பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Thursday, 7 July 2011

காக்கைக் கூட மேலேப் பறக்க பயந்தக் கோட்டை எது? - இரண்டாம் பகுதி.


சென்றப் பதிவின் தொடர்ச்சி...

தனாதிபதி ஊருக்குத் திரும்பினார்...
ஊருக்குத் திரும்பி, தனது மகன் வெள்ளைச்சாமிக்கு கல்யாண ஏற்பாடு செய்து வரும் வேளையில், பிள்ளை கட்டபொம்முவிற்கு பாக்கு வைத்து , கல்யாணச் செலவிற்கு நெல்லும் கேட்டார். விளைச்சல் இல்லை, களஞ்சியத்தில் நெல்லும் இல்லை.

சேத்தூர் சிவகிரியில் பணம் கொடுத்து நெல் வாங்கிக் கொள்ளலாம் என்ற கட்டனுக்கு, பிள்ளை ஸ்ரீ வைகுண்டத்தில் நெல் வம்பாகக் காத்துக் கிடக்கிறது. அதில் எந்தவித பணமும் இல்லாமல் பெறமுடியும் என்றால் பெற்றுக் கொள்ளலாம் என்றதற்கு, பொம்முவும் சரி எனவே. 

பிள்ளையும், படைசனங்களும் கும்பநியாருக்கு சொந்தமான நெல்லை அளக்க விரைந்து, அங்கே காவலுக்கு நின்ற பாண்டியத் தேவனுடன் சண்டையிட்டு அவனையும் கொன்று நெல்லை சூறையாடி வந்தனர்.     

நடந்த நிகழ்வுக்கு கட்டபொம்மன் வருந்தினான். ஊமைத்துரை பிள்ளைக்கு ஆதராவாக நின்றான். இறந்த பாண்டியத் தேவனின் புகாரால், தனாதிப் பிள்ளையை வெள்ளையர்களிடம் ஒப்படைக்க வேண்டினர்.

ஊமைத்துரை கிஸ்தியை வேண்டுமானால் இரட்டிப்பாகத் தரலாம், பிள்ளையை ஒப்படைக்க முடியாது என்றான். அதுவே இரு பாலருக்கும் சண்டை மூள மீண்டும் காரணமானது. வெள்ளையர் பக்கம் பிறக் கட்டும், காலனும் பிரபலமானவர்கள்.  அது போல் இங்கு ஊமைத்துரையும், அவனின் உயிருக்கு உயிரான வெள்ளையன் வெள்ளையனும் பிரபலமானவர்கள்.

போகாதே போகாதே என் கணவா!
பொல்லாத சொப்பனம் நானும் கண்டு விட்டேன்.

என்று வெள்ளையன் மனைவி தடுப்பதாகவும் அதற்கு வெள்ளையன்.

போகவிடைதர வேண்டுமடி!
போகத்தடை செய்தால் கோபம் வரும்
என்புத்தி கேட்பவர் கோடியதில்
பெண்புத்தி கேட்பேனோ பாதர் வெள்ளை?
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து 
உலகில் உயிர் வாழலா மோ?

என்று பொங்கி எழுவதையும் நாட்டுப் பாடலில் காண முடிகிறது. பெரும்பாலும் இவைகளை நாம் திரைப் படத்திலே பார்த்து இருக்கிறோம்.

சண்டை நடந்தது வெள்ளையனும், கந்தன் பகடை முதலியோரும் கொல்லப் பட்டனர். ஆயினும் கோட்டைத் தகரவில்லை.

தனாதிபதியின் யோசனைப் படி கோட்டையை விட்டு இருட்டோடு இருட்டாக ஓடி நாகலாபுரத்தில் தானாதி பிள்ளையும் கட்டபொம்மன் சகோதரர்களுக்குத் தகவல்க் கூற  வசதியாக இருக்கும் என்றும்.

பொம்மு சகோதரர்கள் புதுக்கோட்டைக்குச் செல்லத் தீர்மானித்து வழியிலே ஊமைத்துரை சிவகங்கை சென்றுவிட்டான்.

கட்டபொம்மன் புதுக்கோட்டை சென்று தங்கிய விஷயம் புதுகை மன்னரின் ஆங்கிலேய பக்தியாலோ?, பயத்தினாலோ? தங்க இடம் தந்தவர்களே வெள்ளையர்களுக்கு சொல்லியும் அனுப்பினார்கள்.  இது எந்த சூழலில் நடந்தது என்பதை கூற முடியவில்லை.

இருந்தும் இவ்விடத்தே இன்னொன்றையும் கூற வேண்டும். இந்திய சுதந்திரத்திற்கு பின்பு இந்திய சமஸ்தானங்கள் சர்தார் வல்லபபாய் படேலின் முயற்சியில் ஓன்று சேர்க்கப் பட்டபோது, இந்தியாவில் உள்ள அனைத்து சமஸ்தானகளைச் சேர்ந்தவர்களையும் கணக்கில் கொண்டுப் பார்த்தல்.

அதே புதுக்கோட்டை மன்னர் பரம்பரையில் வந்த, புதுக்கோட்டை சமஸ்தான ராஜா ராஜகோபாலத் தொண்டைமான் அவர்கள் தான் கை சுத்தமாக அத்தனை உடமைகளையும் சுரண்டாமல் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்கள்.

அதோடு இனி இந்த மண்ணின் எல்லைக்குள் நான் கால் பதிக்க மாட்டேன் என்று கூறி கடைசி நாள் வரைக் கடை பிடித்தாராம்.

கட்டபொம்மு சகோதரர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் நடந்த சண்டையை உற்று நோக்கினால் காரணம் புரியும். இருந்தும் பின்னாளில் இந்த நிகழ்வுகள் எல்லாம் நமது சுதந்திர வேள்விக்கு நெய் விட்டது என்பதை மறுப்பதற்கில்லை. எதுவானாலும் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அந்தச் செயல் நியாயப் படுத்த முடியாது, கூடாததும் ஆகும்.

ஆக்னியூவிற்கு விஷயம் தெரிந்து, கட்டன் சிறை பட்டான், ஊமைத்துரையையும் வரவழைத்தால் பிரச்னையை சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்ற சூழ்ச்சியில் அறியாது; இலக்கய நாயக்கன் மூலம் சென்ற செய்தியால் ஊமைத்துரையும், அதே நேரம் பிள்ளையும் பிடிபட்டார்கள்.

பிள்ளையின் வழக்கு மேஜர் பானர்மென் முன் வந்து அவர் தூக்கில் இடப் பட்டு அவரின் தலை பாஞ்சாலன் குறிச்சி கோட்டை வாசல் கொடிமரத்தில் செருகப் பட்டது.

கட்டபொம்முவும் கயத்தாறில் 1799 .ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 - 16 . ஆம் தேதி தூக்கிலடப் பட்டான். கோட்டையும் தரை மட்டமாகிவிட்டது. ஊமைத்துரையும், மற்றவர்களும் பாளையங்கோட்டையில் சிறை வைக்கப் பட்டனர்.

வீரச் சிங்கம் ஊமைத்துரை தனது வன்புலிக் கூட்டத்தோடு சிறையில் இருந்து தப்பி, கோட்டை எழுப்பி மீண்டும் போருக்குத் தயாரானது.  

பானர்மென் போய் இப்போது பிற்கட் தான் மீண்டும் ஊமைத்துரை மீது போர் தொடுத்தான்.

கோட்டை சிறிதும் தகரவில்லை. பதநீர், கம்பு உமி, கம்பங்கூழ் ஆகியவைகள் கலந்துக் கட்டிய அக் கோட்டைத் தகரவில்லை. போர் நீடித்தது.
வெள்ளைச் சேனாதிபதி ஒரு அறிவுப்பு விடுத்தார். தொடர்ந்து எட்டுநாள் போரிடுங்கள், ஊமைத்துரை வீழாவிடில் "ஊமைத்துரையை "தெட்சிண நவாபாகப் பிரகடனப் படுத்துங்கள்" என்ற அறிவிப்பு தான் அது.

சிங்கத்திற்கு நரி பட்டம் கட்டவா? கட்டனையும், பிள்ளையையும் பறிகொடுத்துவிட்டு பட்டம் சூட்டுவதா? என்று ஆவேசப் பட்டு வெள்ளையரின் சூழ்ச்சியில் அகப் பட விரும்பவில்லை என்று குமுறுனினான்  ஊமைத்துரை.

சண்டை நடந்தது, நிலைமை முற்றியதும் கோட்டையை விட்டு தப்பித்து சிவகங்கை மருது சகோதர்களிடம் சென்று சேர்ந்தான். வெள்ளையர்கள் இதனால் சினமுற்று மருது சகோதர்களை திருப்பத்தூர்க் கோட்டையில் தூக்கிலிட்டனர். ஊமைத்துரையை பாஞ்சாலங்குறிச்சி கொண்டு வந்து பீரங்கி மேட்டில் தூக்கிலிட்டனர். கோட்டையும் தகர்ந்தது.

காகம் பறக்காத கோட்டைக்கு மேலே காகமும் பறந்தது, கழுகும் பறந்தது

இருப்பினும், அன்று கட்டபொம்மு வெள்ளையர்களை  எதிர்த்தது தங்களது நிலபிரபுத்துவத்திற்கு பங்கம் வரக் கூடாது...... 

மாறாக சுதேசியச் சிந்தனை இல்லை என்பதை நாம் அறிய முடிகிறது இருந்தும் ஊமைத்துரைக்கு வெள்ளையர் என்றால் வெறுத்துத் தள்ளினான்
என்று சொல்வோரும் உண்டு.

கட்டபொம்முவும் வீரத்திலும் வலிமையிலும் சளைத்தவனில்லை என்றாலும், கம்பனியாரிடம் ஒத்துப் போக வழி கிடைத்தால் அதை பயன் படுத்தத் தயாராக இருந்தான் என்று நிகழ்வுகள் எண்ணவும் தோன்றுகிறது.

ஆனால் ஊமைத்துரையும், தனாதிபதி பிள்ளையும், சண்டைவரப் போவதை முன்கூட்டியே உணர்ந்தவகளாயும், இருந்தும் அதைத் துரிதப் படுத்தி இரண்டில் ஓன்று பார்த்துவிடவேண்டும் என்றே ஆத்திரப் பட்டதாகவும் தெரிகிறது. 

பாஞ்சாலன் குறிச்சி வெள்ளையர்களின் சிம்மச் சொப்பனமாக இருந்திருக்கிறது. அதை தரை மட்டமாக்கியதோடு அல்லாமல் கோட்டை இருந்த இடத்தில் காட்டு ஆமணக்கை விதைத்து அந்த இடத்தை காடாக்கியதோடு அல்லாமல், அப்படி ஒரு ஊரே இருந்ததாக இல்லாமல் வரை படத்தில் இருந்தே நீக்கியதாம் வெள்ளையர் கொடும் அரசு.

சூரியனை கைகளால் மறைக்க முடியாதது போல் கட்டபொம்மு சகோதரர்களின் புகழை மறைக்க முடியவில்லை. கட்டபொம்மு சகோதரர்களின் புகழை மக்கள் பாட்டால் இசைத்தார்கள். அவர்கள் இருவரையும் தெய்வமாகக் கும்பிடுகிறார்கள்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாற்று புளியமரத்தின் அடியில் மக்கள் அவ்வழி போகும் போது கற்களைக் குவித்துக் கொண்டே வந்தார்கள். அதுவும் மக்களின் வீர வணக்கத்தைத் தான் காட்டுகிறது.

பின்னாளில் தமிழக அரசு அங்கு ஒருக் கட்டிடம் கட்டி கட்டபொம்முவின் கோட்டையையும் அவர்களின் வீரத்தையும் ஞாபகப் படுத்திக் கொண்டு இருப்பதை நான் 1986 ஆண்டு அங்கு சென்றபோது கண்டு வந்தேன்.

பழையக் கோட்டையின் வரை படம் பிரமிக்க வைக்கிறது. நான் அங்கு சென்றபோது தமிழக அரசு எழுப்பிய நினைவுக் கட்டிடத்தில் பாதுகாவலுக்கு இருந்த நபர் தனது மாத சம்பளம் மிகவும் சொற்பம் என்று கூறி எங்களிடம் வருத்தப் பட்டார். இன்று அந்நிலை மாறி இருந்தால் மகிழ்ச்சியே.


இன்றும் அந்த மண்ணிற்கு வீரம் உண்டு என்றே அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். அதனால் அப்பகுதித் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு கொடுக்கும் சேனைகளில், அந்த மண்ணில் கொஞ்சமாது கலந்து கொடுக்கிறார்கள். இன்றளவும் அது வழக்கத்தில் இருக்கிறதாம். 

கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும் ஈன்று எடுத்த அதே மண்ணில் தான் செக்கிழுத்தச் செம்மல், கப்பலோட்டியத் தமிழன் நமது வ.வு.சி.யும் அவதரித்தார் என்பதும் அப்பூமிக்குப் பெருமை அளிப்பதாகும்.


 
"காலனும் காலம் பார்க்கும்பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!" 

இந்தப் புறம் கூறும் வேந்தன்???...

வீரத்தில் கட்டபொம்மனையும் விஞ்சியவன் ஊமைத்துரை!...
அதனால் தான் "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்றார்கள் போலும்.  

தன்மானமும் வீரமும் தமிழனின் சொத்து

வியாபாரிகளாகப் புகுந்து நம்மையே அடிமையாக்கிய வெள்ளை ஏகாதிபத்தியத்தை, அடிமைப் பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்டு எடுக்க எத்தனையோ பெரும் தியாகிகள் தங்களது உயிரை துச்சமென நினைத்து நாட்டிற்காக போராடி உயிரும் துறந்தார்கள் அவர்களின் வரிசையில் மறக்க முடியாதவர் தன்னுயிரையே நாட்டுக்கு அர்பணித்த இளைஞன் நம் செந்தமிழன், செங்கோட்டைச் சிங்கம் வாஞ்சிநாத ஐயரின் நூறாவது நினைவு நாள் சென்ற ஜூன் - 17 . 2011. அந்த வீரனையும் இந்தத் தருணத்தில் மரியாதையுடன் வணங்குவோம்.

வாஞ்சிநாதனைப் பற்றிய விரிவானத் தகவல்களையும், அவரால் சம்காரம் செய்யப் பட்ட ஆஷே - யின் கொள்ளுப் பேரன் ஜூன் 15 – 2011- ல் எழுதிய கடிதத்தையும் கீழ்காணும் நமது பாரதிபயிலக வலைப் பதிவில் காணலாம்.

செக்கிழுத்து, கல்லுடைத்து, சிறைவாசமும், வனவாசமும் கொண்டு ஏன்? எத்தனையோ பலத் தியாகிகளின் இன்னுயிரையும் பலிகொடுத்து சுதந்திரம் வாங்கியாச்சு.

பாரதியும் முன்பே அதை தீர்க்கதர்ஷனத்தால் கண்டும் பாடி விட்டு சென்றான்.

கும்மியடி! தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!

இப்போது வாங்கிய சுதந்திரம் என்னாச்சு???... மீண்டும் சிந்திப்போம்.

நன்றி வணக்கம்.
அன்புடன்,
தமிழ் விரும்பி.




9 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் ஆலாசியம் அவர்களே,

வீரபாண்டிய கட்டபொம்மனை நெஞ்சில் சுமப்போருக்கு தங்களது இந்த ஆக்கம் ஒரு பெரிய பேரிடியே ஆகும்..

உயிரோடு இருக்கின்றவருடைய நற்பண்புகளையே பேச வேண்டும் - தீமையை புறந்தள்ள வேண்டும் என்பது ஒரு மரபு..

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்கக் கொளள்

என்பது வான்புகழ் வள்ளுவம்..

தாங்கள் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பெருமை சேர்க்காவிட்டாலும் போகிறது..
சிறுமையை தேடித் தராமல் இருக்கலாமே ?


இவ்விடத்தில் தாங்கள் சற்று சறுக்கிவிட்டீர்களோ என்று தோன்றுகிறது..

இதுபோன்ற தகவல்கள் கூட இருந்தே குழிபறிக்கும் குள்ள நரி கூட்டத்திற்கும்,

எப்போது அண்ணன் சாவான் திண்ணை காலியாகும்
என்று காத்திருப்போருக்கும..

எப்போதடா இந்த நாட்டை பழிசுமத்திடலாம் எனக் காத்திருக்கும் கயவர்களுக்கும் கருத்தாகாதா ?

என்னமோ எனக்கு இது சரி என்று படவில்லை தோழரே..

( நேத்தே எனக்கு சந்திராஷ்டமம் முடிந்துவிட்டது என்ற நம்பிக்கையோடு )

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

உயிரோடு இருக்கின்றவருடைய நற்பண்புகளையே பேச வேண்டும் - தீமையை புறந்தள்ள வேண்டும் என்பது ஒரு மரபு..

இதில் இறந்து போனவரை பற்றி பேசுவது - அதுவும் தவறான ( அவரிடத்திலிருந்து தவறுகளை ) தகவல்களை தருவது தவறு என்பது என் கருத்து...

Unknown said...

////சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…
உயிரோடு இருக்கின்றவருடைய நற்பண்புகளையே பேச வேண்டும் - தீமையை புறந்தள்ள வேண்டும் என்பது ஒரு மரபு..////

////பிள்ளையும், படைசனங்களும் கும்பநியாருக்கு சொந்தமான நெல்லை அளக்க விரைந்து,அங்கே காவலுக்கு நின்ற பாண்டியத் தேவனுடன் சண்டையிட்டு அவனையும் கொன்று நெல்லை சூறையாடி வந்தனர்.

நடந்த நிகழ்வுக்கு கட்டபொம்மன் வருந்தினான்////

/////கட்டபொம்மு சகோதரர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் நடந்த சண்டை.............................. இருந்தும் பின்னாளில் இந்த நிகழ்வுகள் எல்லாம் நமது சுதந்திர வேள்விக்கு நெய் விட்டது என்பதை மறுப்பதற்கில்லை////

////கட்டபொம்முவும் வீரத்திலும் வலிமையிலும் சளைத்தவனில்லை என்றாலும்,கம்பனியாரிடம் ஒத்துப் போக வழி கிடைத்தால் அதை பயன் படுத்தத் தயாராக இருந்தான் என்று நிகழ்வுகள் எண்ணவும் தோன்றுகிறது./////

//////சூரியனை கைகளால் மறைக்க முடியாதது போல் கட்டபொம்மு சகோதரர்களின் புகழை மறைக்க முடியவில்லை. கட்டபொம்மு சகோதரர்களின் புகழை மக்கள் பாட்டால் இசைத்தார்கள். அவர்கள் இருவரையும் தெய்வமாகக் கும்பிடுகிறார்கள்./////

////கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும் ஈன்று எடுத்த அதே மண்ணில் தான் செக்கிழுத்தச் செம்மல், கப்பலோட்டியத் தமிழன் நமது வ.வு.சி.யும் அவதரித்தார் என்பதும் அப்பூமிக்குப் பெருமை அளிப்பதாகும்.////

அன்புடன் வணக்கம்,

மேலேக் கோரிய அத்தனை இடங்களிலும் வீரபாண்டிய கட்டபொம்மன் முதலில் அன்பு, சுற்றம் தழுவல், வீரம் அதனையும் மிஞ்சும் விவேகம், தன் மானம், மக்கள் மனதில் தெய்வமாக நிற்கிறார் என்ற சிறப்பு இவை யாவும் எப்படி உண்மையோ... அதைப் போல சில நடந்த உண்மைகளை நாம் கூர்ந்துக் கவனிக்கும் போது நமக்கு தோன்றுவது நடந்த நிகழ்வுகளும், உண்மையும் தானே...

//////இருப்பினும், அன்று கட்டபொம்மு வெள்ளையர்களை எதிர்த்தது தங்களது நிலபிரபுத்துவத்திற்கு பங்கம் வரக் கூடாது என்பதாகவே.

“மாறாக சுதேசியச் சிந்தனை இல்லை என்பதை நாம் அறிய முடிகிறது இருந்தும் ஊமைத்துரைக்கு வெள்ளையர் என்றால் வெறுத்துத் தள்ளினான்”//////
####இருந்தும் பின்னாளில் இந்த நிகழ்வுகள் எல்லாம் நமது சுதந்திர வேள்விக்கு நெய் விட்டது என்பதை மறுப்பதற்கில்லை#####
சுதேசிய சிந்தனை எப்போது வரும்? தானும், தன்னைச் சார்ந்தர்வர்களும் இனம், நாடு , மொழி என்று எதோ ஓன்று அவதிக்கு உள்ளாகும் போது தான்.. அப்போது எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து நீதிக்குப் போராடுவது.. இந்திய நமது நாடு அதில் வெள்ளையன் என்ன இங்கு வது நீதி சொல்வது என்ற சிந்தனை நாம் இற்று கூறு இந்திய சுதேசிய சிந்தனை....

இதில் பொம்மு சகோதரர்களின் வெள்ளைய எதிர்ப்பும் பின்னாளைய விடுதலைக்கு உரமானது என்பது உண்மையே.... வெள்ளையனை இந்தியாவை விட்டே வெளியே அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் பாமரன் மனதிலும் படித்தவன் மத்திலும் ஒட்டு மொத்தமாக வந்ததே அது தான் முழுமையான சுதேசிய சிந்தனை......

கட்டபொம்மன் ஒரு மன்னன் அவனுக்கென்று தனி நாடு இருந்தது அவனைப் பொறுத்தவரையில் அவனின் மண்ணும் மக்களும் அவனின் உயிராகத் தான் இருதிருக்கும் என்பதில் நமக்கு ஐயமில்லை.... அதே நேரம் அந்தக் காலங்களில் இந்தியத் துணைக் கண்டம் என்றத் தனி நாடு அது நமதுத் தாய் நாடு என்று எண்ணத் தோன்றி இருக்காது.. பக்கத்தில் இருக்கும் எட்டயபுர சமஸ்தானத்தையே எதிராகப் பார்க்கவேண்டிய நிலை. அவர் ஒரு மன்னர்...

முதலில் மன்னராட்சித் தத்துவம் என்றால் என்ன... அது மக்களாட்சிக்கு நேரெதிரானது... ஆக அவர் மன்னர் என்பதால் அந்த மன்னராட்சி தர்மம் தவறாமல்.. மேலும் ஒரு நல்ல மனிதருக்கு இருக்க வேண்டிய அத்தனை குணா நலன்களும் பெற்றிருந்தார் என்பதுவும் உண்மையே.

ஆக அந்த நோக்கிலும் நடந்த வரலாற்று நிகழ்வுகளும்... அவர் ஒரு சிறந்த மன்னர் என்பதும் தான்.... நாம் அப்படி ஒரு எண்ணத்திற்கு வர ஏதுவாக முடிகிறது... மனிதன் தெய்வமாகிறான் சில நூற்றாண்டுகள் கடந்தும் தெய்வமாக வணங்கப் படுகிறான் என்றால் அதைவிடப் பெருமை என்ன இருக்கிறது.. இதிலே வீரனை அதிலும் எந்த சூழலிலும் விவேகத்துடனும் நடந்த தவறுக்கு விசனப் படுகிரவனுமான... வீர பாண்டியக் கட்டபொம்மனை நான் ஒரு போதும் குறைத்துக் கூற முயலவில்லை.

அப்படித் தோன்றினால் அதற்காக நான் நிபந்தனை அற்ற மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மன்னன் வீரன் எல்லா குணா நலன்களும் இருந்து நாட்டை செம்மையாக நடாத்தியன் என்பதில் ஐயம் இல்லை.

எல்லோருடைய வாழ்விலும் சில சூழ்நிலை சறுக்கல்கள் இருக்கும் அதை பற்றிய சிந்தனை சில நேரங்களில் வரும்... அதைக் கூறுவது அவர்களைப் பழிக்க அல்ல... நமது முப்பாட்டன்களின் வாழ்வு நமக்கு ஒருப் பாடம் என்பதை நான் நம்புகிறேன் அவர்களை மூன்றாவது மனிதர்களாகப் பார்த்தால் அது வேறு விதமாகத் தோன்றலாம்...
தங்களின் கருத்திற்கு நன்றிகள் நண்பரே!

அன்புடன் வணக்கம்.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

தங்களுடைய கருத்துக்களில் + மேற்கோள்களில் குற்றமில்லை தோழரே..

எனினும் சில விசயங்களை நாசூக்காக கையாளலாம் என்பது எம் கருத்து..

நன்றி...

Unknown said...

////சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…
தங்களுடைய கருத்துக்களில் + மேற்கோள்களில் குற்றமில்லை தோழரே..

எனினும் சில விசயங்களை நாசூக்காக கையாளலாம் என்பது எம் கருத்து..////

அன்புடன் வணக்கம் தோழரே!
தங்களின் கருத்தை மதிக்கிறேன்...
மேலும், அன்பிற்கும், கருத்திற்கும்
நன்றிகள் நண்பரே!

Thanjavooraan said...

தங்கள் மின்னஞ்சல் பார்த்தேன். தாங்கள் எழுதியுள்ள கட்டபொம்மன் குறித்த கட்டுரையையும், அன்பர் ஜானகிராமன் அவர்களின் கருத்தும் கண்டேன். இது குறித்து என் கருத்தையும் கேட்டு எழுதியதாக நினைக்கிறேன். உங்கள் வலைப்பூ மிக நன்றாக வந்து கொண்டிருக்கிறது. பாரதி பற்றிய தங்கள் கட்டுரைகள் மிக அருமையாக வந்திருக்கின்றன. இந்த கட்டபொம்மன் கட்டுரை பற்றி நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்கள் கட்டுரை பற்றி பின்னர் வருகிறேன். "வீரபாண்டிய" எனும் அடைமொழியை கட்டபொம்மனுக்கு வழங்கியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. கட்டபொம்மு நாயக்கர் என்று வழக்கில் வழங்கிய சொல். அவர் மன்னன் அல்ல, ஒரு பாளையக்காரர். ஆற்காடு நவாப், ஹைதராபாத் நிஜாமிடம் தென் தமிழ்நாட்டில் வரி வசூல் செய்யும் உரிமையைப் பெற்றான். ஆங்கில கம்பெனியார் காலத்திலும் அந்த வரி வசூலை நவாபுக்காக பாளையக் காரர்கள் செய்தார்கள். பாளையக்காரர்கள் என்றும், சில பகுதிகளில் ஜமீன் தார்கள் என்றும் வழங்கப்பட்ட இவர்கள் சிறு படை வைத்துக் கொள்ளவும், தங்கள் எஜமானர்கள் ஏதாவது போரில் ஈடுபடும்போது அவர்களுக்கு செலவுக்குப் பணமும், படையும் கொடுக்க வேண்டியது பாளையக்காரர்கலின் கடமை. நிஜாமிடமிருந்து உரிமைகளை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பெற்ற போது ஆற்காடு நவாப் கம்பெனிக்காரர்களை பாளையக்காரர்கள் பக்கம் கை காண்பித்து விட்டான். எனவே கம்பெனியார் அவர்களை கப்பம் கட்டச் சொல்லி வற்புறுத்தினார்கள். அப்படி பல பாளையத்தார் கப்பம் கட்டி தங்களை அடிமைகளாக பிரகடனப் படுத்திக் கொண்ட நேரத்தில் பாஞ்சாலங்குறிச்சி தலைவன் மட்டும் மறுத்தான். கம்பெனியார் நெருக்கடி கொடுத்தனர், மிரட்டினர், படைபலம் கொண்டு அவனை அடிமைப் படுத்த நினைத்தனர். அப்போது அவனது தற்காப்புக்காகவும், சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும் போரிட நேர்ந்தது. சொந்த ஜனங்கள், அண்டைய பாளையக்காரரான எட்டப்ப நாயக்கர் காட்டிக் கொடுக்க கட்டபொம்மனும் அவன் தம்பி ஊமைத்துரையும் ஆங்கில கம்பெனியாரிடம் வீழ்ந்தனர். வீரமரணம் எய்தினர். இதுதான் வரலாறு. இதில் இவர்களிடம் அமைச்சராக இருந்த தானாபதி பிள்ளை கொள்ளையடித்தார் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் அவர் எந்த சந்தர்ப்பத்தில், யாருக்காக அந்த செயலைச் செய்தார் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் உண்டு. அவர் மரியாதைக்குரியவர். பண்பாடு உள்ளவர். அவர் செய்கையில் நியாயம் உண்டு. இதையெல்லாம் வைத்துக் கொண்டு ஆங்கில ஆதரவு சரித்திர ஆசிரியர்களும், அவர்கள் அடியொற்றி எழுதிய நம்மவர்களும் கட்டபொம்மனை ஒரு கொள்ளைக் காரனாக வர்ணித்து எழுதினர். நம் காலத்தில் வாழ்ந்த தமிழ்வாணன் ஒரு விளம்பரப்பிரியர். தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்காக ம.பொ.சி. கட்டபொம்மனை பெருமைப் படுத்தி எழுதிய போது, அவன் ஒரு கொள்ளைக்காரன், நெய்க்கட்டாஞ்சேவல் பூலித்தேவன் தான் வீரன் என்றெல்லாம் எழுதினார். அவை வரலாறு அல்ல. எனவே கட்டபொம்மனைப் பற்றி பலரும் தவறாக எழுதி வந்த காலத்தில், அவன் வரலாற்றை சற்று மெருகூட்டி விடுதலை வீரனாகக் காட்டினார் ம.பொ.சி. எப்படிப் பார்த்தாலும் ஆங்கில கம்பெனியை எதிர்த்துப் போராடி, தூக்கில் தொங்கிய அவன் மாவீரந்தான். அவன் வீரத்தையோ, அவன் நடவடிக்கைகளையோ கொச்சைப் படுத்தியோ, இழிவு படுத்தியோ எழுதுவது தேசபக்திக்கு அழகல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//எனவே கட்டபொம்மனைப் பற்றி பலரும் தவறாக எழுதி வந்த காலத்தில், அவன் வரலாற்றை சற்று மெருகூட்டி விடுதலை வீரனாகக் காட்டினார் ம.பொ.சி. எப்படிப் பார்த்தாலும் ஆங்கில கம்பெனியை எதிர்த்துப் போராடி, தூக்கில் தொங்கிய அவன் மாவீரந்தான். அவன் வீரத்தையோ, அவன் நடவடிக்கைகளையோ கொச்சைப் படுத்தியோ, இழிவு படுத்தியோ எழுதுவது தேசபக்திக்கு அழகல்ல என்பது என் தாழ்மையான கருத்து.//

இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்..

நன்றிகள் பல தஞ்சைப் பெருவுடையாருக்கு...

Unknown said...

////அப்படி பல பாளையத்தார் கப்பம் கட்டி தங்களை அடிமைகளாக பிரகடனப் படுத்திக் கொண்ட நேரத்தில் பாஞ்சாலங்குறிச்சி தலைவன் மட்டும் மறுத்தான். கம்பெனியார் நெருக்கடி கொடுத்தனர், மிரட்டினர், படைபலம் கொண்டு அவனை அடிமைப் படுத்த நினைத்தனர். அப்போது அவனது தற்காப்புக்காகவும், சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும் போரிட நேர்ந்தது. சொந்த ஜனங்கள், அண்டைய பாளையக்காரரான எட்டப்ப நாயக்கர் காட்டிக் கொடுக்க கட்டபொம்மனும் அவன் தம்பி ஊமைத்துரையும் ஆங்கில கம்பெனியாரிடம் வீழ்ந்தனர். வீரமரணம் எய்தினர். இதுதான் வரலாறு.////

வீரன் தன்மானமிகுந்த தமிழர்கள்... அதனாலே இன்றளவும் தெய்வமாக வணங்கப் படுகிறார்கள். தங்களின் கருத்திற்கும், கட்டபொம்மு சகோதரர்களைப் பற்றி மேலும் அறிய தகவல்களை பகிர்ந்தமைக்கும் நன்றிகள் ஐயா.

Unknown said...

///சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…
//எனவே கட்டபொம்மனைப் பற்றி பலரும் தவறாக எழுதி வந்த காலத்தில், அவன் வரலாற்றை சற்று மெருகூட்டி விடுதலை வீரனாகக் காட்டினார் ம.பொ.சி. எப்படிப் பார்த்தாலும் ஆங்கில கம்பெனியை எதிர்த்துப் போராடி, தூக்கில் தொங்கிய அவன் மாவீரந்தான். அவன் வீரத்தையோ, அவன் நடவடிக்கைகளையோ கொச்சைப் படுத்தியோ, இழிவு படுத்தியோ எழுதுவது தேசபக்திக்கு அழகல்ல என்பது என் தாழ்மையான கருத்து.//

இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்..////

நன்றிகள் தோழரே... இதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

Post a Comment