பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Wednesday, 24 August 2011

'கடவுள் நமக்குத் தேவையா?'"எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும்?" - என்ற
சென்றப் பதிவின் தொடர்ச்சி...

ஆகவே, உண்பதுவும், உறங்குவதுவும், இன்னும் இவைபோன்ற புலன் இன்பங்கள் தான் வாழ்க்கை என்று எண்ணக் கூடாது. 

அது குழந்தைத் தனமானது. அந்தப் புலனின்பத்தில் ஒரு சிறுத் துளியை இழக்க நேர்ந்தாலும் அது நம்மால் பொறுக்க முடியாது.

புலன் இன்பம் அல்ல, இவை எல்லாவடிற்கும் அப்பால் இருக்கும் அந்த இறைவன் தான் நமது லட்சியம். 

நாம் தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் என்று எல்லோரையும் நேசிக்கிறோம். ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொருவரையும் மிக உயர்ந்த நிலையில் வைத்து கொண்டு இவர்கள் தான் உலகம், இவர்கள் இல்லை என்றால் எனக்கு எல்லாமே பொய் விட்டது என்கிறோம். 

ஆனால் அது மாறிக் கொண்டே வருகிறது. அவர்களின் மீது கொண்டுள்ளது உண்மையான அன்பா? நேசமா? பாசமா?.

கணவனை அன்பினால் போற்றிய மனைவி அவன் இறந்த உடன் வருந்துகிறாள், வேதனைப் படுகிறாள். 

அடுத்து, அவனின் வங்கிக் கணக்கை பார்க்கிறாள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறாள். 

அன்பே, ஆருயிரே என்றக் கணவனும் தனது மனைவி, வியாதியுற்றாலோ, அழகு குன்றி உருக்குழைந்து போனாலோ, சிறி தவறு செய்தாலோ அவ்வளவு தான் உடவே அவளை ஒதுக்கத் தொடங்குகிறான், வெறுக்கிறான். 

ஆக, இதில் எங்கே உண்மையான அன்பு.

எல்லைக்கு உட்பட்ட அன்பு உண்மையான அன்பாகாது. மனிதன் விரும்பும் பொருள்கள் கணந்தோறும் மாறுகிறது மனிதனின் மனமும் மாறுகிறது. இறைவன் மீதுள்ள அன்பைத் தவிர நிலையான ஒன்றை நாம் காண முடியாது. 

அப்படி என்றால், தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள் என்ற இந்த அன்புகள் வீணா? அவைகள் தேவையா? என்றக் கேள்வி வருகிறது. 

ஆம், அவைகள் தேவையே. அவைகள் வீணல்ல... மாறாக அவைகள் தான் அந்த இறையன்பிடம் நம்மைக் கொண்டு செல்லும் படிகள். படிகளிலே அமர்ந்து விட்டால் உச்சியில் இருக்கும் அன்பின் வடிவான இறைவனை எப்படி அடைய முடியும்.


உற்றவர் நட்டவர் ஊரார் - இவர்க்கு 
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் - இதில் 
நல்லப் பெருந்தவம் யாதொன்றும் இல்லை.
பக்கத் திருப்பவர் துன்பம் - தனைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி
ஒக்கத் திருந்தி உலகோர் - நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி” - மகாகவி பாரதி

ஆக, நாம் படிப் படியாக முன்னேறி.... 

முதலில் தன் மீது ஒரு பற்று அன்பு கொண்டு (சுய நம்பிக்கை, தன்னைப் போற்றுதல்), பிறகு, நம்மைப் பெற்றவர்கள், மனைவி, மக்கள், சகோதரர்கள், ஊர், நாடு, என்று இப்படியாகவே வளர்ந்து அது இந்த பிரபஞ்சத்தின் மீது அதனை படைத்தவன் மீது கொண்ட அன்பாக வளர வேண்டும்.

நமக்குப் பின்னால் இருந்து ஒரு சக்தி நம்மை, அந்த அன்பை நோக்கித் தான் நகர்த்திச் செல்கிறது.

அது தான் நமது லட்சியம். இந்த பிரபஞ்சப் பொருள்களின் மீது தீராத அன்பு, காதல் கொள்ளவேண்டும் அப்படிப் பட்ட ஒரு அன்பே உயர்ந்த அன்பு. அதுவே அந்த இறைவனின் மீது கொள்ளும் அன்பும் ஆகும்.


 வாழ்வில் சாதித்தவர்கள் யாவரும் இப்படியான, அன்புப் போக்கையே வாழ்வில் கடைபிடித்தார்கள், அவர்கள் தங்களின் வாழ்நாளில் பெரும் பாலான காலத்தை இப்படியே உலகம் செழிக்க, உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் செழிக்க வேண்டும் என்றே நினைத்து அதற்காகவே பாடு பட்டார்கள். 


அவர்கள் வேறு எந்த பிரதிபலனும் வேண்டாதவர்கள். பணம், புகழ், சொர்கத்திற்கான நுழைவு சீட்டு என்று எதையும் யோசிக்காமல், இறைவனின் படைப்பே இதற்காகத் தான் என்று நம்பியே வாழ்ந்து அமரத்துவம் பெற்றவர்கள். அவர்கள் தான் கர்மவீரர்கள், மகாத்மாக்கள், விஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள்... என்று இன்னும் பல கர்ம யோகிகள்.அவர்கள் எண்ணமெல்லாம் இந்த சமூகம் தான் இந்த பிரபஞ்ச நேசர்கள் அவர்கள்.. இறைவனை தான் நேசித்தார்கள். பல நூல்களை படிக்கலாம், பல அறிவியல் நுட்பங்களைப் படிக்கலாம். அவைகள் எல்லாம் படித்தாலும் அவர்கள் கிளிப்பிள்ளைகளே, அறிஞர்களாக முடியாது. 


மாறாக, இவைகளை எல்லாம் படித்தாலும், படிக்க விட்டாலும் இந்த உலகத்தின் மீதும், பிரபஞ்சத்தின் மீதும் அன்பு கொண்டவர்களாக, விருப்பு வெறுப்பு இன்றி அனைத்திலும் அன்பு பாராட்டி அனைத்து பொருள்களின் மீதும் தீராத அன்பு பாராட்டி அதற்காகவே வாழ்ந்த அவர்கள் தாம் அந்த பேரன்பில் கலந்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டில் ஒருசிலரே இவர்கள்... இப்படி இறை அன்பைப் பெற்றவர்களின் வாயிலாகவே நாடு முழுதும் ஆசி பெற்று புனிதம் அடைகிறது. அப்படி இருக்கும் ஒருசிலரில், அந்தப் பூரண அன்பைப் பெறப் போகிறவர்,  நாமாகக் கூட அந்த ஒருவராக இருக்க முடியும் யார்கண்டார்!  

ஆன்மா, புலன்களுக்கு அடிமையாக கிடக்கப் பிறந்ததே இல்லை. அது தற்காலிகமானது. நிரந்தமான அந்த பேரன்பில் கலப்பதே அதன் லட்சியம். அது தான் படைப்பின் தத்துவம். அந்த ஆன்ம சக்தியை அன்பினால் பெறுவோம். 

மனிதன் எந்த நிலையில் இருக்கிறானோ, அதனை ஏற்றுக் கொண்டு, முடியுமானால் அங்கிருந்து முன்னேற உதவவேண்டும். அவன் உலோகாயத்தில் ஊன்றி நிற்கிறான். 

பக்தி என்பது தேவைகளில் இருந்து தான் பிறக்கிறது. எது இல்லாமல் உயிர் வாழ முடியாதோ, அது தான் தேவை. மூச்சு தேவை, உணவு தேவை, உடை தேவை. தேவை இல்லாமல் உயிர் வழ முடியாது. 

கணவனும் மனைவியும் ஒருவர் இல்லாவிட்டால் மற்றவர் வாழ முடியாது என்றுக் கூறுகிறார்கள். 

எங்கே அப்படி நடக்கிறது.. 

கணவன் மறைந்தப் பின்னும் மனைவி வாழவே செய்கிறாள். 

இது தான் தேவை என்பதன் ரகசியம்; அது இல்லாமல் நாம் வாழ முடியாது, அது நமக்கு கிடைக்க வேண்டும் இல்லை என்றால் நாம் இறந்து விடுவோம்.

உரியக் காலம் வரும் போது கடவுளைப் பற்றி நாம் இப்படி நினைக்கிறோம். அதாவது இந்த உலகிற்கு அப்பாற் பட்ட ஒன்றை, ஜட சக்திகளுக்கு அப்பாற் பட்ட ஒன்றின் தேவையை நாம் உணர்கிறோம்.

அப்போது தான் நாம் பக்தர்கள் ஆகிறோம். ஒரு நொடிப் பொழுதாயினும் சரி, மேகங்கள் மறைந்து பரம்பொருளைப் பற்றியக் காட்சி கிடைக்கும் போது. 'என்ன இந்த அற்ப வாழ்க்கை!' என்ற எண்ணம் பிறக்கிறது. அப்போது தான் ஆன்மா வளர்கிறது. கடவுள் என்னும் தேவையை உணர்கிறது; அவனை அடைத்தே தீரவேண்டும் என்று துடிக்கிறது.

இறைவனின் தேவையை உணர்பவர்களுக்கே இந்த அன்பு கிடைக்கும் அவர்களுக்கே இறைவன் காட்சி அளிக்கிறான். 

அன்பு அன்பையே பிரதியாகத் தருகிறது. நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள், நான் இருந்தும் உங்களை நேசிக்கிறேன்.. இந்த நேசம் தொடர்ந்து நடக்கும் போது ஒரு நாள் நிச்சயம் நீங்களும் கண்டிப்பாக அன்பு காட்டுவீர்கள். இது மன இயல் கண்ட உண்மை. 

மறைந்தக் கணவனை அன்பு மிக்க மனைவி நேசிப்பது போல் நாம் கடவுளை நேசிக்க வேண்டும்.

கல்வியறிவு, விஞ்ஞானம் யாவும் தராத அறிவை அன்பால் நாம் கடவுளிடம் இருந்து பெற முடியும்.'கடவுள் நமக்குத் தேவையா?' இதனை நாம் நாள்தோறும் நமக்குள்ளேக் கேட்டுக் கொள்ளும் கேள்வி. 

பல நேரங்களில் கடவுள் நமக்குத் தேவை இல்லை, உணவுதான் தேவை என்போம், சிறுது உணவு கிடைக்கா விட்டால் நமக்குப் பைத்தியம் பிடித்தார் போல் ஆகிவிடுகிறது.

ஒரு வைரமாலையை வேண்டும் பெண்ணிற்கு அது கிடைக்கா விட்டால் அவள் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடுகிறாள். 

அப்படிப்பட்ட ஆசை நமக்குத் தேவை, அப்படிப் பட்ட ஆசையை  கடவுளை நோக்கி திருப்பி விடவேண்டும். எனவே அன்பு செலுத்த விரும்பினால் கடவுளிடம் அன்பு செலுத்துங்கள். 

அதற்கு மேலேக் கூறிய அத்தனைப் படிகளையும் ஏறிவர வேண்டும். 

அவன் தான் நான், நான் தான் அவன் என்று உணர்ந்த போது, அந்தப் பேரொளியில் கலந்த பின்பு. பிறகு எப்போதும் பரமானந்தம் தான்.

எல்லாம் அறிந்த பின் எதற்கும் கவலை பட தோன்றாது... ஒரு சமநிலை பெறுவோம். இந்தப் பிரபஞ்சமே நாம் என்ற உணர்வு அடைவோம்.
ஊருக்கு உழைத்திடல் யோகம் - நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் - உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம்” - மகாகவி பாரதி


சரி அப்படி ஒரு நிலையைப் பெற்றால், அதன் பிறகு என்ன என்ற சிந்தனை, அச்சம் வரும்… காடும் போக வேண்டாம், காவியும் உடுத்த வேண்டாம்... அச்சம் தேவை யற்றது.

வழக்கம் போல நாம் வாழ்வோம். ஆனால் எதற்கும் கவலைப் படாமல், அஞ்சாமல், ஆனந்தமாக வாழ்ந்திருப்போம். அதற்காக எதையும் விட்டு விடப் போவதில்லை. அன்பின் வழியிலே உழைத்து இந்த உலகில் உள்ளவரை, அனைவரும் பயனுறும் படி வாழ்ந்திருப்போம்.

**************************************** 
பக்தி என்றால் என்ன?
இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்கிறார்கள். காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக் கொள்கிறதோ, பதிவிரதையின் மனமானது பர்த்தாவினிடத்தில் போய் கவிந்து கொள்கிறதோ, நதியானது மகாசமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ... அதுபோல், கடவுளுடன் நமது மனமும் கலந்து விட வேண்டும். நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். அதற்கு காரணமே இருக்கக்கூடாது. காரணம் என்று வந்தால் அது வியாபாராமாகி விடும். இறைவனிடம் எதைக் கேட்டாலும் அது வியாபாரம் தான்! ஏதோ ஒன்றுக்கொன்று கொடுப்பது போல,செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகிவிடும். அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, ஈஸ்வரனிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே, அதற்கு தான் பக்தி என்று பெயர்
-காஞ்சிப்பெரியவர்
************************************************** 

ஆக, அன்பின் வழியான இந்தப் பக்தி தான் உயர்ந்தது அது தான் லட்சியம்.

பலகோடி ஆண்டுகளுக்குப் பிறகாவது நாம் இதை அடைவோமா! மாட்டோமா என்பதை நாம் இப்போது அறிய முடியாது. 

இருப்பினும் நமது உயர்ந்த லட்சியமாக அதைக் கொள்ள வேண்டும். 

நமது புலன்களும் அந்த மிக உயர்ந்த ஒன்றையே நாடிப் போகும்படி செய்ய வேண்டும். 

அந்த இறுதி நிலையை அடைய முடிய வில்லை என்றாலும் அதன் அருகிலாவது செல்ல வேண்டும். உலகின் வாயிலாகவும் புலன்களின் மூலமாகவும் படிப்படியாக நாம் இறைவனை அடையப் பாடு பட வேண்டும்.

மீண்டும் பாரதியின் பாடலுக்கு செல்வோம்

 "அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியரசாணை
பொழுதெல்லாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் 
நிலைத்திடல் என்றிவை அருள்வாய்
குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே".    - மகாகவி பாரதி

இந்தப் பாடலை நமது மகாகவி பாரதி தனது இருபத்து எட்டாவது வயதிலே பாடியுள்ளான்.

இப்போது இப் பாடலின் பொருள் உங்களுக்கு முன்பைவிட நன்கு விளங்கும்.

அவன் படைப்புகள் யாவிலும் இந்த கடவுளின் மீது ஏக்கம், பக்தி, பற்று, காதல், மோகம் என்று அத்தனையும் இருக்கிறது. 

அவைகள் யாவையும் அவனது கவிதைகளிலே எங்கும் பரவிக் கிடக்கிறது. 

வேதம் கூறிய அப்படி ஒரு நிலையிலே தான் ஞானக் கிறுக்கனாக, மோன நிலையிலே தான் உலாவி அலைந்து திரிந்து பக்தியில் குளித்து அந்தப் பேரொளியில் மூழ்கி அமரத்துவம் அடைந்து இருக்கிறான்.

சாதி, மதம், புராணம், இவைகளின் உண்மை நிலை என்ன, அது அவசியமான ஒன்றா என்றெல்லாம் நமக்கு ஏற்படும் அத்தனைக் கேள்விகளுக்கும் பதில் தந்து...வேத விளக்கங்களை, வேதாந்த உரைகளை மிகவும் எளிமைப் படுத்தி பாமரனும் படித்து அறிந்துக் கொண்டு அவற்றை பின்பற்றி அமரத்துவம் அடைய வேண்டும் என்றே அவன் பெரிதும் விரும்பினான். 

அந்த நம்பிக்கை, நிச்சயம் உறுதியாக ஒரு நாள் இந்தியர் அனைவரும் அடைவர். அதோடு அந்த முறையை இந்தியா உலகிற்களிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து சென்றுள்ளான்.

நாம் இந்தப் பிறவியில் அதற்கான முதல் படியில், அதாவது தன்னையும், தன்னைப் பெற்றவர்களையும், மனைவி, மக்கள், சுற்றம் என்று யாவரையும் அன்பால் அரவணைத்து, அவர்களுக்கு எந்த வகையிலும் துரோகம் விளைவிக்காமல், அவர்கள் ஆனந்தமாக வாழ வழி வகுப்போமானால்,

அப்படிப் பட்ட வாழ்வை நாம் வாழ்கிறோம் என்றால்.. நாம் சரியான ஒருப் பாதையில் தான் செல்கிறோம்... அந்த வழி தான் அந்த பேரொளியில் நம்மை கலக்க கொண்டு சேர்க்கும் நல் வழி.

"அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியரசாணை
பொழுதெல்லாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் 
நிலைத்திடல் என்றிவை அருள்வாய்
குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே".    - மகாகவி பாரதி

அந்த பேரொளியில் கலப்பதே ஒவ்வொரு ஆத்மாவின் லட்சியமும் அதனாலே அன்பின் வடிவான அன்பை போற்றி அன்பாலே அந்த அன்பை அடைவோம். கடவுளை நேசிப்போம், பிறவிக் கடலை கடந்து பேரானந்தம் அடைவோம்.


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்” - 
தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

நன்றி வணக்கம்,
அன்புடன்,
தமிழ் விரும்பி.


No comments:

Post a Comment