அன்பிற்கு ஏது?
அளவும் அழிவும்
பண்பிற்கு ஏது?
பகையும் பழியும்
பாசத்திற்கு ஏது?
பகட்டும் பயமும்
நேசத்திற்கு ஏது?
நேரமும் தூரமும்
காதலுக்கு ஏது?
காரணமும் மரணமும்
அழகுக்கு ஏது?
அருவருப்பும் அலட்டலும்
அறிவுக்கு ஏது?
நீளமும் ஆழமும்
உண்மைக்கு ஏது?
பிறப்பும் இறப்பும்
பொய்மைக்கு ஏது?
நிழலும் நிரந்தரமும்
நீதிக்கு ஏது?
விருப்பும் வெறுப்பும்
நிம்மதிக்கு ஏது?
ஆசையும் அகந்தையும்
கோபத்திற்கு ஏது?
பார்வையும் பகுப்பும்
கொடுமைக்கு ஏது?
ஈரமும் இரக்கமும்
காமத்திற்கு ஏது?
வெட்கமும் விவேகமும்
குரோதத்திற்கு ஏது?
கேண்மையும் கருணையும்
வீரத்திற்கு ஏது?
வயதும் பாலும்
தீரத்திற்கு ஏது?
திருட்டும் உருட்டும்
மானத்திற்கு ஏது?
மயக்கமும் தயக்கமும்
மரியாதைக்கு ஏது?
மலிவும் மமதையும்
முட்டாளுக்கு ஏது?
தெளிவும் தைரியமும்
மூர்க்கனுக்கு ஏது?
நெளிவும் சுளிவும்
பக்தனுக்கு ஏது?
சலிப்பும் சந்தேகமும்
சித்தனுக்கு ஏது?
மனமும் இடமும்
பித்தனுக்கு ஏது?
பேதமும் வேதமும்
முக்தனுக்கு ஏது?
இன்பமும் துன்பமும்
சக்திக்கு ஏது?
இடமும் பொருளும்
சிவத்திற்கு ஏது?
ஆதியும் அந்தமும்
8 comments:
அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
சிந்தனைத் தூண்டும் நல்ல பதிவு.பாராட்டுகள். கேள்விக்குறிகளை இடையில் நுழைக்காது இறுதியில் வைத்திருந்தால் பொருள் மாறாது புரிந்துகொள்ள ஏதுவாய் இருக்குமல்லவா?
///வை.கோபாலகிருஷ்ணன் said...
அருமையான பதிவு. பாராட்டுக்கள்.////
தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி சார்.
///கீதமஞ்சரி said...
சிந்தனைத் தூண்டும் நல்ல பதிவு.பாராட்டுகள். கேள்விக்குறிகளை இடையில் நுழைக்காது இறுதியில் வைத்திருந்தால் பொருள் மாறாது புரிந்துகொள்ள ஏதுவாய் இருக்குமல்லவா?///
தங்களின் ஆலோசனைப் போலே மாற்றி விட்டேன் சகோதரி.
பாராட்டிற்கு நன்றிகள் சகோ...
மன்னிக்கவேண்டும், தங்கள் கவிதை மொழியில் மாற்றம் தேவையில்லை, கேள்விக்குறியில் மட்டுமே இடமாற்றம் வேண்டினேன்.
அன்பிற்கு ஏது அளவும் அழிவும்?
பண்பிற்கு ஏது பகையும் பழியும்?
இப்படி இருந்தால் நலமென்று எண்ணினேன். தங்கள் கவிதைநடையைப் பாழ்படுத்திவிட்டேனோ என்று வருந்துகிறேன். மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்.
////கீதமஞ்சரி said...
மன்னிக்கவேண்டும், தங்கள் கவிதை மொழியில் மாற்றம் தேவையில்லை, கேள்விக்குறியில் மட்டுமே இடமாற்றம் வேண்டினேன்.
அன்பிற்கு ஏது அளவும் அழிவும்?
பண்பிற்கு ஏது பகையும் பழியும்?
இப்படி இருந்தால் நலமென்று எண்ணினேன். தங்கள் கவிதைநடையைப் பாழ்படுத்திவிட்டேனோ என்று வருந்துகிறேன். மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்.////
வருத்தம் எதற்கு சகோதரியாரே
திருத்தம் செய்யச் சொன்னதாலா?
உறுத்தும் எண்ணமதை உதறுங்கள்
கருத்து கூறவே கவிதை சமைத்தேன்
விருந்து கொள்ளும் தங்களின்
விருப்பம் அல்லவா சிறந்ததாக்கும்!!!
இப்போது பாருங்கள் நன்றாக இருக்கிறதா! மறைக்காமல் கூறுங்கள்... எனக்காக மாற்றிக் கூற வேண்டாம்:):)
அபிப்ராயங்கள் அதன் நோக்கம் அழகிற்கு அழகு சேர்க்கவே
அப்படி இருக்க மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகளை ஏன்? வார்க்கிறீர்கள் சகோ...
கனிந்த மனதிற்கும் தெளிந்த கருத்திற்கும் நன்றிகள் பல...
ஆழ்ந்த சிந்தனைக் குவியல்கள் ஐயா..
இதுவான இதுவதில்
எதிவான ஏது என
அருமையாக பட்டியலிட்டமை
மனதை ஆட்கொண்டது..
///மகேந்திரன் said...
ஆழ்ந்த சிந்தனைக் குவியல்கள் ஐயா..
இதுவான இதுவதில்
எதிவான ஏது என
அருமையாக பட்டியலிட்டமை
மனதை ஆட்கொண்டது..///
மிக்க நன்றிகள் பல கவிஞரே!
Post a Comment