பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label அநாதை விடுதி. Show all posts
Showing posts with label அநாதை விடுதி. Show all posts

Tuesday, 20 September 2011

பொத்தி பொத்தி வளர்த்தேனே! -மனப் பொந்தையிலே வைத்தேனே!



வாங்கி வந்த வரமோ? -இல்லை
தாங்கி வந்த சாபமோ? 

இப்படியும் செய்வானோ? -இனி
இங்கு வந்தென்னைக் காண்பானோ?

என் முந்தானையையே பிடித்து
திரிந்த என்மகனே, உனை அவள் 
முந்தானையில் முடிந்தே -எனை   
முதியோர் இல்லம் அனுப்பினாளே!

அண்ணன் மகள் என்று தானே 
ஆசையோடு எடுத்து வந்தேன்.

திண்ணை கூட இல்லை யென்று  
எனை இங்கனுப்பி -என்
இதயம் அறுத்தே எறிந்தாளே! 

வாங்கி வந்த வரமோ -இல்லை
தாங்கி வந்த சாபமோ? 

பிள்ளைமனம் மாருமுன்னே -என்அப்பன் 
மாப் பிள்ளைப்பார்த்து கட்டி வைத்தான்.
பிள்ளை ஒன்று கொடுத்துவிட்டு -அவனும் 
கொல்லையிலே படுத்து விட்டான். 

தொல்லை பல நேரிடினும் -இப்பாழும்
சமூகம் இளம் விதவை எனக்கே, 
அல்லல் பல தந்திடினும்

எல்லையில்லா அன்பூட்டி - என்
பிள்ளை உன்னை நான் வளர்த்தேனே!... 

பொத்தி பொத்தி வளர்த்தேனே! -மனப்
பொந்தையிலே வைத்தேனே!
அப்ப னில்லா பிள்ளை என்றே 
அக்கறை யோடு வளர்த்தேனே! 

பள்ளிக் கூடம் அனுப்பினேனே!  
காலேசுக்கும் அனுப்பினேனே!
உத்தியோகம் கிடைத்ததுமே, 
ஊரே அசந்து போய்விடவே -தாய் 
மாமன் மகளுக்கே -உனை
திருமணமும் தான் செஞ்சேனே!… 

ஒய்யாரமாய் வளர்த்தவனும் - இப்படி 
ஓரிரு நாளிலே மாறிடு வான்னு
ஒருத்தரும் சொல்ல லேயே!..

நான் வாங்கி வந்த வரமோ - இல்லை
தாங்கி வந்த சாபமோ?

அஞ்சாறு வயசுக்கும் அசராமல் - நான் 
ஆசை ஆசையா பால்கொடுத்தேன்.
ஆடி வரும் பிள்ளைக்கே அன்பாலே 
ஆட்டுப்பாலும் கொடுத்து வளர்த்தேனே!

மட மடன்னு வளரட்டும், என்றே
மாட்டுப் பாலும் கொடுத்தே…  
பாசத்தோடு நேசமும் ஊட்டி
பாங்குடனே  வளர்த்தேனே!...

சொல்லும் படியே கேட்கிறேனப்பா -நீ 
சொல்லாத எதையும் செய்வேனோ? யப்பா
பொல்லாப்பு ஏதும் இல்லை -எனை
புறத்தாளாய் நடத்தாதே, உனக்கு
புண்ணியம் கோடி கிடைக்கட்டும், 
எண்ணிய காரியம் செயிக்கட்டும்.

எனை ஒதுக்கித் தள்ளாதே
காலமெல்லாம் சுமந்தவளை 
காணா தேசம் அனுப்பிடாதே!

முன்னூறு நாள் மட்டுமா? -இல்லை 
முப்பது வருடம் சுமந்தவள் -வீட்டு
மூலையில் முடக்கிக்கொள்ள கூடாதென்றே
(முச்சந்திக்கே) முதியோர் இல்லம் அனுப்பினாயே!



இனி எதிரிக்கும் வர வேண்டாம் 
இப்படி ஒரு நிலமையடா! ...

உனைப் பார்த்ததெல்லாம் போது மென்றே 
சலிப்பால் தள்ளி விட்டுப்போகிறானே! -எனக்கு 
அவன் கள்ளிப்பாலேத்  தந்திருக்கலாமே!

நான் வாங்கிவந்த வரமோ? -இல்லை
தாங்கி வந்த சாபமோ?.

இனியும் வாழ்வேனோ! இப்படியே வீழ்வேனோ!
இனிஎன் உயிரும் போகாதோ? - இறைவா!
இன்னல்களும் தீராதோ?...

ஒண்ணா நடத்த வேண்டாமையா 
ஒரு மூலையில் நான் இருக்கேன்.
காஞ்சி தண்ணி வேண்டாமையா - அத 
காச்சி நானே குடுச்சிகிறேன்.
காசு பணம் வேண்டாமையா - எரு
ராட்டி தட்டி வித்துக்கிறேன்…

பண்டம் பாத்திரம், ஒண்ணா வேண்டாமையா
பையில் தனியா வச்சுக்கிறேன் - நீ 
பாசம் காண்பிக்க வேண்டாமையா; 
பாவி உன்னை நான் பார்த்திருந்தா 
பொதுமையா!...

என்னப் பெத்தவனே! ஏ ராசா!
கட்டையும் வேகாதுடா… 
காட்டுக்கு போகும் முன்னே,

வீட்டைவிட்டு அனுப்பிடாதே -ஒரு 
வேலைக்காரியா நினைத்திடடா
வாசலிலே இருந்திடுறேன்…
வாய் மூடி நிண்டிடுறேன்
நாயோடு படுத்துக் கிறேன் -உன்னப்
பெத்த தாயாக கேட்டுக்கிறேன்…

ஏ ராசா! வேண்டாம்னு சொல்லிறாதே 
வீட்டைவிட்டுத் தள்ளிராதே…
பாசம்வச்ச என்மனசு புரியாம - வெறும் 
வேஷம் என்று சொல்லாதே...

விஷம் கொஞ்சம் தந்துவிடு -  என் 
வேஷம் கலைஞ்சு போயி டுறேன்…

அனாதைன்னு சொல்லி - அங்கே 
ஆசிரமத்தில் தள்ளி டாதே…
பிள்ளைகளை பெத்துப் போடு
பீ மூத்திரம் அள்ளி - அதிலே
பேரானந்தம் பெத்துக்கிறேன்...

இத்தனையும் சொல்லியும் 
இப்படி ஏன் செய்தாயடா?

நான் பெத்த மகனே - இப்ப 
நாதியத்தேப்  போனேனடா! 

வாங்கி வந்த வரமோ? -இல்லை
தாங்கி வந்த சாபமோ?...




அன்புடன்,
தமிழ் விரும்பி ஆலாசியம் கோ.