பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label புதுக்கவிதை. Show all posts
Showing posts with label புதுக்கவிதை. Show all posts

Tuesday, 2 April 2013

மெஞ்ஞான விஞ்ஞானி டாக்டர்.ஏ .பி.ஜெ அப்துல் கலாமின் அழகுக் கவிதை!




"நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம்என் இறைவா!
நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது அறிவுப் புதையல்என் இறைவா!
நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது அமைதித் தீவுஎன் இறைவா!
இறைவா, இறைவா! நூறு கோடி இந்திய மக்கள் லட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்து அடைவதற்கு அருள் புரிவாயாக!"
- டாக்டர் ஏ .பி. ஜெ. அப்துல் கலாம்.




மேதகு மெஞ்ஞான விஞ்ஞானி ஐயா அப்துல் கலாம் அவர்களின் அருமையானக் கவிதையத் தொடர்ந்து அவரின் கவிதையின் தாக்கத்தால் விளைந்த எனது கவிதை இதோ!

உழைத்து உன்னத வாழ்வதை அடைய 
உலகோருக்கு அருள்வாய் இறைவா!
களைப்பில் காலயர்ந்து அமர்வோருக்கு -குளிர் 
நிழலென விளங்கும் பரமே!

சமநிலை காணமுடியா தெனினும்  - யாவரும் 
சமமெனும் மனநிலைவளர அருளும் -விமலா 
யமனையும் கண்டு இங்கு கலங்கிடாத 
மனம்தனை அளிப்பாய் இறைவா! 

தனெக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் 
மனத் தெளிவினை விளக்கிடும் இயற்கையது
உனதரும் விளக்கமதை உலகோர றிவதில்லை 
யானெனதெனும் செருக்கை அழிப்பாயோ!

ஒழுக்கம் உயர்வளிக்கும் உயர்வது உண்மையாலே 
செழித்து வளர்ந்துவளம் கொழிக்கும் -இருந்துமதை 
களித்து இன்புற கருணைமிகு தேவா 
விழித்து நினதடிப்போற்று தலாலே! 



Monday, 5 December 2011

ஓயாது உறிஞ்சிக் குடிக்கும் நீங்களும் என்ன அரசியல்வாதிகளா?



உரிமையோடு உரிமைகீதம் பாடியே
உறங்காமல் கிரங்காமல் இரங்காமல்  
உறிஞ்சி உறிஞ்சி உயிரைவாங்கும்
உலங்குகளே உங்களை கேட்கிறேன்
உள்ளம் திறந்து உண்மை உரைப்பீரோ?

சைவனென்றும் அசைவனென்றும் பேதமில்லாப்
பெருவாழ்வை இசைவுபட வாழ்பவர்களே! 
இம்சையீன்ற இளம் அரக்க வீரர்களே 
அகிம்சை எங்கள் மூச்சென்ற
அந்தரங்கம் அறிந்தவர்கள் நீங்களே!



உங்களில் தான் எத்தனை ஒற்றுமை
உங்களில் தான் எத்தனை சமத்துவம்
உங்களில் தான் உணவால் உன்னதமில்லா 
உயர்வுதாழ்வு உங்களுக்குள் இல்லை...

சாக்கடை பெருக்கினோம் அதன்மீதே
பூக்கடை பரப்பினோம் உண்டுகளிக்க
வேர்கடலை அவித்தோம் அதை
வேண்டுமளவு திறந்து வைத்தே
போக்கடையற்ற சாக்கடையோரம் 
நிறுத்தி ஆட்களை கூட்டினோம் 

வீட்டைச்சுற்றி குப்பைகள் குவித்தோம் 
வீதியில்உயர் கோபுரங்கள் ஆக்கினோம்  
வீடுதோறும் சென்று அருள்பாலிக்க அங்கே 
உங்களை கடவுளாயும் நிறுத்தினோம்.

வாய்க்கால் வெட்டினோம் எங்கள்
வீட்டுக்கழிவை அதிலேப் பாய்ச்சினோம்
இடுப்பளவு குழிதோண்டி உங்களை
இடைவிடாத இன்பத்தில் ஆழ்த்தினோம் 

இன்னும் சொன்னால் ஏமார்ந்த நேரம் 
அதை எதிர்வீட்டிற்கும் பாய்ச்சினோம் 

பெருங்காடுகள் அழித்தோம் - உபாயமாக
சிறுசெடிகள் நிறைந்த பெருங்காடுகளை
எங்கள் வீட்டைச் சுற்றியே வளர்த்தோம்

இரவெல்லாம் இறக்கைகட்டிப் பறந்த
உங்கள் களைப்பை அங்கே போக்க
மஞ்சம் வேண்டுமே என்ற நல்ல
நெஞ்சம் கொண்ட நாங்கள்...

ஓ! நன்றிகெட்ட கொசுக்களே...
இத்தனையும்செய்த எங்களை  
ஓயாது உறிஞ்சிக் குடிக்கும் 
நீங்களும் என்ன அரசியல்வாதிகளா?

ஒய் திஸ் கொலைவெறி! கொலைவெறி!! கொலைவெறி டி!!!


Tuesday, 20 September 2011

பொத்தி பொத்தி வளர்த்தேனே! -மனப் பொந்தையிலே வைத்தேனே!



வாங்கி வந்த வரமோ? -இல்லை
தாங்கி வந்த சாபமோ

இப்படியும் செய்வானோ? -இனி
இங்கு வந்தென்னைக் காண்பானோ?

என் முந்தானையையே பிடித்து
திரிந்த என்மகனே, உனை அவள் 
முந்தானையில் முடிந்தே -எனை   
முதியோர் இல்லம் அனுப்பினாளே!

அண்ணன் மகள் என்று தானே 
ஆசையோடு எடுத்து வந்தேன்.

திண்ணை கூட இல்லை யென்று  
எனை இங்கனுப்பி -என்
இதயம் அறுத்தே எறிந்தாளே! 

வாங்கி வந்த வரமோ -இல்லை
தாங்கி வந்த சாபமோ

பிள்ளைமனம் மாருமுன்னே -என்அப்பன் 
மாப் பிள்ளைப்பார்த்து கட்டி வைத்தான்.
பிள்ளை ஒன்று கொடுத்துவிட்டு -அவனும் 
கொல்லையிலே படுத்து விட்டான்

தொல்லை பல நேரிடினும் -இப்பாழும்
சமூகம் இளம் விதவை எனக்கே
அல்லல் பல தந்திடினும்

எல்லையில்லா அன்பூட்டி - என்
பிள்ளை உன்னை நான் வளர்த்தேனே!... 

பொத்தி பொத்தி வளர்த்தேனே! -மனப்
பொந்தையிலே வைத்தேனே!
அப்ப னில்லா பிள்ளை என்றே 
அக்கறை யோடு வளர்த்தேனே

பள்ளிக் கூடம் அனுப்பினேனே!  
காலேசுக்கும் அனுப்பினேனே!
உத்தியோகம் கிடைத்ததுமே
ஊரே அசந்து போய்விடவே -தாய் 
மாமன் மகளுக்கே -உனை
திருமணமும் தான் செஞ்சேனே!… 

ஒய்யாரமாய் வளர்த்தவனும் - இப்படி 
ஓரிரு நாளிலே மாறிடு வான்னு
ஒருத்தரும் சொல்ல லேயே!..

நான் வாங்கி வந்த வரமோ - இல்லை
தாங்கி வந்த சாபமோ?

அஞ்சாறு வயசுக்கும் அசராமல் - நான் 
ஆசை ஆசையா பால்கொடுத்தேன்.
ஆடி வரும் பிள்ளைக்கே அன்பாலே 
ஆட்டுப்பாலும் கொடுத்து வளர்த்தேனே!

மட மடன்னு வளரட்டும், என்றே
மாட்டுப் பாலும் கொடுத்தே  
பாசத்தோடு நேசமும் ஊட்டி
பாங்குடனே  வளர்த்தேனே!...

சொல்லும் படியே கேட்கிறேனப்பா -நீ 
சொல்லாத எதையும் செய்வேனோ? யப்பா
பொல்லாப்பு ஏதும் இல்லை -எனை
புறத்தாளாய் நடத்தாதே, உனக்கு
புண்ணியம் கோடி கிடைக்கட்டும்
எண்ணிய காரியம் செயிக்கட்டும்.

எனை ஒதுக்கித் தள்ளாதே
காலமெல்லாம் சுமந்தவளை 
காணா தேசம் அனுப்பிடாதே!

முன்னூறு நாள் மட்டுமா? -இல்லை 
முப்பது வருடம் சுமந்தவள் -வீட்டு
மூலையில் முடக்கிக்கொள்ள கூடாதென்றே
(முச்சந்திக்கே) முதியோர் இல்லம் அனுப்பினாயே!



இனி எதிரிக்கும் வர வேண்டாம் 
இப்படி ஒரு நிலமையடா! ...

உனைப் பார்த்ததெல்லாம் போது மென்றே 
சலிப்பால் தள்ளி விட்டுப்போகிறானே! -எனக்கு 
அவன் கள்ளிப்பாலேத்  தந்திருக்கலாமே!

நான் வாங்கிவந்த வரமோ? -இல்லை
தாங்கி வந்த சாபமோ?.

இனியும் வாழ்வேனோ! இப்படியே வீழ்வேனோ!
இனிஎன் உயிரும் போகாதோ? - இறைவா!
இன்னல்களும் தீராதோ?...

ஒண்ணா நடத்த வேண்டாமையா 
ஒரு மூலையில் நான் இருக்கேன்.
காஞ்சி தண்ணி வேண்டாமையா - அத 
காச்சி நானே குடுச்சிகிறேன்.
காசு பணம் வேண்டாமையா - எரு
ராட்டி தட்டி வித்துக்கிறேன்

பண்டம் பாத்திரம், ஒண்ணா வேண்டாமையா
பையில் தனியா வச்சுக்கிறேன் - நீ 
பாசம் காண்பிக்க வேண்டாமையா; 
பாவி உன்னை நான் பார்த்திருந்தா 
பொதுமையா!...

என்னப் பெத்தவனே! ஏ ராசா!
கட்டையும் வேகாதுடா… 
காட்டுக்கு போகும் முன்னே,

வீட்டைவிட்டு அனுப்பிடாதே -ஒரு 
வேலைக்காரியா நினைத்திடடா
வாசலிலே இருந்திடுறேன்
வாய் மூடி நிண்டிடுறேன்
நாயோடு படுத்துக் கிறேன் -உன்னப்
பெத்த தாயாக கேட்டுக்கிறேன்

ஏ ராசா! வேண்டாம்னு சொல்லிறாதே 
வீட்டைவிட்டுத் தள்ளிராதே
பாசம்வச்ச என்மனசு புரியாம - வெறும் 
வேஷம் என்று சொல்லாதே...

விஷம் கொஞ்சம் தந்துவிடு -  என் 
வேஷம் கலைஞ்சு போயி டுறேன்

அனாதைன்னு சொல்லி - அங்கே 
ஆசிரமத்தில் தள்ளி டாதே
பிள்ளைகளை பெத்துப் போடு
பீ மூத்திரம் அள்ளி - அதிலே
பேரானந்தம் பெத்துக்கிறேன்...

இத்தனையும் சொல்லியும் 
இப்படி ஏன் செய்தாயடா?

நான் பெத்த மகனே - இப்ப 
நாதியத்தேப்  போனேனடா! 

வாங்கி வந்த வரமோ? -இல்லை
தாங்கி வந்த சாபமோ?...




அன்புடன்,
தமிழ் விரும்பி ஆலாசியம் கோ.


Thursday, 28 July 2011

கவிதை கேளுங்கள் !....



நல்வாழ்வு 

விடியலுக்குத் தூரமில்லை விவேகத்தை வளர்த்துவிட்டால்
துவண்டுபோக வேண்டியதில்லை துணிவுடனே செயல்பட்டால்
தானாய்வரும் என்பதெல்லாம் வெறும்கனவு - திறந்திடு  
தகவோடுப்போரிட்டே நல்வாழ்வெனும்  கதவு.  


நல்லார்

சொல்லொன்றும் செயலொன்றும் கொள்ளார் - அல்லாமல்
சொல்லியதையே செயலாக்கி கொள்வார் – இல்லாதவர்
பொல்லாதவர் என்றெல்லாம் பாராரவர்;  நல்லார்
எல்லோரிலும் ஈசனையேக் காண்பார்.  


வாகை 


"எண்ணுவது உயர்வுள்ளல்" என்ற எண்ணமிதை - நீ

எந்நாளும் எண்ணாமல் உயர்வில்லை - அங்கே

எண்ணியதோடு நில்லாமல் திண்ணியமோடு உழைத்தால்

விண்ணைவளைத்து வாகைதனை சூடிடலாம்.




உண்மையின் தன்மையரியா அப்பாவிகள்.

உண்மையெது பொய்யெதன்பதை அறிந்திடுவார் - இருந்தும்
உண்மை மறைத்திடுவார் மரமென்னும் பொய்க்கொண்டே,  
உண்மையெனும் நெருப்பெரித்து அம்மரத்தை நீறாக்கும் - என்ற
உண்மையறியா அப் பாவிகளே. 


நன்றி வணக்கம் !...

தமிழ் விரும்பி. 


Friday, 8 July 2011

நல்ல விலை கொண்டு நாயை விற்பார்,அந்த நாயிடம் யோசனை கேட்ப துண்டோ ?

---------------------------------------------------------------------------------

சுதந்திரம் வாங்கி வெகுநாளாச்சு - வாங்கிய 
சுதந்திரம் இப்போது என்னாச்சு?
---------------------------------------------------------------------------------

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு: 4-வது இடத்தில் இந்தியா

First Published : 15 Jun 2011 10:16:27 AM IST


புதுதில்லி, ஜூன்.15: கருவிலேயே அழிப்பது, பிறந்தவுடன் கொன்றுவிடுவது, கடத்திச் செல்வது ஆகியவை அதிக அளவில் நடைபெறுவதால் உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக காங்கோ குடியரசு, பாகிஸ்தான், இந்தியா, சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.
மகளிர் உரிமைகளுக்கான தாம்ஸன் ராய்ட்டர்ஸின் ட்ரஸ்ட்லா விமன் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் 3 நாடுகள் தெற்கு ஆசியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


- நன்றி தினமணி.


எந்த ஒரு நாட்டில் நள்ளிரவிலே நகைகள் பல அணிந்து எந்தவித ஆபத்தும் இன்றி தன்னந்தனியாக பெண்ணொருத்தி நடந்து செல்கிறாளோ அந்த நாடு முழு சுதந்திரம் பெற்ற நாடு என்றார் மகாத்மா காந்தி.


பாரத மாதாவிற்கு ஜே!?...

பூமியைத் தாயென்றோம்...
சாமியை தாயென்றோம்
நதியைத் தாயென்றோம்
நதி சென்றுச் சேரும் 
கடலைத் தாயென்றோம்
மாரியைத் தாயென்றோம்

எல்லாம்
தாயாய்ப் பார்த்தும்
தாயின் ரூபமான பெண்களை
தாயாகப்பார்த்தோமா?
காத்தோமா?...

பெண்ணென்றால் ஏளனம்!....  நீ
பெண்ணென்பதை மறவாது 
வாழனும் - எனப்
பெற்றவர்களே கூறும் 
அவலம் போகணும்.

பெண் என்பவள் என்ன
பிள்ளை ஈனும் எந்திரமா?

தொல்லைகள் அனைத்தையும்
வெளியே சொல்லாமல் 
தன்னுள்ளே புதைத்துகொள்ளும்
துயரச் சுரங்கமா?

கற்பு என்போம் 
சிறப்பென்போம் 
அதைக் காப்பது பெண்ணின் 
பொறுப்பு என்போம்...

பெண்ணினும் ஆண் 
உயர்வென்றால் அதை
பேணுவதில் அவனுக்கு ஏன்?
விதிவிலக்கு...

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்."


சான்றோர் அவையிலே சான்றோன் என்று சான்றோரால் தனது மகன் (மகள் அல்ல) பாராட்டப் பட்ட காட்சியைக் காண வழியில்லை! அதனால் அதைக் கேட்டத் தாய் என்கிறார் வள்ளுவர். பெண்ணினம் அப்படி வீட்டிலே பூட்டி வைக்கப் பட்டக் காலமது... அதுவும் மகனென்றும், ஆண்மகனுக்கே கல்விபலக் கற்று சான்றோனாகும் தகுதி கொடுக்கப் பட்டது என்பதும்; அன்றைய சமூகச் சூழலை பெண்கல்வி இல்லாத நிலையை  அறிய முடிகிறது. இதை வள்ளுவரும் அப்படியே ஏற்கிறாரா? என்பது ஆராய்ச்சிக்கு உரியது. அதை வேறுபல சான்றோடு ஆய்ந்து தெளிவோம் பிறகு..

கல்லாத அடிமைப் 
பெண்ணின் அன்றைய 
நிலைமையை 
மனதில் கொண்டு 
பேதைமை எது என்று
பேராசான் வள்ளுவனும்

"பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து."

"அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்."

பெண்வழிச்சேறலிலே 
முன்மொழிந்து சென்றானவன்.

முன்மொழிந்த காலமாறி போச்சு
முண்டாசுக் கவியின் முயற்சியாலே!
முடங்கிப் போன பெண்கள் கூட்டம்
முயன்று முதுகலை கற்று 
முன்னேறியாச்சு.....

சான்பிள்ளை என்றாலும்
ஆண்பிள்ளை  அவன் 
எதுசெய்தாலும் தப்பில்லை 
கற்பென்பது அவனுக்கில்லை
என்ற கொடியநிலை
இன்னும் இங்கு போகவில்லை.

காலமாறிப் போனதால்
கம்பனையும் வள்ளுவனையும் ஏன் 
இளங்கோவையும் மனம் நிறுத்தி
புதியதாய் வழக்காடுகிறான் 
புதிய நிவேதிதா பாரதி !...

"ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?"

"கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;".

கல்வி தந்தோம் எதற்கு?
கடமைகளோடு 
காசும் சம்பாதிக்க...

கலவி கொண்டோம் எதற்கு?
கைநிறைய ஆண்
குழவி மட்டுமே பெறுவதற்கு....

பெண்ணாய்ப் போனால்
பிறக்கும் முன்னே கருவறுப்போம்
தவறிப் போனால்
பெற்றவளை அருவருப்போம்

பிறந்து வளரும் போது
பெண்ணை வீண் செலவென்று சொல்லி
அவளின் சந்தோஷ வேரறுப்போம். 

ஆணென்றும் பெண்ணென்றும் 
தரம் பிரிப்போம்
ஆணுக்கே உரிமையென்று
ஆர்பரிப்போம்.

இத்தனயும் போதாதென்று 
இன்னுமொரு பிரச்சனை

கருவிலே பெண்சிசுவை
கொன்றொழிக்கும் 
கொடுஞ் செயலும் நடக்கிறது 

 பெண்சிசுவை தேடி பிடித்து அழித்திட
கோடிஸ்வர குடும்பங்களே
அரபுநாடு பறக்குது.

சரியுது சரியுது
பிறப்பு விகிதம் சரியுது
அழியுது அழியுது
பெண்ணினமே அழியுது.

காணும் அத்தனையும்
சக்தியின் வடிவென போற்றிடும்
இந்தியர் வீட்டிலே தான் 
இந்த அவலமெல்லாம் தொடருது.

இப்படியே தொடருமானால்
வருங்காலத்தில்...
சுயவரமும் அதன் பொருட்டு
கடுங் கொலையும்
மறுப்பதற்கு இங்கில்லை.

மெல்லச் சாகும் மனிதநேயம்
இனி வெள்ளமேனவே 
விரைந்து அழிந்து போகும்…..

மீண்டுமிங்கே கண்ணுறுவோம்
மகாகவியின் கவிதையினை
கண்ணுற்ற கவிதையின்
கருத்ததனை
சிந்தையிலே பயிரிடுவோம்.
  
பெண் விடுதலை

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்;அதற்குரிய பெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,
மனையாளும் தெய்வமன்றோ?மதிகெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,
விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.45”

தாய் மாண்பு

பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
''
கண்டார்க்கு நகைப்'பென்னும் உலக வாழ்க்கை
காதலெனும் கதையினுடைக் குழப்பமன்றோ?
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோ?உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஔவை ''அன்னையும் பிதாவும்,''
பாரிடை ''முன் னறிதெய்வம்''என்றா: அன்றோ?46

தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ ?
தாய்பெண்ணே யல்லளோ?தமக்கை,தங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவியொருத் தியையடிமைப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைத் படுத்த லாமோ?
''
தாயைப்போ லேபிள்ளை''என்று முன்னோர்
வாக்குளதன் றோ?பெண்மை அடிமை யுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ? 47

வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்;
நாட்டினிலே
நாடோ றும் முயன்றிடுவான் நலிந்து சாவான்;
காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம்,அப்பா!
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை;
பாட்டினிலே காதலை நான் பாட வேண்டிப்
பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே. 48”

சமூகம் நோக்கும் 
அவலநிலை மாறனும் 
அடிமைத்தனம் போகணும் 

எந்திரமாகிப்போன வாழ்வில்  
ஆணுக்கு பெண்
சமமென்று ஆகணும்

நடித்தது போதும் 
நானிலம் செழிக்கவே 
நன்றியோடு பெண்ணினத்தைப்
போற்றுவோம்.

பெண்கல்வி கற்பது மாத்திரம் அல்ல. அவள் சரிநிகர் சமானமாக மதிக்கப் படவேண்டும். உயர்ந்த வளர்ந்த நாடு என்பது ஆணுக்கு சமமான நீதி பெண்ணுக்கும் கிடைக்கும் போது தான்.

மேல்கண்ட கொடுமையெல்லாம் அரங்கேற ஆண் மட்டும் அல்ல, தன் இனத்தை தானே முன்னின்று புதைகுழியில் தள்ளும் பெண்களும் உணர வேண்டும். அப்படி உணர்ந்து செயல் பட்டால் அவர்கள் தாம் இந்த சமூகத்தில் கண்கள். இல்லையேல், அவர்கள் சமூகத்திற்கு ஆறாத முகப் புண்களே.

பெண்ணின் சாயல் கொண்ட யாவரும் தாயென காக்கப்பட வேண்டியவர்களே அதுவே ஒவ்வொரு இந்தியனின் கடமையும் கூட... பெண்ணை தெய்வமென இந்த உலகிற்கே கூறியது நாம் தான் என்பதை நாமே மறக்கலாகுமோ!?.. 


இந்த சிந்தனையைத் தூண்டிய தினமணிக்கு மீண்டும் நன்றி வணக்கம்.

அன்புடன் 
தமிழ் விரும்பி.