என் உயிரினில் கலந்திடு!...
உன் நீல விழிப் பார்வை
என் நித்திரைக் கெடுத்ததடி!
உன் மூன்றாம் பிறை நெற்றி
என்னை முழுதாய்க் கட்டியதடி!
உன் புருவம் அரும்பிய ரோமங்கள்
என் இதயம் வருடுதடி.
உன் இமைகள் கட்டிய
மயிர்(ற்) தோகை, கட்டில்கள்
என்னை எங்கோ அழைத்துச் செல்லுதடி.
உன் சந்திர மலர்முகக்
குளிர்ச்சியின் தாக்கத்தை
என் சுவாச வெப்பம்
என்னைப் பதப் படுத்துதடி.
சகியே, என் சுகியே
கதியே, முகில் நிறை மதியே
என் முன்னே தோன்றும்
என் உயிரின் உயிரே!
உன் பார்வை ஒன்றே போதும்
என் வாழ்வும் நூறுகோடி ஆகுமே!!!.
அழகோ அழகு அத்தனை அழகு
அழகே மயங்கும் அப்படியொரு அழகு!
அழகிற்கு இலக்கணம் இனி
நீயே எனும் இனி இந்த உலகு
இமைக்க மறந்தேன் இனியவளே
இமைப் பொழுதில் என்
இதயம் உருகச் செய்தவளே!
உன்னை படைத்த பிரம்மனும்
எத்தனை காலம் தவமிருந்தானோ?
அழகே உன்னைப் படைத்து
என்னைப் இப்படிப் படுத்த.
முப்பெருந் தேவியரின் சாயலும்
முழுதாய்க் கொண்டவளே!
நறுமுகையே! புனல் பூத்த தாமரையே
அணங்கு செய்யும் அணங்கே
அன்னமே, ஆய்மையிலே எனைத்
தேம்பச் செய்யும் தீம்பாவாய்
நீ இந்திரன் மகளோ? இல்லை
நாரதன் நரம்பறுத்து விட்ட சாபத்தால்
பூலோகம் வந்த ஊர்வசியோ?
தேம்பாவாய் மொழிவாய்
மாதுளக்கனிவாய் மலர்வாய்.
மலர்ப் பாதம் கண்டேன் உன்னை
மானுடப் பெண்ணென்று உணர்ந்தேன்,
எங்கிருந்து வருகிறாய் பெண்ணே!
கொள்ளை அழகில் எனைக்
கொள்ளை கொண்டவளே
உன்மீது எல்லையில்லா
காதல் கொண்டேன் - இனி
என்ன செய்தால் என்னை நீ ஏற்பாய்.
விண்ணை வளைக்கவா?
விண்ணில் மின்னும் பூக்களைப் பறிக்கவா?
வெண்மேகத்தில் ஊஞ்சல் கட்டவா? - இல்லை
உன் பொன்வண்ண மேனிக்கு அழகிய
வெண் மேகத்தால் ஆடைத் தைக்கவா?...
நிலாவை உடைத்து உன்
மலர்மேனியில் கனிந்தக்
கனிகளுக்கு கவசம் என்னும்
காவல் செய்யவா?...
கொடியிடையில், தங்கம் மின்னும்
உன் அங்கம் மறைக்க
மின்னலைக் கொடியாக்கி
விடிவெள்ளியையே அதில்
கோர்த்துவிடவா?
திருவாய் மலர்வாய் தேன்மொழியாய்
என் இதயத் தாமரை வந்தமர்வாய்.....
இளம்பூவே! இதயம் புகுந்தவளே,
என் வேதனை நீ அறியாய்
அரிவையே! இனியும் தாமதம்
வேண்டாம் கருணை புரிவாய்.
வேல்விழிப் பார்வை
என் இதயம் தைத்தது
செவ்விதழ் ஒத்தனம் தந்து
எனது போகும் உயிரை நிறுத்திடு.
இனி எப்போதும் எனை நீங்காது
என் உயிரினில் கலந்திடு.
அன்புடன்,
தமிழ் விரும்பி.
11 comments:
இன்றைய வலையுலகின் நாடி பார்த்து ஆக்கம் தருகிறீர்கள் போல..
ஆனாலும் ஒருத்தியை இவ்வளவா கொஞ்சுவது ?
ம்ம்.. காதலுக்கு கண் இல்லை என்று தானே சொல்லியிருக்கிறார்கள்..
வாய் தான் இருக்கிறதே .. பாடுங்கள் பாடுங்கள்..
சிவயசிவ
http://sivaayasivaa.blogspot.com
அம்மா நறுமுகையே ..
வந்து தமிழ்விரும்பியின் உயிரோடு கலந்து விடு..
காலம் கடந்தாலும்
கோலம் கலைந்தாலும்
காதலும் அந்த நினைவு தரும்
வேகமும் ஜென்மம் தொடரும் போல...
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் தோழரே!
வணக்கம் தமிழ் விரும்பி அவர்களே!
மாமலையும் ஓர் கடுகாம் என்று பாரதி சொன்னதைப் போல் இருக்கிறீர்கள் போல.
கடைக்கண் வீசிய காரிகையே கவிதையைப் படித்தாயா?
மலரும் நினைவுகள்.
மலரட்டும் மலரட்டும்.
அளவுக்கு மிஞ்சினால்.......
அப்பா என்ன கவிதையடா ,, அலாசியம் எப்பூடி... நன்பன்டா...
////சிவ. வே. கங்காதரன் சொன்னது…
வணக்கம் தமிழ் விரும்பி அவர்களே!
மாமலையும் ஓர் கடுகாம் என்று பாரதி சொன்னதைப் போல் இருக்கிறீர்கள் போல.
கடைக்கண் வீசிய காரிகையே கவிதையைப் படித்தாயா?
மலரும் நினைவுகள்.
மலரட்டும் மலரட்டும்.
அளவுக்கு மிஞ்சினால்.......
5 ஜூலை, 2011 10:39 pm ////
அன்பர் கங்காதரன் அவர்களே தங்களின் பின்னூட்டம் தாமதமாகத் தான் கண்டேன்.
"நுனியளவு செல்". என்றும் கூறி இருக்கிறானே மகாகவி...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நண்பரே!
/////selvakumar சொன்னது…
அப்பா என்ன கவிதையடா ,, ஆலாசியம்... எப்பூடி... நண்பன்டா...
25 ஜூலை, 2011 10:36 pm ////
ஆமா, நான் உன் நண்பன்டா
உனது கவிதைகளை வாசித்த காலங்களை இன்றும் நெஞ்சில் சுமக்கிறேன்...
நீ எழுத அதை நான் வாசிக்க...
கவிதைக்கான நடையிலே
வாசிப்பதை நீ ரசித்த அந்தக் காலம்...
ஆஹா! அந்தப் பள்ளி வாழ்க்கை
இனியும் அது வருமோ...
முன்னம் ஒரு காலதிலெ..
அந்த காலனியின் வீதி
நமக்கான ராஜபாட்டையாக இருந்தது....
சோறில்லா காலதிலும்
நண்பா
சுகமான காலமடா..
நுங்கு வண்டி ஓட்டி
நாம் நடந்த வீதியெல்லாம்
நம் பிள்ளைகள் சிரிக்கிறார்கள்....
சொன்னாலும் நம்ப மறுக்கும்...
அது சொர்க்கதின் வாசலடா...
கண்ணாடி குண்டு கொண்டு ...
காற்றாடி ஓலை சுற்றி...
காமம் அறியாமல்...
பருவம் வந்த பிள்ளைகளோடு
பல்லாங்குழி விளையாடி...
புளியங்கொட்டை கொண்டு புழுதியில் விளையாடி...
பொழுதெல்லாம் போனதடா...
பள்ளிப்பருவத்தில்..
பரவி வரும் விடுமுறையில்...
எங்கும் செல்ல வ்ழியின்றி
சில்லாக்கு செதுக்கிய கால்கள்
கேட்குதடா
மீண்டும் அந்த காலமதை...
இன்னும் சொல்ல துடிக்குது மனசு...
எப்பொழுதேனும் எழுதுகிறேன்..
இப்போது முடிக்கின்றேன்.
என்றும், உன்
செல்வக்குமார்.
காலைக்குளிரில்
குளித்துவிட்டு நீ துடிக்க
குளிக்காமல் நான் நடிக்க
அந்த கையளவு பொங்கலுக்கு
காத்திருந்த அதிகாலை...
sugar என்றும்
டயட் என்றும்
டாக்டர் சொல்ல..
உயிருக்கு உறுதி தேடி
உறக்கம் கலைந்த பின்னும்
ஊரெல்லாம் நடந்தாலும்..
உன்னோடும்
அந்த உணர்வோடும்..
தமிழோடும் சண்டை
கொண்ட காலம் வருமோடா...
ஆறாம் படிவத்தில்..
ஆனந்த்ம் அம்மா வீடு..
தசாங்கம் கம கம்க்க
காலெல்லாம் துடைத்து
கவனமாக படித்தாலும்
நந்தியாவட்டைப்பூ பறிக்க
போட்டி வரும் நமக்குள்ளே..
பெயர் தெரியா சாமிக்கெல்லாம்
வேண்டுவாய் நீ
லட்சுமி அக்காவுக்கு...
நல்ல பிள்ளை பிறக்க
நான் வேண்டுவேன்
என் அம்மவுக்கு...
விளையாட்டாய்
என் பெண்ணிடத்தில்
ஒரு நாள்
நான் கேட்டேன்
தம்பி வேண்டுமா?
பாப்பா வேன்டும்மா என்று...
முறைத்துப்பார்த்தாள்..
மூன்று நாள் பேசவில்லை...
(அப்போது
என்னைக் கேட்டிருந்தால்
மூன்று மாதமேனும் பேசாமல் இருந்த்திருப்பேன்...)
முன்னம் போட்டிகளை
இப்போது நினைத்தாளும்
சிரிபொன்று
அரங்கேறும் வாயூடே...
நல்ல வாழ்க்கையடா...
உனக்கு தெரியுமா?
கனவோடு
நான் வாழும்
வாழ்க்கை முழுவதிலும்
வீடென்றால் அந்த வீடு...
நட்பென்றால் அந்த நட்பு...
மீண்டும்
ஒரு முறை பிறப்போம்..
முடிந்த்தால் ஒரு தாய் மடியில்..
இல்லை என்றால்
அந்த காவேரி நகரிலேனும்...
நினைவு குவியலில்
இன்னும் இருக்கிறது...
நீயும் எழுது..
அந்த
கத கதப்பில் உயிர் வாழ்வோம்.
நன்றி.
செல்வக்குமார்.
நீ சொல்லச் சொல்ல இனிக்குதடா - நண்பா!
நீ சொல்லாததும் வந்தே இன்பத்தேனில் நனைக்கிதடா.
நம் தமிழாசான் கரு.ச வந்தால் காலணி விட்டே
நம் காலனி பூங்காவினுக்குள் சென்றே பதுங்கியதும்...
பட்டமிட்டதும், பாட்டுப் பாடியதும் - இறையூர்
குளத்து நீரில் ஆட்டம்போட்டு அட்டகாசம் செய்ததும்
நாவல் மரம் ஏறியதும் - அப்போது
நாய் வந்து விரட்டியதும் - அடுத்தவர்
கழனி புகுந்து கரும்பு திருடியதும் - தோட்டக்கார
பழனி வந்து அக்கரும்பை பிடுங்கி - நம்
உடம்பில் ஓவியம் தீட்டியதும்.
மரம்தோறும் மானசீக பெயர்களால் - மாளாது
பச்சைக் குத்தியதும் இன்னும் - எத்தனை
எத்தனை எத்தனையோ அவை - என்றும்
நம் எண்ணத்தில் அடங்கி; எண்ணிலடங்கா!..
நான் சன்னலின் ஓரம் சந்திரனைக் காண்கிறேன்
நீயும் இந்நேரம் காண்பாயானால் அதனிடமே
உனக்கும் சொல்லச் சொல்லுகிறேன்...
சொல்லிமாளா சுகந்த நினைவுகள் - அவை
ஆயிரமயில்கள் தாண்டியும் நமக்குள்
பாயிரம் பாட வாய்த்த இணையத்திற்கே
நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றிடா நண்பா!
உண்மைதான் நண்பா...
ஊர் சுற்றித் திரிந்தாலும் - மர
வேர் சுற்றி அமர்ந்தாலும் - கோவில்
தேர் சுற்றி வரும்போதும் - நாம்
இருவரும் மற்றவர் காதில் - பூ
சுற்றி பூரித்ததும்....
ஆனந்தம் ஆசிரியையும்
அவர் தம் ஆசியையும்
ஆயுசுக்கு மறக்க முடியுமா!
ஆதர்சமாகவே அந்த நினைவுகளை
ஆழ்மனத்தின் அன்போசையை - நான்
வகுப்பறையிலே தீட்டியுள்ளேன் - அது
பகவானுக்கே ஒருக்கடிதம் எழுதினேன் - பலனே
பதிலாய் வந்த தென்று - சென்றங்கேப்
படித்துப் பார் உன்சிந்தை நிறையும்.
நெடுநேரம் மாகிறது - வான்
நிலவும் ஓடியது - நம்
நினைவுகள் இன்னும்
நீளும்... அதனாலே - நிழலாய்
நீளும் இந் நினைவுகளை
இருட்டில் என்படுக்கையில்
இருத்துகிறேன்.. நன்றி.
Post a Comment