மனித வாழ்வின் பல்வேறு கூறுகள் பற்றி யோசிக்கப் போகும் முன்
இந்த சில வார்த்தைகளையும் அதனை பற்றிய நமது அறிவையும் மனதில் கொண்டு மேலே
செல்வோம்.
மனித உடல் (உடல் உறுப்புகள்),
புலன்கள் (அதாவது நாம் கூறும் ஐம் பொறிகளின் மூலம் உணரப்
படுகின்ற விஷயம் கொண்டு சேர்க்கப் படும் முதலிடம்)
மனம்,
புத்தி,
அறிவு அல்லது ஆன்மா.
இந்த ஐந்தையும் மனதில் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதன் பாகுபாடுகளை, பயன்களை, குணங்களை, அதன் சங்கிலித் தொடர்
இணைப்புகளை,
எதனால் எது இயங்குகிறது என்பதைப் பற்றிப் பேசும் போது மிக
எளிதில் விளங்கும்.
1. மனித வாழ்க்கையில் நிலையானது ஏதாவது உண்டா?
2. இந்த உடல் அழிந்தப் பின்னும் அழியாமல் இருப்பது என்ன?
3. இந்த உடற்கூடு மாய்ந்து சாம்பலானப் பின்னும் ஏதோ ஒன்று
வாழ்ந்துக் கொண்டிருப்பதில்லையா?
4. உடலை எரித்து சாம்பலாக்கும் நெருப்பினால் பாதிக்கப் படாத
ஏதோ ஒன்று இல்லையா?
5. அப்படி ஒன்று இருக்குமானால் அது என்ன ஆகிறது?
6. எங்கே போகிறது?
7. அது எங்கிருந்து வந்தது?
இப்படிப் பலக் கேள்விகள் படைப்பின் காலம் தொட்டேக் கேட்கப்
பட்டக் கேள்விகள். மனித மனங்கள் இருக்கும் வரை இந்தக் கேள்விகள் இருக்கத்தான்
செய்யும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவைகளுக்கு முடிவானப் பதில்
கிடைத்தது.
அந்தப் பதிலே திரும்பத் திரும்பத் எடுத்துக் கூறப் பட்டது.
நமது அறிவுக்கு எட்டும் படியாக (தெளிவாகப் புரியும் படியாக கூறப் படுகிறது)
இதுவும் அது போன்ற ஒரு முயற்சியே.
முப்போதும் உள்ள உண்மையை... புதிய மொழியில் எடுத்துச்
சொல்கிறோம். கடவுளின் மொழியைப் பாமர மக்களின் மொழியில் சொல்கிறோம்.
இந்தக் கருத்துக்கள் எந்த தெய்வீக சக்தியிலிருந்து
தோன்றியனவோ! அது, அந்த தெய்வசக்தி எப்போதும் மனிதனில் இருக்கிறது. ஆம், அது மனிதனில் இருக்கிறது.
ஆகவே, மனிதனாகிய நம்மால் இந்தக் கருத்தை எப்போதும் புரிந்துக்
கொள்ள முடியும்.
மனித மனம் இயல்பாகவே வெளியில் காணும் அனைத்துப்
பொருட்களிலும் தன்னை செலுத்துகிறது. ஐம்புலன்கள் வழியில் அதை அடைகிறது.
கண் பார்க்கவேண்டும், காது கேட்க வேண்டும்.. இப்படி மற்ற
புலன்களும் இந்த உலகை உணரவேண்டும்.
இந்த இயற்கையின் அழகும், நுட்பமும் மனிதனின் கருத்தைக்
கவர்ந்தன...
அவன், இதன் மர்மத்தை அறிய, தீர்வு காண விரும்பினான் என்பதற்கான ஆதாரம் பல மதங்களிலும் உள்ளன.
சரி இப்படி ஆராய்ந்த மனித மனங்கள்... இந்த வானம், நட்சத்திரம், கிரகங்கள், பூமி, நதிகள், மலைகள், கடல் இவையாவும் தெய்வமென
ஒவ்வொன்றையும் ஒருக் கடவுளாக வைத்துக் கொண்டன.
இன்று நாம் இயற்கையின் சக்திகள் என்று சொல்லக் கூடிய
யாவற்றையும், பழங்கால மனிதன், தெய்வங்களாகவும், தேவர்களாகவும் உருவகப் படுத்திக்
கொண்டான்.
ஆராய்ச்சியின் ஆழம் அதிகமாக போக போக மனித மனத்திற்கு
திருப்தி அளிக்காததால், மனிதனின் அகத்தை நோக்கித் திரும்பினான்.
_____________________________________________________________________
சரி விசயத்திற்கு வருவோம்.
நான் உங்களைப் பார்க்கிறேன். கண்கள் அதற்கு உதவுகின்றன, இவைகளை கருவி, அதாவதுக் கேமிரா என்று சொல்லலாம்.
கண்கள் பார்க்கும் உறுப்புகள் இல்லை, அதனால் தான் அதை காமிரா என்றேன் /
அதாவது பொறிகளே.
நான் இப்படி கூறவுது உங்களுக்கு குழப்பமாகத் தோன்றலாம். இதை
இன்னும் சுலபமாகக் கூற வேண்டுமென்றால்.
இடையில் பார்வைப் போனவனுக்கு, பார்வைப் போன பிறகும், அவன் முதலில் கண்ட எந்தக்
காட்சியையும் அவனால் உடனே மனத்தால் நினைத்து உணர முடியும்.
ஆக, கண்கள் / காமிரா கெட்டுப் போனாலும், அந்த காமிராவால் படம் பிடிக்கப்
பட்ட விஷயங்கள் வேறு ஒரு இடத்தில் இருப்புக் கொள்கிறது.
அதையே இப்படிக் கூறலாம், கண்களில் விழுந்தக் அந்தக் காட்சியைத் தாங்கிச் செல்வது
பார்வைப் புலன்கள்.
அதாவது உண்மையான பார்வைப் புலன்கள் மூளைக்குப் பின்னால்
இருக்கும் நரம்பு மையமே.
இவைகள் கெட்டுப் போனால், நல்லக் கண்களைக் கொண்டவன் கூடப்
பார்க்க முடியாது.
புலன்கள் கெட்டுப் போனால் / அல்லது செயல் படாது செய்தால்
கருவிகளால் எந்தப் பயனும் இல்லை.
இதை நாம் அனைவரும் அறிந்த சிறு உதாரணம் மூலம் கூறலாம்.
நாம் ஒரு நூலகத்தில் இருந்து கொண்டு நமக்குப்
பிடித்த ஒருப் புத்தகத்தை ஆழ்ந்துப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்
கொள்வோம்.
அப்போது மணி அடிக்கிறது, அது நமது காதில் விழுவதில்லை.
மணிச் சத்தம் எழுகிறது,
அது காற்றில் பயணம் செய்கிறது,
காதுகளின் மூலம் செவிப் புலனையும் அடைகிறது.
ஆனாலும் நாம் அதைக் கேட்கவில்லை.
இப்போது எதில் குறைபாடு?
மனம் அதில் ஈடுபடவில்லை என்பதே
உண்மை.
ஆகவே, ஒன்றை நாம் உணர. முதலில் பொறி / கருவி, அதன் பிறகு இரண்டாவதாக புலன் (மூளையோடு கூடிய நரம்பு
மண்டலம்), மூன்றாவதாக மனத்தின் ஈடுபாடு அவசியம்.
அதாவது, புறக் கருவிகள் / பொறிகள் / உடல் உறுப்புகள்;
பின்னர் உணர்சிகளை கொண்டு சேர்க்கின்ற மையமாகிய புலன்;
கடைசியாக புலன்களோடு இணைந்த மனம்
இவை மூன்றும் தேவை.
சரி இத்தோடு இந்தச் செயல் முடிவடை கிறதா? இல்லை.
பொறி, புலன், மனம் என்ற இந்த நிலையில்....
மனம் அதைத் தாங்கிக் கொண்டு புத்தியின் முன்பு வைக்கிறது.
புத்தி, தன் முன்பு வைக்கப் பட்டது என்ன என்பதைத் தீர்மானம்
செய்கிறது.
அதோடும் முடிவதில்லை...
இந்தப் புத்தி எல்லாவற்றையும் தாங்கிச் சென்று, உடலுக்கு அதிபதியாக சிம்மாசனத்தில்
வீற்றிருக்கும் ஆன்மாவாகிய அரசனின் முன்பு வைக்கிறது.
இதைச் செய்யவேண்டும், இதைச் செய்யவேண்டாம் என்று கட்டளை
அவனிடம் இருந்துப் பிறக்கிறது.
அப்படி அந்தக் கட்டளை, புத்தி, மனம், புலன்கள் என்று அதே வழியாக பொறியை
அடைகிறது.
அதன் பிறகு தான் செயல் முழுமை அடைகிறது.
__________________________________________________________________
பொறிகள் அல்லது உறுப்புகள் அவைகள் நமது உடலில் இருக்கின்றன.
மனமும், புத்தியும் எங்கே இருக்கின்றன?
மனமும் புத்தியும் இந்துக்கள் சூட்சும உடலில்
இருக்கின்றன என்றும் கிறிஸ்துவர்கள் ஆன்ம உடலில் இருக்கின்றன என்பார்கள்.
இந்த சூட்சும உடல், தூல உடலை விட மிகவும் நுட்பமானது.
ஆனால் இந்த சூட்சும உடல் ஆன்மா அல்ல.
தூல உடல். அதாவது, நமது பூத உடல் சில வருடங்களில்
அழிந்து விடுகிறது.
சூட்சும உடல் அவ்வளவு சுலபமாக அழிவதில்லை. ஆனால் அவைகள் சில
வேளைகளில் சக்தியை இழக்கிறது, பல வேளைகளில் வலிமையாக இருக்கிறது.
இதை விளக்க சில உதாரணங்களைக் கூறலாம்.
வயதானவர்கள் மனம் பலவீனம் அடைகிறது.
போதைப் புலங்கிகளின் மனம் பாதிக்கப் படுகிறது.
ஆக, உடலைப் போல மனமும் எழுச்சியையும், வீழ்ச்சியையும் அடைகிறது.
ஆனால்,ஆன்மாவுக்கு அழிவோ, வீழ்ச்சியோ இல்லை.
அது எப்படி நமக்குத் தெரியும்?
இந்த மனத்திற்கும் பின்னால் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது
நமக்கு எப்படித் தெரியும்?
என்றக் கேள்விக்கு பதில்....
மந்தமான, உணர்வற்றதுமான............... திடப்
பொருள்களில்............ சுய ஒளி படைத்த ஞானமும் + அறிவின் அடிப்படையும் இருப்பதில்லை.
அதனால் தான் அறிவே உருவான ஜடப்பொருளை நாம் என்றும், எங்கும் காண்பதில்லை.
ஜடப் பொருளும் சுயமாக ஒளிர முடியாது. அந்த ஜடப்பொருளையும் ஒளிரச் செய்வது
அறிவுதான்.
உதாரணம் வேண்டும் என்றால் நமக்கு முன்பு ஒரு மாளிகை இருக்கிறது என்று
வைத்துக் கொள்வோம்.
இந்த பெரிய மாளிகை இருப்பதற்கு அறிவுதான் காரணம். ஆம், ஏதோ அறிவுப் பொருள் இதைக் கட்டிரா
விட்டால் இங்கே இருக்க முடியாது.
அதைப் போலவே உடலும் சுய ஒளி பெற்றது அல்ல. அப்படி அதற்கு
சுய ஒளி இருக்கும் என்றால், இறந்துப் போன உடலிலும் சுய ஒளி இருக்க வேண்டும்.
இதை போலவே சூட்சும உடலுக்கும் கூட சுய ஒளி இல்லை.
சூட்சும உடல் கொண்ட; மனமும், புத்தியும், சந்திரனைப் போல தேய்ந்து வளரக்
கூடியது.
சந்திரனைப் போலவே, வேறு ஒன்றிலிருந்து தான் ஒளியைப்
பெறுகிறது. அதனால் தான் சில நேரங்களில் மனம், புத்தி பலமாகவும், பலவீனமாகவும் இருக்கிறது.
மனதிற்கு கிடைக்கும் ஒளி..... நிரந்தரமான, அழிவில்லாத அந்த அறிவான, இருப்பான, ஆனந்தமான ஆன்மாவில் இருந்து தான்
கிடைக்கிறது.
சரி இந்த
ஆன்மாவின் குணம் தான் என்ன என்றால்? அதற்கு பதில்.
ஆன்மாவிற்கு குணங்கள் இல்லை.
ஆம், இந்த அறிவு, இருப்பு, ஆனந்தமே தான் ஆன்மா.
இவைகள் தாம் ஆன்மாவின் சாரம். (நிர் குணமானது)
சரி இப்படி கூறும் போது... இந்த ஆன்மாவிற்கு ஒளி
எங்கிருந்தது கிடைத்தது என்று வாதிட்டோம் என்றால்.
அது தொடரர்ந்து போய் கொண்டிருந்தால், அது ஒரு சுய ஒளி உள்ள ஒருப்
பொருளில் இருந்து தான் பெறப் பட்டது என்பதில் தான் முடியும் அதிலே, இந்தத் தர்கத்தையும் முடிப்போம்.
இப்போது ஒரு தெளிவை நாம் பெற முடியும்....
உடலின் குணங்களும், சக்திகளும் மனத்தில் இருந்துப்
பெறப் படுகின்றன.
சூட்சும உடல் சக்தியையும், ஒளியையும், அதற்குப் பின்னால் உள்ள
ஆன்மாவிடமிருந்துப் பெறுகிறது.
அப்படி என்றால் இந்த ஆன்மாப் படைக்கப் பட்டதா?
ஆன்மா சுய ஒளி பெற்றது; ஆன்மா அறிவு, இருப்பு, ஆனந்தம் இவற்றை சாரமாக கொண்டது; அதாவது சச்சிதானந்தமானது. ஆகவே
ஆன்மாப் படைக்கப் பட்டது அல்ல.
காலம் (Time
frame) என்பது மனம் சிந்திக்கத் தொடங்கும்
போது தான் ஆரம்பம் மாகிறது....
அந்த மனமே இந்த ஆன்மாவால் தான் ஒளி பெறுகிறது என்பதால்
காலத்தை ஆன்மாவிற்குள் அடக்க முடியாது.
ஆகவே, ஆன்மா, பிறப்பு இறப்பற்றது என்பது உறுதியாகிறது.
ஆன்மா பிறப்பு இறப்பு அற்றது. ஆனால், இந்தக் கீழ்காணும் பல்வேறு
நிலைகளின் வழியாகவும் செல்கிறது.
ஆன்மா; தாழ்ந்த நிலையில் இருந்து சிறிது சிறிதாக தன்னை
வெளிப்படுத்தியவாறு உயர்ந்த நிலைக்குச் செல்கிறது;
(இதை ஒரு செல் உயிரின் நிலையில் இருந்து உயர்ந்து மனிதனாகப்
பிறந்தும், பிறகு அது இன்னும் உயர்ந்து முக்தி அடைவது)
ஆன்மா; மனத்தின் மூலமாக, உடலை இயக்கியவாறு, தனது மகிமையை வெளிப்படுத்துகிறது;
ஆன்மா; உடலின் மூலமாக வெளி உலகத்தைப் புரிந்துக் கொள்கிறது;
ஆன்மா; ஓர் உடலை எடுத்துக் கொண்டு அதைப் பயன் படுத்துகிறது;
அந்த உடல் நலிந்துப் போகும் போது வேறு ஒரு உடல் எடுத்துக்
கொள்கிறது.
இவ்வாறு இது நடந்துக் கொண்டே இருக்கிறது.
இப்போது கட்டுரையின் தொடக்கத்தில் எழுப்பியக் கேள்விகள்,
1. மனித வாழ்க்கையில் நிலையானது ஏதாவது உண்டா?
2. இந்த உடல் அழிந்தப் பின்னும் அழியாமல் இருப்பது என்ன?
3. இந்த உடற்கூடு மாய்ந்து சாம்பலானப் பின்னும் ஏதோ ஒன்று
வாழ்ந்துக் கொண்டிருப்பதில்லையா?
4. உடலை எரித்து சாம்பலாக்கும் நெருப்பினால் பாதிக்கப் படாத
ஏதோ ஒன்று இல்லையா?
5. அப்படி ஒன்று இருக்குமானால் அது என்ன ஆகிறது?
6. எங்கே போகிறது?
7. அது எங்கிருந்து வந்தது?
இந்த ஏழில் முதல் ஐந்துக் கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது.
ஒரே
வரியில் சொன்னால், உடல் அழிகிறது ஆன்மா
அழிவதில்லை.... எரியும் நெருப்பு ஆன்மாவைத் தீண்டுவதில்லை... ஜோதி ஜோதியை எப்படி
எரிக்கும்?
கடைசி இரண்டுக்
கேள்விகளுக் காணப் பதில்களின் சுருக்கத்தை பிறகு பார்ப்போம்...
என்ன ஏதாவது புரிகிறது மாதிரி இருக்கிறதா?...
எந்திர வாழ்வில் இது போன்ற விசயங்களை புரியும் படி படிக்க
எங்கே நேரம் என்கிறீர்களா? அப்படி நினைக்க வேண்டாம்.
இவைகளை நாம் நிச்சயம் ஒரு நாள் புரித்துக் கொண்டே ஆக
வேண்டும். இது அவசியமானது. இப்போது பயன்படுவதாகத் தோன்றாது.
ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, ஒவ்வொரு ஜீவராசியும் இதை செய்துக்
கொண்டு தான் இருக்கின்றன. என்ன கடைசியாக ஆறறிவுப் படைத்த, நாம் தான் புரிந்துக் கொள்ள
முடிகிறது.
ஆக, அதனாலே எல்லா உயிரிலும் மனிதப் பிறவியே சிறந்தது என்பர்
சான்றோர்.
தயவு செய்து ஒரு முறைக்கு இரண்டு முறை படியுங்கள்....
நிச்சயம் எனக்கு விளங்கியவைகள் உங்களுக்கும் விளங்கும்.
நன்றி வணக்கம்,
அன்புடன்,
தமிழ் விரும்பி.
6 comments:
அருமையான பதிவு, அடுத்த பகுதியையும் எதிர்நோக்குகிறேன். - uma
நல்ல, ஆய்வான பதிவு!ஏன் ஆழமான பதிவும்
கூட, ஆனால் அனைவரும் படிப்பாரா..?
ஐயமே!
தங்களை மிகவும் பாராட்டுகிறன்
புலவர் சா இராமாநுசம்
////பெயரில்லா சொன்னது…
அருமையான பதிவு, அடுத்த பகுதியையும் எதிர்நோக்குகிறேன். - uma////
அடுத்தப் பகுதியையும் எழுதுகிறேன் உமா.
நன்றி.
////புலவர் சா இராமாநுசம் சொன்னது…
நல்ல, ஆய்வான பதிவு!ஏன் ஆழமான பதிவும்
கூட, ஆனால் அனைவரும் படிப்பாரா..?
ஐயமே!
தங்களை மிகவும் பாராட்டுகிறன்
புலவர் சா இராமாநுசம்///
தாங்கள் சொல்வதும் உண்மையே
தேடுதல் வர வேண்டும்...
தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் ஐயா!
பரங்கிமலை ஜோதி..ஒரு காலத்தில் ரொம்பப் பிரபலம்..
அதுக்கடுத்து இப்போதான் ஜோதி பத்தி கேள்விப்படுறேன்....
ஆனா...போங்க..என்னென்னமோ எழுதுறீங்கோ..
நல்லாருங்கோ...
////minorwall சொன்னது…
பரங்கிமலை ஜோதி..ஒரு காலத்தில் ரொம்பப் பிரபலம்..
அதுக்கடுத்து இப்போதான் ஜோதி பத்தி கேள்விப்படுறேன்....
ஆனா...போங்க..என்னென்னமோ எழுதுறீங்கோ..
நல்லாருங்கோ...////
வாருங்கள் மைனர் வாள் தங்களின் வரவு நல் வரவாகுக.
தாங்கள் கூறும் பரங்கிமலை ஜோதி... திரையரங்கம் என்று நினைக்கிறேன் சரியா?
நானும் ஒருமுறை அங்கு ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னாள் சென்றிருக்கிறேன்
அது தான் எனது முதல் சென்னைப் பயணமும் கூட.
Post a Comment