பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Friday, 9 September 2011

மறுபிறவி என்பது மங்காத்தா விளையாட்டைப் போன்றதல்ல!



மறுபிறவி என்பது மங்காத்தா விளையாட்டைப் போன்றதல்ல! அது, பூர்வ ஜன்ம கர்ம வினையின் விளைவே!!

'நம் மதத்தை நம்பாதவர்கள் எல்லாம் கொன்றுக் குவிப்பதே நமக்கு விதிக்கப் பட்ட கடமை!!!' இந்த அதர்ம சிந்தனையின் காரணம் என்ன?. 

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள் நமக்கு விளக்கம் தருகிறது.... மேலேப் படியுங்கள் சகோதர சகோதிரிகளே!




மனிதருள் பெரும்பாலோருக்கு முற்பிறவி நினைவு இல்லையே என்பதை ஒருப் பெரியக் காரணமாக காட்டி, முற்பிறவி வாதத்தை எதிர்கிறார்கள். இந்த வாதம் சரியானது என்று காட்டவேண்டுமானால், இந்த வாதத்தை முன் வைப்பவர்கள், 'மனித ஆன்மா முழுவதும் நினைவு என்ற மனப் பண்பிலே அடங்கி இருக்கிறது' என்று காட்டியாக வேண்டும். 

இருப்புக்கு ஆதாரம் நினைவு தான் என்றால், இப்போது நம் நினைவில் இல்லாத நம் வாழ்க்கைப் பகுதி எல்லாம் இல்லை என்று ஆகிவிடும். ஆழ்ந்த மயக்க நிலையிலும் (Coma ), வேறுவகை நோயிலும், நினைவை இழப்பவர்கள் எல்லாம் இல்லாதவர்கள் என்றாகி விடுவார்கள்.

முற்பிறவி உண்டு என்பதற்கு இந்துத் தத்துவ ஞானிகள் காட்டு கின்ற முக்கியமான சில ஆதாரங்கள் உண்டு. அவை அறிவுத்தள நிலையிலேயே செயல் படுபவை.

முதலாவதாக, முற்பிறவி இல்லாமையானால், பிரபஞ்சத்தில் காணும் வேறுபாடுகளுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் விளக்கம் என்ன? நீதியும், கருணையுமே உருவான இறைவனின் ஆட்சியில் பிறக்கும் ஒரு குழந்தை மனித இனத்திற்கு பயன் படும் நற்குண, நற்செய்கை வளர்வதற்கு வேண்டிய சூழலில் / சூழ்நிலையில் பிறக்கிறது; அதே வேளையில் அதே ஊரில் பிறக்கும் இன்னொரு குழந்தை, தான் நல்லவனாக ஆகவே முடியாத சூழ்நிலையில் பிறக்கிறது! ஆயுள் முழுவதும் துன்பப்பட வேண்டிய சூழ்நிலையில் பிறக்கும் குழந்தைகளைக் காண்கிறோம். 

அவை எந்தத் தவறும் செய்யவில்லை. இது ஏன்? இதற்கு காரணம் என்ன? யாருடைய அறியாமையின் விளைவு இது? குழந்தையின் குற்றம் இதில் என்ன இருக்கிறது? குழந்தை செய்த குற்றம் ஒன்றும் இல்லை என்றால், தாய்தந்தையரின் செயலுக்காக அது துன்புற வேண்டுமா?

இந்தப் பிரச்னைக்கு விடை தெரியவில்லை என்று நாம் அறியாமையை ஒப்புக் கொள்வது நல்லது. இதை விட்டுவிட்டு, 'இங்கே படும் துன்பத்தின் விகிதப்படி, இறந்தபின் எங்கோ சுகம் கிடைக்கும்' என்றுக் கூறுவதோ, புரியாத சில புதிர்களைக் காரணமாகக் காட்டி இந்தப் பிரச்சனையை தட்டிக் கழிக்க நினைப்பதோ சரியல்ல. 

நம்மீது யாரோ ஒருவர் காரணம் இல்லாமல் சில இன்னல்களைச் சுமத்துவது அநீதி மட்டும் அல்ல; அக்கிரமும்கூட. இந்தத் துன்பங்களின் விகிதத்திற்கு ஏற்றபடி பின்னால் சுகம் உண்டு என்ற கொள்கையும் உறுதியாக நிற்க முடியாததே.




இப்படித் துன்பப்படும் சூழ்நிலையில் பிறந்தவர்களுள் எத்தனைபேர் சூழ்நிலையுடன் போராடி உயர் வாழ்வை நோக்கி முன்னேற முயல்கின்றனர்? எத்தனை பேர் அதிலேயே சிக்கி வெளிவர முடியாமல் அமிழ்ந்து போகின்றனர்? தீய, துன்பம் மிக்க சூழ்நிலையில் பிறக்கும்படிக் கட்டாயப் படுத்தப் பட்டவர்கள், கெட்டவர்களாகவும் இரக்கமற்ற கொடியவர்களாகவும் மாறிவிட்டால்

அவர்களின் கொடுமைகளுக்காக எதிர்காலத்தில் பரிசு வழங்க வேண்டுமா? அப்படியானால், இவ்வுலகில் ஒருவன் கெட்டவனாகவும் கொடியவனாகவும் இருக்கும் அளவுக்கு சுகமும் நலமும் பின்னால் அவனுக்கு கிடைக்கும் அல்லவா?

மனித ஆன்மாவின் மகிமைக்கும், சுதந்திரத்திற்கும் உண்மையில் மதிப்புக் கொடுக்க வேண்டுமானால், இந்த உலகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் பயங்கரமான துன்பங்களுக்கும் சரியான விளக்கம் வேண்டுமானால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. 

இந்தச் சுமையை எல்லாம் ஒரு நியாயமான ஒருக் காரணத்தின் மீது போட்டுவிட வேண்டும். அந்தக் காரணம் நாமாகவே செய்த செயல் அல்லது கர்மம் என்பது தான். 


அது மட்டுமல்ல; 'ஆன்மா சூன்யத்தில் இருந்து ஆக்கப் பட்டது' என்றக் கொள்கை 'விதி வலியது' என்ற முடிவிலும், எல்லாமே முன்னமே தீர்மானிக்கப் பட்டவிட்டது' என்ற முடிவிலும்தான் கொண்டுபோய் விடுகிறது. இந்த முடிவு கருணை மிக்க இறைவனுக்குப் பதிலாக, நம் முன் பயங்கரமான, இரக்கமற்ற, எப்போதும் கோபமிக்க ஒருவரையே இறைவனாகக் காட்டுகிறது. 

மதம் மக்களை நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ செய்யும் கருவி என்ற அளவில் 'ஆக்கப்பட்ட ஆன்மா' என்ற கொள்கை விபரீதத்தையே உண்டாக்குகிறது. இந்தக் கொள்கை 'விதி வலியது' 'எல்லாம் முன்னரே தீர்மானிக்கப் பட்டுவிட்டது' போன்ற முடிவுகளுக்கே நம்மை அழைத்துச் செல்கிறது. 

'நம் மதத்தை நம்பாதவர்கள் எல்லாம் கொன்றுக் குவிப்பதே நமக்கு விதிக்கப் பட்ட கடமை' ஏற்றுக் கருதி அப்படியே பல இடங்களில் பலக் காலங்களில் செய்தும் கொண்டு வருகிறார்கள். உலகில் காலகாலமாக பல மதம் பிடித்த மதவாதிகள் செய்து வரும் காரியங்கள் என்றாலும் காரணங்கள்!!??.... அப்படி செய்வதற்கு இத்தகைய முடிவுகளே காரணம்.


நியாயத் தத்துவ ஞானிகள் மறுபிறவியைப் பற்றிய ஒரு வாதத்தை எப்போதும் சொல்லி வருகிறார்கள்; அதுவே முடிந்த முடிவாக எனக்கும் தோன்றுகிறது; 'நமது அனுபவங்களை ஒழிக்க முடியாது'. 

நமது செயல்கள் (கர்மம்) மறைத்துவிட்டது போல் தோன்றினாலும் அவை நமக்கு புலனாகாமல் (அத்ருஷ்டம்) இருக்கவே செய்கின்றன. அவை திரும்பவும் மனப் போக்குகளாக, (பிரவ்ருத்திகளாக, Tendency) வெளிப்படுகின்றன. 

பிறந்தக் குழந்தையிடம் கூட சில மனப் போக்குகளைக் காண்கிறோம். அப்படி இருக்கும் போது அவைகள் இந்தப் பிறவியில் பிறந்த உடனேயே பெற்றவைகளாக இருக்க முடியாது.


நமது மனப் போக்குகளுக்கு சில, மனிதனுக்கே உரிய சில உணர்வுப் பூர்வமான செயல்களின் பலனே என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இத்தகைய மனப்போக்குகளுடன் நாம் பிறந்திருப்பது உண்மையானால், முன்பு எப்போதோ உணர்வுப்பூர்வமாகச் செய்த செயல்கள் தான் இவற்றிற்குக் காரணங்களாக இருக்க வேண்டும் என்பது உறுதி.

ஆக, மறுபிறவி என்பது மங்காத்தா விளையாட்டைப் போன்றதல்ல! அது, பூர்வ ஜன்ம கர்ம வினையின் விளைவே!! என்றே கூறி, சுவாமி விவேகானந்தரின்சிந்தனைகளை மீண்டும் சிந்திப்போம் என்றும் கூறி, முடிக்கிறேன்.

நன்றி வணக்கம்,

அன்புடன்,
தமிழ் விரும்பி.






No comments:

Post a Comment