அற்புத எகிப்தியப் புரட்சி!
ஆஹா! அக்னிப் பொறியாய்த் தெரித்தது
அற்புத எகிப்தியப் புரட்சி!
எரிமலையாய் வெடித்தது - அங்கே
இந்த நவீனப் புரட்சி!
கட்டொழுங்கின் கரம் பிடித்தே
ஒற்றுமைக்குப் பரிசளித்தது
மக்களாட்சி என்னும்
ஜனநாயக மறுமலர்ச்சி.
ஹிம்சை பொறுக்காது,
ஹோசினி முபாரக் ஆட்சியை,
அஹிம்சை வழியிலே
அடியோடுப் பெயர்த்தெடுக்க
ஆஹா வென பொங்கி
வெடித்த அற்புதப் புரட்சி!
திட்டமிடவில்லை; செயல்முறைக்
கூட்டம் போடவில்லை - மக்கள்
கோரிக்கைகளை தூரிகை கொண்டு
அடிக்கோடிட்டு வரையவுமில்லை!.
டுயூட்டார் இல்லை டுவிட்டர் உண்டு
டுவிட்டிங் செய்யும் பறவைகளாய்
ஒன்றுகூடி ஒற்றுமையுடனே
குக்கூ குக்கூ என்றே கூகுளில் புகுந்து
குழுவை அமைத்தே டுவிட்டிங் செய்தே
கொள்ளைக் கூடாரத்தை கூண்டோடு
விரட்டியோரே, பொறி கிளம்பியதங்கே.
டுனுசியாவில் அங்குமோர் வாஞ்சிநாதன்
“முகமது வுவாசி” மூர்க்கமான ஆட்சிதனை
முடிவுக்கு கொண்டுவர தனது
மூச்சையே நிறுத்திக்கொண்டான்
ஐயகோ! இனி நான் என்ன செய்வேன்?,
எங்கு போவேன்? என்றவனைப்
பெற்ற அந்த ஏழைத்தாயின்
குமுறலில் தெறித்த தீப்பொறி…
தான் ஈன்ற பிள்ளையொன்றை
தகையரியா அதிபராட்சி என்னும்
அரக்கனிடம் பலிகொடுத்தப் பின்
அடிவயிறு பற்றி யெரிய
ஆவேசம் பொங்கி அதுதானும்
இருட்டான கருவறையில் இருந்து
எரிமலையாய் வெடித்துச் சிதறி
வெங்கனலாய் தெறித்த தீப்பொறி...
வெட்டெனவே, பட்டனவே,
சட்டெனவே, தீ மொட்டெனவே
வெஞ்சினம் கொண்டு வெகுண்டு எழுந்து;
வெடிகுண்டாய் வெடித்துச் சிதறிய
சுதந்திரத் தீப்பொறி…
எங்கும் பரவி எகிப்துவிலும்
தெரித்ததுவே!
ஒன்று நூறாய், நூறு ஆயிரமாய்,
ஆயிரம் பல்லாயிர மாயிரமாய்…
தாரீர் சதுக்கத்திலே விடுதலைத்தாரீர் என்றே
திரண்டதோர் மக்கட் கூட்டம்
தீங்கிலா சுதந்திரம் கேட்டே
பதினெட்டு நாட்கள் தாம் மக்கள்
படை வெள்ளம் அங்கேக் கூடியது
பாங்கிலா சர்வாதிகார ஆட்சி
பாங்குடனே அகற்றிடவே.
அகிம்சைப் புரட்சி என்றாலும் அதை ஆரம்பிக்க
அங்குமோர் கொடிகாத்தக் குமரன் நின்றான்.
"காலித் சையத்" விடுதலை விரும்பி அவனை
காவுகொடுத்தே அந்த அஹிம்சைப் புரட்சியும்
ஆரம்பம் ஆனது...
அவன் சிந்திய செங்குருதியில் பெருகியச் சிவப்பு
அணுக்களாய் மக்கள் வெள்ளமும் பெருகி வழிந்தது
அதுதானும் விடுதலை என்னும் பொழுதும் விடிந்தது.
வரலாற்று அதிசயம் இதுஎகிப்திய சகோதரர்களே
உங்களுக்கு எப்படி சாத்தியமானது என்று
சத்தியமாகச் சொல்லுங்கள்.
தலை வனில்லாப் புரட்சியால் மட்டுமே - சடுதியில்
ஜனநாயகம் மலரும் என்ற அற்புத வித்தையை
எங்கு கற்றீர்!
தலைவனாக யாரும் இல்லாவிட்டால் என்ன?
உங்கள் கட்டொழுங்கே தலைமை ஏற்று விட்டபோது!
எகிப்திய சகோதரர்களே! எங்கு கற்றீர்கள்
இந்தக் கட்டொழுங்கை.
மனித சமூகத்தை ஏற்றம் பெறச் செய்யும்
அவசியத்தை.
வேள்வித் தீயாய்! போராட்டம் ஒருபுறம்.
இந்தச் சாக்கில், காட்டுத் தீயாய்!
கொள்ளைக் கூட்டம் மறுபுறம்.
இருபுறமும் பற்றி எரியும் இந்தத் தீயில்
சாதுரியமாய், செளகரியமாய்…
வேட்கையோடு வேள்வித் தீயைப் பெருக்கி
விவேகத்தோடு காட்டுத் தீயை அணைத்து
சரித்திரம் படைத்து விட்டீர்!
சர்வாதிகாரப் பேயை சவுக்கால் அடித்து
விரட்டி விட்டீர்!
உலகம் கண்ட புரட்சிகளிலே
இப்படி ஒரு அற்புதம்
இதுவரை நிகழ்ந்தது இல்லை.
எங்கள் அருமை சகோதரர்களே
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
அதில் நீங்கள் அனைவரும்
சமம் என்பது உறுதியாச்சு!
சுகந்தமான சுதந்திரக் காற்றை
சுவாசிக்க ஆயத்தமாகுங்கள்
வசந்தகாலம் இல்லம் புகுந்து
இன்பமூட்ட இதயக் கதவைத்-
திறந்து வையுங்கள்.
உலகறிவு உண்மை அயராத உழைப்பு
நியாயம் தியாகம் செயல்வேகம்
யாவும் கொண்ட எங்கள் சிங்கை
தலைவர்களைப் போல்
உங்களில் பலரை அடையாளம் கண்டு
மக்கள் மன்றம் ஏற்றுங்கள்.
செங்கை கொடுக்க எங்கள் சிங்கை
அரசும் நட்போடு விரைந்து வரும்
தொழில் பெருக்குவோம் - தூய
நல்வெளி உருவாக்குவோம்!.
உயர்வு நிச்சயம் எங்களைப் போல நீங்களும்
உலக அரங்கில் விரைவில் ஒளிர்வது
நிச்சயம்! நிச்சயம்!! நிச்சயம்!!!
வாழ்க ஜனநாயகம்! வளர்க மனித நேயம்!!
2 comments:
அருமை தோழரே.
எகிப்துக்கு கிடைத்த பாரதியாரோ ?
எகிப்திய புரட்சியை நடந்ததை நடந்தபடி கண்முன்னே
காட்டியிருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள்..
எவ்வளவு திறமை தங்களிடம் ஒளிந்து கிடக்கிறது ?
அவ்வளவையும் வெளிக்கொணருங்கள்
இவ்வளவு போதாது இன்னும் வேண்டும் வேண்டும்
என நாங்கள் படித்து மகிழ்கிறோம்..
நன்றி..
மானுட சுதந்திரம் எவ்வளவு மகத்தான ஒன்று என்பதை தாங்களும் அறிந்தவரே...
அப்படிப் பட்ட சுதந்திரம் எங்கு யாருக்கு கிட்டினும் நம் போன்றோர் கொண்டாட வேண்டியதே.... பூலோக சொர்கத்தில் வாழும் நம் போன்றோர் விடியலை நோக்கி பயணப் பட்டு சுதந்திர காற்றை சுவாசிக்கும் போது மலர் கொத்து கொடுத்து நாம் அவர்களை வரவேற்ப்போம் அதில் என்னோடு தாங்களும் கைகோர்த்து சேர்ந்ததில் எனக்கு மற்றற்ற மகிழ்ச்சியே....
தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் தோழரே!
Post a Comment