பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Wednesday, 28 August 2013

கூறாய்க் கண்ணா! கோகுலக் கிருஷ்ணா!!


ஊனில் ஊறி உணர்வில் உருகி
உயிரினில் கலந்த ஒளியே
காணும் யாவிலும் காண்பார் விருப்பமாய்
காட்சி அளித்திடும் கதிரே
தேனூறும் பூவிலும் திரண்டெழும் மணத்திலும்
உருவஅருவமாய் விளங்கிடும் அமுதே
யானுனை தொழு திடும் பொழுதினில்
யாதானும் வந்துள் கூறாயோ
வேணு கானப் பிரியனே எந்தன்
வேதனை காண் கிலையோ
வாராய்க்கண்ணா! மாடுகள் மேய்த்து போதும்
கூறாய்க்கண்ணா மேயும் என்மனம்
வேறாய், வேரோடுவேராய் போகும்வழி தனையெனக்கு

கூறாய்க் கண்ணா! கோகுலக் கிருஷ்ணா!!

Wednesday, 31 July 2013

அபிராமி உந்தன் பெருமைக்குத் தானிது அழகாகுமோ!



அன்னையே அபிராமித் தாயே - எல்லையில்லா  
ஆனந்த ரூபியே அங்கயர்க் கண்ணியே 
அண்ட சராசரம் நின்றாளும் தேவியே 
அருவமாய் உருவமாய் உளதாய் இலதாய் 
அணுவினுளும் அணுவாய் விளங்கோய்!

ஓரிதயம் மட்டும் படைத்து விட்டு 
ஓர வஞ்சம் செய்தா யம்மா 
காரிருள் போக்கும் பேரொளியே உந்தன் 
கழல்கள் மாத்திரமே அதில் பொருதமிடமில்லை 
ஏழேழு உலகம் நிறைந்தவளே உனையெப்படி 
எந்தன் இதயம் நிரப்பி வைப்பேன்?

இருகண்களை மட்டும் படைத்து விட்டு 
எனையிப்படி ஏமாற்றி விட்டாயே! 
ஒருகோடி கண்கள் போதுமோ? - உனைப்  
பலகோடிமைல் தள்ளி நின்று கண்ணுறவே 
சொல்லடி சிவசக்தி சூட்சுமம் யாதென்று!

நில்லடி யானுனைத் தான் அழைக்கின்றேன்!  
கள்ளமில்லா எந்தன் உள்ளம்தனை அறிவாயே! 
பிள்ளை நான் உனைப் பணிந்துக் கேட்பதற்கு 
ஒருபதில் கூறாயோ எந்தன் உணர்வினில்
உயிரினில்; பேரமுதென பொங்கிப் பெருகாயோ!
  
எத்தனை ஆயிரம் பிறவிகள் எடுத்தேன் 
எத்தனைமுறை யானுனைக்  கூவி யழைத்தேன் 
இத்தனைக் காலம் ஆனப் பின்னும் 
எந்தன்மீது கருணை கொள்ளாமல் லிருப்பது 

உந்தன் பெருமைக்குத்தானிது அழகாகுமோ!

Tuesday, 2 April 2013

மெஞ்ஞான விஞ்ஞானி டாக்டர்.ஏ .பி.ஜெ அப்துல் கலாமின் அழகுக் கவிதை!




"நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம்என் இறைவா!
நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது அறிவுப் புதையல்என் இறைவா!
நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது அமைதித் தீவுஎன் இறைவா!
இறைவா, இறைவா! நூறு கோடி இந்திய மக்கள் லட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்து அடைவதற்கு அருள் புரிவாயாக!"
- டாக்டர் ஏ .பி. ஜெ. அப்துல் கலாம்.




மேதகு மெஞ்ஞான விஞ்ஞானி ஐயா அப்துல் கலாம் அவர்களின் அருமையானக் கவிதையத் தொடர்ந்து அவரின் கவிதையின் தாக்கத்தால் விளைந்த எனது கவிதை இதோ!

உழைத்து உன்னத வாழ்வதை அடைய 
உலகோருக்கு அருள்வாய் இறைவா!
களைப்பில் காலயர்ந்து அமர்வோருக்கு -குளிர் 
நிழலென விளங்கும் பரமே!

சமநிலை காணமுடியா தெனினும்  - யாவரும் 
சமமெனும் மனநிலைவளர அருளும் -விமலா 
யமனையும் கண்டு இங்கு கலங்கிடாத 
மனம்தனை அளிப்பாய் இறைவா! 

தனெக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் 
மனத் தெளிவினை விளக்கிடும் இயற்கையது
உனதரும் விளக்கமதை உலகோர றிவதில்லை 
யானெனதெனும் செருக்கை அழிப்பாயோ!

ஒழுக்கம் உயர்வளிக்கும் உயர்வது உண்மையாலே 
செழித்து வளர்ந்துவளம் கொழிக்கும் -இருந்துமதை 
களித்து இன்புற கருணைமிகு தேவா 
விழித்து நினதடிப்போற்று தலாலே! 



Monday, 24 December 2012

மகாகவியவன் நினது குருவென்பதை மறந்தாயோ?



பொழுதுப் போக்க நீயொன்றும் -சும்மாப்

புளுக வேண்டாம்; மனமே!

போதைத் தரும் புகழுக்கு -அதிப்

பேதையென அலைய வேண்டாம் மனமே!

அடுத்தவர் அங்கீகரிக்க வேண்டுமென -அனுதினமும்

பிடித்ததெல்லாம் பேயெனச் செய்யாதே மனமே!

 

தடுத்தவர் கூறினாலும் கருத்தைத் தவறென

மறுத்தவர் கூறினாலும் அதுன்னை -வந்து

வருத்துவதும் வீணே; என்றுணர்வாய் மனமே!

கருத்து தனைக்கூற உனக்கிருக்கும் உரிமை

மறுத்தவர்கூற மட்டுமல்லாது போகுமோ மனமே!

அங்கீகாரம் வேண்டுவதும் ஆணவத்தின் தூண்டுதலே

அகங்காரம் கொண்ட அற்பமனமே - நினது

அகமழிய; வேண்டாம் அப்படியொரு ஆறுதலே!

 

உங்கருத்தை அங்கீகரித்தாலும்; இங்கீகரித்தாலும் மனமே

ஆங்கதவர் அனுமானமோ; அபிப்ராயமோ அன்றி

ஈங்கிது இறுதியான உறுதியான சரியான

ஓங்குயர் கருத்தென்று நெகிழ்ந்துழலாதே மனமே!

 

''என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!'' - அவை அத்தனையும்
''தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே'' முன்னைய முனிவர்

கருத்தை அன்றே அழகுறப் பாடி

திருத்தமாக சொன்னானே மகாகவியவன் நினது

குருவென்பதை மறந்தாயோ? மடமனமே!


Thursday, 4 October 2012

வேதமுனிகள் தொழும் தேவியே!



வெள்ளை உள்ளம் கொண்டவருக்கு
வேண்டும் வரம் தருபவளே!
எல்லையில்லா பிரபஞ்சம் தனை 
தன் னகத்துள் கொண்டவளே!

கல்லா மில்லா உள்ள
மதைக் கொண்ட முனிவர்களின்
சொல்ல முதாய் திகழ்பவளே 
இச்சா ஞான கிரியாசக்தியே

வல்லமைத் தாரோயோ வாழ்வெலாம்
தெள்ளுத் தமிழ் கவிப்பாடி
சித்தம்நிறை தேவியுனை நித்தமும் 
நின் பாதம் பணிந்திடவே!

நீயின்றி நானில்லை நினது
நினைவின்றி எனது யிரில்லை
கனவிலும் பிரிவதில்லை நினைக்
காணும்வரை நான் ஓய்வதில்லை...

ஐம்பொருளின் ஆக்கமானாய் -என்
ஐம்புலனின் தாக்கமும் ஆனாய்
ஐயத்திற்கு அப்பால் நிற்கும்
ஜெயத்திற்கு ஆதாரமும் ஆனாய்

பேரொளியில் பிறந்தாயோ! எந்தை 
பேரொளியாய் பிறந்தாயே; எந்தாயே!  
பேரொலி எழுப்பும் மின்னல்கொடியே
பேரொலி எந்தன் மனப்
பேய் தனைக் கொள்ளுமோ!

கூறடி!; ஆனந்த பைரவி
யாரடி?; நானென்று எனக்கு;
பாரடி!; நான் உந்தன்
காலடி!; நின்றேக் கதறுகின்றேன்.

சேவடிதனை எந்தன் சிரமீதே 
ஓரடி யாவது வைப்பாயோ!
பூவடிதனை போன்று கின்றேன் 
கேளடித் தாயே யுனைக்
கெஞ்சிப் பணி கின்றேன்   

கூறாயோ ஒருபதில் கூறாயோ
பாராயோ கடைக்கண் கொண்டு
பாவம் யாவும் பொடிப் பொடியாக! 
இரங்காயோ இறங்கி என்
உயிருக்குள் உயிராய் உறங்கிக்கிடக்கும்
பேரொளி யினைத் தீண்டாயோ!

எங்கெங்கும் காணினும் நீயென்றால்
என்னுள் ளிருப்பதும் நீயன்றோ!
என்னுள் இருப்பதும் நீயென்றால்
எப்படிக் காண்பேன் நானின்றே.

அல்லும் பகலும் அல்லல்படும்
பிள்ளை யான் வேண்டுவது 
தில்லைக்கு எட்ட வில்லையோ!
கள்ளமில்லா எனதுள்ளம் கதறுவதும்
உன்செவிகளில் விழவும் இல்லையோ!

பிள்ளையான் பேயாய் உழல்கிறேன்
பேசாது இனியும் இருப்பாயோ!
சொல்லடி சிவசக்தி நிந்தன்
சோதனை இன்னும் நீளுமோ!

வேதனைத் தீர்ப்பாயோ இவ்வுடல்
வெந்தே தீயுமுன்னே எந்தன்மன  
வேள்வி தனை ஏற்பாயோ
வேண்டியதை வேண்டி நிற்கின்றேன்
விரைந்தே வந்தெனைக் காப்பாயோ!

வேதமுனிகள் தொழும் தேவியே!
வேதங்களை பாதமாக கொண்டவளே!
வேதநாயகியே! வினைகள் தீர்ப்பாயே
ஊனில் உறைந்தவளே! எந்தன்
உயிரில் கலந்தவளே அருள்வாயே!

கொல்லடி எந்தன் மனம்தனை;
வில்லோடு வரும் மன்மதனை
நில்லடா நீயங்கே என்றுநிறுத்தி
வல்லனாய் வென்றிடவே; எனக்கிங்கே
வல்லமைத் தாரோயோ -பத்ர
காளீ! நீலீ!! திரிசூலீஇ!!!

அக்னியால் சுட்டெரிப்பாய் எந்தன்
ஆனவமதையே; ஆவேசமுடனே 
ஆணிவேரோடு பெயர்த் தெடுப்பாய்
ன் கந்தை தனையே
நித்தமும் நினைப்பணிகின்றேன்; நீயே
நிமலன்பாதம் சேர்ப்பாய் என்தாயே! 


Tuesday, 11 September 2012

எட்டயபுரத்திலே உதித்த சிகப்பு சூரியனே!




மஹாகவி பாரதி நமக்கு பல லட்சியங்களை விட்டுச் சென்று தொண்ணூறு ஆண்டுகளைத் தாண்டிவிட்டது...

மகாகவியின் இந்த நினைவு நாளில் அவனுடைய உயரிய சிந்தனைகளை இளம்பிஞ்சுகளின் மனதிலும் விதைக்க அரும் பாடுபடும் பெரியவர்களுக்கு எனது வணக்கங்களும், வாழ்த்துக்களும் கூறி...

பாரதிக்கு திருவையாற்றில் இருதினங்களுக்கு முன்பு எடுத்த விழாவின் சிலப் படங்களையும் பார்வைக்கு வைக்கின்றேன்!



இளங்குயில்கள் இரண்டு இனியகவிகள்பாட எந்தன்
இதயம் இனித்ததே இன்பத்தேனாய்!


புத்தம் புதுக்காலை புதியதோர் உலகம்படைக்கவே
புறப்பட்டோமென்றே பாரதியின் குழந்தைகளாக 
பூத்துக் குலுங்குங்கிய அவ்வேளை - நெஞ்சிலொரு
சக்திப்பிறக்கிறது அதைக்கண்ட இவ்வேளை !


உடல் போருளாவி யனைத்தையும் உயர்
உலகிற்கே அளித்து உன்னத மானுடம் 
உலகத்தோர் உயிர்க்கொடியில் பூக்கவே
உத்திகளை பாடிசென்றேயே பாரதி!

உனது நினைவுகள் மாத்திரம் அல்ல 
உனது கனவுகள் தான் எங்கள் 
உன்னத இலட்சியங்கள் அவைகளை
உன்னினைவுநாளில் புதுப்பித்து கொள்கிறோம்!

பாமரனையே நோக்கினாய் பாமரனோடு பழகினாய் 
பாமரனுக்காக பாடினாய் பாமரனை எண்ணி வாடினாய்
பாமரனையும் சாடினாய் பாடியக்கவிதைகளை சம்ர்பித்தாய் 
பாமரனுக்கே; பாமரன்யானதை மறப்பேனோ?

எட்டயபுரத்திலே உதித்த சிகப்பு சூரியனே 
எங்கள் இதயமெல்லாம் ஒளிபரப்பி - அறியாமை
என்னும் இருட்டைப்போக்கிய செந்தமிழ்கவிராஜனே! 
என்றென்றுமுனை  நன்றியோடு நினைக்கின்றோம்!

வாழ்க வளர்க பாரதியின் புகழ்!