பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Monday, 18 July 2011

பாரதிக்கு தாசனானது எப்போது?




பாவேந்தர் பாரதிதாசன்... இவரின் இயற்பெயர் கனக சுப்பு ரத்தினம் என்பதாகும் என்பதை நாமறிவோம். மகாகவி பாரதியார் அவர்கள் புதுச்சேரியில் வாழ்ந்தக் காலங்களில், ஒரு நாள் ஒரு திருமண வைபவத்தில் மகாகவி பாரதியாரை ஒரு இளைஞன் சந்தித்து அவன் தான் எழுதியக் கவிதையைக் கொடுத்தானாம், அக் கவிதையைப் படித்து பார்த்த பாரதியார், ஆகா அற்புதமானக் கவிதை என்று பாராட்டி அந்த இளைஞனை எழுக புலவா! என்று தமது உளமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தாராம்.

அப்படி அன்று ஆசி பெற்ற அந்தக் கவிஞன் தான் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். மேலும், கனக சுப்பு ரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட இந்தப் பாவேந்தர், அதன்பிறகு பாரதிதாசன் என்று தனது பெயரை வைத்துக் கொண்டு எண்ணிலா கவிதைகளை எழுதியுள்ளார்.

அவர்தம் பாடல்களில் இயற்கை வருணனைகள் மிளிரும். புரட்சி கனல் தெறிக்கும். தமிழின் பால் அவர்கொண்ட பற்று அதை நாம் போற்றவேண்டிய அவசியம், முறை, என்று மொழியின் சிறப்போடு, அம்மொழியும், அம்மொழி பேசும் நாம் யாவரும் ஒரு குலம். அது ஒப்பில்லாத தமிழ் குலம் என்றும் இந்த உலகில் தமிழினம் எப்படி வாழ்வாங்கு வாழ்ந்தது, இனியும் எப்படி வாழவேண்டும் என்று வீர சங்கே முழங்கு என்று இந்த தமிழ் உலகத்திற்கு வேண்டுகோளும் விடுகிறார்.    

கவிஞன் காலத்தின் கண்ணாடி என்பது போல் அவனின் பாடல்களில் அன்றைய தமிழ் சமுதாயத்தின் அவசியத்தை அதிகம் படம் பிடித்துக் காட்டியிருப்பார் பாரதி தாசன். 
அவரின் சிலக் கருத்துகள் என்போன்ற பாரதிப் பிரியர்களுக்கு வேறுபட்டு இருந்தாலும். பாரதி தாசனின் கவிநயத்தையும், மொழி, இனம், சமுதாயப் பற்றை தமிழின் பால் பற்றுக் கொண்ட அனைவரும் விரும்பி படித்து போற்றுவதில் ஆச்சரியமில்லை.

அந்தத் தகுதி அவரின் பாடல்களுக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

அன்னைத் தமிழின் அதிசயக் குழந்தைகளில் பாரதிதாசனும் ஒருவரே. அவர் அன்று பாரதியிடம் காண்பித்து பாராட்டுப் பெற்றக் கவிதையைக் கீழேக் காண்போம்.

எங்கெங்குக் காணினும் சக்தியடா! - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா! - அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு
கங்குகளில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!

காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கு நடம் புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வையமுழுவதும் துண்டு செய்வேன் - என
நீள இடையின்றி நீநினைத்தால் - அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!

தமிழ்க் கவிதைச் சுவையில் கரை காண எண்ணும், ஒரு இளைஞன் முழுச் சிந்தனையோடு படிக்கும் போது அக் கவதைதனிலே, சக்தி அற்புத நடனமாடுவாள்.

அதனாலே அவன் தொல்லறிவாளனாவான்,  மேலும் எங்கும் நிறை சக்தியை நீண்ட, இடைவெளியில்லாமல் சித்தித்தால், அவள் அவனின் வீரத்திற்கு உரம் சேர்க்க அவனின் தோளினிலே வந்தமர்வாள்.

அவள் தான் அன்னை சக்தி. அவள் எங்கும் நிறைந்து இருக்கிறாள், அவளின் வண்ணம் ஏழுகடல்களின் வண்ணம். இந்த அண்டத்தைப் போல ஒருகோடி அண்டம் அவளின் கைப்பந்தமாகி ஓடும். அப்படி அற்புதச் சக்தி கொண்டவள் அந்த சக்தி என்றெல்லாம் பாடுகிறார்.

என்ன அற்புதமான வரிகள் அது தரும் பொருள்கள். அதனாலே அவர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார்.

இந்தப் பாவேந்தன் புரட்சிக் கவிஞர் என்றும் பாராட்டப் படுகிறார். அந்தப் புரட்சிக் கவிஞரின் இந்த வரிகள்அவரின் உலகம் தழுவிய விசாலப் பார்வையும், இவர் பாரதிக்கு தாசன் தான் என்பதையும் இந்த உலகிற்கு பறை சாற்றும் பாடல்களில் ஒன்றாக விளங்குகிறது.
  
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் ...


பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.
புதியதோர் உலகம் ...

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இதுஎனதெரு ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
புதியதோர் உலகம் ...

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள் தனிருஎனும் மனிதரைச் சிரிப்போம்!
புதியதோர் உலகம் ...

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்.
புதியதோர் உலகம் ...

பாரதிதாசனின் தமிழின் இனிமையை நாமும் அனுபவிக்க வேறொரு முறை கூடி அது பற்றி அருமையாக சிந்தித்து இன்புறுவோம்...

நன்றி வணக்கம்,
அன்புடன்,

தமிழ் விரும்பி.

5 comments:

Unknown said...

நல்ல பதிவு நண்பரே!
பாரதிதாசன் எப்படி பாரதிக்கு தாசனாக
மாறினார் என்ற சொய்தி அனைவரும் அறிய
வேண்டிய ஒன்று
நன்றி

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

///புலவர் சா இராமாநுசம் சொன்னது…
நல்ல பதிவு நண்பரே!
பாரதிதாசன் எப்படி பாரதிக்கு தாசனாக
மாறினார் என்ற சொய்தி அனைவரும் அறிய
வேண்டிய ஒன்று
நன்றி

புலவர் சா இராமாநுசம்////

தங்களின் வருகைக்கு
நன்றிகள் ஐயா!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

எதோ பாரதியை தெரியும்..
பாரதிதாசனையும் தெரியும் என்றளவில் வாழ்ந்து கொண்டிருந்த எங்களுக்கு..

அவர்களுடைய முதல் சந்திப்பையும்
மகாகவியின் ஆசிர்வாதத்தையும் சொல்லி
வியக்க வைத்து விட்டீர்கள்.

நன்றி ஆலாசியம்..


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

Unknown said...

///சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…
எதோ பாரதியை தெரியும்..
பாரதிதாசனையும் தெரியும் என்றளவில் வாழ்ந்து கொண்டிருந்த எங்களுக்கு..

அவர்களுடைய முதல் சந்திப்பையும்
மகாகவியின் ஆசிர்வாதத்தையும் சொல்லி
வியக்க வைத்து விட்டீர்கள்.

நன்றி ஆலாசியம்..


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ////

வருகைக்கு நன்றிகள் தோழரே!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வலையுலக நட்புச் சங்கிலித் தொடரை தொடர தங்களை அழைத்திருக்கிறேன்..

வாருங்கள் கை கோர்ப்போம்...


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

Post a Comment