பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.
Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Monday, 24 December 2012

மகாகவியவன் நினது குருவென்பதை மறந்தாயோ?



பொழுதுப் போக்க நீயொன்றும் -சும்மாப்

புளுக வேண்டாம்; மனமே!

போதைத் தரும் புகழுக்கு -அதிப்

பேதையென அலைய வேண்டாம் மனமே!

அடுத்தவர் அங்கீகரிக்க வேண்டுமென -அனுதினமும்

பிடித்ததெல்லாம் பேயெனச் செய்யாதே மனமே!

 

தடுத்தவர் கூறினாலும் கருத்தைத் தவறென

மறுத்தவர் கூறினாலும் அதுன்னை -வந்து

வருத்துவதும் வீணே; என்றுணர்வாய் மனமே!

கருத்து தனைக்கூற உனக்கிருக்கும் உரிமை

மறுத்தவர்கூற மட்டுமல்லாது போகுமோ மனமே!

அங்கீகாரம் வேண்டுவதும் ஆணவத்தின் தூண்டுதலே

அகங்காரம் கொண்ட அற்பமனமே - நினது

அகமழிய; வேண்டாம் அப்படியொரு ஆறுதலே!

 

உங்கருத்தை அங்கீகரித்தாலும்; இங்கீகரித்தாலும் மனமே

ஆங்கதவர் அனுமானமோ; அபிப்ராயமோ அன்றி

ஈங்கிது இறுதியான உறுதியான சரியான

ஓங்குயர் கருத்தென்று நெகிழ்ந்துழலாதே மனமே!

 

''என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!'' - அவை அத்தனையும்
''தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே'' முன்னைய முனிவர்

கருத்தை அன்றே அழகுறப் பாடி

திருத்தமாக சொன்னானே மகாகவியவன் நினது

குருவென்பதை மறந்தாயோ? மடமனமே!


Monday, 12 December 2011

மகாகவியின் 130 -ஆவது பிறந்தநாள் விழா!



மகாகவி ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் 130- ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம். தமிழுலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு வருகிறது.
அப்படி நமது மகாகவிக்கு திருவையாறு பாரதி இயக்கமும், திருச்சி வானொலி நிலையத்தாரும் சேர்ந்து, பாரதியின் 130- ஆவது பிறந்தநாள் விழாவை அதி விமர்சியாக கொண்டாடி இருப்பதை அறிந்து அன்னைத் தமிழின் சார்பாக மகிழ்ச்சியை தெரிவிப்பதோடு, அவ்விழாவிற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மகாகவிக்கு ஒரு இனியவிழா!
மகத்தான அறிஞர்கள் கூடியவிழா!
மாணிக்க ஒளியவன் கவிதையிலா,
மாமன்ற பேச்சும் மனதில் நில்லா!

கவிதை வானில் அவன் கவிநிலா,
காலங்கள் கடந்தும் வந்திடும் உலா!
வேதங்கள் புதுமைச் செய்த கலா!
வேதாந்த லட்சியம் விளம்பிய முழா!

அவன்கவி வேரிலே பழுத்தப் பலா,
வெடித்து தேனிலே நனைந்தச்சுளா! 
அடிமைத் தலையை அசைத்ததிலா
ஆணோடு பெண்ணையும் அமர்த்தியதிலா

அன்னைத் தமிழை போற்றியதிலா 
அகிலமெலாம் உயர எண்ணில்லா
அறிவுத்தரவே மண்ணில் வந்தநிலா 
மகாகவி இவனோ உலக கவிஉலா!

மகாகவி பாரதி! ஒரு யுகபுருஷன் இவன் புகழ் 
வாழிய! வாழிய!! வாழியவே!!!

அவ்விழாவைப் பற்றி அறிய விரும்புவோர் கீழ்கண்ட தளங்களுக்குச்  சென்று பார்க்கலாம்.



நன்றி வணக்கம்.

Thursday, 6 October 2011

பிராமணர்கள் யார்? இதில் பாரதி கூறியது யாது?











பிராமணர்கள் யார்?
இதில் பாரதி கூறியது யாது?

பிராமணர்கள் யார் என்று மகாகவி பாரதியார் தனது கட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறார். ஆக, அந்தக் கருத்தை மையாமாக வைத்து மகாகவி பாரதியின் வழியே சிந்திப்போம்....

பிராமணர்கள் யார்? என்ற அந்த கட்டுரையை வாசிக்க இந்த சுட்டியை அழுத்தவும் 


உங்கள் கருத்துக்களையும் அங்கே நீங்கள் பதிவிடலாம். அதோடு ஒரு முக்கிய விவரம் அங்கே இன்னும் பல அறிய பல தகவல்களையும் நீங்கள் படித்து பயன் பெறலாம். இன்றய வலையுலகில் குப்பைகள் நிறைந்த சூழலில் இது போன்ற அறிவு சால் வலைப் பதிவுகள் பார்ப்பது அரிது என்பது எனது கருத்தும் ஆகும். வாருங்கள் செல்வோம்..

நன்றி வணக்கம்.

அன்புடன்,
தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.


Sunday, 11 September 2011

மகாகவி பாரதிக்கு நினைவாஞ்சலி!



சக்தியோடு கலந்த நித்திய பேரொளியே!
சாகாவரம் பெற்ற சமத்துவக் கவியே!
மனிதசாதி மண்ணிலே மாண்புற வாழ 
மகத்துவ கவிபலத்  தந்த மகாகவியே!

ஞாலம் போற்றும் ஞானியர்தம் கருத்தை
ஞாலம் உயரநாளும் உழைக்கும் - எளிய 
பாமரனும் அறிந்தே பயனுற வேண்டி

பாக்கள்பலப் பாடி; மாக்கள் அல்ல - நீவீர் 
பரமனின் மக்கள், மண்ணில் தெய்வம்
உண்மை, உழைப்பு, ஒற்றுமையோடு - இங்கே
ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி 

ஒருமையாய் உள்ள இயற்கையின் பன்மையை 
சக்தியின் தோற்றமதை நாளும் போற்றியே 
சத்திய ஜோதியில் கலந்துநற் கதிபெறுவீர்
சாத்திரம் வேண்டாம்வேறு பலசடங்குகள் வேண்டாம்

அன்பொன்றே போதும்ஆண்ட வனைச் சேர 
அன்பின் வடிவினன், அன்பில்வாழும் - அந்த 
அன்பின் பதம்பற்றி அன்பால்அன்பை அடைந்தே 
இன்பம் முருவீர் இன்னல் களைவீர் என்றே

மானுடம் சிறக்க மாகவி பாடிய - உலக
மகாகவி மறைந்து தொண்ணூறாண்டுகள் -ஆயினும் 
மனிதசாதிக்கு உழைத்து மங்காப்புகழ் கொண்ட
மாணிக்கப் பேரொளியை மனதாரப் போற்றுவோம்.

வாழ்க வளர்க மகாகவியின் புகழ்!
வாழிய! வாழிய!! வாழியவே!!!

அன்புடன்,
தமிழ் விரும்பி.  

Monday, 5 September 2011

பொய்யோ? மெய்யோ?



பொய்யோ? மெய்யோ?

மகாகவி பாரதி எழுதிய ஒரு கவிதாக் கட்டுரையைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம் 

  
பாரதியார் முன்னுரை.

எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மைதான். ஆனால் எல்லோருக்கும், எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்துவராது. சின்ன திருஷ்டாந்தம் சொல்லுகிறேன்.

ஒரு செல்வர். கிழவனார்; ஒரு வேலை ஆகாரம் செய்து கொண்டு லெளகிக (உலகில் புலன்களால் அனுபவிக்கும் புற இன்பங்களில் நாட்டம் இல்லாமல்) விசயங்களைத் தான் கவனியாமல், பிள்ளைகள் கையிலே கொடுத்து விட்டு, நியம நிஷ்டைகள் ஜப, தபங்களுடன் சுந்தரக் காண்டத்தையும் கடோபநிஷத்தையும், பாராயணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதே மேலான வழியென்ற கொள்கை இந்தக் கிழவனாருக்கு சரிப் பட்டு வரும்.

ஒரு பதினாறு வயது ஏழைப் பிள்ளை; தகப்பினில்லை; வீட்டிலே தாயாரும் தங்கைக்குமாக எங்கேனும் போய் நாலு பணம் கொண்டு வந்தால் தான் அன்றன்று அடுப்பு மூட்டலாம். இவன் மேற்படி சுந்தரம் காண்ட வழியைப் போய் பிடித்தால் நியாய மாகுமா?

"இந்த உலகமே பொய்" என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது. சந்நியாசிகள் இதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும். அதைப் பற்றி, இந்த நிமிஷம், எனக்கு வருத்தமில்லை. 

குடும்பத்தில் இருப்போருக்கு அந்த வார்த்தைப் பொருந்துமா? நடு வீட்டில் உச்சரிக்கலாமா? அவச் சொல்லன்றோ? நமக்குத் தந்தை வைத்து விட்டுப் போன வீடும் வயலும் பொய்யோ? தங்கச் சிலைப் போல் நிற்கிறாளே மனைவி, நமது துயரத்திற்கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந்தாள். நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள். நமது குழந்தைகளை வளர்த்தாள். 

அவள் பொய்யா? குழந்தைகள் பொய்தானா? பெற்றவரிடம் கேட்கிறேன் குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?.

வீடுகட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்கு மேற்படி சாஸ்திரம் பயன் படாது. நமக்கு இவ்வுலகில் வேண்டியது நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்கும். இவற்றைத் தரும்படி தத்தம் குலதெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். 

எல்லா தெய்வங்களும் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்ற மூன்றிலும் தெய்வ ஒளி காணவேண்டும் (அனைத்திலும் உண்மையை கொண்டு, அன்பையே அச்சாகக் கொண்டு வாழ்வென்னும் சக்கரத்தை சுழற்றுதல் தான் அது). தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானேக் கிடைக்கும். 



நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ? - பல
தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே நீங்களெல்லாம் 
அற்ப மாயைகளோ? - உம்முள்
ஆழ்ந்தப் பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலின் நீரோ? - வெறுங்
காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைதழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ - இந்த
ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒருநினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? - அங்குக்
குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? - இதைச்
சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பதெல்லாம் மறையுமென்றால், மறைந்ததெல்லாம் காண்பமென்றோ?
வீண்படும் பொய்யிலே - நித்தம்
விதிதொடர்ந்திடுமோ?
காண்பதுவே உண்மை கண்டாய், காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக்
காட்சி நித்தியமாம்.

பாரதியார் பின்னுரை.

முதற் பாட்டிலே, 'நிற்பது',  'நடப்பது' முதலியன் உலகத்தில் தோன்றும் வடிவங்கள். கற்பது, கேட்பது முதலியன செய்கைகள். மூன்றாம் பாட்டிலே 'கோலமும் போகளோ, அங்குக் குணங்களும் பொய்களோ?' என்பது தெளிவாகச் சொன்னால் தேளின் உருவம் மாத்திரம் பொய்யோ? அது கொட்டுவதும் பொய்தானோ? என்றக் கேள்வி.  

என்று கட்டுரையை முடிக்கிறார் மகாகவி பாரதியார்.

வாழ்வென்பது வாழ்வதற்கே உள்ளும் புறமும் இன்பம் பெருக வாழ்வதே சிறந்த வாழ்க்கை... ஆக, இயற்கை நமக்கு அளித்துள்ள இன்பங்களை எல்லாம் முழுமையாக அனுபவிக்கவே வேண்டும் இவைகள் தான் புற இன்பம். இவைகள் யாவும் உண்மையே. 



ஓசோ அவர்களும் இப்படிக் கூறுகிறார்கள். " முழு ஆன்மீக உயிர்ப்புடன், ஒரு முழு உலகாயத வாதியாக (materialist) வாழ்வது தான் முழுமையாகும். அது தான் உங்களுக்கு எனது செய்தியாகும். ஆன்மீக லோகாயத வாதியாக அல்லது உலோகாயத ஆன்மீக வாதிகளாக (spritualist) வாழுங்கள். ஏனெனில் என்னைப் பொறுத்தவரை இரண்டுமே வேறானதல்ல. அகமுக நோக்கமானது ஆன்மிகம். புறமுக நோக்கமானது லோகாயதம். ஏனெனில் இரண்டுமே அங்கே இருக்கின்றன... பொருளும் உண்டு, அதன் உள்ளுணர்வும் உண்டு... தர்க்க இயலாளர்கள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப் பவர்களாகவே உள்ளார்கள்.

ஆன்மீக வாதிகள் இந்த உலகம் மாயை, ஆன்மா நிலையானது, உலகம் நிலையற்றது. அது உண்மையானது அன்று. கனவில் காணும் காட்சிகள் போன்றது என நிரூபிக்க முயல்கிறார்கள். 

லோகாயத வாதிகள் எதிர் துருவத்தில் இருந்து இதே செயலைத்தான் செய்து வருகின்றார்கள். லோகாயத வாதிகள் உள்ளுணர்வு என்ற ஒன்று இல்லை என்கின்றார்கள்.

ஆனால், உண்மையான ஞானி, உபநிஷத ஞானி, இரண்டையும் ஒப்புக் கொள்கிறார். அவர் அவற்றை இரண்டு என்றுக் கூடச் சொல்வதில்லை. ஒன்றே இரண்டாகத் தோற்றமளிக்கின்றது என்கிறார். ஒரே உண்மையின் இரண்டு கூறுகள். அகமும், புறமும், லோகாயதமும், ஆன்மீகமும் என்பதே அவை. பூர்ணம் என்பது அது தான். 

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ. அளவிட முடியாத ஒன்று உள்ளது. ஞானிகள் மட்டும் அல்ல, பெளதீக அறிவியலாளரும் அளவிட முடியாத ஒன்று உள்ளது எனக் கூறுகின்றனர்


இந்த நூற்றாண்டில் தான் 'ஆல்பர்ட் ஈன்ஸ்டின்' பிரபஞ்சம் விரிவடைதுக் கொண்டிருக்கிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். ஆல்பர்ட் ஈன்ஸ்டினுக்கு ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னமே, இந்தப் பிரபஞ்சம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது - விரிவடைந்துக் கொண்டிருக்கிறது என்ற இந்த உண்மையை உபநிஷதம் கூறுகிறது. பிரபஞ்சத்திற்கு அவர்கள் கொடுத்த 'பிரமான்ட்' என்ற சொல்லிற்கு என்றும் விரிவடைந்து கொண்டிருக்கிற, தொடர்ந்து வளர்ந்துக் கொண்டிருக்கின்ற ஓன்று என்று பொருள். அந்த வளர்ச்சிக்கு ஒரு முடிவும் இல்லை, ஒரு எல்லையும் இல்லை.” 

ஆக, பெரியோர்கள், அனுபவப் பட்டவர்கள் தங்களது சந்ததிக்கு, இந்த மானுடத்திற்கு சொன்னது  லோகாயதமும் உண்மை உள்ளுணர்வான ஆன்மீகமும் உண்மை அவை அந்தப் பேருண்மையின் இரண்டு வேறுப்பட்ட தோற்றமே; உருவமாகவும், அருவமாகவும் இருக்கின்றன. 

இவைகள் தாம் வாழ்வில் முறையாக வாழ்ந்து உணர்ந்து பேறு அடைய வேண்டிய வழி; அவைதான் ஒவ்வொரு உயிரின் லட்சியமும் கூட என்கிறார்கள்.

நன்றி வணக்கம்,

தமிழ் விரும்பி.


Wednesday, 31 August 2011

"பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்"



"பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்"



''சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்".

எம்மதமும் சம்மதம்... உலகில் உள்ள எல்லா மதமும் உரைப்பதுவும் அதுவே! வேதாந்த சாரம் அது தான் அத்தனை மதங்களின் மறைகளின் சாரம் என்பதை மகாகவி பாரதியார் அருமையாக பாடியுள்ளதைப் போலவே...

அவர் இஸ்லாமிய மார்க்கத்தின் கடவுளாகிய அல்லாவையும் பாட மறக்கவில்லை. அந்த அற்புத வேதநாயகத்தின் புகழினை பாரதி பாடுவதை, இன்று இந்த ரம்ஜான் பண்டிகையின் போது நாமும் அக மகிழப் படித்து அந்த அல்லாவின் அருள் தனை பெறுவோமாக!!!.

அல்லா.

அல்லா, அல்லா, அல்லா,

சரணங்கள்

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள் 
எல்லாத் திசையினும் ஊர்எல்லை இல்லாவெளி வானிலே!
நில்லாது சுழன்றோட நியமம்செய்த தோர்நாயகன்
சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பரஞ்சோதி (அல்லா)

கல்லாதவர் ஆயினும், உண்மை சொல்லாதவர் ஆயினும்,
பொல்லாதவர் ஆயினும், தவம் இல்லாதவர் ஆயினும்,
நல்லார் உரை நீதியின் படி நில்லாதவர் ஆயினும்,
எல்லாரும் வந்து ஏத்தும் அளவில் எம பயம் கெடச் செய்பவன் (அல்லா)

ஏழைகட்கும் செல்வர்கட்கும் இரங்கியருளும் ஓர்பிதா 
கோழைகட்கிம் வீரருக்கும் குறைதவிர்த்திடும் ஓர்குரு
ஊழி,ஊழி,அமரராய், இவ் வுலகின்மீதில் இன்புற்றே 
வாழ்குவீர் பயத்தைநீக்கி வாழ்த்துவீர் அவன்பெயர் (அல்லா) 

புனித ரம்ஜான் பண்டிகை முதன் முதலில் கி.பி. 634 - முதல் கொண்டாடப் படுவதாக அறிகிறேன்.



மேலும், 786 என்ற இந்த எண்கள் முதன் முதலில் திருக்குரான் எழுதப் பட்ட போது எடுத்துக் கொள்ளப் பட்ட பக்கங்கள் என்று அறிகிறேன்... உண்மைதானா? என்பதை நமது இஸ்லாமிய நண்பர்கள் தான் கூற வேண்டும்....

நன்றி வணக்கம்,
அன்புடன்,
தமிழ் விரும்பி.

Thursday, 25 August 2011

உலகம் இப்போது கலியுகத்தின் முடிவிலா?


செல்வம் மிக உடையோர் பலர்; அவர்கள் அதை சரியான வழியில் செலவு செய்யாது, தற்பெருமைக்கும், தனது சந்ததிக்கும், தனது வெத்துப் புகழுக்குமாக அந்த செல்வத்தை வீணடிக்கும் அவல நிலையை இன்று நாம் கண்கூடாய்க் காண்கிறோம். 

அப்பேர்ப் பட்டவர்கள் வலியவர்களாய் தன்னை ஆக்கிக் கொண்டு ஆணைகளையும் பிறப்பித்து, தான் எண்ணியதையே செய்ய வேண்டும், இந்த உலகையே தனது ஆணைக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் ஆணை இடுகிறார்கள். இதை, நாம் இன்று உலகில் எங்கும் காண்கிறோம்.

சரியான ஒரு நல்ல திட்டத்திற்கு, அதை சரியான முறையிலே செயல் படுத்தி இந்த வையகம் பயனுற செயல் புரிய வேண்டியவர்கள் அந்தப் பதவிக்கு வருவதில்லை. 

தகுதியற்ற தற்குறிகள்தாம், அவ்விடத்திலே அமர்கிறார்கள், அதனாலே அவர்களிடம் சென்று சேரும் பொருள்கள் யாவும்; பாத்திரம் தவறிப் போய் விழும் பைம்பொன்னை போல்; தவறானவர்களிடம் செல்வத்தை வழங்கியதையே ஒப்பும். 

அது கடைசியில் யாருக்கும் பயன் படாமல், பசி பட்டினியைப் போக்காமல் ஏழைக்கு பயன் படாமல் பாழாய்ப் போகும். போகும் என்ன? இப்போது போகின்றதைக் கண்கூடாய்க் காண்கிறோம்.

பெண்ணென்றால் அவள் ஒரு தவம், அப்படிப் பிறப்பதற்கே தவம் செய்திருக்க வேண்டும் என்றார் கவிமணி. அந்தப் பெண் அன்பின் வடிவினள், இந்த உலகம் இயங்க அந்தப் பிரமத்தால் படைக்கப் பட்ட சக்தியின் வடிவினள். 

கருணைக் கடலான அவள் கருணையோடு இந்த உலகத்தையே தன் குழந்தையாக கட்டி அணைக்க கடமையுள்ளவள். 

அப்பேர்ப் பட்ட பெண், தனது பெண்மையின் சிறப்பறியாது நாணில்லாமல் ஆட்சியை விரும்பி, அதனையும் பெற்று, அதிகாரம் பெற்ற அவளே தானென்ற மமதையில், தானும் ஒருத் தாயென்று உணராது, தர்மத்தையே கொன்று பலலட்சம் மக்களையும் கொன்றுக் குவிக்க காரணமாவாள்.


அதாவது, பெண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதையே மறந்தவள் நாணில்லாதவள் தான். வேறென்னவாக இருக்க முடியும்?. அதையும் இன்று நாம் கண்கூடக் காண்கிறோம். 

இந்த உலகத்தை ஆள்வோர் பெரும்பாலோர், மக்களின் பணத்தைக் கொள்ளை அடிக்க காண்கிறோம். 

வணிகர்கள் நிர்பந்தப் படுத்தப் படுகிறார்கள், மக்களுக்கான திட்டங்களை வணிக நிறுவனம் குத்தகை பெற்று செய்யுங்கால், வல்லமைகொண்ட அரசோ அதில் கட்டாயப் பங்கு கேட்டு கொள்ளை யடிக்கும். 

நிலங்கள் பறி போகும், மக்கள் உடைமைகள் பறிபோகும். கடைசியாக எல்லா பாதுகாப்பும், சத்தியமும் செத்து எல்லாம் பொய்யாய் நிற்கும் 
இதுவே கலியுக முடிவாம்.

இதை நான் கூறவில்லை. உலக மகாகவி, அமரத்துவம் பெற்ற அற்புதக் கவிஞன் இப்படிப் பாடி சென்றுள்ளான். பாடலைப் பார்ப்போம் வாருங்கள்.



 கலியுக முடிவு!

"மிகப் பொன்னுடையோன், மிக அதைச்சிதறுவோன்
அவனே வலியனாய் ஆணைதான் செலுத்துவன்
பாத்திரம் தவறிப் பைம்பொன் வழங்கலே
தவமென முடியும் தையலார் நாணிலாது
ஆட்சியை விரும்புவர், அவனியை ஆள்வோர்

குடிகளின் உடைமையைக் கொள்ளையிட்டு அழிப்பர்
பொய்யுரை கூறி வணிகர் தம் பொருளைக்
கவர்வர், இவ்வுலகத் திறுதியின் கண்ணே 
மக்களின் அரண் (அறமெலாம்) எலாம்மயங்கி நின்றிடுமால்
பொருட் காப்பென்பது போய்ப் பெருங்கேடுரும்"
                                                           -            உலக மகாகவி சுப்பிரமணிய பாரதி.

இவைகள் யாவும் இன்று நாம் கண்கூடாக பார்க்கிறோம் அல்லவா.... ஆக, வெகு தூரம் இல்லை, கலியின் முடிவு. 

சமதர்மமும், சகோதரத்துவமும், சுதந்திரமும் கொண்ட ஒரு வாழ்வு தான் இதற்கு விடிவு. அது தான் பாரதி வேண்டிய கிருத யுகம்.  

மகாகவி பாரதி சொன்னது போல் உலக மக்கள் யாவும் அறிவு பெறுவோம். அந்த அறிவே தெய்வம் என்று போற்றுவோம். 

அறிவு பெற்றால் விடிவு வரும். 

ஆண், பெண், அலி என்றும் ஏழை, பணக்காரன் என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லோரும் அறிவு பெற; ஏட்டுக் கல்வி மாத்திரம் அல்லாமல், வேதாந்தம் அளித்த அந்த அறிவுக் கல்வியும் சேர்த்தே கற்போம். 

அதுவே சிறந்ததொரு உபாயம். அதனையே போற்றுவோம், அனைவருக்கும் கற்றுக் கொடுப்போம். விரைவில் கலியை வெல்வோம். மீண்டும் எந்த பேதமும் இல்லாத வேதகாலத்தை ஒப்ப, மீண்டும் இங்கே "வேதம் புதுமை செய்து" அறிவென்னும் அச்சாணி கொண்ட நவீன வேதகாலச் சக்கரத்தையே புவிக்கு ஆதாரமாய் சுழற்றுவோம்.



நன்றி வணக்கம்.
தமிழ் விரும்பி.