பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Saturday, 9 July 2011

பாரதியின் பார்வையில் பௌத்தம்.





+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாரதியின் பார்வையில் பௌத்தம். 

மஹாகவி பாரதியார் பகவத் கீதைக்கு விளக்கம் எழுதியது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதை நான் படித்த போது அவர் அந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் பௌத்த மதத்தைப் பற்றிய தகவல்களை அவரின் பார்வையில் தந்திருந்தார் அதை நான் இங்கே உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன். எல்லாப் புகழும் பாரதிக்கே.

புத்தியில் சார்பு எய்தியவன், இங்கு, நல்ல செயல், தீயச் செயல் இரண்டையும் துறந்து விடுகிறான். ஆதலால் யோகநெறியிலே பொருந்துக. யோகம் செயல்களிலே திறமையாவது (கீதை 2 - ஆம் அத்தியாயம்; 50 - ஆம் சுலோகம்)
புத்தியிலே சார்பு எய்துதல் யாதனில் அறிவை தெளிவாக கவலை நினைப்புகளும் அவற்றிக்கு ஆதாரமான பாவ நினைப்புகளும் இன்றி அறிவை இயற்கையாக நிலை நிறுத்துதல்.

"நீங்கள் குழந்தையைப் போல் இருந்தால் அன்றி மோட்ச ராஜ்ஜியத்தை அடைய மாட்டீர்கள்" என்றார் ஏசு கிறிஸ்து..... அப்படிஎன்றால், உங்களுடைய லௌகீக அனுபவங்களை , படித்த படிப்பை, மறந்து மீண்டும் குழந்தைகளைப் போல் தாய்ப்பால் குடிப்பது, மழலைச் சொல் பேசுவது அன்று....குழந்தைகளைப் போல் இதயத்தை கள்ளம் கபடம் இல்லாமல் (அவற்றைப் புரிந்து கொள்ளுதல் என்பது வேறு) சுத்தமாக வைத்துக் கொள்ளுதல். இதயம் சுத்தமானால் அறிவு (புத்தி) தெளிவுபெறும் என்று பகவான் சொல்கிறார்.
  
மேலும் பகவான் கூறுகிறார், 'கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்கிறானோ, அவனே துறவி அவனே யோகி.... ஆக அறிவுத் தெளிவை தவறவிடாதே, பிறகு பலனிலே பற்றுதல் கொள்ளாமல் (அதாவது எப்படியாவது பெறவேண்டும் என்று நினைத்து செயல்படுதல் ஆகாது என்பதாகும்) அதன் பின் ஓயாமல் தொழில் செய். அதன் பிறகு நீ எதைச் செய்தாலும் நல்லதாகவே முடியும்…….

பகவான் சொல்கிறார் யோகம் பண்ணு, அதாவது தொழிலுக்குத் தன்னை தகுதி உடையவனாகச் செய்வது யோகம் எனப்படும்.

யோகமாவது சமத்துவம், 'ஸமத்வம் யோக உச்யதே' அதாவது பிறிதொரு பொருளைக் கவனிக்கும் பொருட்டு மனதினில் எந்தவித சஞ்சலம், சலிப்பு, பயன் இன்றி அதை ஆழ்ந்து, மன முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகியப் பயிற்சி.
அப்போது அப்பொருளை உண்மையாக முழுவதுமாக புரிந்துக் கொள்ள முடியும். "யோகஸ்த: குரு கர்மாணி" யோகத்தில் நின்று தொழில்செய் என்கிறார் கடவுள்.

இப்படியே பாரதி முன்னுரையில் கூறிச் செல்கிறார் நான் சுருக்கமாக கூற எண்ணி தாவி வெகு தூரம் வந்து விடுகிறேன்... 

இனி இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக கருதுதல் அவசியமென்கையில், அப்போது கடவுளை நம்புவது எதன் பொருட்டு?, கடவுள் நம்மை அச்சம் தவிர்த்துக் காப்பார் என்று எதிபார்ப்பது எதன் பொருட்டு? நமக்கு, இன்பம், துன்பம், வாழ்வு, தாழ்வு, மரணம் எதுநேர்ந்தாலும் - எல்லாம் கடவுள் செய்கையிலே நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருதவேண்டும் என்று பகவத் கீதை சொல்லுகையிலே, நமக்கு கடவுளின் துணை எதன் பொருட்டு?.


நம்மை (திருநாவுக்கரசரைப் போல்) கல்தூணிலே வலியக் கட்டி கடலிலே வீழ்த்தினால், நாம் இதுவும் கடவுள் செயல் என்று எண்ணி அப்படியே மூழ்கி இறந்து விடுதலும் பொருந்தும் அன்றி, பிறகு ஏன்? நமச்சிவாய! நமச்சிவாய! என்றுக் கூவி நம்மைக் காத்துக் கொள்ள முயலவேண்டும்? என்று சிலர் ஆட்சேபிக்கலாம். 

இந்த ஆட்சபம் தவறானது. எப்படியெனில், முந்தியக் கர்மங்களால் நமக்கு விளையும் நன்மைத் தீமைகளை சமமாகக் கருதி நாம் மனச் சஞ்சலத்தை விட்டுக் கடவுளை நம்பினால், அப்போது கடவுள் நம்மை சில வலியச் சோதனைகளுக்கு உட்படுத்துகிறார்.
அந்தச் சோதனைகளில் நாம் சோர்ந்து கடவுளின் மீது உள்ள நம்பிக்கையை இழக்காமல் அவன் திருவடியையே தொழுதொமானால், அப்போது ஈசன் நமக்குள் வந்து குடி புகுகிறான். 

அதனால் நம்மை துன்பம், மரணம் (உடல் அழியக் கூடியது, ஆத்மா முக்தி அடைவதும் மரணத்தை வெல்வதாகக் கொள்ளவேண்டும்) நம்மை அணுகாது, எல்லாவிதமான ஐயுறவுகளும், கவலைகளும், துயரங்களும் தாமாகவே நம்மை விட்டு விலகி, இந்த உலகத்திலே நாம் விண்ணவர்களின் வாழ்க்கையைப் பெற்று நித்தியானந்தம் பெறுகிறோம். 

மேலும் எல்லாவற்றையும் ஞானி சமமாக கருத வேண்டும் என்ற இடத்தில், அவன் வாழ்க்கைக்கு உரிய விதிகளையெல்லாம் அறவே மறந்துபோய் பித்தனாகிவிட வேண்டும் என்று அர்த்தம் ஆகாது.... 

கஷ்ட நஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு மனதார பிறருக்கு கஷ்ட நஷ்டங்களை கொடுக்காமல் இந்த உலகுக்கு நன்மையை செய்துக் கொண்டே இருக்கவேண்டும். தன்னுயிரைப்போல் மண்ணுயிரையும் காக்கவேண்டும், இவைகளே புண்ணியம் தரும் செயல்கள் என்கிறார்.

மேலும் பகவான் 'ஸம்சயாத்மா விநச்யதி' - ஐயமுடையோன் அழிவான் அதாவது கடவுளை நம்பினார் கைவிடப் படார். (இந்த இடத்திலே இன்னொன்றையும் கூறவேண்டும் துச்சாதணன் துகிலுரியும் போது திரௌபதி தனது கைகளால் உடையைக் காக்காது அவள் முழுவதுமாக கிருஷ்ணனையே நினைத்து தனது தலைக்கு மேலே இருகரங்களையும் தூக்கி ஹரி! ஹரி! ஹரி!.... என்று முழுவதுமாக சரணாகதி அடைந்தாள் கிருஷ்ணனும் அருளினான்).

சரி, நான் கூற, இங்கு சொல்ல வந்ததை  நோக்கிப் போகிறேன்.

வேதங்களுக்கு உரை செய்தவர்கள், வேதம் கர்மங்களை போற்றுகிற நூலாகவே கண்டார்கள். இதிலே சாயணாசாரியார் சொல்லும் உரையிலும் (சில இடங்களுக்கு கருத்து வேற்பட்டு நின்றாலும்) தமது குருக்களைப் போல் வேதம் கர்ம நூல்  என்றெண்ணி, கர்மத்தையும்- யாகம் என்றெண்ணி இருக்கிறார். 

அப்போதும் கூடவே போலிகள் செய்த இந்த யாகங்களே பெரும்பாலும் பசுவதைகளும், குதிரைவதைகளும், ஆட்டுப் பலிகளும் முக்கியமாக பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான் சடங்குகளைச் செய்தால் மோட்சம் என்ற போலிகளின் செயல்களை புத்தமதம் தனக்கு சாதக மாக்கிக் கொண்டு யாகத் தொழிலை அன்றைய அரசர்களோடு சேர்ந்துக் கொண்டு இகழ்ச்சி செய்தது.  

அப்போது தான் பௌத்தர்களை வென்று ஹிந்து தர்மத்தை நிலை நாட்ட, சங்கராச்சாரியார் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துக்களைப் பெரும்பாலும் ருசிகண்டு, சுவைத்து தமது வேதாந்ததிற்கு ஆதாரங்களைத் தயார் செய்துக் கொண்டார். சைவம், வைஷ்ணவம் உள்ளிட்ட ஆறு கிளைகளை கொண்ட விருட்சத்தின் ஆணிவேராகிய வேதத்தை தனது ஞானத்தால், கல்வித் திறமையால், திறம்பட உரைப்பித்து மீண்டும் மீள, என்றும் அழியா சக்தியாக ஹிந்து என்னும் விருட்சம் உயிர்பித்து விளங்கச் செய்து  விட்டுப் போனார் ஸ்ரீ சங்கராச்சாரியார்.

தம்மாலே வெட்டுண்ட புத்தமத விருட்சத்தின் கிளைகள் பலவற்றை ஹிந்து தர்மமாகிய விருட்சத்திற்கு உரமாகுபடி எருவாகச் செய்து போட்டார். அதனாலே, இவரை சிலர் "பிரசன்னா பௌத்தர்" (மறைவு பட்ட பௌத்தர்) என்றும் சொன்னார்கள். எனினும் இவர் ஹிந்து தர்மத்திற்கு செய்த பேருதவியால் இவரை ஹிந்துக்கள் பலரும் பரமசிவனுடைய அவதாரமாகவேக் கருதினார்கள்.


(இந்த இடத்தில் ஒரே ஒரு விஷயத்தை சொல்லவேண்டும். சிவன் பால் பேரன்பு கொண்ட மெய்யன்பர்கள், இந்தக் கருத்தை ஏற்க மனம் தயங்குவது இயற்கையே. இருந்தும் இந்தக் கருத்தில் வருபவரும், அப்படி சிவனின் அவதாரமோ என்போரும், முக்கியமாக இக்கருத்தை எழுதிய பாரதியும் முன்னவர்களைப் போல் அத்வைதியே... அத்வைதம் கூறும் கருத்தைத் தான் இது பிரதிபலிக்கிறது.

அதாவது அத்வைத வேதாந்தத்தில் தனி ஆன்மாவிற்கு இடமில்லை தனி ஆத்மாவைப் படைத்தது மாயை என்பது அவர்களின் வாதம். உண்மையில் தனி ஆன்மாக்கள் இருக்க முடியாது. இருப்பது உண்மையில் ஒன்றே என்றால் நான் வேறு நீங்கள் வேறு என்றெல்லாம் எப்படி இருக்க முடியும்? நாம் அனைவரும் ஒன்றே. பன்மையைக் காண்பது தான் தீமைக்கு காரணம். 

நான் வேறு பிரபஞ்சம் வேறு என்று உணர ஆரம்பித்த உடனேயே பயம் தோன்றுகிறது, தொடர்ந்து துன்பம் உண்டாகுகிறது. சரி இதை ஞானிகள் வழி விவரித்தால் இன்னும் நீளும்.

இங்கே சங்கரரை பரமசிவ அவதாரமாகப் பார்த்ததற்கு அத்வைத தத்துவம் வழிகோலும் என்றாலும், சங்கரரின் வேத விளக்கத்திற்கு... விளக்கம் கூறிய  அவரே கடைபிடிக்க தவறிய போது, அந்த ஈசனே ஒரு புலையனாக அவதரித்து அவரை தெளிவு செய்தது என்பது சங்கரரின் வரலாறு நமக்கு கூறுகிறது என்பதும் கவனிக்கத் தக்கதே)

புத்தமதமே துறவு நெறியை உலகத்தில் புகுத்திற்று. அதற்கு முன் ஆங்காங்கே சில மனிதர் துறவிகளாகவும், சில இடங்களில் சிலர் துறவிக் கூட்டத்தாராகவும் இருந்திருக்கிறார்கள். துறவிகளின் மடங்களை இத்தனைத் தாராளமாகவும், இத்தனை வலிமையுடையவனாகவும் செய்ய வழி காட்டியது பௌத்த மதமே.
எங்கே பார்த்தாலும் இந்தியாவை அந்த மதம் சந்நியாசி வெள்ளமாகச் சமைத்து விட்டது. பாரத தேசத்தை அந்த மதம் ஒரு பெரிய மடமாக்கி வைத்து விட்டது. ராஜா, மந்திரி, குடி, படை எல்லாம் மடத்துக்குச் சார்பிடங்கள். துறவிகளுக்குச் சரியான போஜனம் முதலிய உபசாரங்கள் நடத்துவதே மனித நாகரீகத்தின் உயர் நோக்கமாக கருதப் பட்டது. 

துறவிகள் தான் ஜனங்கள்! மற்றவர்கள் எல்லாம் அவர்களுக்குப் பரிவாரங்கள்! மடம் தான் பிரதானம், ராஜ்ஜியம் அதற்குச் சாதனம். ஜீவகாருண்யம், ஜனசமத்துவம் கூறிய புத்தம் ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்கு கீழே மற்ற உலகை அடக்கி வைத்து உலகமெல்லாம் துக்கமயம், போஇமயம் என்று பிதற்றிக்கொண்டு வாழ்நாளைக் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசஞ்செய்ய முயன்றதாக குற்றம் புத்த மதத்திற்கு உண்டு.

நல்ல வேலையாக இந்தியா அதை உதறித் தள்ளி வந்துவிட்டது. பின்னிட்டு புத்த தர்மத்தின் வாய்ப்பட்ட பர்மா போற்ற நாடுகள் இங்ஙனமே புத்த மதத்தின் மடத்தை வரம்புமீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது.

(பாரதி ஒரு தீர்க்க தர்சி என்பதற்குள்ள பல சான்றுகளில் இதுவும் ஓன்று... இன்றும் பெரிதும் போற்றும் இலங்கையிலே உள்ள நிலைமை அனைவரும் அறிந்ததே. மடம் தான் பிரதானம், ராஜ்ஜியம் அதன் கருவி.... நாம் இன்று பார்ப்பதை பாரதி அன்றே தீர்க்க தர்சனத்தால் பார்த்து இருக்கிறான் அது பொய்யாகாது)  

இதை தொடர்ந்து வந்த ரோமன் கத்தோலிக்கர்களின் போக்குக்கும் இப்படி இருந்து, பின்பு ஐரோப்பாவில் பெரும்  எதிப்புக் கிளம்பி ஒருக் கட்டுக்குள் வந்தது.   

பௌத்தம் அதன் கொள்கைகள் இந்தநாட்டில் மண்ணோடு மண்ணாக போய்விட வில்லை. அவைகள் ஹிந்து மதக் கொள்கைகளுடன் கலந்து இந்நாட்டில் வழங்கி வருகின்றன. 

புலால் மறுத்தல், பூர்வஜென்மக் கொள்கை என்னும் இவை இரண்டும் பௌத்தத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு வந்ததாக கூறினாலும் அதற்கு ஆதாரம் இல்லை. காரணம் பூரவஜன்மக் கொள்கை பூர்வ புராணங்களிலேயே இருந்தது. பௌத்தமதம் அக்கொள்கையை அறிஞர் கண்டு நகைக்கத் தக்கப்படியாக, வரம்பு மீறி வற்புத்திற்று எனலாம்.

பிற்கால ஹிந்துமதத்தில் அக்கொள்கை அளவுக்கு மிஞ்சி, நிறைந்த ஆர்த்தமாக ஏறிப்போய் இப்போது ஹிந்து நம்பிக்கைகளில் உள்ள குறைகளில் ஒன்றாக விளங்குகிறது.

சாதரணமாக ஒருவனுக்குப் தலைவலி என்றாலும் கூட, அதற்குக் காரணம், 'முதல் நாள் பசியில்லாமல் உண்டதோ',அளவுக்கு மீறித் தூக்கம் விழித்ததோ அல்லது மிகக் குளிர்ந்த அல்லது அசுத்தமான நீரில் குளித்ததோ என்பதை ஆராயாமல், எல்லாம் பூர்வஜன்ம புண்ணியப் பலன் என்று ஹிந்துக்களிலே பாமரர் கூட என்னும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது.

உலகத்து வியாபார நிலைமையையும் (He is an economist here) பொருள் வழங்கும் முறைகளையும் மனித தந்திரத்தால் மாற்றிவிடலாம் என்பதும், அங்ஙனம் மாற்றுமிடத்தே செல்வமிகுதியாலும், செல்வக் குறையாலும் மனிதர்களுக்குள்ளே ஏற்படும் கஷ்டங்களையும், அவமானகளையும், பசிகளையும், மரணங்களையும் நீக்கிவிடக் கூடும் என்பதும் தற்காலத்து ஹிந்துக்களிலே பலருக்குத் தோன்றவில்லை. பிறர் சொல்லியும் அது அவர்களுக்குப் புரிவதில்லை. 

(அது அவன் விதி... ஆமாம் நாமும் கொஞ்சம் நிதித் தந்தால் அந்த விதியைக் கொஞ்சம் மாற்றலாமே…. எத்தனைப் பேருக்கு இதில் நாட்டம்.....) 

ஏனென்றால், அது மன விசயத்தில் ஏற்பட்ட பயங்கரமான பேதங்களையும், தார தம்மியங்களையும், பாரபட்சங்களையும் கண்டு அதற்கு வழி காண முடியாத இடத்திலேதான் (மனம் இல்லை என்று தான் கூற வேண்டும்) இந்த பூர்வஜென்ம விஷயம் உதவியாக நிற்கிறது.

நீண்ட ஆயுள், அற்ப ஆயுள், நோய், நோயின்மை, அழகு, அழகின்மை, செல்வா, ஏழைக் குடியில் பிறப்பதோடு நிற்கலாம். மற்றவைகள் சரிசெய்ய முடிந்தாலும் பணம் சம்பந்தமானதாலே பிறருக்கு உதவ மனமில்லாது இதைக் காரணம் காட்டி தப்பிக்கவே இது பெரிதும் துணைபோகிறது. 

பௌத்தமதத்தால் நாம் அடைந்த நன்மைகளில், உண்மையானது ஓன்று உண்டு, அதாவது விக்ரக வழிபாடை ஊர்ஜிதப்படுத்தியது. பௌத்தர்கள் மனிதர்களுக்கு ஏற்படுத்திய சிலைகளை நம்மவர்கள் தேவர்களுக்கு ஞானசக்தியின் விரிவாலும், கற்பனா சக்தியின் விரிவாலும் கலைநயமும் கற்பனையும் கலந்து  அருமையாக ஏற்படுத்தி முக்திக்கு வழிதேடி, உண்மையானப் பக்தியால் வெற்றியும் கண்டார்கள்.

இனி புத்தமதம் இங்கு இழைத்த தீமை யாதெனினும் மாயா வாதம். 

வேதங்களிலும், உபநிடங்களிலும் 'மாயா' என்றால் அது பராசக்தியைக் குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய் என்றொரு வாதம் உண்டாயிற்று. இதனால் ஜகத் பொய், தேவர்கள் பொய், சூர்யா நட்சத்திராதிகள் பொய் (கிரஹங்களை ஆராதிக்கிறான்) பஞ்சபூதம் பொய், பஞ்சேந்திரியம் பொய், மனம் பொய், சைதந்யம் மாத்திரம் மெய்; ஆதலால், இந்த உலகத்துக் கடமைகள் எல்லாம் எரிந்து விடத்தக்கன, என்றதொரு வாதம் எழுந்தது. 

'இவ்வுலக இன்பங்கள் எல்லாம் அசாசுவதம்; துன்பங்கள் சாசுவதம் இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பத்தையும் தேடப் புகுதல் மடமையாகும். ஆகவே, எந்தக் கடமைகளையுஞ் செய்யப்புகுதல் வீண் சிரமமுமாகும்' என்ற கட்சி ஏற்பட்டது.

ஆனால் இவைகளை எல்லாம் துறந்துவிட்டதாக நடிக்கிறார்கள் அன்றி, இவர்கள் அங்ஙனம் துறக்கவில்லை. இவ்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை. கடமைகளைத் துறந்துவிட்டு சோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம்

(எவ்வளவு செல்வம் உள்ளவனும் தொழில் செய்யவேண்டும், சும்மா இருப்பது சுகம் அல்ல நம்மில் பலர் சும்மா இருப்பதற்காக செல்வம் எவ்வழியிலாவது  கொட்டாதா என்று பார்க்கிறோம்) 

அது மிக சுலபமுங்கூட, இந்த சோம்பேறித்தனத்தை பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. 

இவர்கள் கடமைகளைத் துறந்தனவரே அன்றி, இன்பங்களைத் துறக்கவில்லை. உணவின்பத்தைத் துறந்துவிட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை, ஸ்நான இன்பத்தை இவர்கள் துறக்கவில்லை, தூக்க இன்பத்தை இவர்கள் துறக்கவில்லை, கல்வி இன்பத்தை இவர்கள் துறக்கவில்லை, புகழின்பத்தைத் துறக்கவில்லை; உயிரின்பந்தத்தைத் துறக்கவில்லை; வாதின்பத்தை துறக்கவில்லை. இவர்களில் முக்கியஸ்தர்களான மடாதிபதிகள் பணவின்பத்தை துறக்கவில்லை.
இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது, பின் மாறுகிறதே எனில், மாறுதல் மாயையின் இயற்கை. 

மாயை பொய் இல்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் அழிக்கவேண்டியன, நன்மைகள் செய்வதற்கும், எய்துவதற்கும் உரியன. 

சரணாகதியால்-கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள்,எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். (வீடுபேறு / ஜீவன் முக்தி / அழியா நிலை/ ஆண்டவன் அருகே அமர்தல்) சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.

இந்த மகத்தான உண்மையே கீதை உபதேசிக்கிறது.

இப்படியாக பாரத்தின் பௌத்த மதப் பார்வையின் மூலம் நம்மை நாம் செல்லாத நம் வீட்டின் பல அறைகளுக்குள் அழைத்திச் செல்கிறான் பாரதி. மஹாகவி இவன் ஒரு விஞ்ஞானி, அதனால் தான் தொலைபேசி வரும்முன்னே காசியில் புலவராற்றும் உரையைக் காஞ்சியில் கேட்க கருவி செய்வோம் என்றான். இவன் ஒரு கவியோகி... நாம் அறிந்ததே. 

இவன் ஒரு பொருளாதார மேதை (சேதுவை மேல் நிறுத்தச் சொன்னான்) என்பதை மேலுள்ளக் கருத்துக் கூறும்.

தவறான மதம் எப்படி ஒரு நாட்டின் தர்மத்தைக் கெடுக்கும் என்பதை அப்போதே அறிந்தவன் ஆக இந்த தீர்க்க தர்சியை வேறுபலக் காரணத்தால் சில அரசியல் வாதிகள் ஒதுக்கலாம், வேறுபலக் (சமதர்மத்தைப் பற்றிய பாடல்களால்) காரணத்தால் அவனை நம்மவரே (ஹிந்துக்கள்) ஒதுக்கலாம். 

இவன் ஜீவர்களின் வரிசையில் நின்றதால், எல்லா ஜீவாத்மாவினுள்ளும் பரமாத்மாவையேப் பார்த்தான். 

வாழ்க வளர்க பாரதியின் புகழ்.
வாழ்க வாழ்க வாழ்கவே!
(எனது இந்த கட்டுரை ஏற்கனவே வகுப்பு அறையில் வெளி வந்தது..... இங்கு மறு பதிவாகுகிறது எனபதைத் தெரிவிக்கிறேன்)

நன்றி வணக்கம்,

அன்புடன்,
தமிழ் விரும்பி.

4 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அன்புடன் வணக்கம் ...
ஆலாசியம் !
அகம் மகிழ வாழ்த்துகிறேன்..

அருமையான ஆக்கம்...

அவன் - மகாகவியாயிற்றே
அதான் அற்பர்களை
அடையாளம் கண்டு
அன்றே நமக்காக சொன்னான்..

இன்று நாம் காணும்
இலங்கையின் கோர முகத்தை
இறையருளால் அன்றே கண்ட
இறைகவி எங்கள் பாரதி..

சந்நியாசிகள் வேடமிட்டு...
சமயத்தை(பௌத்த சமயம் )
சமயம் பார்த்து ..

அன்று அரசாண்ட
அரசர்களை வசியம் செய்து
அந்த பௌத்தத்தை வளர்த்தவர்கள்
அவர்கள்..

சங்கரன் அருளால் ஆதி
சங்கரர் நம் தாய்நாட்டை

நெறிபடுத்திய வரலாற்றை
நெறியோடு சொல்லியமைக்கு

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

Unknown said...

அன்புடன் வணக்கம் தோழரே!
தங்களின் அன்பிற்கும், வாழ்த்துக்களுக்கும்
நன்றிகள்... நண்பரே!

Unknown said...

பார்பணீய மதம் எப்போது இந்து மதம் என்று பெயர்மாற்றம் கண்டது? பூர்வகுடி மக்களுக்கு தெரியுமா?

பார்பணீய இந்து மதம் ,பூர்வீக இந்தியர்களை சூத்திரன் எனும் கீழ்சாதி நிலையில் வைத்திருப்பது அவர்களுக்கு தெரியுமா?

இந்தியாவில் முதல் பள்ளி ,மடங்கள் அமைப்புகளை நிறுவியது பௌத்த-சமணம் என்பது அவர்களுக்கு தெரியுமா?

அசோக பேரரசர் கட்டிய 84,000 பௌத்த விகாரங்கள் தற்போது சிவன் கோயில்களாகவும், பெருமாள் கோயில்களாகவும் மாற்றப்பட்டுள்ளது தெரியுமா??

தமிழன்னையின் அணிகலன்கள் என வழங்கப்படும் ஐம்பெரும்காப்பியங்கள் அனைத்துமே பௌத்த-சமண நூல்கள் என்று தெரியுமா?

பாராத மாதாவின் அசோக சக்கரம், இந்திய தேசிய சின்னம், அசோக தூண் ,ரூபாய் நோட்டில் பௌத்த விகாரங்கள், அரச மரம் அனைத்தும் இந்நாடு பௌத்த நாடு என்பதற்கான ஆதாரம்! இது தெரியுமா ?

பௌத்தம் அழியவில்லை மாறாக ,இன்றளவும் மக்களால் பின்பற்றப்படுகிறது -ஆனால்,அவை பௌத்தம் என்று தெரியாமலேயே!

இந்திய வரலாறு என்பது சமத்துத்தை போதித்த பௌத்தத்திற்கும், சாதி
உருவாக்கி மக்களை பிரித்த பார்பணீயத்திற்கும் இடையேயான போர் என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறியது நினைவில் இல்வையா??

பௌத்தம் மீள்கிறது! பார்பணீயம் மாள்கிறது!

(இக்கட்டுரையை படிக்கும் போது ஒன்று தெளிவாக புரிகிறது! நீங்கள் ஒரு தலைசிறந்த பார்பணீய அடிமை என்று)

Unknown said...

இலங்கையில் நம் தமிழ் மக்களை கொன்றது பௌத்த மதமல்ல! இலங்கை மனிதர்கள்! ராஜபக்சேவின் எதிரிகள்-இந்தியாவின் பௌத்தர்கள்!  நாங்கள்! பௌத்தத்தின் எதிரி அல்ல!  வெளிநாடுகளில் தான் பௌத்தம் தீவிர அரசு மதம்! அங்கெல்லாம் பார்பணீயம் இல்லை!

பௌத்தம் இந்தியாவின் தாய்மதம் ! பார்பணீயத்தை அழிக்கும் ஆயுதம்!

இந்திய வரலாறு என்பது சமத்துத்தை போதித்த பௌத்தத்திற்கும், சாதி
உருவாக்கி  மக்களை பிரித்த பார்பணீயத்திற்கும் இடையேயான போர் என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறியது நினைவில் இல்வையா??

பௌத்தம் மீள்கிறது! பார்பணீயம் மாள்கிறது!




Post a Comment