விநாயகர் காப்பு!
ஆனை முகத்தோனே ஆறுமுகனுக்கு மூத்தோனே
வினைதீர்க்கும் நாயகனே வேத முதல்வனே
சுனைக் கடிகமலமலர் பூத்தக் கற்பகமே
நினைச் சரணமென்று பணிகிறேன்!
வெண்பாவின்
சாயலில் எழுதியக் கவிதை.
தண்ணீர்மலை
உறையும் முருகா! -நாங்கள்
வேண்டும் வரம்தர வேண்டும் இறைவா!
வெள்ளை மனம்வேண்டும் முருகா!
-வீணான
தொல்லை தரும் இருள் நீங்கவே - சிறு
பிள்ளை குணமது வேண்டும் முருகா!
-நெஞ்சில்
கள்ளமில்லா எண்ணமதை நாளும்
பெறவே
உள்ளன்போடு தொழுகிறோம் முருகா!
-உணர்வில்
உயிரில் உறைந்திடுவாய் குமரா! (1)
சத்தியத்தின் திருவுருவே
முருகா! -சலிப்பில்லா
சத்திய மனம் தருவாய் சக்திகுமரா!
சங்கடம் தீர்ப்பவனே முருகா!
-ஒப்பில்லா
சங்கரனின் புத்திரனே முத்தமிழ் குமரா!
சரவணப் பொய்கையிலே உதித்தவனே முருகா!
சரணகோஷம் பாடிப்பணிகின்றோம் தலைவா! -சிவ
சக்தியின் மைந்தனே முருகா! -அளவிலா
சக்தியைத் தருபவனே சுவாமிநாதா! (2)
கருணையில்லையோ? என்மேல் உனக்கு கனிவுமில்லையோ?
கருத்தநாயகியின் கணவனேத் தொந்திபெருத்த
நாதனின்சோதரனே!
வறுத்து எடுக்குதையா! வறுமையது -எனையாவரும்
வெறுத்து ஒதுக்கிடவே;
நொறுக்கியே போட்டதையா!
தடுத்து நிறுத்துமையா! எந்தன் தரித்திரியம் போய்விடவே
விடுத்து எழுந்திடேன் நிந்தன் பாதமலர்தனையே!
பொறுக்க முடியலையே முருகா! நீயுமின்னும்
பொறுப்பதேனோ? எனைக்காக்க மறுப்பதேனோ? (3)
நோய்தீர்ப்பாய் முருகா! மனப் பேயால் -வந்த
நோய்தீர்ப்பாய் முருகா! காணும் யாவிலும்
மெய்யதையே கண்டுணரும் வழியதைக் கூறாயோ!
ஐய! தேனினும் இனியனே தென்பழனி முருகனே
மெய்யா! ஊனிளுறைந்து உயிரில் கலந்தோனோ!
பொய்யர்தம் பொய்யுரையை பொறுக்கும் மனமதை
மையல் கொள்ளச் செய்வாயே மயில்வாகனனே!
தையல் நாயகியின் புதல்வனே! (4)
வேலை வேண்டும்; வேலையா! ஏதாவதொரு
வேலை வேண்டும் முருகையா! -நாங்கள்
தங்கவோர் வீடுவேண்டும் வேலையா! தங்கவேலையா!
அங்கமெல்லாம் மின்னவே தங்கவைர நகைவேண்டும்
தங்கமான வேலையா! வைரவேலையா! -உந்தன்
மயில்மேய நன்புஞ்சைக் காடுவேண்டும் கதிர்வேலையா!
மயிலோடுவந்த சேவல்கூவ கேணிமேடுவேண்டும் கந்தையா!
மயிலேரிவந்தேநீ வாழ்த்தவேண்டும் சுப்பையா! (5)
இல்லறம் நல்லறமாம் முருகா! -அந்த
நல்லறம் எனக்குமின்னும் வாய்க்கவில்லையே
-திருக்குமரா!
சொல்லறம் கொண்டிங்குனைப் பணிகின்றேன் -நீயெனக்கு
நல்லதைச் செய்வாயென நம்பியுனை போற்றுகின்றேன்
கள்ளமில்லா நல்லோனை கடமைத்தவறா வல்லோனை
உள்ளமெல்லாம் நினைத்தவிர வேறொன்றை நினையாதானை
நல்கணவனை யான்பெற்றிடவே -எல்லையிலா நினது
நல்கருணை பொழிவாய் தேவதேவனே! (6)
பிள்ளையொன்று வேண்டிநின்றோம் முருகா! -நீயும்
பேசாமல் இருப்பதேன் முத்துக்குமரா
கிள்ளைமொழி கேட்டிடவேங்கும் நெஞ்சம் -எந்தன்
சொல்லை நீயும்கேளா மலிருப்பதேனோ? கந்தா!
கொள்ளை இன்பம் கோடிப்பணமிவை -எல்லையில்லா
பிள்ளையன்பு முத்தத்திற்கு ஈடாகுமோ? நாதா!
சொல்லித்தான் தெரியுமோ? முருகா! -உந்தன்
பிள்ளைநான் படும்பாடறியாயோ! சிவபாலா! (7)
பாராமுகமேனோ? ஆராமுதனே! ஆறுமுகனே! -பதில்
கூறாயோ! நினது திருவாய் மலர்ந்தே!
தீராயோ! ஏழையென் பாவங்களை வேரோடுப்பிடிங்கி
ஆரத்தழுவாயோ! உயிர்கசிய ஊனுருக்கி பணிகின்றேன்
தாராயோ! என்தொப்புள்க் கொடிமுல்லை துயர்போக்கி
பார்த்தாயோ! பாவிநான் படும்பாட்டை -அன்புக்கடலே
அருள்வாயோ! அற்பமான வாழ்வதையும் ஆனந்தமாக்க
உதறுவாயோ! இறுகப்பிடித்தேனின் மலர்ப்பாதத்தை. (8)
ஆணவம் போக்கவேண்டும் முருகா! -வாழ்வில்
ஆனந்தம் பூக்கவேண்டும் ஆறுமுகா! - கொடும்
அகந்தையை அழிக்கவேண்டும் முருகா! -மனதில்
அகமாயையை நீக்கவேண்டும் மாயோன் மருகா!
கர்வம் களையவேண்டும் முருகா!
-இப்பிறப்பில்
கர்மவினை யாவும்கரைந்தோட
வேண்டும் கந்தா!
சர்வமும் நீயானாய் முருகா!
-அந்த
சர்வேசன் செல்லமான சிவகுமரா! (9)
ஊனமதை போக்குவாய் முருகா -மனயீன
ஊனமதை போக்குவாய், கோபமும்; குரோதமும்
தானென்ற அகந்தையும்; தகமையில்லா ஆணவமும்;
வீணான ஆசையும்; வேண்டாத மோகமும்
தானாகப்போகவே தயைசெய்வாய் எந்தையே! ஞானவேலா!
தேனான பாடல்களை தினந்தோறும் வார்த்திடவே
கானமழையில் நாளும் நானுனை நனைத்திடவே
ஞானமதை எனக்கருள்வாய் ஞானக்கடலே! (10)
எங்கும் நிறைந்தவனே முருகா! இங்கில்லாமல் போவாயோ!
சங்கடத்தில் மூழ்கித் தவிக்கின்றேன்
-நான்வலம்புரி
சங்கெடுத்தூதி அழைகின்றேன்நின் சங்குப்பூக்
காதில்விழவில்லையோ?
அங்கமெல்லாம் சிலிர்க்கவே ஆறுமுகனுனை
நினைகின்றேன்
தங்கமயிலேறி வாராயோ! வெகுதூரம் சென்றுமறைவாயோ?
பொங்கிப் பெருகும் துக்கத்தால் நெஞ்சடைத்து
நிற்கின்றேன்
கங்கையெனப்பெருகும் கண்ணீரால் நின்தங்கப்பாதம்
நனைக்கின்றேன்
தயங்காமல் வந்தென்னைக்காவாய் பெம்மானே! (11)
கனவா இல்லை நினைவா கந்தையா!
கணநேரம் கண்டக் காட்சியது முருகையா!
மனமது உன்னினைவில் மஞ்சத்தில் படுத்திருந்தேன்
மணக்கோல உன்படத்தில் மல்லிகைப் பூக்கக்கண்டேன்
மணம்பரப்பும் மல்லிகைவாசம் என்னுயிர்வரை
வீசகொண்டேன்
நினது கோளவிழிகள் அசையக்கண்டேன் -நினதிருக்கர
ஞானவேலது பறந்தெனைவலம் வந்துனை அடையக்கண்டேன்
தேனான அனுபவமது தேனினுமினியனே! (12)