பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Wednesday, 31 July 2013

அபிராமி உந்தன் பெருமைக்குத் தானிது அழகாகுமோ!



அன்னையே அபிராமித் தாயே - எல்லையில்லா  
ஆனந்த ரூபியே அங்கயர்க் கண்ணியே 
அண்ட சராசரம் நின்றாளும் தேவியே 
அருவமாய் உருவமாய் உளதாய் இலதாய் 
அணுவினுளும் அணுவாய் விளங்கோய்!

ஓரிதயம் மட்டும் படைத்து விட்டு 
ஓர வஞ்சம் செய்தா யம்மா 
காரிருள் போக்கும் பேரொளியே உந்தன் 
கழல்கள் மாத்திரமே அதில் பொருதமிடமில்லை 
ஏழேழு உலகம் நிறைந்தவளே உனையெப்படி 
எந்தன் இதயம் நிரப்பி வைப்பேன்?

இருகண்களை மட்டும் படைத்து விட்டு 
எனையிப்படி ஏமாற்றி விட்டாயே! 
ஒருகோடி கண்கள் போதுமோ? - உனைப்  
பலகோடிமைல் தள்ளி நின்று கண்ணுறவே 
சொல்லடி சிவசக்தி சூட்சுமம் யாதென்று!

நில்லடி யானுனைத் தான் அழைக்கின்றேன்!  
கள்ளமில்லா எந்தன் உள்ளம்தனை அறிவாயே! 
பிள்ளை நான் உனைப் பணிந்துக் கேட்பதற்கு 
ஒருபதில் கூறாயோ எந்தன் உணர்வினில்
உயிரினில்; பேரமுதென பொங்கிப் பெருகாயோ!
  
எத்தனை ஆயிரம் பிறவிகள் எடுத்தேன் 
எத்தனைமுறை யானுனைக்  கூவி யழைத்தேன் 
இத்தனைக் காலம் ஆனப் பின்னும் 
எந்தன்மீது கருணை கொள்ளாமல் லிருப்பது 

உந்தன் பெருமைக்குத்தானிது அழகாகுமோ!

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உருக வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்... அபிராமி அருள் எல்லோருக்கும் கிட்டும்...

பார்வதி இராமச்சந்திரன். said...

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தொளிரும் ஆனந்தப் பேரொளி மயமான அன்னையை நினைந்துருகும் பாடல் நெஞ்சில் நிறைந்து ஆன்மாவை உருக்கியது. தெய்வீகத் தாகம் நிரம்பித் தவிக்கும் ஆன்மாவின் தேடல் நிச்சயம் அன்னையின் பதிலைப் பெற்றுத் தரும். ஆடி கிருத்திகை தினத்தில், அன்னையைக் குறித்த அற்புதமான பகிர்வுக்கு என் மன ஆழத்திலிருந்து நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

kmr.krishnan said...

சமீபத்தில் திருக்கடையூர் சென்று வந்தேன்.எனக்கு அங்கே அன்று தோன்றிய உணர்வு இன்று இங்கே உங்கள் கவிதையாக முகிழ்த்துள்ளது. நலமே வாழ்க.

Unknown said...

நண்பர் திரு தனபாலன், சகோதரி பார்வதி மற்றும் திருவாளர் கிருஷ்ணன் சார் உங்களின் பாராட்டிற்கு நன்றி!

Kavinaya said...

மிகவும் அழகான பாடல், அன்னை மீது. மிகவும் நன்றி.

Unknown said...

///கவிநயா said...
மிகவும் அழகான பாடல், அன்னை மீது. மிகவும் நன்றி.///


தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.

Post a Comment