வாங்கி வந்த வரமோ? -இல்லை
தாங்கி வந்த சாபமோ?
இப்படியும் செய்வானோ? -இனி
இங்கு வந்தென்னைக் காண்பானோ?
என் முந்தானையையே பிடித்து
திரிந்த என்மகனே,
உனை அவள்
முந்தானையில் முடிந்தே -எனை
முதியோர் இல்லம் அனுப்பினாளே!
அண்ணன் மகள் என்று தானே
ஆசையோடு எடுத்து வந்தேன்.
திண்ணை கூட இல்லை யென்று
எனை இங்கனுப்பி -என்
இதயம் அறுத்தே எறிந்தாளே!
வாங்கி வந்த வரமோ -இல்லை
தாங்கி வந்த சாபமோ?
பிள்ளைமனம் மாருமுன்னே -என்அப்பன்
மாப் பிள்ளைப்பார்த்து கட்டி வைத்தான்.
பிள்ளை ஒன்று கொடுத்துவிட்டு -அவனும்
கொல்லையிலே படுத்து விட்டான்.
தொல்லை பல நேரிடினும் -இப்பாழும்
சமூகம் இளம் விதவை எனக்கே,
அல்லல் பல தந்திடினும்
எல்லையில்லா அன்பூட்டி - என்
பிள்ளை உன்னை நான் வளர்த்தேனே!...
பொத்தி பொத்தி வளர்த்தேனே! -மனப்
பொந்தையிலே வைத்தேனே!
அப்ப னில்லா பிள்ளை என்றே
அக்கறை யோடு வளர்த்தேனே!
பள்ளிக் கூடம் அனுப்பினேனே!
காலேசுக்கும் அனுப்பினேனே!
உத்தியோகம் கிடைத்ததுமே,
ஊரே அசந்து போய்விடவே -தாய்
மாமன் மகளுக்கே -உனை
திருமணமும் தான் செஞ்சேனே!…
ஒய்யாரமாய் வளர்த்தவனும் - இப்படி
ஓரிரு நாளிலே மாறிடு வான்னு
ஒருத்தரும் சொல்ல லேயே!..
நான் வாங்கி வந்த வரமோ - இல்லை
தாங்கி வந்த சாபமோ?
அஞ்சாறு வயசுக்கும் அசராமல் - நான்
ஆசை ஆசையா பால்கொடுத்தேன்.
ஆடி வரும் பிள்ளைக்கே அன்பாலே
ஆட்டுப்பாலும் கொடுத்து வளர்த்தேனே!
மட மடன்னு வளரட்டும், என்றே
மாட்டுப் பாலும் கொடுத்தே…
பாசத்தோடு நேசமும் ஊட்டி
பாங்குடனே வளர்த்தேனே!...
சொல்லும் படியே கேட்கிறேனப்பா -நீ
சொல்லாத எதையும் செய்வேனோ? யப்பா
பொல்லாப்பு ஏதும் இல்லை -எனை
புறத்தாளாய் நடத்தாதே, உனக்கு
புண்ணியம் கோடி கிடைக்கட்டும்,
எண்ணிய காரியம் செயிக்கட்டும்.
எனை ஒதுக்கித் தள்ளாதே
காலமெல்லாம் சுமந்தவளை
காணா தேசம் அனுப்பிடாதே!
முன்னூறு நாள் மட்டுமா? -இல்லை
முப்பது வருடம் சுமந்தவள் -வீட்டு
மூலையில் முடக்கிக்கொள்ள கூடாதென்றே
(முச்சந்திக்கே) முதியோர் இல்லம் அனுப்பினாயே!
இனி எதிரிக்கும் வர வேண்டாம்
இப்படி ஒரு நிலமையடா! ...
உனைப் பார்த்ததெல்லாம் போது மென்றே
சலிப்பால் தள்ளி விட்டுப்போகிறானே! -எனக்கு
அவன் கள்ளிப்பாலேத் தந்திருக்கலாமே!
நான் வாங்கிவந்த வரமோ? -இல்லை
தாங்கி வந்த சாபமோ?.
இனியும் வாழ்வேனோ! இப்படியே வீழ்வேனோ!
இனிஎன் உயிரும் போகாதோ? - இறைவா!
இன்னல்களும் தீராதோ?...
ஒண்ணா நடத்த வேண்டாமையா
ஒரு மூலையில் நான் இருக்கேன்.
காஞ்சி தண்ணி வேண்டாமையா - அத
காச்சி நானே குடுச்சிகிறேன்.
காசு பணம் வேண்டாமையா - எரு
ராட்டி தட்டி வித்துக்கிறேன்…
பண்டம் பாத்திரம், ஒண்ணா வேண்டாமையா
பையில் தனியா வச்சுக்கிறேன் - நீ
பாசம் காண்பிக்க வேண்டாமையா;
பாவி உன்னை நான் பார்த்திருந்தா
பொதுமையா!...
என்னப் பெத்தவனே! ஏ ராசா!
கட்டையும் வேகாதுடா…
காட்டுக்கு போகும் முன்னே,
வீட்டைவிட்டு அனுப்பிடாதே -ஒரு
வேலைக்காரியா நினைத்திடடா
வாசலிலே இருந்திடுறேன்…
வாய் மூடி நிண்டிடுறேன்
நாயோடு படுத்துக் கிறேன் -உன்னப்
பெத்த தாயாக கேட்டுக்கிறேன்…
ஏ ராசா! வேண்டாம்னு சொல்லிறாதே
வீட்டைவிட்டுத் தள்ளிராதே…
பாசம்வச்ச என்மனசு புரியாம - வெறும்
வேஷம் என்று சொல்லாதே...
விஷம் கொஞ்சம் தந்துவிடு - என்
வேஷம் கலைஞ்சு போயி டுறேன்…
அனாதைன்னு சொல்லி - அங்கே
ஆசிரமத்தில் தள்ளி டாதே…
பிள்ளைகளை பெத்துப் போடு
பீ மூத்திரம் அள்ளி - அதிலே
பேரானந்தம் பெத்துக்கிறேன்...
இத்தனையும் சொல்லியும்
இப்படி ஏன் செய்தாயடா?
நான் பெத்த மகனே - இப்ப
நாதியத்தேப்
போனேனடா!
வாங்கி வந்த வரமோ? -இல்லை
தாங்கி வந்த சாபமோ?...
அன்புடன்,
தமிழ் விரும்பி ஆலாசியம் கோ.