பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Friday, 21 October 2011

உன்மத்தமாக இனி இங்கு யாருமில்லை…



ஓ... அந்தி மந்தாரையே
அதிசயம் என்ன இன்று...
அதிகாலையே மலர்ந்து விட்டாயே!

நேற்றைய பொன் அந்தி 
மாலைபொழுதில்
உன் அருகே வந்து போன
என் அழகி, அவளின்
முந்தானைக் காற்றில் 
உன் தூக்கத்தையே 
தொலைத்தாயோ?...

தூக்கம், நானும் மறந்தே 
பலதினங்கள் ஆயினவே...
பைந்தொடி, அழகி பசுங்கொடி
அவள்மடி கிடைக்கும் வரை
அடியேனும் உன் கதியே!....


அடடா! செந்தாமரையே 
என்ன?
செருக்கோடு நிற்கின்றாய்...
நின் செந்நிறம் பெரிதென்றா?
இல்லை
மென்னிதழ் பெருமை யென்றா?...

இன்னும் சில நொடியே!
விண்ணில் வரும்
தேவதையைப் போல்
வைகைப் புனல் குளிர்த் 
தென்றலைப்போல்
வசந்தமகள் சுகந்தமான
மணம்பரப்பி....

செவ்விதழ் ஒளிர கதிர்ப் 
பொன்னொளியில் 
குளித்து எழுந்த,
கொட்டும் அருவி போன்றே

என் உயிரின் உயிரான 
தங்கத் தாமரை

அவள் 
அன்னம் தோற்கும் அழகுநடை
பயின்று வந்திடுவாள்...

அப்போது பார்ப்போம்....
ஓடப்போவது உன் செருக்கா?  
இல்லை
வெட்கி கூனிக் குறுகி 
உடையப் போவது
உன் குறுக்கா என்றே....


சோலைக் கருங் குயிலே 
காலை மாலை என்றே 
அனைத்து வேளையிலும்
உன் கானம் பொழிந்தே
இசைக்கு ஒரு குயிலெனவே
ஏற்றம் கொண்டாய்….
ஐயோ! பாவம்...
இனி உன் சம்பம் ஆகாது..

பிள்ளைத் தமிழ் பேசி -பசுங் 
கிள்ளை ஒன்று...
கொஞ்சும் மொழியோடு 
கொடி இடை தனிலே
இரு கனி சுமந்து

செவ்வாய் ஓரம் 
அமுது ததும்பும் அழகுடன்,
வண்ண மயில் போல….




தேவதையோ! இவள் என்றே..
விண்ணவரும் மயங்கிடவே
பெண்ணொருத்தி வருகிறாள்
என்னோடு கொஞ்சிக்
களித்திடவே….

உயிரினில் தேன் கலந்தே
உலகையே மறக்கடிக்கும்
அமுதப் பண் படைப்பாள்

ஆகவே,
இளங்குயிலே உன்
எண்ணமதை தேற்றிக்கொள்
எழில் நங்கை அவளே 
இனி இங்கே இசையரசி....

சந்தம் கொண்டே நீ பாடினால்
சத்தம் என்றே இனி உரைப்பார்
நித்தமும் நின் கானம் கேட்டவரே!

உன்மத்தமாக  இனி
இங்கு யாருமில்லை…

குற்றம் ஒன்றும் இல்லை 
கும்பிட்டே பணிந்து நில் 
மன்றம் வருபவளை - உன்
மனதாரப் பாராட்டிச் செல்...


அன்புடன்,
தமிழ் விரும்பி.



Friday, 14 October 2011

ஓஓ.. தென்றலே! ஒரு பதிலும் கூறாமல் நிற்பதேன்?





சிட்டுக்குருவியே! சிட்டுக்குருவியே!
ஒத்தையடிப் பாதையிலே, ஓரமாய் 
ஒண்டியாய் நிற்பதேனோ?....

என்னவள், அவளைப் போலே
உன்னவளும் இன்னும் வரவில்லையோ?
.................................................................................
பெண்ணவள் வரும் நேரமிது -உன்
பெட்டையும் வரவில்லையோ?

வெகுநேரமாகியது இன்னும் என் செல்லக்
குருவியதைக் காணவில்லை? -அவளின் 
கொஞ்சு மொழியும் கேட்கவில்லை -அதனாலே 
கொத்தி தின்னும் கொய்யாவும் பிடிக்கவில்லை,
அத்திப் பழமதையும், அறவே பிடிக்கவில்லை.

வானுயர போகவில்லை, வாயாரப் பாடவில்லை
தேனூறும் மலர்களிலே திளைத்திடவும் மனமில்லை.
வானூரும் நிலவைப் போல் என்
வாழ்வினிலே வந்தவளை - இங்கே
நாள்தோறும் நான் கண்டே கூடி களித்திருப்பேன்
நாயகிதான் வரவில்லை நான்என் செய்வேனோ?.

அரிதாரம் பூசமாட்டாள், ஆரவாரம் செய்யமாட்டாள்
அன்புடனே அழகி; என்குருவி - தன்
அழகான அலகோடு என்னலகு சேர்த்தே 
ஆழமான தன் காதலையும் என்னிடத்தே
ஆசையோடு கூறி சிலிர்ப்பாள்..


ஆவலோடு காதல் கொண்டே நானும்
அவளருகே போகும்போது அதை
அனுமதித்தே தனது இருறக்கை விரிப்பாள்!
இதயம் நிறைந்தவள் என் இளஞ்சிட்டவள்,
இறக்கை விரித்தே இப்போதே வந்திடுவாள்!

ஓ! மானுட நண்பனே.... 
உன்னவள்.... இந்நேரம் 
வந்து போயிருப்பாளே! -ஏன்
இவ்வளவு தாமதம் -இனி  
என்ன செய்யப் போகிறாய்?...

என் அருமை குருவியே!...
இனி நான் என்ன செய்வேன்?
இதயம் கனக்கிறது என்
இளம்நெஞ்சும் பட படக்கிறது....

வந்தாளா? வந்து சென்றாளா?
வருவாளா? வாராது இருப்பாளா?
யாரிடம் கேட்டிடுவேன்? -இப்போது
யாதொன்றும் அறிகிலேன்!

கோதை அவளைக் காணவில்லை
கொலுசொலியும்  கேட்கவில்லை 
கொஞ்சும்மொழி கேட்பேனோ? -என்
அஞ்சுகத்தை அள்ளி அணைப்பேனோ?

நெஞ்சமது தவிக்கிறதே! 
நெடு நேரமும் போகிறதே!
மண்ணில் நிலவுஅவள் வாராது
விண்ணில் நிலவும் வந்திடுமோ?!...

கவலை விடு தோழனே! 
கணக்காய் உனக்கு சில
உபாயம் சொல்லுகிறேன் கேள்.

என்னவளைக் காணாத போது -யானும் 
எதிர்வரும் தென்றலைக் கேட்ப்பேன்..
தென்றலும் வரவில்லை என்றால்
மன்னவள் மலர் பாதச்சுவடு பார்ப்பேன்... 

எண்ணமதை சொல்லிவிட்டேன் 
எதிர்வரும் தென்றலை கேள் -அதோ!
பெட்டையவளும் வந்துவிட்டாள்
பேரின்பம் தந்து, பெற்று விடவே...
நாளை பார்ப்போம், நானென்
நாயகியோடு போகிறேன்...



ஹா! அற்புதம் உரைத்தாய்...
சென்று வா! குருவியே -உன்
பெட்டையோடு சேர்ந்தே 
பேரின்பம் கண்டிடவே...

ஓ தென்றலே! ஒருகணம் நிற்பாயா?
ஓடிவரும் வழியிலே நீ! -என்
ஓவியம் அவளைப் பார்த்தாயா?

ஓஓ.. தென்றலே! 
ஒரு பதிலும் கூறாமல் நிற்பதேன்?
ஒடிந்துவிழும் என்மனதை 
உயிர்பிக்க மாட்டாயா? -உன் 
ஓரப்பார்வையின் அர்த்தமென்ன
ஓயாமல் கேட்கிறேனே.... 
உன் காதுகளிலே விழவில்லையா?

ஆ...ஹா!...வாசம் வருகிறதே! 
என் மன்னவள் சூடும்,
மல்லிகை வாசம் வருகிறதே!
பட்டாம்பூச்சி அவள் பட்டு மேனியின் 
வாசமும் கலந்து வருகிறதே!

ஹா..ஹா.! இதயம் நிரம்புகிறதே! 
என் இதயம் நிரம்புகிறதே! -என் 
துன்பம் விலகி இன்பம் பெருகுகிறதே!...
என் உயிரின் வாசமது
என்னுள்ளே நுழையும் போதே!

ஓ! மௌனத்தில் பேசும் தென்றலே...
மயக்கம் தெளிந்தேன்; என்னுயிரின்
வாசமதை உன்னிடம் தந்தனுப்பியே
பாசமதை சொல்லிச் சென்றாளோ! 
பாவை அவள்... நான் பாவமென்றே!....

ஓ! தென்றலே.... 
இன்று நீ! மௌன விரதமானாலும்
உன் மகத்துவம் அறிந்தேன்!...

தென்றலே! திங்கள் வரும் நேரமிது
அல்லியவள் மலர்ந்திடுவாள் 
விரைந்தே ஓடிவிடு - அவளைத் 
வேண்டுமளவு ஆரத் தழுவிடு...

சென்று வா தென்றலே! -நான்
சிந்தை குளிர்ந்தேன், உன் செய்கையால்
நன்றிகள் உனக்கு, நாளை பார்ப்போம்...

நாளை வரும் வேளையில் 
நாயகி அவள் வந்திடுவாள் 
கலங்கிடும் கண்ணே கவலைவிடு...
அப்போது தப்பாமல் நீயும் அவளை -உன்
கண்ணின் மணியவளை கண்ணுள்ளேக்
நீங்காது கொண்டிடலாம்..  
அதுமுதல் தூங்காது 
காதல் செய்தே களித்திடலாம்!.

பட படக்கும் மனமே! என்போல் 
பாவம் நீயும் தான்!...
என்ஆருயிரே... இப்போது 
என்னிடத்தில் இல்லாதபோது 
உனக்கு ஆறுதல் கூறமட்டும்  
என்னிடம் வார்த்தைகள் ஏது?


ஏ மனமே!.....
ஒன்று கூறுவேன் அமைதிகொள்....
வீடுபேறு தருபவள் நாளை வருவாள்! 
வேறுவழியில்லை நாம் இப்போது
வீடு போவோம் என்னுடனே வா!....

அன்புடன்
தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.




Wednesday, 12 October 2011

தஞ்சமென்று வந்தென்னை தடுத்தாண்ட ருளுவாயே நெஞ்சமெல்லாம் நிறைந்த சமயபுரத்தாயே!



சமயபுரம் அமர்ந்தவளே சாகாவரம் தருபவளே!
உமையவளே, உண்மைதோறும் உறைபவளே!
அம்மையே, எமையாதரிக்க  வேண்டியே - உம்மையே 
தேடிவந்தேன் ஏழைமுகம் பாராயோ! 

"எங்கெங்கு காணினும் சக்தியன்றோ" அவள்
எங்கள் இதயம் நிறைந்த பக்தியன்றோ 
தங்கமான குணமதில் தாயாய் தங்கியருளும்  
மங்கலமுத்துமாரி வுன்சேவடி போற்றுகின்றேன்!

வயல்நடுவே வருகின்றேன் வரும்பாதை, அதனூடே  
முயலோட, நதிதனிலே கயலாட கரைதனிலே
மயிலாட யாதொடும் சேர்மனமாட வேண்டுகிறேனம்மா 
குயல்போலே நின்புக்ழ்பாட அருள்வாயே!

தேரோடும் வீதியெங்கும் தேடுகின்றேன்ம் -மஞ்ச
நீரோடு வேப்பில்லையும் சூட்டிடவே - காவிரி
ஆறோடும் கரையினிலே தேடிவந்தேன் - அம்மா
காட்டிடுவாய் கனிமுகத்தை நேரில்வந்தே!

பக்தி ஆறோடும்பாதை தோறும் பாடுகிறேன் 
சக்தி உனையே யாவினிலும் காணுகிறேன் 
சத்தியத்தில் வாழ்பவளே சங்கடங்கள் தீர்ப்பவளே
நித்தியானந்தம் அருள்வாய் தாயே!

சக்தியே நீயல்லால், இல்லையே முக்தியே 
பக்தியே கொண்டிங்கு நின்பாதம் பற்றுகின்றேன்
புத்தியில் நின்றுடுவாய் புலனின்பம் மறந்திடவே
சித்தியினை தந்திடுவாய் சீக்கிரம்வந்திங்கே!

மஞ்சளாடை உடுத்தியுமே மண்டலமும் விரதமிருந்தே
அஞ்சுதிரி நெய்யிலேற்றி மாவிளக்கு போட்டுவந்தேன்
தஞ்சமென்று வந்தென்னை தடுத்தாண்ட ருளுவாயே
நெஞ்சமெல்லாம் நிறைந்த சமபுரத்தாயே! 



அன்புடன்,
தமிழ் விரும்பி,
ஆலாசியம் கோ.