( எனது இந்த சிறுகதை வகுப்பறையில் 31.12.2010 அன்று வெளிவந்ததன் மறுபதிவு ஆகும்.)
மனதிற்குள்ளே புகுந்த மாயையும், கனவிலே வந்து அதைப்போக்கிய கடவுளும்!
பூமியிலே கடவுளில்லையென்று புகல்வது மனதிற்குள்ளே புகுந்த மாயை!
சிவபுரம் என்னும் ஊரிலே சதாசிவம் என்னும்
சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
தான்கொண்ட பெயருக்குத் தகுந்தாற்போல அந்த
சிவபக்தர் ஆண்டவன்பால் தீராத பக்தியோடும்; அன்போடும்;
எந்நேரமும்; ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!! என்று சிவனின் திருநாமத்தை ஜெபித்த வண்ணம்
இருப்பார்
அந்த ஊரில் வாழ்கின்ற வசதி படைத்த சிலரில்
அவரும் ஒருவர் ஆவார்
நஞ்சை, புஞ்சை,
தோட்டம், தொரவு என்று வருமானம் பல வழிகளில் வந்து கொட்டிக்கொண்டிருந்தது. .
தான, தர்மங்களில் மிகவும் நாட்டமுள்ளவர்.
வீட்டிற்குப் பசியோடு வரும் அனைவருக்கும்
பேதமின்றி அன்போடும்,
பரிவோடும் அன்னமிட்டு உபசரிப்பார். அதே நேரத்தில் யாரும் தெய்வமறுப்போ, தெய்வத்தின் மீது குறையோ பேசிக்கொண்டு
வந்தால் எரிமலைபோல் வெடிப்பார். அப்படி மறுப்போரைத் தன் முன் நிற்கவிடாமல்
ஓட்டிவிடுவார். அதாவது விரட்டி விடுவார்.
அவர் செய்வது சரியா? தவறா? யார் அவரிடம் கூற முடியும்?
ஒரு நாள் இரவு ஊரடங்கிய பிறகு, சதாசிவத்தின் வீட்டை யாரோ வந்து
தட்டினார்கள். சதாசிவத்தின் வீட்டு வேலையாட்கள் அனைவரும் தங்களின் வேலைகளை
முடித்துக் கொண்டு தூங்கச் சென்றிருந்தார்கள்.
அதனால் சதாசிவமே வந்து கதவைத் திறந்தார். “யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு? இந்த நேரத்தில் வந்து கதவைத் தட்டுகிறீர்களே?” என்றார்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்கு
நின்றிருந்தார்.
“ஐயா, என் பெயர் செல்வராசு. அபிராமபுரத்தில் இருந்து வருகிறேன்.
இங்கு சிவபுரம் பழையூரில் இருக்கும் எனது நண்பர் ராஜசேகர்
என்பவரின் வீட்டிற்கு சென்று
கொண்டிருக்கின்றேன். நான் கிளம்பும்
போதே அந்திசாயும் நேரமாகி விட்டது.
இன்றைக்கென்று பார்த்தால்
ஒரு வண்டி கூட வரவில்லை. ஒரே தாகமாக
இருந்தது. அமாவாசை
இருட்டு, ஊருணியில் படிகள் சரியாகத் தெரியாததால், உங்கள்
வீட்டுக் கதவை தட்டினேன். சிரமத்திற்கு
மன்னிக்கணும். தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” என்று மூச்சு விடாமற் பேசினார்.
“சிவா சிவா! குடிக்கத் தண்ணீர்தானே வேண்டும்.
உள்ளே வாருங்கள் தருகிறேன்”
என்று அன்போடும், கனிவோடும் இவர் அழைத்தார்.
அவரும் உள்ளே வந்தார்.
இதோ வருகிறேன் என்று தண்ணீர் எடுக்கப் போனவர், “சிவ சிவா. அடப்பாவமே, இவ்வளவு நேரமாகி விட்டது அவர் ஏதாவது
சாப்பிட்டாரா என்று தெரியவில்லையே?” என்று எண்ணிக் கொண்டே தண்ணீரோடு வந்தவர், “ஐயா, தாங்கள் வரும்வழியில் ஏதாவது சாப்பிட்டீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு வந்தவர், “இல்லை ஐயா, இன்னும் இரண்டு பர்லாங்கு தூரம்தானே பழையூர். அங்கு சென்று ஏதாவது சாப்பிட்டுக் கொள்கிறேன்” என்றார்.
“சிவா சிவா! இவ்வளவு நேரமாகியும் சாப்பிடாமல்
இருக்கலாமா?.அதோடு, இந்நேரத்தில் அங்கு சாப்பாடும் கிடைக்காது..கொஞ்சம் பொறுங்கள் நீங்கள் சாப்பிட
உணவு தருகிறேன்;
அதுவரைக்கும் இங்கு அமருங்கள்” என்று முகப்பில் இருந்த இருக்கையைக்
காண்பித்தார்.
“தண்ணீரைக் கொஞ்சமாகப் பருகுங்கள், பிறகு சாப்பிட முடியாது” என்றும் கூறினார்.
வந்தவரோ, “இல்லை ஐயா,
உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நான் அங்கு
போய்ப் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.
சதாசிவம் விடவில்லை. “சிவா சிவா! எது வீண் சிரமம் - ஒரு சான்
வயிற்றுக்கு ஒருவேளை உணவு தருவதா? அப்படியெல்லாம்
சொல்லாதீர்கள். எனக்கு எந்த சிரமும் இல்லை.
தாய் அன்னபூரணி உங்களுக்கும் சேர்த்துத்தான் எனக்கு நிறையப் படி அளந்து கொண்டிருக்கிறாள். இதோ
வருகிறேன்" என்று கூறியவாறு உள்ளே சென்றார்..
சமையல் கட்டுக்கு சென்று பாத்திரங்களைப்
பார்த்தார். எல்லாம் நன்றாகக் கழுவப்பெற்று, தண்ணீர் வடியக் கவிழ்த்து வைக்கப் பெற்றிருந்தது.
“சிவ சிவா.. என்ன இது... இந்த அழகனிடம் (வீட்டு சமையல்காரன்)
எத்தனை முறைக் கூறினாலும் அவனுக்கு புரிய மாட்டேன்கிறதே!..
இப்படித் துடைத்து வைக்காதே என்று பல முறைக்
கூறி விட்டேன்.
அவன் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லையே! சரி, நாமே
அவரின் பசிக்கு ஏதாவது செய்து கொடுப்போம்” என்று எண்ணியவர், வேகமாகச் சமைக்க ஆரம்பித்தார்.
“சிவ சிவா, நமக்கு சமையல் பக்குவம் நன்கு தெரிந்து இருப்பதும்,
அத்துடன் சமையல்காரன் அழகனின் கை ஒடிந்த
சமயத்தில்,
சமைத்துப் பழகிக்கொண்டதும் நல்லதாகப்
போயிற்று”
என்று
தனக்குள்ளே பேசிக்கொண்டு சமையலைச் செய்யத்
துவங்கினார்
.
வழிப்போக்கரோ, ‘பாவம் நாம்தான் இவருக்கு இந்நேரத்தில்
சிரமத்தைக் கொடுத்து விட்டோம் என்றும்; அதோடு இந்தக் காலத்தில் இவ்வளவு நல்ல
மனிதரைப் பார்ப்பதும் அரிதுதான் என்றும்; செல்வம் சரியானவரிடம் இருப்பதுதான் சிறந்தது என்றும், அவரைப்பற்றிய
உயர்ந்த சிந்தனையோடு மனதிற்குள் எண்ணியவாறு
அமர்ந்திருந்தார்.
சிறிது நேரம்தான் ஆகி இருக்கும். “ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!” என்று பரமனின் திருநாமத்தை ஜெபித்தவாறு
சதாசிவம் வந்தார்.
“ஐயா வாருங்கள் உணவுத் தயாராகி விட்டது...
எழுந்திருங்கள் அதோ
அந்தத் தொட்டியில் தண்ணீர் இருக்கிறது கை
கால் முகத்தைக் கழுவிக்கொண்டு, அந்த மாடத்தில்
இருக்கும் திருநீறைப் பூசிக்
கொண்டு வாருங்கள்” என்றார்.
அவரும், அவ்வாறே தன்னை சுத்தம் செய்துக் கொண்டு வந்து அமர்ந்தார். வாழை இலை போடப்
பட்டது
உப்பிட்டு; உணவும் பரிமாறப்பெற்றது.
அப்போது, சதாசிவம் அமர்ந்தவரின் நீறில்லா நெற்றியைக் கண்டு, “நீறிட்டுக் கொள்ள மறந்துவிட்டீரே?” என்றார். அதற்கு அவர், “இல்லை நீங்கள் உப்பிடும் முன்பே நான் இலையில்
நீரிட்டு கழுவினேன்”
என்றார்.
சரிதான் போங்கள் என்று சிரித்துக் கொண்டே, “நான் அதைக் கூறவில்லை ஐயா! நெற்றியில் நீறு
பூசவில்லையா?”
என்று கேட்டேன் என்றார் சதாசிவம்.
அதற்கு அவர், “இல்லை,
எனக்கு அது பழக்கம் இல்லை” என்றார்.
சிவ சிவா, வேற்று மதத்தவராக இருக்குமோ?.அதனால், என்ன
“உங்களின் ஈசன்தான் எங்களின் ஏசு” என்பானே, நம்ம தெருக்கோடி
வீட்டில் குடியிருக்கும் தையல்காரன்
ஆசீர்வாதம்”
என்று மனதிற்
குள்ளேயே எண்ணியவாறு.மேலும் கூறலானார்:
“ஐயா, ஆண்டவனை நினைத்துக் கும்பிட்டுவிட்டு, அவருக்கு நன்றி சொல்லிவிட்டாவது சாப்பிட ஆரம்பியுங்கள்” என்று சொல்ல, அதற்கு
அவர், “ஆண்டவனா யார் அவர்?
அவருக்கு நான் ஏன் நன்றி சொல்ல
வேண்டும்? உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் நீங்கள்
தானே எனக்கு உணவு அளிக்கிறீர்கள்” என்று சொன்னது தான் தாமதம், சதாசிவத்திற்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்து
விட்டது.
“என்னது ஆண்டவன் யாரா? அவர் எங்கு இருக்கிறாரா? நீங்கள், இல்லை நீ,
முதலில் இலையைவிட்டு எழுந்திரு!” என்று சற்றும் எதிர்பாராத விதமாகக் கூறினார்.
“ஐயா நான், அப்படி என்ன கூறினேன். உங்கள் வீட்டில் அரிசி, பருப்பு இருக்கிறது. எனக்கு உணவு அளிக்க உங்களுக்கு மனம் இருக்கிறது.
இடையில் இல்லாத ஒருவரை ஏன் அழைக்கிறீர்கள்?” என்று மறுபடியும் அதையே கூறினார்.
“ஐயோ! சிவ சிவா, என்று தன் காதுகளைப் பொத்திக் கொண்ட சதாசிவம்,
“நீ முதலில் இங்கிருந்து சென்றுவிடு” என்று கத்தலானார்.
வந்தவர், “சரி. சரி சத்தம் போடாதீர்கள் நான் சென்று விடுகிறேன்.
இருந்தும் நான் உங்களுக்கும், உங்களின் அன்பிற்கும் எனது
நன்றியைக் கூறிக் கொள்கிறேன்” என்று சொல்லியவாறே வீட்டை
விட்டு வெளியேறி விட்டார்.
சதாசிவத்தின் கோபம், அவர் மீண்டும் படுக்கைக்குச் சென்று வெகு
நேரமாகியும் அடங்கவில்லை. அப்படியே, ஓம் நமசிவாய! ஓம்
நமசிவாய என்றுக் கூறியவாறே கண்ணயர்ந்தார்.
அவரின் உள்மனது மட்டும் அதே சிந்தனையில்
மூழ்கியிருந்தது..
அப்போது இரண்டாம் சாமம். பரம்பொருளான சிவன் அவரின்
கனவிலே வந்தார் இவரும், “இறைவா!”. என்று பேச மொழியில்லாமல் பேரானந்தத்தில் திளைத்தார்.
அப்போது இறைவன், “பக்தரே!...உனக்கு அப்படி எதற்கு அத்தனை
வருத்தமும், கோபமும் என்று?”
ஏதும் அறியாதது போல் கேட்டார்.
அதற்கு சதாசிவம், ”சுவாமி தண்ணீர் கேட்டு வந்தவனுக்கு உணவு
அளிக்க, எல்லாம் தயார் செய்து விட்டு, இந்தப்
பிரபஞ்சப் படைப்பிற்கும்,
இயக்கத்திற்கு காரணமான பகவானின் அருளால்தான்
நமக்கு இந்த
உணவே கிடைக்கிறது. அதனால் அவரை வணங்கி, அவருக்கு நன்றி
சொல்லி உணவு அருந்துங்கள் என்றுதான்
கூறினேன். ஆனால்
அவரோ, ஆண்டவனா யார்?
அவர் எங்கு இருக்கிறார்? இல்லாத
ஒன்றுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்? என்று பதில்
கூறியதைத்தான் என்னால் பொறுத்துக்
கொள்ளமுடியவில்லை. அதனால்தான், அவருக்குநான்
உணவளிக்க மறுத்துவிட்டேன்”
என்றார்.
அதற்கு இறைவன், “பக்தா,
அவர் இன்று மட்டுமா அப்படிக் கூறுகிறார்?
அவர் பிறந்ததிலிருந்து அப்படிதான்
கூறுகிறார். அதற்காக,
அவருக்கு உணவில்லாமலா செய்து விட்டோம்.
கடவுள் இல்லை என்று கூறுவது
அவரவரின் மனத்தில் புகுந்துள்ள மாயை அது
நீங்கும் போது அங்கே நான் வெளிப்படுவேன். எல்லாவற்றிற்கும் ஒரு காரண காரியம்
உண்டு. அதனை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள நேரமும், காலமும்,
அவசியம். அது
ஒரு நாள் நிச்சயம் அவருக்கு வரும். அப்படி
மறுப்பவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்..பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் நான் இருக்கிறேன்.
உன்னுள்ளும் நான் இருக்கிறேன். என்னை மறுக்கும் அவன் உள்ளும்
நான் இருக்கிறேன். எங்கும் வியாபித்து
இருக்கின்றேன்.
ஆகவே இது போன்ற ஒரு நிலைக்கு இனியும் நீ
ஆளாகாமல். எல்லாவற்றிலும்,.எங்கும், எதிலும்,
என்னை கண்டு, அன்பின் வழியே என்னை வந்தடைவாயாக!”
என்று உயரிய அத்வைதத்தை சதாசிவத்திற்கு
உபதேசித்து. ஆசிகூறி
மறைந்தார். சதாசிவத்தின் கனவும் கலைந்தது.
பொழுதும் விடிந்தது.
அன்று முதல் சதாசிவம் எங்கும் எதிலும்
நிறைத்த பரபிரம்மத்தையே
சிந்தித்து எல்லாவற்றிலும் எல்லோரிடத்திலும் அன்பு காட்டி,
அன்பே சிவம் என்று நித்திய ஆனந்தத்தில்
வாழ்ந்து,
மேலும் அரிய பல
இறைத் தொண்டுகளைச் செய்து, அன்பே சிவம் என்று அத்வைதக் கொள்கையைப்
போற்றியே வாழ்ந்து வரலானார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
“சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்”
''பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:
சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே;
தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்;
பூமியிலே நீகடவுளில்லை யென்று
புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்
சதாகாலம் 'சிவோஹ'மென்று சாதிப் பாயே!''
மகாகவி பாரதியின் இந்த நித்தியமான சத்திய வரிகளை
நாமும் சிந்திப்போம்! அதன்படி நடப்போம்!
நன்றி வணக்கம்.
அன்புடன்,
ஆலாசியம் கோ.
சிங்கப்பூர்