பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Monday, 5 March 2012

அகமும் புறமும் ஒன்றே அதை அறிவாய் மனமே நன்றே!


(நேற்றையதினம் திரு சுப்பையா வாத்தியாரின் வகுப்பறையிலே வெளியான எனது கட்டுரை மீண்டும் இங்கே அன்னைத்தமிழில் பதிவிடுகிறேன்)

அகம் புறம் என்றெல்லாம் வெவ்வேறில்லை 
அகமும் புறமுமாக அனைத்திலும் -அன்னை
அபிராமி யவளே இருக்கையிலே; இங்கே 
அபிராமியில்லா தொன்றை காண்பதேது?

உலகிலே பாலூட்டும் எந்தப் பிராணியானாலும்அது பிறந்த உடனே யாரும் சொல்லாமல் அறிவதுஅது கடவுளாக நினைத்து அதிகம் நேசிப்பதுதனது தாயின் அமுது கொட்டும் கொங்கைகளைத் தான் என்பதை நாம் அறிவோம். அதை பலரும் இது வரைப் பெரிதாக யோசிக்க வில்லையென்றால் இப்போது யோசிக்கலாம்.

இதில் ஒரு பேரானந்தமான விஷயம் இருக்கிறது... தாயின் மடியில் குழந்தை இருக்கிறதுஅந்தத் தாயும் அமுதூட்டப் போகிறாள். அப்போது அந்த முலைகள் தாம் பூரிப்பில் இயற்கையாகவே பொங்கி வழியும்இது நாம் அறிந்ததே. இருந்தும்

அதைப் பேரானந்தம் என்றேனே!!?...

அதுஅந்தக் குழந்தையை, தனது முலைப் பாலைக் கொடுக்கப் போகும் முன்புஅப்போது அந்தத் தருணத்திலே அந்தத் தாய் அந்தக் குழந்தையை அன்பால் குளிப்பாட்டி, ஆனந்தப் பேரலையில் தாலாட்டி, கண்ணே மணியே, அமுதே என்றெல்லாம் கூறி, கொஞ்சுவாளே!... ஆம், அந்தத் தாயின் குரலில், மனதில், வார்த்தைகளில், அப்படி ஒரு அன்பும், கருணையும் பொங்கும். அது மட்டுமா? அவள் மார்பிலே பாலும் சேர்ந்தல்லவா பொங்கும்.


அப்போது, அக்கணம்  அவளின் முகத்திலே தெரியுமே ஒரு ஆனந்தம். அது ஆனந்தம்; அதைக் காணும் போதும் நமக்கும் ஆனந்தம்.


சரி, பேரானந்தம்!


ஆமாம்அது தாயானவள் தனது மார்புக் கச்சையை தளர்த்தி, தனது மார்பகத்தை குழந்தையின் வாயோரம் கொண்டு செல்ல முயலும் போது; அந்தக் குழந்தை தனது தலையை முயற்சித்தவாறு வாயைப் பிளந்துக் கொண்டு தாயின் அமுதக் குடத்தின் காம்போரம் நகரமுடியாமல் தவிக்குமேஅப்போது அந்தத் தாய் அன்போடு கருணையோடு இரத்தின; முத்து வார்த்தைகளை உதிர்த்தவாறு; அதன் வாயில் முலைக் காம்பை வைத்தப் போது பார்க்க வேண்டுமே! அந்தக் குழந்தை அத்தனை வேகமாக, அமுதை உறிஞ்சிஉறிஞ்சி மூச்சுத்  திணறக் குடிக்குமே அது குழந்தைக்கும், தாயிற்கும் பேரானந்தம்.


அப்போது, கனத்த முலையில் பால் வடியும் போது; அதாவது அது தனது உயிரின் மேலான தனது செல்லத்திற்கு உணவாகியதோடு! அதுவரை, அவளின் மார்பு இறுக்கம் பெற்று இருந்த ஒரு சிறு கடுப்பு, வலி மெதுவாக தளருமே அப்போது அந்தத் தாய் பெறுவது இரட்டைப் பேரானந்தம்...


அந்தத் தருணத்தில் இந்த அழகான நிகழ்வுகளையெல்லாம் அருகிலே அமர்ந்து அமுதையே உண்டவனைப் போல பேரானந்தத்தில் திளைத்து; இத்தனை இனியக் காட்சிகளையும் பார்த்துக் கொண்டு;  பக்கத்தில் இருக்கும் அந்தக் கணவனைப் பார்த்து அந்தத் தாய் ஒரு புன்சிரிப்பு தருவாளே அது இன்னும் பெரியப் பேரானந்தம்.


அத்தோடு நிற்பதில்லை, அந்தக் குழந்தை அமுதை உண்ட பொழுது அப்படியே அள்ளி அந்தக் குழந்தையின் உச்சியை முகந்து முத்தமிட்டு, அருகில் இருக்கும் தனது கணவனிடம்; கரங்களில் அலுங்காமல், குலுங்காமல் சேர்த்து; அப்போது, அந்தக் கணவனின் முகத்தில் தெரியும் மகிழ்சியையும் ஒருசேர அனுபவிப்பாளே அது பேரானந்தத்திலும் பேரானந்தம்.

  
அன்னையின் முலைகள். அன்பு, கருணை கலந்துஅமுது கொடுக்கும் தெய்வ சந்நிதியாகும் அந்தக் குழந்தைக்கு. 


அன்னையும் அமுதூட்டுகிறாள் எப்போது? குழந்தையது பசித்து; சிணுங்கும் போது, பசியதைத் தாங்காமல் அழும்போது...


என்ன வேலை செய்துக் கொண்டிருந்தாலும் அதை அப்படியேப் போட்டு விட்டு ஓடி வந்து அள்ளி இறுக்க அணைத்து, முத்தமெல்லாம் தந்து, அந்தக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே அமுதூட்டுகிறாள்... 


தன்னால் தாமதமோ?. அதனால் தான், எனதுயிரான என் பிள்ளையது இவ்வளவு கதறுகிறதோ என்றெல்லாம் எண்ணி சங்கடத்தில் அந்தக் குழைந்தையோடு சேர்ந்தே சில நேரம் இவழும் அழுது விடுவதுண்டு.


பசித்து அழுதால் தானா? அமுதூட்ட வருவாள்....
இல்லை அவளுக்கும் தெரியும் அவள் மடி கனக்கும், காம்பு பெருத்து, அதிலே அமுதும் சொல்லாமல் வடியும். அப்போதே தெரியும் என் குழந்தைக்குப் பசிக்கிறது என்று, அமுதூட்டும் நேரம் வந்து விட்டது என்று...
இவையாவும் ஒன்று சேர்ந்தாற்போல் எதேச்சையாக தானாக ஒரே சமயத்தில் நடக்கும். 

************************************************************************சரி இப்போது அடுத்தப் படிக்கு ஏறுவோம்.... 
பெரும்பாலும் பக்திப் பாடல்களில் நாம் கூறும் அகப் பொருள் பொதிந்த கருத்துக்களை தாங்கிய பாடல்களை நாம் பல இடங்களில் வாசித்து இருக்கிறோம். அதற்கு ஆண்டாளின் திருப்பாவையிலும், திருமொழி, அபிராம பட்டரின் அபிராமி அந்தாதி. (ஒரு செய்யுளின் கடைசி வார்த்தையையே மறு பாடலின் முதல் வார்த்தையாக கொண்டு வருவது அந்தாதி). இன்னும் சொன்னால் நமது பாரதி வரைக்கும் அதைக் காணலாம்.


அதை சரிவர புரிந்துக் கொள்ளாமையாலும், அதன் தார்ப்பரியம் உண்மையான அர்த்தம் இவைகள் தெரியாமலும் இன்னும் சொன்னால் அவைகளை யாரும் அவ்வளவு தெளிவாக  விளக்கி கூற முயலாமையும், முயன்றும் முடியாமையும், முடிந்தும் பலருக்கு அது புரியாமையும் இருப்பது தான் இப்போதைய நிலைமையும்.


ஒன்றை மட்டும் இங்கே கூற வேண்டும், எதையுமே தவறாகவே புரிந்துக் கொள்பவர்களை எதைக் கூறினாலும் நான் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்கும்.... 

கண்களை மூடிக் கொண்டு தூங்குகிறேன் என்று கூறுபவர்களை யாரும் எழுப்ப முடியாது ஆக,அவர்களை இங்கே மறப்போம்.
இங்கே தரப்பட்டுள்ள அபிராமி அந்தாதிப் பாடல்களையும், கவியரசுவின் கருத்தையும் படித்துப் பாருங்கள்... 

5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.
அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.


21: மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.

அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே! என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே! உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!


37: கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.

என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!


38: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.

என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா? எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி? உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால்! அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.


42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.

அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!


78: செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.


85: பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.


93: நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.


82: அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே?


*****************************************************************

இவைகள் சிற்றின்பப் பாடல்களா? இல்லைப் பேரின்பப் பாடல்களா? இவைகள் தாம் பெரும்பாலும் அபிராமி அந்தாதியிலே நாம் கூறும் அகப் பாடல்களாகத் தோன்றுபவை. 

திருப்பாவை, திருமொழி, பாரதியின் பாடல்கள் இவைகள் பற்றிய பகிர்வை பின்போ அல்லது பிறகோ பேசுவோம்.

அபிராமி பட்டர், அவர் சக்தி பித்தர், அவர் சித்தமெல்லாம் சிவமே என்று திரிந்து அன்னையின் அருளாலே ஜீவன் முக்தரானார். இவை யாவரும் அறிந்ததே.
அவளைப் பற்றி, நமது முக்தர் சக்தியின் பித்தர்; அவர்களின் பாடல்களில் உள்ளக் கருத்துக்களை தான் வேதாந்த கருத்துக் களோடு பகிர்ந்து அந்தப் பக்திப் பாடல்களில் வடியும் அமுது யாது? என்பதைப் பற்றிய ஒரு சிறு புரிந்துணர்வுக்கு வரப் போகிறோம்.


அதற்கு முன்பு ஒருத் தகவல் இது போன்ற பக்திக் காவியங்கள் / பாடல்கள் யாவும் எழுதுபவரின் ஆன்மாவின் எதிரொலி என்பதே அது.

விரிவாகச் சொன்னால்இவர்கள் ஆழ்ந்த ஆன்ம நிலையிலே தான் இவைகளை பாடியுள்ளார்கள். இவர்கள் எப்போதும் அப்படி ஒரு பித்தர்களாகவே, ஒரு மோன நிலையிலேத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இந்தப் பாடல்களையெல்லாம் அந்த மகான்களின் ஆத்மாக்களின் உன்னத வெளிப்பாடே என்பதையும் மறக்கக் கூடாது.


இங்கே ஐம்புலன்களும், அது தாங்கிய உடலும், இல்லவே இல்லை. அதையும் கடந்த மேலான நிலை. மகாகவி பாரதி கூட அப்படித் தான் பல கவிதைகளைப் பாடி இருக்கிறான்.

இன்னும் சொன்னால் திருமதி மகாகவியும் அதையே டெல்லி / திருச்சி  வானொலிகளில் உரையாற்றும் போதும் கூறி இருக்கிறார்கள். 


அப்படி ஒரு நிலையிலே அபிராமி பட்டரும் பாடி இருக்கிறார்.
ஐம்புலன்களையும் அடக்கிஒரு குழந்தையைப் போன்ற ஒரு நிலையிலே இருப்பது தான் உண்மையான பக்தியின் முதல் தகுதியே...
அவைகள் வரப் பெறுவதற்கு என்னவெல்லாம் அபிராம பட்டர் செய்து இருக்கிறார் என்பதை அவரின் மற்றப் பாடல்களை படித்தால் நன்கு விளங்கும். 


பாரதியும் பாண்டிச்சேரியில் கடைசி காலங்களில் அப்படித் தான் இருந்திருக்கிறான் என்பதை அறிய முடிகிறது.
மேலதிகத் தகவலுக்கு நமது தஞ்சைப் பெரியவர் பாரதி அடிபொடிபாரதி பித்தர் வெ. கோபாலன் ஐயா அவர்கள் தலைமையில் இயங்கும் பாரதி இலக்கிய பயிலகம் வலைப் பூவில் http://ilakkiyapayilagam.blogspot.com/ காணலாம்.


பாரதியின் நாட்குறிப்புகளாகவே அப்பாடல்கள், கட்டுரைகள் வந்திருக்கின்றன. அவனும், இதன் அருமையை; நாமும் அறிய எதை எல்லாம் ஆவணப் படுத்தி இருக்கிறான் என்று எண்ணில் சிந்தை சிலிர்க்கிறது...
அவனை வியக்க வில்லை, காரணம் அவனின் இயல்பான குணம் மது. ஆக, அதில் வியப்பேதும் இல்லை.  


இப்போது நான் கட்டுரையின் முன்பகுதியிலே எழுதிய விசயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.... 

அபிராம பட்டர். அன்னையை சர்வ சதாக் காலமும் எண்ணிக் கொண்டு அவளின் நினைப்பையே சுவாசிக்கிறார்... காண்பனவெல்லாம்  அபிராமி, கேட்பான, பறப்பன, நிற்பன அனைத்தும் அன்னை அபிராமி என்றுத் திரிகிறார். அவளை போற்றுகிறார், இவ்வளவு காலம் நான் வீணடித்தேன், வீணர்களோடு இனியும் சேரேன், சேர்ந்து நான் செய்த பாவமெல்லாம் தொலைப்பாய், என்றெல்லாம் கூறி இறங்கி, உருகி, பணிந்து வணங்கி மன்றாடுகிறார்.


இப்படி இருக்கும் இவரின் மன நிலை எப்படியானதாக இருக்கும்... கர்வம், இல்லை, ஆணவம், அகந்தை இல்லை, காமம் இல்லை, கோபம் இல்லை, இப்படி எந்த அழுக்கும் இல்லாமல் இருக்கும் இவரின் நிலை தான் என்ன வென்றால்!. 


அது தான் வளர்ந்த, உலகம் அறிந்த, கல்வி,கேள்விகள் பெற்ற... இருந்தும் அன்னையாகிய இறைவியின் முன்பு, இறைவனின் இடபாகத்தில் இருக்கும் மகாசக்தியின் முன்பு ஒரு குழந்தை நிலை.


இங்கே இந்தக் குழந்தை, அழுகிறது!

எதற்கு அழுகிறது?, பசித்துப் பசியால் அழுகிறது! 

என்னப் பசி? ஞானப் பசி!...

அப்படிஎன்றால், பசியை போக்க அம்மா வர வேண்டுமே!

அவள் வந்து தனது பிள்ளையை அள்ளி இறுக்க அணைத்து தனது முலைப் பால் தர வேண்டுமே

வந்தாளா? வந்தாள்! 

அள்ளி அணைத்து முலைப் பால் தந்தாளா? தந்தாள்!

பிறகு என்ன... 

அன்னை வந்தாள், ஞானப் பசியால் அழுத தனது குழந்தையை அன்போடு அணைத்து கொஞ்சி, அன்பு, கருணை, பாசத்தோடு அறிவையும் கலந்தே தனது அழகிய முலையாலே அமுதமென்னும், ஞானப் பாலை ஊட்டினாள்.


அத்தோடு முடிந்ததா? அது தான் இல்லை, எதற்காக இந்தக் குழந்தை அழுதது!... 

ஞானத்திற்காக!!. 

அது கிடைத்தது...

எப்படி?... 

அன்னை தன் பிள்ளை அழுவதைக் கேட்டு ஓடோடி வந்தாள், ஞானப் பாலைத் தந்தாள், ஆனந்தம் அடைந்தாள்.

அதன் பிறகு அந்தக் குழந்தையை அவனின் தந்தையிடம் அள்ளிக் கொடுத்து அந்தத் தந்தையையும் ஆனந்தத்தில் ஆழ்த்தி, அவளும் ஆனந்தத்தில் மூழ்கி அமைதி கொள்கிறாள்.

இப்போது இங்கே இன்னொரு சிந்தனையும் வரும்...

பச்ச பச்சிளங்குழந்தை பைந்தமிழ் கவிபாடியக் குழந்தை
இச்சைஎல்லாம் ஈசனிடியே என்று எக்கணமும் சுவாசித்தே
சைவசித்தாந்தம் சிறக்க செந்தமிழும் செழிக்க அவதரித்தந்த 
சிவசக்தியாய் வையமேகியே ஞானப்பாலூட்டிய குழந்தையே!


கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் 

நினைவு மேலிட்டவராய் திருத் தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் 

கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் 

செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப `அம்மே அப்பா` என அழைத்து 

அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து 

இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளி 

னார். பெருமான் உமையம்மையை நோக்கி `அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் 

முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக` எனப்பணித்தார். 

அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து 

சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து 

உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார். தேவர்க்கும் முனிவர்க்கும் 

கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் 

அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார்.

ஆம், அவர் தாம் திருஞானசம்பந்தர் பெருமான்.

இப்போது விளங்கும் ஏன்? சக்தியவள் வந்து பாலூட்டினால் அது எத்தகையது என்று.

இப்போது நமக்குப் பல கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கும் என்றே நம்புகிறேன்...

அப்பனை அடைய நாம் முதலில் யாரை நாடி, யார் மூலம் செல்ல வேண்டும் என்றும்... 

ஏன்? கோவில்களிலே தாயாருக்கு எல்லா பூஜைகளையும் செய்துவிட்டு; அங்கே நம்மை வணங்கச் செய்துவிட்டு, நம்மை அப்பனிடம் அழைத்துச் செல்கிறார்கள் என்றும்...


ஏன்? ஆண்டாளும், அபிராமபட்டரும், பாரதியும்...... 
நப்பின்னையையும், அபிராமியையும், பராசக்தியையும் கொண்டாடினார்கள் என்று. (இருந்தும் ஆண்டாளை நாம் வேறு விதமாக ஆராய வேண்டும்.)


இப்போது இங்கே அபிராம பட்டர் என்னும் குழந்தை, பாடிய இப்பாடல்கள் அகப் பாடல்களா?. 


அதோடு அவர் ஏன்?... அன்னையின் திருமுலையை இப்படி வரிந்து வரிந்து அழகு படுத்தி அதிலே மயங்கியும், ஈசனும் மயங்கியும் (அதற்கு வேறு காரணம் உண்டு அதை பிறகு பேசுவோம்) இருந்ததாக வர்ணித்தார் என்பதையெல்லாம் யோசித்தால்... 


குழந்தைக்கு எது சொர்க்கம், அது எதை உயிராக, அமிழ்தாக, தெய்வாம்சமாக எண்ணும் என்பதை எல்லாம் நாம் இயல்பாக யூகிக்க முடியும்.


ஒரு குழந்தை தனது தாயோடு மிக நெருங்கிய உறவோடு, பரஸ்பரமான, ஒரு உயிருக்கு உயிரான; ஒரு உணர்வு நிலை கொள்வது என்பது நான் மேலேக் காட்சியாய் விளக்கிய அந்த முலைப்பாலூட்டும் தருணமே (நன்கு கவனிக்கவும் ஒரு பரஸ்பரமான மற்றத் தருணங்களில் அன்பு பகிரும் தாய் மற்றும் குழந்தையின் மன நிலை ஆத்ம சங்கமம் ஒரே நிலையில் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதைத் தாய்மார்களும், அவர்களோடு அந்த இனிமையான தருணங்களில், மிகவும் ரசித்துப் பார்த்திருந்த தந்தைமார்களும் நன்கு உணர்வார்கள்)

இன்னும் சொன்னால் அன்னை, தந்தை, குழந்தை மூவரும் ஆத்ம சங்கமிக்கும் பொழுதும் அதுவாகத் தான் இருக்கும் என்பதும் எனது துணிபு..., என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. 

இதை வேறெங்கும் நான் படித்திலன் இருந்தும் எனது எண்ணம் இது, நீங்களும் ஏற்பீர்கள் என்றே நம்புகிறேன். அப்படி ஏற்பீர்கள் என்றால், அடுத்தடுத்த கட்டங்களில் பகிரப் போகும் கருத்துக்களில் நாமும் கருத்தொருமித்து கருத்துக்களில் இன்புறுவோம் என்பது திண்ணமென நான் தீர்க்கமாகவே நம்புகிறேன்.  

******************************************************************************
புலனின்பத்திலே சர்வ சதாக் காலமும் உழலும் நம் புத்திக்கு அது அகம் சார்ந்த பொருளாக உரைப்பதில் வியப்பில்லை... 

குழந்தை மனம் வேண்டும், சிறந்த பக்திக்கு இது தான் முதல் தகுதி. அப்படி குழந்தை மனம் கொண்டோரின் எண்ணம், செய்கை நம்மில் இருந்து வேறாகவே தோன்றும், இருக்கும். 


பெண்ணின் முலையை பார்க்கும் ஆணின் மன நிலையை மூன்றாக பிரிக்கலாம், ஒரு சிறியக் குழந்தை பார்க்கும் போதும், ஒரு கணவன் பார்க்கும் போதும், ஞான நிலைக்கு உயரத் துடிக்கும், வளர்ந்த ஒருக் குழந்தைப் பார்க்கும் போது; எண்ணம் உணர்வு எல்லாம் வேறுபடுகிறது.


 இருந்தும் அவை யாவும் சூட்சுமத்தில் ஒன்றே! இது சாதாரண மனிதப் பெண்களுக்கு மாத்திரமல்ல (மாதர்தம் கொங்கைகள் எல்லாம் சிவலிங்ககமாகக் கண்டார் மகாகவி காளிதாசன் என்பான் பாரதி.) பெண் தெய்வங்களுக்கும் பொருந்தும்.


ஆக, இனி இப்படி ஒரு காட்சியை காணினும், கேட்பினும், நாமாக பேசினும் அங்கே அன்னை உண்ணாமுலையாளின் அழகிய ஞானப் பால் தரும் கொங்கைகளாகவே இனி நம் அனைவரின் கண்களுக்குத் தெரியட்டும்.


நாம் முன்னோர்கள் இந்தக் கொங்கைக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்கள், அதை வியந்தும் உயர்த்தியும் அழகுறவும் பாடி இருக்கிறார்கள். அப்படி அதை பெண்களே உயர்வாகவும், அமுது கொடுத்த தனது உன்னத அங்கமாகவும் கருதியதை அகம் அல்ல புறநானூற்றிலும் காண முடிகிறது. 


போரில் புறமுதுகில் காயம் பட்டு இறந்த தன் மகனைக் கண்டு, கடும் கோபம் கொண்டு. உனக்கு, ஒரு கோழைக்கு; இந்த முலை அல்லவா பால் தந்தது அது எனக்கு வேண்டவே வேண்டாம் அதை  கிள்ளி எறிகிறேன் என்று ஒருத் தாய் கோபமாகப் பேசி; கடைசியில் அந்த முதுகுக் காயம் வேலொன்று நெஞ்சில் பாய்ந்து அது முதுகுக்கு வந்தது என்பதை அறிந்து ஆகா, என் மகன் வீரன் என்று சந்தோசத்திலே மகிழ்கிறாள் என்பதான அப்பாடல்.


பெண்களின் தெய்வாம்சம் அது. கொச்சையாகப் பேச, பார்க்க, யோசிக்க எதுவும் இல்லை. அதனாலே அவைகள் பக்திக் காவியங்களில் பேசப் படுகின்றன. இந்த வரிகளைக் கொண்டு இப்போது அதை அகப் பாடல் என்று எண்ண வேண்டியதில்லை என்பதே எனது எண்ணமும். இதை யாவரும் ஏற்பீர்கள் என்றே நான் நம்புகிறேன்.  


அதோடு, பக்தி செய்வதில் பல நிலை இருக்கிறது....
இறைவனை தாயாய், தந்தையாய், தோழியாய் / தோழனாய், காதலனாய் / காதலியாய் இப்படி. 

இந்த ஒவ்வொருப் படியிலும் உயர்ந்து நிற்கும் காதலனாய் / காதலியாய் மிகவும் நெருக்கமான அன்னியோன்யமான நிலை தான் சிறந்தது...


அதைப் பற்றி நிறைய பேசலாம், இருந்தும் அந்த நிலையை நான் கூறும் இந்த மூவரும் முயன்று வெற்றி பெற்றார்கள் எனலாம்.


உதாரணமாக, அபிராம பட்டரே அதை தனது பாடலில் அன்னையை எப்படியெல்லாம் காண்கிறார் என்பதை அவரே பாடி இருப்பதைக்  காணுங்கள்.
அன்னை அபிராமி எத்தகையவளாக எல்லாம் விளங்குபவள் என்பதைகூறுகிறார். 

துணையும்தொழும் தெய்வமும் பெற்ற தாயும்சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும்கருப்புச் சிலையும்மென் பாசாங்குசமும்கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும்தொழுகின்ற தெய்வமாகவும்பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும்அவற்றின் கிளைகளாகவும்வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும்கரும்பு வில்லும்மெல்லிய பாசமும்அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.


நாம் இதுவரை அவர் அன்னையைத் தாயாக பாடியதைப் பற்றி மட்டுமே பேசினோம்..... மற்றவை பிறகு!

இறைவன் யார்?, இறைவி யார்? நான் யார்? என்பதை இங்கே விளக்க வேண்டாம்…. நாம் அறிந்ததே!...

மேலேக் காணும் பலப் பாடல்கள் யாவும், ஒவ்வொன்றும் தனித்தனியான வேதாந்தக் கருத்துக்களை சுமந்து நிற்கிறது. 
அவைகளை நான் படித்தவைகளைக் கொண்டும், படித்துப் புரிந்தவைகளைக் கொண்டும் மேலும் பேசுவோம்.


இங்கே ஒரு முக்கிய தகவலைச் சொல்லவேண்டும்... நான் அபிராமி அந்தாதியைப் பற்றிய இந்தக் கட்டுரையை எழுதப் போகிறேன் என்று அபிராமி அந்தாதியை படித்து திளைத்து அதன் பெருமைகளை வாய்புறும் போதெல்லாம் பரப்பி வரும் நமது ஐயா!.... தஞ்சைக் கலைக்காவலர் திருவாளர் வெ.கோபாலன் அவர்களிடம் கூறிய போது, நன்றாக எழுதுங்கள் என்றதோடு அதன் அருமையையும், தார்ப்பரியமும் என்ன என்பதை ஒரே வரியில் சொல்லி, மேலும் ஒரு முக்கிய அறிவுரையையும் கூறி யுள்ளார்கள். அவர் கொடுத்த ஒரே ஒரு பொதுவான அறிவுரை. 


"நாம் இறைவனிடம் சொல்லும் சொற்களை இக்ஷிணி தேவதைகள் வான

 வெளியில் போய்க்கொண்டே 'ததாஸ்து' என்பார்கள் என்கிறார்கள். 

அப்படியானால், நம் வாயிலிருந்து அவச்சொல் வருவது கூடாது."

இதை ஐயா அவர்கள் என்னிடம் கூறியதன் அர்த்தம் எனக்கு நன்கு புரியும்,

எனது நலன் என்பது ஒரு புறம் இருக்க

நான் மனதில் தோன்றுவதை வெளியில் பேசும் சுபாபம் உள்ளவன், அதுவும் 

எப்படி? உணர்ச்சிப் பொங்க, அதை எவ்வளவு அழுத்தம் திருத்தமாக, அதை 

ஆணி அடித்தாற் போல் சொல்லி விடுவேன் என்பதையும் ஐயா அவர்கள் நன்கு 

அறிவார்கள். இன்னும் சொன்னால் நான் சிறியவன் வயதிலும்

அனுபவத்திலும். 

ஆனால், ஐயா அவர்களிடம் நான் கூறியது போல், அவரின் பார்வைக்கு 

அனுப்பாமலே இந்தக் கட்டுரையை இங்கே பதிவிட்டு விட்டேன். 

(மன்னிக்கவும் ஐயா!....) இருந்தும் அவரின் அந்த அறிவுரையை தலைமேல் 

கொண்டே இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறேன்... 

அகம் புறம் என்றெல்லாம் வெவ்வேறில்லை 
அகமும் புறமுமாக அனைத்திலும் -அன்னை
அபிராமி யவளே இருக்கையிலே; இங்கே 
அபிராமியில்லா தொன்றை காண்பதேது?

அன்னையவளைப் போற்றி 'ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி'; அன்பால் கனிந்து கசிந்துருகி; அவளின் கருணை மழையிலே நனைந்து; அவளின் ஞானப் பாலை அவள் ஊட்ட அருந்தி; கீதையிலே பரமாத்மாவே கூறியது போல பக்தியின் நான்காம் நிலையினை அடைந்து இறைவனை அடைய வேண்டும் என்பதையே இந்த பேரின்ப அகம் சார்ந்தப் பாடல்கள் மூலம் நாம் அறிய வேண்டியது.

அவனருளால் அவன் தாள் பணிவோம். ஆம், அவனும், அவளும் ஒன்றே 
என்பதையும் மனதில் கொள்வோம்.

நம் அனைவருக்கும், அன்னை அபிராமி! அருள வேண்டும்!! என்று வணங்கி

அவள் திருப்பாதம் பணிந்துப் போற்றி!!!,

மீண்டும் தொடர்வோம் என்று விடை பெறுகிறேன். 

நன்றி வணக்கம்.

8 comments:

ஷைலஜா said...

அன்னை அபிராமி மீது என்னைப்போல உங்களுக்கும் இத்தனை ஆசையா? ஆஹா அந்த வாசனைதான் சகோதர நேசம் தான் நம்மை பாசமுடன் இணைக்கிறது சகோதரரே! இத்தனை அருமையாக இங்கே எழுதிவிட்டு என் அறுவைப்பதிவை பெரிதாகப்புகழ தங்களுக்குத்தான் எத்துணை நல்மனம்!!ஒன்றாய் அரும்பிப்பலவாய் விரிந்து என்ற பாடலுக்கு விளக்கம் எழுதிவிட்டீர்களா? அதன் அர்த்தம் தான் எத்தனை அருமையானது பத்துவருடம் முன்பு அபிராமி அந்தாதி கற்றுக்கொண்ட நாட்களில் எல்லா பாட்டும் பாடுவேன்ஆனாலும் வெளி நின்ற நின் திருமேனியை என்று பாடும்போது எப்போதும் எனக்கு தொண்டை அடைக்கும் கண் பனிக்கும்...ஒருமுறை அன்னை கோயில் போனேன் ‘அம்மா தாயே என்னவோ நான் வேண்டுமென்றே இந்த வரிகளில் சிலிர்ப்பதாய் பலர் நினைக்கக்கூடும் அப்படி ஏதும் பலர் முன்பு வரவேண்டாம் தாயே எனக்கும் உனக்கும் மட்டும் தெரிந்தால் போதும்’ என வேண்டிக்கொண்டு அந்தாதி முழுக்கப்பாடினேன் என்ன அதிசயம் அன்றிலிருந்து கூட்டத்தில் பாடும்போது அந்த வரிகள் என்னை எளிதாய்க்கடந்துவிடும்! ஏதோ தமிழில் சில வரிகள் எனக்கும் எழுதவருகிறதென்றால் சக்தியவள் கருணையன்றி வேறென்ன?

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

ஷைலஜா said...
////அன்னை அபிராமி மீது என்னைப்போல உங்களுக்கும் இத்தனை ஆசையா? ஆஹா அந்த வாசனைதான் சகோதர நேசம் தான் நம்மை பாசமுடன் இணைக்கிறது சகோதரரே! இத்தனை அருமையாக இங்கே எழுதிவிட்டு என் அறுவைப்பதிவை பெரிதாகப்புகழ தங்களுக்குத்தான் எத்துணை நல்மனம்!!ஒன்றாய் அரும்பிப்பலவாய் விரிந்து என்ற பாடலுக்கு விளக்கம் எழுதிவிட்டீர்களா? அதன் அர்த்தம் தான் எத்தனை அருமையானது பத்துவருடம் முன்பு அபிராமி அந்தாதி கற்றுக்கொண்ட நாட்களில் எல்லா பாட்டும் பாடுவேன்ஆனாலும் வெளி நின்ற நின் திருமேனியை என்று பாடும்போது எப்போதும் எனக்கு தொண்டை அடைக்கும் கண் பனிக்கும்...ஒருமுறை அன்னை கோயில் போனேன் ‘அம்மா தாயே என்னவோ நான் வேண்டுமென்றே இந்த வரிகளில் சிலிர்ப்பதாய் பலர் நினைக்கக்கூடும் அப்படி ஏதும் பலர் முன்பு வரவேண்டாம் தாயே எனக்கும் உனக்கும் மட்டும் தெரிந்தால் போதும்’ என வேண்டிக்கொண்டு அந்தாதி முழுக்கப்பாடினேன் என்ன அதிசயம் அன்றிலிருந்து கூட்டத்தில் பாடும்போது அந்த வரிகள் என்னை எளிதாய்க்கடந்துவிடும்! ஏதோ தமிழில் சில வரிகள் எனக்கும் எழுதவருகிறதென்றால் சக்தியவள் கருணையன்றி வேறென்ன? /////

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் முதலில் எனது நன்றிகள் சகோதிரியாரே!

ஆஹா... இருக்கும் அன்னையின் அருள் தான் இப்படி செய்திருக்கும்... இயற்கையாகவே அன்னையின் மீது கொண்ட பாசம் சகோதரத்துவத்தை வளர்த்திருக்கும். அன்னைக்கு தான் நன்றிகளை நாளும், கணமும் கூற வேண்டும்.

இல்லை தங்களின் எழுத்துக்களில் விஷய ஞானமும், விவேகமும், கவித்துவமும், நகைச்சுவையும், உலக அறிவும் ஒருங்கே இருக்கிறது... அதுவும் இயல்பாய் இருக்கிறது. காரணம் நாங்கள் யாவரும் அறிவோம்.

'அரும்பிப் பலவாய் விரிந்து என்றப் பாடலுக்கு விளக்கம் எழுதிவிட்டீர்களா என்பதே எழுது என்பதாகவே எடுத்துக் கொண்டு உங்களுடன் பகிர்ந்தும் கொள்வேன்...
ஒரே வரியில் பிரபஞ்சத்தையே ஒருப் பாட்டில் கொண்டு வது விட்டார் அந்த ஞானி....

அன்னையின் அருளால் தங்களுக்கு நடந்த அந்த அற்புதம் கேட்கையில் மெய்சிலிர்த்து கண்கள் பனித்தன...

நான்கு வரிகள் மாத்திரம் எழுதிய நான் தான் அப்படி கூற வேண்டும் நீங்கள் சாதித்த அளவு அவளின் கருணையால் அதை குறைத்து மதிப்பிட கூடாதல்லவா!...

எனது வேண்டுதலை ஏற்று வந்து தங்களின் மேலானக் கருத்தை கூறியும் என்னையும் பாராட்டிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோதிரியாரே!

Shakthiprabha said...

//குழந்தை மனம் வேண்டும், சிறந்த பக்திக்கு இது தான் முதல் தகுதி. அப்படி குழந்தை மனம் கொண்டோரின் எண்ணம், செய்கை நம்மில் இருந்து வேறாகவே தோன்றும், இருக்கும்.
///

எத்தனை உண்மை!!! எனக்கு இப்பதிவு புது கோணத்தைக் கொடுத்தது. அன்னையை அன்னையாகத் தான் பலரும் காண்கிறோம்......
நம்மால் உடல் சார்ந்த நினைவுகளைத் தாண்டி முனைய வைப்பது இத்தகைய பக்தியும் பாடல்களும்.

ஷைலஜாவின் பதிலும் என் மனதை நெகிழ்த்தியது.

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

/////Shakthiprabha said...
//குழந்தை மனம் வேண்டும், சிறந்த பக்திக்கு இது தான் முதல் தகுதி. அப்படி குழந்தை மனம் கொண்டோரின் எண்ணம், செய்கை நம்மில் இருந்து வேறாகவே தோன்றும், இருக்கும்.
///

எத்தனை உண்மை!!! எனக்கு இப்பதிவு புது கோணத்தைக் கொடுத்தது. அன்னையை அன்னையாகத் தான் பலரும் காண்கிறோம்......
நம்மால் உடல் சார்ந்த நினைவுகளைத் தாண்டி முனைய வைப்பது இத்தகைய பக்தியும் பாடல்களும்.

ஷைலஜாவின் பதிலும் என் மனதை நெகிழ்த்தியது.////

தங்களைப் போன்ற பார்வையே எனக்கும் தோன்றியது அதன் பொருட்டே நானும் இந்த சக்தி வழிபாடை பற்றிய கருத்து எதுவாக இருக்கலாம் என முனைந்தேன்... இப்பவும் இது போன்ற கருத்தை அவ்வளவு எளிதில் யாரும் ஏற்கவும் மாட்டார்கள். காரணம் மனிதர்களின் அங்கங்களோடு தெய்வத்தையும் கற்பித்துக் கொண்டே யோசிப்பதால் தான் அந்த சிரமம். வேதாந்தம் கூறுவது போல் இந்த பிரஞ்சம் தாம் இறைவனின் உடல் என்ற புரிதல் ஐயம் திரிபுர இருந்தால் இது போன்ற சங்கடம் வராது.

தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

V.Radhakrishnan said...

எதற்காக அபிராமியை இப்படி வர்ணிக்க வேண்டும் என்றுதான் நான் இதுகுறித்து நான்கைந்து வருடங்கள் முன்னர் ஒருமுறை கேள்வி கேட்டு இருந்தேன். ஆணோ, பெண்ணோ அங்கங்களை வர்ணிப்பது அது பேரின்பத்தில் சென்று எப்படி முடியும் என்று எனக்கு அப்போதெல்லாம் புரிந்தது இல்லை. கலைகள் என வரும்போது நிர்வாணம் சிற்றின்பம் அல்ல. ஆனால் நிர்வாணம் சிற்றின்பத்தை தூண்டவல்லது என்பதும் மறுப்பதற்கு இல்லை.

ஒரு பெண்ணின் அழகை வர்ணிக்கும் பாடல்கள் போன்றே இந்த அபிராமி அந்தாதி இருப்பது மேம்போக்காக பார்த்தால் அப்படித்தான் தெரியும். பார்த்த விழிகள் பார்த்தபடி பூத்து இருக்க என்றொரு பாடல் குணா படத்தில் வரும். அதில் இந்த அபிராமி அந்தாதி பாடல் ஒன்றை புகுத்தி இருப்பார்கள். இசையுடன் அந்த பாடலை கேட்கும்போது அத்தனை இனிமையாக இருக்கும். எதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது குறித்து நீங்கள் குறிப்பிடும் சிந்தனையே காரணம். இதற்காகவே காமம் என்ற ஒரு தொடரை எழுதினேன். அந்த தொடரைப் படித்துவிட்டு நான் எதிர்பார்த்தது இல்லையே என்று ஒரு நண்பர் குறைபட்டு கொண்டார். எப்போதாவது மீண்டும் அந்த தொடரை தொடரக்கூடும். காமம் என்பது கூட கடவுளின் மீது செலுத்தப்பட்டால் அதற்கு அர்த்தமே வேறு.

இங்கே குறிப்பிடப்பட்ட பாடல்கள் ஒருவரின் பாலுணர்வுகளை தூண்டும் என எவரேனும் சொல்லகூடாத வகையிலேதான் இவை பக்தி இலக்கியங்கள் ஆகின. இதே வரிகளை ஒரு சாதாரணமாக எழுதி பார்த்தால் அவை வக்கிரம் நிறைந்தவையாக மாறக்கூடும். பக்தி இலக்கியங்கள் என சொல்லப்பட்டு இவை எல்லாம் எழுதப்பட்டால் அவை பேரின்பம். அதுவே மனிதர்கள் எழுதி பார்த்தால் அது சிற்றின்பம் என வகைப்படுத்த படும்.

அன்னையாக அனைத்து பெண்களும் தென்பட்டால் அங்கே சிற்றின்பத்திற்கு இடமே இல்லை என்பதைத்தான் இந்த அபிராமி அந்தாதி காட்டுகிறது என சில வருடங்கள் பின்னரே புரிந்தது. அன்று எனது எண்ணத்தில் எழுந்த கருத்துகளை விரைவில் தொகுத்து எழுதுகிறேன். நான் சீர்காழி பாடிய அபிராமி அந்தாதி கேட்பது வழக்கம். மிகவும் சிறப்பாக எழுதி இருக்கீங்க ஐயா. பாராட்டுகள்.

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

@ V. Radhakrishnan....

ஆஹா! வாருங்கள் நண்பரே!

தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி...
தாங்களும் எழுதி தங்கள் சிந்தனையை பகிர்ந்துக் கொள்ளுங்கள்...
நன்றி.

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

////கீதமஞ்சரி said...
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html////

தங்களின் அற்புதமானப் பதிவைப் பார்த்து ஆனந்தப் பட்டு எனது நன்றியையும் கூறியுள்ளேன். நன்றிகள் பல சகோதரியாரே!

Post a Comment