பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Wednesday, 28 March 2012

அம்மா நீ எங்கே!





எல்லாமாகி எங்கும் நிறை பராசக்தியே
பொல்லா வினையறுப்பாய் ஆதிசக்தியே!. 


வெடிபடு அணுவினுள் ஒளியுரு கடும்பொறி;
இடியொடு பிறந்தக்கொடுவிட அரவச்சீறி; நடுநடுங்க 
துடிதுடிக்க; சடசட, படபடவெனப்  பாயும்மின் 
கொடியொடு ஓடிடும் தூதூமணியே! 

அறிவினில் உறையும்; கருவென வளரும்;
பரிதியில் ஒளிரும்; வளியென பரவும்;
விரிவெளி யெனத் திகழும்; குணம்,
குறியிலா ஞானப்பெரும் திரளே! 

ஒன்றுமில்லா தொன்றில் ஒன்றாய் - என்றும் 
ஒன்றாகி நின்றே பண்டு நன்னுலகை 
நன்றாய் படைக்க ஒன்றும் பலவாய் 
ஒன்றியழ கொழிக்கும் ஆதிசக்தியே! 

பெருமிருள் நெடுதுயில் சடுதியில்மறைய -விண்
உறுபெரும் பொருளது சுடரொளி நிறைய 
மருளெனும்செய் பாவமதுரு உறுவது ஒழிய 
பொறுத்தருள்புரிவாய் கருணைப் பெருங்கடலே!

-நன்றி.



Monday, 26 March 2012

எது எது ஏது?




அன்பிற்கு ஏது?
அளவும் அழிவும்

பண்பிற்கு ஏது?
பகையும் பழியும்

பாசத்திற்கு ஏது?
பகட்டும் பயமும்

நேசத்திற்கு ஏது?
நேரமும் தூரமும்

காதலுக்கு ஏது?
காரணமும் மரணமும்

அழகுக்கு ஏது?
அருவருப்பும் அலட்டலும்

அறிவுக்கு ஏது?
நீளமும் ஆழமும்

உண்மைக்கு ஏது?
பிறப்பும் இறப்பும்
  
பொய்மைக்கு ஏது?
நிழலும் நிரந்தரமும்

நீதிக்கு ஏது?
விருப்பும் வெறுப்பும்

நிம்மதிக்கு ஏது?
ஆசையும் அகந்தையும்

கோபத்திற்கு ஏது?
பார்வையும் பகுப்பும்

கொடுமைக்கு ஏது?
ஈரமும் இரக்கமும்

காமத்திற்கு ஏது?
வெட்கமும் விவேகமும்

குரோதத்திற்கு ஏது?
கேண்மையும் கருணையும்

வீரத்திற்கு ஏது?
வயதும் பாலும்

தீரத்திற்கு ஏது?
திருட்டும் உருட்டும்

மானத்திற்கு ஏது?
மயக்கமும் தயக்கமும்

மரியாதைக்கு ஏது?
மலிவும் மமதையும்

முட்டாளுக்கு ஏது?
தெளிவும் தைரியமும்

மூர்க்கனுக்கு ஏது?
நெளிவும் சுளிவும்

பக்தனுக்கு ஏது?
சலிப்பும் சந்தேகமும்

சித்தனுக்கு ஏது?
மனமும் இடமும்

பித்தனுக்கு ஏது?
பேதமும் வேதமும்

முக்தனுக்கு ஏது?
இன்பமும் துன்பமும்

சக்திக்கு ஏது?
இடமும் பொருளும்

சிவத்திற்கு ஏது?
ஆதியும் அந்தமும்




Tuesday, 13 March 2012

சக்தியவளை அமர்த்து மனமே!



சக்தியவளை அமர்த்து மனமே - சாகாவரமதை
சத்தியமாக அருள்வாளொரு கணமே.

அன்னை அபிராமியின் தெய்வீக அழகையும், அன்னை அவளின் அருள் தரும் பேரின்பத்தையும், அன்னை அவளின் கருணை தரும் ஞான அமுதத்தையும் பற்றியெல்லாம் பாடி அதை படிக்கும் போதே நமக்கு கிடைக்கும் பேரானந்தத்தையும் சிந்தையிலே கொண்டு...

அபிராமி அந்தாதியில், அபிராமப் பட்டரின் கவிநயத்தில் பொதிந்து இருக்கும் அற்புதக் கருத்துக்களை சரியான புரிந்துணர்வோடு உங்களுடன் பகிர அன்னை அவள் எனக்கு அருள வேண்டி அவள் பொற்பாதம் பணிந்து தொடங்குகிறேன்.  

சிறியோன் யான், அறியாது செய்யும் பெரும் தவற்றையும்; பெரியோய்! நீ, பொறுத்தாள்வாய் அபிராமித் தாயே!

அபிராமி அந்தாதியில் அபிராம பட்டரின் மூவா மருந்தென திரண்டு பெருகும் பேரின்ப கவிவெள்ளத்தில் அமுதகவியில் வரும் வருணனைகள், உவமைகள், உவமேயங்கள் நம்மை இன்பத்தில் ஆழ்த்துகின்றன. சில நேரங்களில் சில வற்றிற்கு சரியான பொருள் புரியாது, சற்று மயங்கவும் செய்கின்றன. இது அபிராமி அந்தாதி என்று மட்டும் அல்லாமல், பக்தி இலக்கியங்கள் எங்கும் இந்நிலையைக் காணலாம். அதற்கு பல சான்றுகளையும் நாம் ஆங்காங்கே காணலாம்.

என்னைப் போல பலரும் சாதாரண தமிழைப் படித்து இது போன்ற உயர்ந்த தத்துவ கருத்துக்களை புரிந்துக் கொள்வதில் இருக்கும் சிரமத்தை கவனத்தில் கொண்டே இவ்வாரமும் ஒரு சிறு முயற்சி...

அம்மையின் ஞானத்தை தரும் அமுதக் குடங்களுக்கு உவமேயமாக கூறப் பட்டதாகவே அவளின் திருமுலைகள் என்பதை நாம் அர்த்தப் படுத்திக் கொண்டோம். அதுவும் ஞானம் என்னும் பசிகொண்டு அதனைத் தீர்க்க; அன்னையவளிடம் அந்த ஞானம் பெற குழந்தையாய் நின்று மன்றாடுகிறார் என்று அபிராம பட்டரைப் பற்றி கூறி இருந்தேன்.

இப்போது அடுத்த சிலப் பாடல்களையும் பார்ப்போம்.

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமல அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும் எட்டுத் 
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.

இப்போது இங்கு இந்தப் பாடலுக்கு அன்னையவளின் அருளால், நான் எனது விளக்க உரையை எழுதி சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளேன்...

என் அன்னையே! அபிராமித் தாயே! நினதுத் திருக்கரங்களுக்கு அணிவது இனியக் கரும்பும், தேன்சுமந்த நறுமணம் வீசும் கவின்மிகு பூவும், நினது தாமரை மலரின் இதழ் போன்ற மேனியில் அணிவது வெண்முத்து மாலை. விடம் தனை தன்னகத்தே கொண்ட பாம்பைப் போன்ற அங்கம் தனக்கோ அணிவது; வைரம், வைடூரியம், பவளம், மரகதம் போன்ற பல மணிகளையெல்லாம் கோர்த்து செய்யப் பட்ட மேகலையும், பட்டும். அன்னையே எட்டு திசைகளை அணிந்துக் கொண்டவனும், மேன்மைகளுக்கெல்லாம் மேன்மையான அனைத்து செல்வங்களையும் ஒருங்கே பெற்ற அந்தப் பெருமானை சேர்பவளே!...

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலியநெஞ்சை 
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல்அரவின் 
வடம் கொண்ட அல்குல் பணிமொழி - வேதப் பரிபுரையே.


அழகிய இரு பொன்மலைகள் போல் நன்கு பெருத்தும் (அன்புக் கருணையால் பெருத்தது), மகர்ந்தும் (ஞானம் பொங்கி மகர்ந்தது); இவை இரண்டிற்கும் இடையிலே இடைவெளி இல்லாதும், மிகவும் இளகிய, மென்மையான திருமுலைகளின் மேல் சிறந்த முத்துக்களால் ஆன மாலைகளை அணிந்தவளே!

இத்தனை மென்மையான, அழகுள்ள கொங்கைகளால் இறைவனின் வலிய நெஞ்சினையே ஆட்கொண்டு (முப்புரங்களையும் எரித்தவன், காமனையே எரித்தவன், வலிய நெஞ்சினன்) அவனின் இடப் பாகம் அமர்ந்து பிரபஞ்ச நாயகியானவளே! நல்ல பாம்பு ஓன்று படம் எடுத்ததைப் போன்று அழகான அல்குலை கொண்ட; இனிமையான பண்புமிகுந்த அமுதமான மொழிகளைப் உதிர்கின்றவளே, மேன்மையான வேதங்களை தனது பொற் பாதங்களில் சிலம்பாக அணிந்தவளே! (ஞானிகள் தொழும் அவளின் பாதங்களிலே வேதமாம், ஆம், அங்கு தானே ஞானிகள் சர்வ சதாக் காலமும் களிக்கின்றனர். அவளின் திருப்பாதம் அது அருளும் வேத விளக்கம் எனவும் கொள்ளத் தகும்) 

(ஈசனும் மயங்கும் அழகிய இருப் பொன் மலைகள் போல்ஆம், அவன் மயங்கும், அவன் விரும்பி உறையும் அந்த இரு மலைகள் தாம் இவை... மேருவும் கயிலையுமாக இது தான் ஈசன் மயங்கும் இரு பொன்மலை போன்றக் கொங்கைகள் என்பதன் உட்பொருள். அதற்கு இன்னும் பலக் காரணமும் சொல்லலாம், அதை பிறகு பேசலாம்.)

இங்கே மேலும் தொடரும் முன்.
திருப்பாவையிலே ஆண்டாளின் பாடல் ஒன்றையும் கூறி அங்கே பரந்தாமன் கிருஷ்ணன் நப்பின்னையோடிருக்கும் அழகையும் காண்போம்...

(செளந்தரிய லஹரியிலே இந்தக் கருத்தையே ஒத்த அருமையான ஒருப் பாடலையும் காண முடிகிறது. இரு வெவ்வேறு பட்ட காலங்களில் பாடப் பட்டவைகள் தாம் (அபிராமி அந்தாதியும், செளந்தரிய லகரியுமே அப்படித்தான்) இருந்தும் இந்த ஒற்றுமையைக் காணும் போது. உண்மை எப்போதும் யாவருக்கும் உண்மையாகவேத் தோன்றுகிறது என்பதையும், இவர்கள் யாவரும் ஒருமையே என்பதையும் கொள்ளத் தகும்.)  


"குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் 
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் 
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை 
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் 
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்" 

இங்கே பரந்தாமன் விரும்பும் அந்த நப்பின்னையின் கொங்கைகள் தாம் யாவை?...

சுருக்கமாக, இங்கே வேதாந்தம் போதிந்தப் பொருள் யாதெனின். பகவான் இங்கே மயங்கிய கொங்கைகள் இரண்டு.

அன்னை ஸ்ரீ தேவியின் தீராத அன்பாகிய பக்தியும் வைராக்கியமும் தான் அவைகள். சிரத்தையும், வைராக்கியமும் கொண்ட பக்தனிடம் இறைவன் மயங்கிக் கிடப்பான் என்பது தான் அதன் வேதாந்த அர்த்தம். சரி இப்போது தொடருவோம்.

பராசக்தி, ஆதியவள், ஜோதிவடிவானவள், கருணையின் ஊற்று, அன்புக் கடல், ஞானக் கேணி, அழகின் இலக்கணம்; அவள் தாம் நமது அன்னை அபிராமி.

அவளைத் தவிர வேறெதையும் காணாத ஞானி அபிராம பட்டர் அருளிய பாடல்களில் இருந்து, மேற்கண்ட இருப் பாடல்களின் கருத்துக் களை எல்லாம் அறிந்து இன்புற்றோம்.

இருந்தும் அங்கே அகம் சார்ந்த விஷயத்தை காட்டி இருப்பதாகவே நம்மில் பலருக்கும் தோன்றும். அதைப் பற்றிய சிந்தனைக்கே போகிறோம்.

"விட அரவின் பைக்கே அணிவது பண்மணிக் கோவையும்" 
"நல்அரவின் வடம் கொண்ட அல்குல்"

இங்கே இந்த மகான் என்ன பொருளில் அன்னையின் இந்த அங்கத்தைப் பற்றிக் கூறுகிறார். அவர் ஞானி, மகான்... அவர் தெளிந்த மனத்துடன்; ஒருக் குழந்தையாய் நின்றுப் பணிந்தே இந்த அமுதக்கவியை அருள்கிறார் என்பதை மீண்டும் இங்கே நினைவில் கொள்வோம். இருந்தும் இந்தக் குழந்தை, வளர்ந்து, எல்லா கல்வி கேள்விகளையும் பெற்ற ஞானக் குழந்தையும் கூட..

நவரெத்தினங்களும், பட்டும் அணிந்த அழகிய அல்குல், அது பார்ப்பதற்கு நல்ல பாம்பு ஒன்றுப் படம் எடுத்தது போன்று இருக்கிறது, அதுவும் விஷம் தனை தன்னகத்தே கொண்ட நல்ல பாப்மைப் போல் என்கிறார்.

எங்கும், எல்லாமும் ஆகி, எல்லாவற்றிலும் பரவி வியாபித்து இருக்கும் அன்னை அவள் என்றால் அவள் அனைத்திலும் இருப்பவள்... இன்பம், துன்பம், ஆண், பெண், தொடக்கம், முடிவு, நல்லது கெட்டது என்று அனைத்துமானவள்.  

இங்கே இறைத் தத்துவத்தை சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். எங்கும் நிறைந்த இறை சக்தி. சக்தி அவள் இல்லா இடமேதும் இல்லை. அப்படி இருக்க எதைக் குறிப்பிட்டாலும் அங்கே சக்தி அவள் இருப்பதாகவேத் தான் அர்த்தம். "தீயிற்குள் விரலை விட்டால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா!" தீயினுள் விரல் விடும் போது துன்பம் எனாது இன்பம் என்கிறான் பாரதி. 

தனி ஒருப் பொருளாக காண்பதல்ல இறைவியை. அப்படிக் காணும் போது இதைப் போன்ற வார்த்தைகளை கையாளும் பக்தி இலக்கியங்களை சரியாகப் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

குறுகிய வட்டத்தில் இருப்பதாக எண்ணாமல், மிகப் பரந்த வெளியில் இருப்பதாக, விசாலமானப் பார்வை கொண்டவர்களாக, நாம் சற்று உயரமான இடத்திலே பறந்துக் கொண்டு நின்று இந்த புவியை, அதன் தத்துவத்தின் சாரத்தை பற்றி யோசித்தால் அதன் தார்ப்பரியம் அணு பிசகாது விளங்கும்.

அப்படி இல்லாது நாம் புவியிலே காணும் சாதாரண சக பொருளோடு, ஒப்பிடும் போது,  இந்த உவமானங்களும், உவமேயங்களும் அப்படி ஒரு தோற்றத்தை நமக்கும் தோற்றுவிக்கலாம்.

அனைத்துமாகியும்... அதற்கு அப்பாற் பாட்டுமாக இருப்பவள் அன்னை அபிராமி என்கிறார் அபிராம பட்டர்.

ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய் 
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் - என்றன்நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார் -
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.

என்பார்...  நாம் எதையும் விடுவதற்கில்லை.

(இந்த ஒருப்பாடல் தான் பிரபஞ்சத் தத்துவம். இதில் பிரஞ்ஞை அற்ற நிலையில் தொடங்கி, படைப்பின் தொடக்கம், ஊழி என அனைத்தும் அடக்கம்... இதை விரித்தால் பிரபஞ்சமே விரியும்)

சரி விசயத்திற்கு போவோம்.

அதனாலே, அவளிடமும்!. அந்த அழகிய விஷம் பொருந்திய அரவு போன்ற அல்குல் என்கிறார்.

எல்லாவுயிர்களுக்கும் இறைவனின் படைப்பிலே மிகவும் கீழான நிலையிலே, இடத்திலே இருக்கும் அந்த அங்கம்.

அழகானது, அவசியமானது, இகலோக இன்ப துன்பத்திற்கு காரணமானது, உலக இயக்கத்திற்கு முக்கியக் கூறானது (கூரானது), வாழ்வின் முதன்மையானது, அதாவது முதலில் வருவது..... சிற்றின்ப தேரது. ஆனால் அது கீழான நிலையிலே இருக்கும் கீழானது.

கீழான நிலையிலே இருக்கும் அழகான விஷயமானது... அதுவே விசமும் தன் வசமானது.  

இந்த அழகான ஒன்றில் மயங்கி, இரவல் வாங்கி வந்த உடல் அழிந்து போகும் நாள் வரை, வந்த காரணத்தை மறந்து, அடுத்து செய்ய வேண்டிய காரியத்தையும் மறந்து; கீழான, விஷம் நிறைந்த இந்த அழகான சிற்றின்பத் தேரிலே ஏறி வாழ் நாளெல்லாம் உலா வந்து கழித்து, அந்த அற்ப சுகத்தை அனுபவிக்க, அதிலே திளைக்கத்தான்;

எத்தனை எத்தனை பொய், கவலை, வருத்தம், கோபம், பொறாமை, துரோகம், நடிப்பு, தீங்கு இளைத்தல் என்று உலக துன்பமெல்லாம் மேற்கொண்டு; கடைசியில் இம்மையில் இருந்த நல் கர்மத்தையும் செலவழித்து இருள் சூழும் மறுமைக்கு போக பயணச் சீட்டை வாங்கவே காத்து இருந்து விடுவது. இதைதான் மனிதர்கள் பெரும்பாலும் செய்கிறோம்.

இப்போது புரிந்திருக்கும், அந்த மகான் அழகான, நல்ல பாம்பென்று ஏன்?அதைச் சொன்னாரென்று. அதையும், அவளும் அங்கமாக கொண்டவள். ஆம், அவள் எங்கும் எதிலும் எல்லாமுமாகி இருப்பவள். இச்சாசக்தியும் அவளே, கிரியா சக்தியும் அவளே, ஞான சக்தியும் அவளே.   

************************************************************************************


பக்தி இலக்கியங்களிலே பெரும்பாலும் தீமையை, முக்திக்கு, பிறவியில்லாப் பெருநிலைக்கு தடையான துன்பங்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக குறிக்கும் சொல் ஒன்று உண்டு என்றால் பெரும்பாலும் அது தான் இந்த அரவம் என்ற சொல் குறிப்பு.

(உலக சுகாதார அமைவுஇன்றைய சூழலில் எயிட்ஸ் என்னும் உயிர்க் கொள்ளியின் சின்னமும் கூட இது தான்

இன்னொரு உதாரணமும் பக்தி இலக்கியத்தில் இருந்து..
ஈசனின் திருமார்பிலே, ஏன்? அவனின் மேனியெல்லாம்; கொன்றை மலர் மாலையும் உண்டு, இந்த அரவமும் உண்டு.....

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


"அரவம் கொன்றை மலிந்த மார்பு-அச்சுறுத்தும் விஷம் பொருந்தியபாம்பையும், மணமும் மென்மையும் உடைய கொன்றையையும் அணிந்த மார்பு, என்றது வேண்டுதல் வேண்டாமையைக் காட்டும் குறிப்பாகும்." என்கிறது திருமுறை 1 -ல் வரும் பாடல் ஒன்று.

இங்கே காணும் அரவம் வேண்டாமையை குறிக்கிறது, இரண்டையும் ஒன்றாகவே பார்ப்பவன், இருந்தும் இரண்டும் அவனுள் தான் அடக்கம் இன்னும் சொன்னால் அதனிற்கு அப்பார்ப்பட்டவன் தான் அவன். அவன் மேனி என்னும் பிரபஞ்சத்தில் இவை இரண்டும் கலந்தே தான் இருக்கிறது என்ற வேதாந்தக் கருத்தையும் கொள்ளத் தகும்.

இது வரை நாம் பக்தி இலக்கியத்தில் வரும், திருமுலைகளின், அல்குலின் உவம, உவமேயங்களைப் பற்றி பார்த்தோம். 

சரி, இப்போது நான் இன்னொரு முக்கிய பொருளைப்பற்றியும் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

என்ன அது? இதோ இந்தப் பாடல்களைப் பாருங்கள்....

"கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து 
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே 
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் 
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ 
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்"

"மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே"

இங்கே வரும் இந்த மயில் என்றப் பதத்தின் உட்பொருள் வேதாந்த அர்த்தம் தான் என்ன

அதற்கு முன்பு நாம் நாம் நமது அப்பன் சுப்ரமணிய சிவத்தினை தரிசித்து விட்டு வருவோம்.





அப்பன் முருகன், ஆறுமுகக் கடவுள் வள்ளி என்னும் இச்சாசக்தியினையும், தெய்வயானை என்னும் கிரியா சக்தியையும் வல, இடப் புறமாக கொண்டு ஞான சக்தியாக நடுவிலே இருக்கும்; இந்த சுப்ரமணிய சிவம் அமர்ந்திருப்பதோ மயிலின் மீதே.

இதன் உண்மையான் தார்ப்பரியம், அதாவது இது தான் இந்தத் திருக்கோலம் தான் வேதாந்தம் கூறும் பிரபஞ்சக் கோலம்.

இங்கே மயில் என்பது மனமாக பொருள்படுகிறது. 
ஆம், மயில் தாம் மனம். மனம் தான் அந்த மயில்....
(மனமே முருகனின் மயில் வாகனம் என்றப் பாடலைக் கூட கேட்டிருப்போம்).... 

மேலேக் காணும் இருப் பாடல்களிலும் அன்னை அவள் மயிலாக; அதாவது இறைவனை தனது ஆத்மாவில் தாங்குபவள், இறைவனை மனதிலே அமர்த்தி பூஜிப்பவள் அதனால் அவள் அழகு மயிலாகிறாள். 

அப்படி என்றால் மனமென்னும் மயில் எப்போதும் தாங்க வேண்டியது, அதன்மீது அமர்த்த வேண்டியது இறைவனைத் தான் என்பது தான் அந்த தார்ப்பரியம்.

சரி, இறைவனை மனதிலே இருத்துவோம். ஆனால் இந்த இகலோக சுகம் வந்து படுத்துகிறதே!. அதில்லாமல் இந்த உலகமும் இயக்கம் பெறுமா?.

அது அழகான; இருந்தும் விஷம் கொண்ட கீழான அரவமே என்று கேட்குமின்.

மீண்டும் அந்த சுப்ரமணிய சிவத்தை, பிரபஞ்சத்தையே தாங்கி நிற்கும் அந்த மயிலின் காலைப் பாருங்கள் அங்கே அந்த அரவம் அமைதியாக (இறந்து விடாமல் / மறைத்தும் விடாமல்) அமைதியாக அந்த மயிலின் பாதத்திற்கு கீழே படுத்து இருக்கிறது. படமெடுத்து இருந்தாலும், அதென்னவோ அந்த மனத்திற்கு கட்டுப் பட்டு தான் இருக்கிறது.

இப்போது அபிராம பட்டரின் பாடல்களுக்கு தனியாக நான் ஏதும் விளக்கம் கூறும் முன் அனைத்தும் உங்களுக்கு விளங்கி இருக்கும்.

மயிலென்று அல்ல, வேறெந்த வாகனமாக இருந்தாலும் அது மனம் அதன் மேலே ஏற்ற வேண்டிய ஒன்று இறைவன் மாத்திரமே. மனம் இந்த அழகிய கீழான விசத்தன்மை வாய்ந்த அரவத்தை அடக்கியே வைத்திருக்க வேண்டும்.



கடைசியாக ஒரே ஒரு விஷயம் எது சிற்றின்பம்? எது பேரின்பம்? என்று மீண்டும் பார்ப்போம். ஆத்மாவிற்கு அணுக்கமான, நெருக்கமான, அதன் சொரூபமான யாவும் பேரின்பம்.

அதற்கு அன்னியப் பட்ட யாவும் சிற்றின்பம். இதுவே தமிழ் இலக்கணமும் கூட; இதைத் தான் நச்சினார்கினியரும் அகம் பற்றிய தொல்காப்பிய விளக்கமாகக் கூறுகிறார். 

எந்த செயலும் ஆத்மார்த்தமாக செய்தால் அது இந்தப் பேரின்பச் செயலின் சாயலில் இருக்கலாம் இருந்தும். எந்தப் பேரின்பக் கடலின் ஒருத் துளியாக நாம் வந்தோமோ அந்தப் பேரின்பக் கடலில் சேர்வதே, பேரின்ப அகம் என்பதே, உண்மை. அது தான் ஆத்மாவின் லட்சியம் என்கிறது மறைகள் யாவும்.

ஆத்மா என்றால், நாம் கொண்டுள்ள ஜீவாத்மா அதாவது நான், எனது குடும்பம் என்றதும், மற்றொன்று மகான்களிடம் இருப்பது அந்தராத்மா ( அதாவது மகாத்மா காந்தியைப் போல் குடும்பம், கடமை என்று யாவும் இருந்தும் பற்று எல்லாம் இறைவனின் மீதே... இக லோக வாழ்க்கை என்பது தாமரை இலைமேல் தண்ணீர் போல்), அதன்பிறகு ஜீவன் முக்தர்களின் பரசிவ வெள்ளத்திலே கலந்த ஆத்மா அது தான் பரமாத்மா.

இனி, பக்தி இலக்கியங்களை என்னை போன்ற தொரு சாதாரணன் படிக்கையிலே, ஒரு சிரமமும் இருக்காது என்பது எனது எண்ணம். நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்..

நான் ஒரு சிறியோன் எனது சிற்றறிவுக்கு எட்டிய படி எழுதியுள்ளேன். பக்தி இலக்கியம் படைக்கப் பட்ட ஞானிகளின் நிலையை அதாவது படைக்கப் படும் போது அவர்களின் மோன நிலையை நாம் பெரும்பாலும் அறிந்திருப்பது இல்லை. அறிந்திருந்தாலும் அந்த அறிவோடு சிந்தையை இணைத்தே வைப்பதுவும் இல்லை. இன்னும் சிலருக்கு இது போன்ற மறை பொருள்கள் இருக்கலாம் என்ற எண்ணம் இருந்தும் அவைகளை அறியாமல் ஒரு நெருடல் இருந்துக் கொண்டேயும் இருக்கும். 

அந்த நெருடல் என்னுள்ளும் இருந்தது அதனின் விளைவே எனது துருவும் போக்கும் இந்த முடிவும். இறுதியாக ஒரு மகத்தான விஷயத்தைக் கூறி முடிக்கிறேன்.

"இந்த பிரபஞ்சம் தான் இறைவனின் / இறைவியின் (இரண்டும் ஒன்றே என்பதும் பெரியோரின் முடிபு) உடல், இந்த பிரபஞ்சத்தின் மனம் தான் கடவுள், பிரபஞ்ச இயக்கம் தான் சக்தி / இயங்கும் யாவினுள்ளும் இருப்பவள் அவளேயாம்!." 

இவ்வாறு எண்ணுகையில் அன்னையவளின் அழகை வர்ணிப்பது பிரபஞ்சத்தை வர்ணிப்பதே... அதில் வரும் அழகின் பொருள் என்பது உய்த்து உணரதக்கதே. 

ஆம், அது பேரறிவாம் அதை நாம் யாவரும் உணரவே இந்த உடல் எடுத்துள்ளோம் என்கிறது மறை என்பர். நமது முயற்சியில் வெற்றி பெற அன்னை அவள் அனைவருக்கும் தனது அபய கரம் தருவாள். நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை கூறும் தீர்ப்பு என்பார் பெரியோர்! 
நன்றி.

அகம் புறம் என்றெல்லாம் வெவ்வேறில்லை 
அகமும் புறமுமாக அனைத்திலும் -அன்னை
அபிராமி யவளே இருக்கையிலேஇங்கே 
அபிராமியில்லா தொன்றை காண்பதேது?

அன்னை அபிராமியின் திருப்பாதம் தொட்டு வணங்கி முடிக்கின்றேன். நம் அனைவருக்கும் அன்னை அவளின் கடைக்கண் பார்வையாது கிடைக்கவேண்டும் என்று அவளைப் பணிவோம்.

நன்றி வணக்கம்.