பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Monday, 22 August 2011

எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும்?




"அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியரசாணை
பொழுதெல்லாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் 
நிலைத்திடல் என்றிவை அருள்வாய்
குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே".     -உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

இந்தப் பாடலை நமது மகாகவி பாரதி தனது இருபத்து எட்டாவது வயதிலே பாடியுள்ளான்.


நாம் இதுவரை சென்றப் பலப் பதிவுகளில், இந்த பிரபஞ்சம், இயற்கை, அதில் வாழும் உயிர்கள் குறிப்பாக மனித தோற்றம் மறைவு, மறுபிறவி இவைகளை எல்லாம் பற்றி கொஞ்சம் நுனிப்புல் மேய்ந்துப் பார்த்தோம். ஓரளவுக்கு கொஞ்சம் அவைகளைப் பற்றிய அடிப்படை அறிவு நமக்கு கிடைத்தது.

இப்போது நாம் வீடுபேறு, விண்ணுலகம் போகுதல், இறைவனின் திரு பாதத்தில் சென்றமர்தல், மோட்சம் அடைதல் என்றெல்லாம் பலரும் பலவிதமாகக் கூறக் கூடிய அந்தப் பரம் பொருளின் ஒரு சிறு பிரிவான இந்த மனித ஆத்மா, இந்தப் பிரபஞ்சத்தின் மனமாகிய அந்தப் பேரொளியோடு கலப்பதைப் பற்றிய வழி முறைகளைப் பற்றி சிறிது பார்ப்போம். 

இப்படியாகிய முயற்சியில் தான் நாம் ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ முயன்றுக் கொண்டிருக்கிறோம் அதுவே படைப்பின் தத்துவம்.

எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும்? உலகில் மதத்தால், இனத்தால் பிரிந்து இருக்கும் மனித இனம் அறிந்த ஓர் உண்மை. மனிதனின் உடல் மட்டுமல்ல, ஆன்மாவும் கூட என்பதே அது.

மேல்திசையர் (மேலை நாட்டினர்) மனித உடலுக்கும், கீழை நாட்டினர் மனிதனின் ஆன்மாவிற்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். இது இயல்பாகவே அமைத்துள்ளது. 

மனித உடல் அதனுள் ஆவி உள்ளது என்றக் கருத்தைக் கொண்ட அவர்கள்.... மனிதன், உடைமைகள், சொத்து, உறவு, முதலியவற்றால் இன்பம் பெறவே வாழ்கிறான் என்பார்கள். ஆக, மனிதன் இந்த புலன் இன்ப நுகர்ச்சியில் மயங்கி.... 

அதற்கான வாய்ப்புகளை தரவேண்டும் என்றே கடவுளை நாடுகிறான்.

ஆக, இந்தப் புலன் இன்பங்களை குத்தகைக்குத் தருபவன் தான் இந்தக் கடவுள் என்று நம்புகிறான். அதற்காக இன்றைய வியாபாரிகளின் உத்தியெல்லாம் பயன் படுத்தி குத்தகையை செய்யவும் முயற்சிக்கிறான்.

ஆனால், வாழ்க்கையின் லட்சியம் இறைவன். 

அவனுக்கு அப்பாற் பட்டது வேறு ஒன்றும் இல்லை. இப்போது அனுபவிக்கும் புலன் இன்பங்கள் யாவும், இதைவிட மேலான ஒன்று உள்ளது, அதை பெறும் வரை இது தற்காலிகமானதே என்பதே இந்தியர்களாகிய நமது கருத்து. 


அது மட்டுமல்ல, புலனின்பங்கள் தான் எல்லாம் என்று எண்ணினால் அது பேராபத்திற்கு வழிவிடும்... அதோடு புலன் இன்பத்தில் நாட்டம் குறைய குறைய வாழ்க்கையின் தரம் உயரும் என்றும் இந்தியர்கள் நம்புகிறார்கள்.

விலங்குகள், புலன் இன்பத்தில் அதிக நாட்டம் கொடிருப்பதை நாம் வாழ்க்கையில் இயல்பாக காண முடியும். உதாரணமாக, ஒரு நாயையோ அல்லது பன்றியையோ பாருங்கள் அது தான் உண்ணும் போது அவ்வளவு வேகமாக, ஆனந்தமாக, வாயில் நீர் வடிந்து ஓடும் அளவிற்கு, ஒருவித சத்தத்தையும் ஏற்படுத்திக் கொண்டும் உண்ணும்.

இதை போன்ற மனிதனைக் காண்பதரிது. மனிதன் தாழ்ந்த நிலையில் இருக்கும் அளவிற்கு புலன் இன்பத்தில் இன்பம் காண்கிறான். 

மேலே உயர உயர, பகுத்தறிவும், அன்பும் அவனது வாழ்க்கையின் குறிக் கோளாகின்றன. 

மனித ஆற்றல், பொதுவாக உடல், மனம், ஆத்மா இவைகளுக்கு செலவு செய்யப் படுகிறது. 

ஒரு உதாரணம் கூறலாம். ஒரு மூன்று வாளியில் ஒவ்வொன்றிலும் அதனின் அரை அளவு தண்ணீர் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.


இப்போது ஏதாவது ஒரு வாளியில் தண்ணீரை அதிகரிக்க வேண்டுமானால். மற்ற இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டிலுமோ அளவுக் குறைந்தே ஆக வேண்டும்.

ஆக, உடல், மனம், ஆத்மா இதில் எதை பலப் படுத்துகிறோமோ அப்போது மற்ற ஒன்றோ அல்லது இரண்டு பலம் குறைகிறது அல்லது செயல் அற்று போகிறது.

இப்படித் தான் காட்டு மிராண்டிகளாக இருந்த மனித இனம் அதீத பலம் கொண்ட உடலைக் கொண்டிருந்தது....என்பது வரலாறு கூறும் உண்மை.

அறிவற்ற மக்களின் அதாவது காட்டு மிராண்டிகளின் புலன் இன்ப நாட்டம், நாகரிக மக்களைவிட அதிகமாக இருக்கும். 


சமுதாய நாகரிகம் அடையும் போது அதில் உள்ள மக்களின் நரம்புகளில் மாற்றத்தை கொண்டு வருகிறது. அதே வேளையில் உடல் ரீதியாக பலவீனம் அடைகிறார்கள். 

காட்டு மிராண்டி இனத்திற்கு நாகரீகம் அளித்துப் பார்த்தால் / பார்த்ததில் இந்த உண்மைத் தெரியும். ஆனாலும், இதனாலே பெரும் பாலும் காட்டுமிராண்டிகளே ஏறக்குறைய வெற்றியும் பெறுவார்கள்.

புலனின்பம் மனிதனை மிருக நிலைக்கு இழுத்துச் செல்லப்படும். தான் அசுத்த பொருளை உணவாக உண்பதாக ஒருபோதும் பன்றிக்குத் தெரியாது. 


அப்படி அது உண்ணும் போது அதன் முன்பு தேவதையே வந்து நின்றாலும் அது அதை ஏடு எடுத்து கூட பார்க்காது... அந்த இன்ப நுகர்சியிலே தான் இருக்கும். அதனுடைய வாழ்க்கையே உண்பதில் தான் இருக்கிறது.

புலனின்பம் நிறைந்த ஒரு சொர்கத்தை விரும்பும் மனிதனின் வாழ்க்கையும் இத்தகையதே........ பன்றிகள் போல் புலன் இன்ப சேற்றிலே உழன்றுக்  கொண்டு அதற்கு அப்பால் இருக்கும் எதையும் பார்க்க முடியாத நிலையிலே இருக்கிறான். இவர்களுக்கு புலன் இன்பத்தில் தான், ஆசை, காதல், வெறி என்று எல்லாம்.

பக்தன் என்ற வார்த்தை எதை குறிக்கிறதோ அத்தகைய மேலான ஒரு நிலையை இவர்களால் அடைய முடியாது. 

இவர்களால் ஒரு போதும் இறைவனின் மீது அன்பை வைக்க முடியாது.       

ஆனால் சிறிது காலம் இந்தக் கீழான இலட்சியத்தைப் பின்பற்றி வரும் போது நாளடைவில் மாற்றம் ஏற்படவே செய்யும், தனக்கு தெரியாத உயர்ந்த ஓன்று உள்ளது என்பதை ஒவ்வொரேனும் உணரவே செய்வான். வாழ்கையின் மீதும், புலன் இன்ப பொருள்களின் மீதும் அவனுக்குள்ளப் பற்று படிப்படியாக மறையும்... 

எப்போது?...... கர்மம் தீர்ந்து... பூஜ்ஜிய நிலையை நெருங்கும் போது அல்லது அதற்கான காலம் வரும் போதே அதற்கு முன்பே பொறித் தட்டுகிறது....

இதை பற்றி தொடர் சிந்தனைகளை அடுத்தடுத்த பதிவில் மேலும் பேசுவோம்...

தொடரும்......

*******************************************************************

திருவாசகம்

மாணிக்க வாசகர் அருளியது


"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் 
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற 
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் 
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா 
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி 
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே 
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் 
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் 
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் 
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே 
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே" 45 


திருச்சிற்றம்பலம். 

நன்றி வணக்கம்,
அன்புடன்,
தமிழ் விரும்பி.


2 comments:

Unknown said...

திருவாசக்திற்கு உருகார்
ஒருவாசக்திற்கும் உருகார்
நன்றி! நண்பரே!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

///புலவர் சா இராமாநுசம் சொன்னது…
திருவாசக்திற்கு உருகார்
ஒருவாசக்திற்கும் உருகார்
நன்றி! நண்பரே!

புலவர் சா இராமாநுசம்///

உண்மை தான் புலவர் அவர்களே...
என்னைபோன்ற எழுபதுக்கு உரியவர்களுக்கு நமது இளையராஜா அவர்களின் அமரத்துவமான சிம்பொனியில் கேட்கும் போது... "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்பதை உணர்வுப் பூர்வமாய் உணர முடிகிறது.

தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ஐயா!

Post a Comment