பச்சை வண்ண மேலாடை -அதில்
பால் அன்ன நீரோடை -மனம்
இச்சை கொள்ளும் பூஞ்சோலை -அதன்
இடை இடையே சிறு பாறை...!
நெட்டை நெடிய மரங்களின் ஊடே
நிலையில்லா வாழ்வைப் போலே
அலை அலையாய் பனி மூட்டம்...!
கடலில் குளித்து எழுந்ததுமே தனது
கரங்களை நீட்டும் கதிரவனும் -அவன்
இரவெல்லாம் பிரிந்த விரகதாபம் தீர
பச்சைமலை நோக்கிப் பரவுகின்ற அற்புதக்காலை...!
நெடுதுயில் போட்டத் இளந் தென்றலோ
நெட்டை மரங்களுக்கு விடைகொடுத்தே
நெளிந்து; விரிந்து; நறுமலர் அமர்ந்து,
தணிந்து உயர்ந்து; சுருங்கி அகண்டு
சுகந்தமாய் பறந்தே கிளம்பும் போதே...!
பனிப் போர்வை மூடித் தூங்கும்
மலை யவளின் முகத்திரையை -மிகப்
பவ்வியமாக நீக்கியே; தாய்ப்பாசம் பொங்கி
அவளின் உச்சி முகர்ந்து புறப்பட்டபோது...!
இரவெல்லாம் காத்து கடுங்குளிர் கோர்த்து
இரங்கக்கேட்டே; இராவண ஏக்கம் -ஏங்கிக்
கிடந்த பனி மூட்டமோ -இளம்
இரவியின் வரவால் வியர்வைத்
துளிகளை விடுத்தே மிக வேகமாக
விரைந்து சென்று மறைந்ததுவே...!
காதலன் அவனைக் கண்டதால் -அழகு
இராமனைக் கண்ட சீதையைப் போல்
பச்சைவண்ண மலையோ மொத்தமும் பூத்து
பலவண்ண ஓவியம் ஆகியதே -அதில்
இச்சை கொண்டே இளங்குயில் ஒன்று
இனிதே, மிகஇனிதே; தேன்சொட்டும்
பாடல் ஒன்றை இசைத்ததுவே...!
மனம் கொள்ளை போகும் பாடலுக்கோ...
மனமயங்கிய தும்பிகள் யாவுமே -ஆங்கே
மறந்தே போயின மது உண்ண...!
தும்பிகளே மயங்கிய தென்றால் -அதைச்
சொல்லவும் வேண்டுமோ!, மெல்லியத் தளிர்
அரும்பும், மொட்டும், போதுகளான -வண்ண
நறும் பூக்கள் யாவும் அதுபோலவே...!
மதுக் குடம் ஒத்த மலர்க் கூட்டம் -அம்
மலர்களது மடிகள் கனக்க தேனூறி
ஊரியத் தேனும் பெருக் கெடுத்தே
மடை திறந்த அருவியைப்போல் -மலர்க்
காம்புகள் வழியே பாய்ந்தோடும்…
தேன் பாயும்; தேனாறு அதுவும்
தேங்காமல் குளிர் நீரோடை
உடுத்தும் மேலாடையாக -அங்கே
குளித்து எழும் பூங்காத்தையும்
மது மயக்கம் தந்தே தான் ஓடும்…!
ஓடை யாவிலும் குதித்து தாவி
ஓடிவரும் நீர்த் திவலை களை
ஓடி உடைக்க எதிர்த்து; முட்டிமோதி
அங்கே குஞ்சுகளோடு கொஞ்சி விளையாடும்
செக்கச் சிவந்த கெண்டை கயலோடு,
கெளுத்தியும்; அயிரையும்; கருத்த விராவும்;
பெருத்த வாழையும் சேர்ந்தே -அசுரவேகம்
பாயும் ஆராவுமாக அத்தனையும் சேர்ந்தே
ஆனந்தக் கூத்தாடும்; மின்னலொளி மின்னும்
அழகு வெள்ளி ஓடையதை காண்பார்தம்
மனம் கொள்ளை போம்...!
இத்தனை அழகும் இனிதாய் பெற்ற
அற்புத எழில் மலை!... அழகாய்....
என் கற்பனையில் வளர்ந்தே -இப்போது
அழகுக் கவிதையாய் மலர்ந்ததே!...