவிட முடியாத ஒன்று உள்ளது எனக் கூறுகின்றனர்


இந்த நூற்றாண்டில் தான் 'ஆல்பர்ட் ஈன்ஸ்டின்' பிரபஞ்சம் விரிவடைதுக் கொண்டிருக்கிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். ஆல்பர்ட் ஈன்ஸ்டினுக்கு ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னமே, இந்தப் பிரபஞ்சம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது - விரிவடைந்துக் கொண்டிருக்கிறது என்ற இந்த உண்மையை உபநிஷதம் கூறுகிறது. பிரபஞ்சத்திற்கு அவர்கள் கொடுத்த 'பிரமான்ட்' என்ற சொல்லிற்கு என்றும் விரிவடைந்து கொண்டிருக்கிற, தொடர்ந்து வளர்ந்துக் கொண்டிருக்கின்ற ஓன்று என்று பொருள். அந்த வளர்ச்சிக்கு ஒரு முடிவும் இல்லை, ஒரு எல்லையும் இல்லை.” 

ஆக, பெரியோர்கள், அனுபவப் பட்டவர்கள் தங்களது சந்ததிக்கு, இந்த மானுடத்திற்கு சொன்னது  லோகாயதமும் உண்மை உள்ளுணர்வான ஆன்மீகமும் உண்மை அவை அந்தப் பேருண்மையின் இரண்டு வேறுப்பட்ட தோற்றமே; உருவமாகவும், அருவமாகவும் இருக்கின்றன. 

இவைகள் தாம் வாழ்வில் முறையாக வாழ்ந்து உணர்ந்து பேறு அடைய வேண்டிய வழி; அவைதான் ஒவ்வொரு உயிரின் லட்சியமும் கூட என்கிறார்கள்.

நன்றி வணக்கம்,

தமிழ் விரும்பி.


5 comments:

Anonymous said...

இந்த நூற்றாண்டில் தான் 'ஆல்பர்ட் ஈன்ஸ்டின்' பிரபஞ்சம் விரிவடைதுக் கொண்டிருக்கிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். //

இதுபற்றி இதுவரை படித்ததில்லை. விரிவடைந்து கொண்டிருக்கிறது என்றால்? - உமா

Anonymous said...

பகவத் கீதை இன்னும் தெளிவாக ஞான யோகம், கர்மயோகம், பக்தி யோகம் என மூன்று ஆன்மீக வழிகளை நம்முன் வைக்கின்றது அல்லவா? மூன்றையும் உயர்வு, தாழ்வென்று பிரிக்காமல், கிடைமட்டமாக அடுக்கி, அவரவர் மனநிலைக்கு ஏற்ப சரியானதை தேர்ந்தெடுக்கச் சொல்கின்றது.


முழுக்க முழுக்க ஞான யோகத்தை/துறவை முன்வைத்த ஜைன மதம் தேங்கிப்போனதற்கும், புத்தமதம் புத்த வழிபாடாக உருமாறியதற்கும் காரணமே நம் மக்களுக்கு ஞான மார்க்கம் போதாது என்பதால் தான். பாரதியர் அடிப்படையில் அத்வைதி. ஒரு கர்மயோகி. எனவே எப்போதும் செயலில்/கர்மத்தில் அவருக்கு ஈடுபாடு உண்டு. அதையே மிகச் சிறப்பாக, நியாயமான கேள்விகளை முன்வைத்து, இந்தப் பாடலில் பாடியுள்ளார்.

நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவுக்கு நன்றி நண்பரே.

-- செங்கோவி

Anonymous said...

பிரபஞ்சத்தை அளக்கமுற்பட்டபோதே, விஞ்ஞானிகள் அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே போவதையும், நெருங்க நெருங்க முடிவில்லாப் பெருவேளியாக இருப்பதையும் கண்டுபிடித்தார்கள். பிடிக்க முடியா கானல்நீராக இன்றும் இருக்கிறது ஆதி, அந்தமற்ற பிரபஞ்சம். நாம் வணங்கும் மாபெரும் சக்தியே அது தான் என்ற கருத்தும் நம் ஆன்மீகத்தில் உண்டு.

---செங்கோவி

Unknown said...

////உமா சொன்னது....
இதுபற்றி இதுவரை படித்ததில்லை. விரிவடைந்து கொண்டிருக்கிறது என்றால்?////
ஓசோ கூறிய குறிப்பு நானும் அதைப் பற்றிய அறிவியலாளரின் வுரையை படிக்க ஆவலாகவே உள்ளேன்.
தாங்கள் அதை பார்க்க நேர்ந்தாலும் எனக்கும் தாருங்கள்.. நன்றிகள் உமா..

Unknown said...

/////செங்கோவி சொன்னது....
பகவத் கீதை இன்னும் தெளிவாக ஞான யோகம், கர்மயோகம், பக்தி யோகம் என மூன்று ஆன்மீக வழிகளை நம்முன் வைக்கின்றது அல்லவா? மூன்றையும் உயர்வு, தாழ்வென்று பிரிக்காமல், கிடைமட்டமாக அடுக்கி, அவரவர் மனநிலைக்கு ஏற்ப சரியானதை தேர்ந்தெடுக்கச் சொல்கின்றது.

முழுக்க முழுக்க ஞான யோகத்தை/துறவை முன்வைத்த ஜைன மதம் தேங்கிப்போனதற்கும், புத்தமதம் புத்த வழிபாடாக உருமாறியதற்கும் காரணமே நம் மக்களுக்கு ஞான மார்க்கம் போதாது என்பதால் தான். பாரதியர் அடிப்படையில் அத்வைதி. ஒரு கர்மயோகி. எனவே எப்போதும் செயலில்/கர்மத்தில் அவருக்கு ஈடுபாடு உண்டு. அதையே மிகச் சிறப்பாக, நியாயமான கேள்விகளை முன்வைத்து, இந்தப் பாடலில் பாடியுள்ளார்.

நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவுக்கு நன்றி நண்பரே.

-- செங்கோவி////

ஆமாம், இன்னொரு யோகத்தை மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன் அது ராஜ யோகம்..
எல்லாமே சிறப்பு என்றாலும் இன்றைய சூழலில் கலியுகத்திற்கு எளிது பக்தியும் (சரணாகதி) இன்னும் எளிது கர்மயோகம் என்பது என் கருத்து.

தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் நண்பரே!

Post a Comment