சிட்டுக்குருவியே! சிட்டுக்குருவியே!
ஒத்தையடிப் பாதையிலே, ஓரமாய்
ஒண்டியாய் நிற்பதேனோ?....
என்னவள், அவளைப் போலே
உன்னவளும் இன்னும் வரவில்லையோ?
.................................................................................
.................................................................................
பெண்ணவள் வரும் நேரமிது -உன்
பெட்டையும் வரவில்லையோ?
வெகுநேரமாகியது இன்னும் என் செல்லக்
குருவியதைக் காணவில்லை? -அவளின்
கொஞ்சு மொழியும் கேட்கவில்லை -அதனாலே
கொத்தி தின்னும் கொய்யாவும் பிடிக்கவில்லை,
அத்திப் பழமதையும், அறவே பிடிக்கவில்லை.
வானுயர போகவில்லை, வாயாரப் பாடவில்லை
தேனூறும் மலர்களிலே திளைத்திடவும் மனமில்லை.
வானூரும் நிலவைப் போல் என்
வாழ்வினிலே வந்தவளை - இங்கே
நாள்தோறும் நான் கண்டே கூடி களித்திருப்பேன்
நாயகிதான் வரவில்லை நான்என் செய்வேனோ?.
அரிதாரம் பூசமாட்டாள், ஆரவாரம் செய்யமாட்டாள்
அன்புடனே அழகி; என்குருவி - தன்
அழகான அலகோடு என்னலகு சேர்த்தே
ஆழமான தன் காதலையும் என்னிடத்தே
ஆசையோடு கூறி சிலிர்ப்பாள்..
ஆவலோடு காதல் கொண்டே நானும்
அவளருகே போகும்போது அதை
அனுமதித்தே தனது இருறக்கை விரிப்பாள்!
இதயம் நிறைந்தவள் என் இளஞ்சிட்டவள்,
இறக்கை விரித்தே இப்போதே வந்திடுவாள்!
ஓ! மானுட நண்பனே....
உன்னவள்.... இந்நேரம்
வந்து போயிருப்பாளே! -ஏன்?
இவ்வளவு தாமதம் -இனி
என்ன செய்யப் போகிறாய்?...
என் அருமை குருவியே!...
இனி நான் என்ன செய்வேன்?
இதயம் கனக்கிறது என்
இளம்நெஞ்சும் பட படக்கிறது....
வந்தாளா? வந்து சென்றாளா?
வருவாளா? வாராது இருப்பாளா?
யாரிடம் கேட்டிடுவேன்? -இப்போது
யாதொன்றும் அறிகிலேன்!
கோதை அவளைக் காணவில்லை
கொலுசொலியும் கேட்கவில்லை
கொஞ்சும்மொழி கேட்பேனோ? -என்
அஞ்சுகத்தை அள்ளி அணைப்பேனோ?
நெஞ்சமது தவிக்கிறதே!
நெடு நேரமும் போகிறதே!
மண்ணில் நிலவுஅவள் வாராது
விண்ணில் நிலவும் வந்திடுமோ?!...
கவலை விடு தோழனே!
கணக்காய் உனக்கு சில
உபாயம் சொல்லுகிறேன் கேள்.
என்னவளைக் காணாத போது -யானும்
எதிர்வரும் தென்றலைக் கேட்ப்பேன்..
தென்றலும் வரவில்லை என்றால்
மன்னவள் மலர் பாதச்சுவடு பார்ப்பேன்...
எண்ணமதை சொல்லிவிட்டேன்
எதிர்வரும் தென்றலை கேள் -அதோ!
பெட்டையவளும் வந்துவிட்டாள்
பேரின்பம் தந்து, பெற்று விடவே...
நாளை பார்ப்போம், நானென்
நாயகியோடு போகிறேன்...
ஆஹா! அற்புதம் உரைத்தாய்...
சென்று வா! குருவியே -உன்
பெட்டையோடு சேர்ந்தே
பேரின்பம் கண்டிடவே...
ஓ தென்றலே! ஒருகணம் நிற்பாயா?
ஓடிவரும் வழியிலே நீ! -என்
ஓவியம் அவளைப் பார்த்தாயா?
ஓஓ.. தென்றலே!
ஒரு பதிலும் கூறாமல் நிற்பதேன்?
ஒடிந்துவிழும் என்மனதை
உயிர்பிக்க மாட்டாயா? -உன்
ஓரப்பார்வையின் அர்த்தமென்ன?
ஓயாமல் கேட்கிறேனே....
உன் காதுகளிலே விழவில்லையா?
ஆ...ஆஹா!...வாசம் வருகிறதே!
என் மன்னவள் சூடும்,
மல்லிகை வாசம் வருகிறதே!
பட்டாம்பூச்சி அவள் பட்டு மேனியின்
வாசமும் கலந்து வருகிறதே!
ஆஹா..ஹா.! இதயம் நிரம்புகிறதே!
என் இதயம் நிரம்புகிறதே! -என்
துன்பம் விலகி இன்பம் பெருகுகிறதே!...
என் உயிரின் வாசமது;
என்னுள்ளே நுழையும் போதே!
ஓ! மௌனத்தில் பேசும் தென்றலே...
மயக்கம் தெளிந்தேன்; என்னுயிரின்
வாசமதை உன்னிடம் தந்தனுப்பியே;
பாசமதை சொல்லிச் சென்றாளோ!
பாவை அவள்... நான் பாவமென்றே!....
ஓ! தென்றலே....
இன்று நீ! மௌன விரதமானாலும்,
உன் மகத்துவம் அறிந்தேன்!...
தென்றலே! திங்கள் வரும் நேரமிது
அல்லியவள் மலர்ந்திடுவாள்
விரைந்தே ஓடிவிடு - அவளைத்
வேண்டுமளவு ஆரத் தழுவிடு...
சென்று வா தென்றலே! -நான்
சிந்தை குளிர்ந்தேன், உன் செய்கையால்
நன்றிகள் உனக்கு, நாளை
பார்ப்போம்...
நாளை வரும் வேளையில்
நாயகி அவள் வந்திடுவாள்
கலங்கிடும் கண்ணே கவலைவிடு...
அப்போது தப்பாமல் நீயும் அவளை -உன்
கண்ணின் மணியவளை கண்ணுள்ளேக்
நீங்காது கொண்டிடலாம்..
அதுமுதல் தூங்காது
காதல் செய்தே களித்திடலாம்!.
அதுமுதல் தூங்காது
காதல் செய்தே களித்திடலாம்!.
பட படக்கும் மனமே! என்போல்
பாவம் நீயும் தான்!...
என்ஆருயிரே... இப்போது
என்னிடத்தில் இல்லாதபோது
உனக்கு ஆறுதல் கூறமட்டும்
என்னிடம் வார்த்தைகள் ஏது?
ஏ மனமே!.....
ஒன்று கூறுவேன் அமைதிகொள்....
வீடுபேறு தருபவள் நாளை வருவாள்!
வேறுவழியில்லை நாம் இப்போது
வீடு போவோம் என்னுடனே வா!....
அன்புடன்
தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.