........................................................................................................................
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எனது இந்த ஆக்கம் முன்பே வகுப்பறையில் ( http://classroom2007.blogspot.com/ ) 9.1.2011அன்று வெளிவந்ததின் மறுபதிவாகும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++எத்தனை பிறவி எடுத்தாலும் நீதான் எனது தாய்!
"நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்!
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்!
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா!
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!
(கற்பூர)"
என்று சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்த பாடல் சட்டென்று நிற்க...அறிவிப்பு தொடர்ந்தது.
“ஓய்ங்ங்ங்ங்....ஹலோ; ஹலோ; ஹலோ; மைக் டெஸ்டிங்...... ஹலோ....அன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே, மெய்யன்பர்களே பக்தக் கோடி பெருமக்களே, இப்போது இன்னும் சற்றுநேரத்தில் இந்த ஆண்டு வரவிருக்கும் நமது முத்துமாரி அம்பிகையின் திருவிழாவை முன்னிட்டு ஊர் மகா சபைக் கூட்டம் தொடங்க இருப்பதால்; ஆங்காங்கே இருக்கும் பக்தக்கோடிப் பெருமக்கள் அனைவரும் உடனடியாக கோவில் மண்டபத்திற்கு வருமாறு கோவில் கமிட்டித் தலைவர் சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்!”
சுப்பையா கிளார்க்கும் வேகவேகமாகக் கிளம்பி கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார், செல்லும் வழியில் மீனாக்ஷி அம்மாளைப் பார்த்தார். “வணக்கம் அம்மா” என்றார்.
அம்மையார் பதிலுறுத்தார்கள் “வணக்கம் ஐயா, கோவில் கூட்டம் ஆரம்பிக்கப் போகுதுபோல கொஞ்சம் சீக்கிரம் செல்லுங்கள். அத்தோடு இந்த வருடம் எப்படியும் அம்பாளுக்கு வெள்ளிக்காப்பு வேலையை செய்து முடித்து விடுவோம் என்று தைரியமாக உறுதியும் அளித்துவிட்டு வாருங்கள்”
அன்று இரவு சுந்தரத்திடம் - அதாவது வெளிநாட்டில் இருக்கும் தன் மகனுடன் - வெள்ளிக்காப்பு சாத்துவதைப் பற்றி பேசுகிறேன் என்று தைரியம் சொல்லியும் அனுப்பினார்கள்.
“சரி அம்மா, அப்படியே செய்து விடுகிறேன்” என்று கூறியபடியே அங்கிருந்து கோவிலை நோக்கி விரைந்தார் சுப்பையா.
இங்கே மீனாக்ஷி அம்மாளைப்பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்தாக வேண்டும். அந்த அம்மா ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்க்கைபெற்று நிறையக் குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய அனுபவசாலி. அத்துடன் 75 அகவையைத் தாண்டிய பழுத்தபழம்.
எல்லோரையும் தனது பிள்ளைகளாகவே என்னும் தாயுள்ளம் கொண்ட முதியவர். அதனாலே என்னவோ முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்; கொள்ளுப் பேத்தியைப் பார்த்த அந்த அம்மாளுக்கு ஊரில் இருக்கும அத்தனை குழந்தைகளும் பேரன் பேத்திகள்தான்.
அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களின் பெரும்பாலோனோரின் குடல்ஏற்றம், சுளுக்கு, காய்ச்சல் சளி போற்றவைகளுக்கெல்லாம் வைத்தியம் பார்த்த அனுபவ சித்த வைத்தியர் அவர்.
நேரங்காலம் இல்லை, நள்ளிரவு கூட யாராவது வந்து வாயிற் கதவுகளைத் தட்டி தனது சுகமில்லாத குழந்தையை பார்க்கச் சொல்லுவது சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வு.
அந்த ஊர் மக்களைப் பொறுத்தவரையில் பல குடும்பங்களுக்கும் தாய் போன்றவர் அந்த மூதாட்டி.
தனது வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பூப்பெய்திவிட்டால் முதல் தகவல் இந்த அம்மாவிற்குத்தான் சொல்லியனுப்புவார்கள்.. வெளியூரில் இருக்கும் தாய்மாமனுக்கு கூட அதற்குப் பிறகுதான்.
அவர்கள்தான், ருதுவானப் பெண்ணையும் அவள் உடுத்தியிருந்த ஆடையையும் முதன் முதலில் பார்க்க வேண்டும். கிராமங்களில் பெற்றதாய் முதலில் அந்தப்பெண் உடுத்தியிருந்த ஆடையைப் பார்க்கக்கூடாது என்பது ஒரு வழக்கம்.
அதுதான் ராசியானது என்றும் அவ்வூர் மக்கள் நம்பினார்கள்.
அதோடு யாராவது வெளியூர் சென்றால் இந்த மீனாக்ஷி அம்மா எதிரே வந்தால்; வெளியூர் செல்பவர்கள், நல்ல காரியம் பொருட்டு செல்பவர்கள் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை.
ஆகா, புண்ணியவதியின் முகத்தில் விழித்துவிட்டு போகிறோம். அதனால் நாம் போகும் காரியம் நிச்சயம் வெற்றி என்ற ஒரு நம்பிக்கை.
இன்னும் ஒரு விஷயம். அந்த கிராமப் பஞ்சாயத்தில் தெருக்கூட்டும் சில குடும்பத்தை சேர்ந்தப் பெண்கள் தங்களது உணவிற்கு வந்து வாயிலில் நிற்பார்கள்; அப்படி வருபவர்கள் வீதியில் மூன்றுவீடுதாண்டி இருக்கும் மீனாக்ஷி அம்மாளின் கையில் ஏதாவது வாங்கிவிட்டுத்தான் வேறு வீட்டுக்கு செல்வார்கள்.
இன்னும் பல விசயங்களைச் சொல்லிக்கொண்டே போனால் நீண்டு கொண்டே போகும். இப்போது சொல்லவந்த விசயத்திற்கு வருவோம்.
ஊருக்கே தாயைப் போன்று விளங்கும் அந்த மீனாக்ஷி அம்மாள். அந்த ஊரில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரி அம்பிகையைத்தான், தனது தாயாய் எண்ணி வழிபடுவார்.
அதன் காரணமாகவும், அந்த அம்பாளின் மீது கொண்ட அதீத அன்பினாலும், பக்தியினாலும்தான், அவர்கள் ஊர் மக்களால் வருடம் தோறும் நடத்தப்படும் விழாவில், ஆறாவது மண்டகப்படியின் சார்பாக, எப்படியும் அம்பாளுக்கு வெள்ளியிலே கவசம் செய்து பூட்டி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
அதற்காக ஆகும் பெரும் தொகையைத் தாமே முன்னின்று பெற்றுத் தரவேண்டும் என்ற ஆசையும் இருந்தது.
அந்த நல்ல காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற சிந்தனையில், தனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஆறாவது மண்டகப் படியின் பொருளாளர் சுப்பையா கிளார்க்கிடம் சென்று தனது விருப்பத்தையும் அதற்காக ஆகும் தொகையில் ஒரு பெருந்தொகையைத்தானே தன் மகன் சுந்தரத்திடமும் மற்றும் தனது சொந்த பந்தங்களிடமும் பெற்றுத்தருவதாக உறுதிக்கூறி, அதுபற்றி செயலாளரிடமும் கலந்தாலோசித்து வேலையைத் தொடங்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.
சொல்லி இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.
கோவிலில் மகாசபைக் கூட்டம் துவங்கியது. முதலில் கோவில் கமிட்டி கெளரவத் தலைவர், தலைவர் இருவரும் பேசினார்கள். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டகப்படியின் செயல்பாடுகளும் விவரிக்கப்பெற்றது.
அடுத்து ஆறாவது மண்டகப்படி முறை. அதன் செயலாளர் ஆரம்பிக்கும் முன்பே. வில்லங்கம் வீராசாமி (அவரை அப்படித்தான் தான் பலரும் அழைப்பார்கள் அதில் அவருக்கும் ஒரு சந்தோசம்) தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என்று தலைவரிடம் அனுமதிக் கேட்டு எழுந்து நின்றார்.
கூட்டத்தில் கூடியிருந்த ஒருசாரார் ஆட்சேபிக்கவும், ஒருசாரார் ஆதரிக்கவும்; கடைசியாகத் தலைவர், ஒரு சத்தம் கொடுத்தார். “சும்மா இருங்கையா, நீங்க பாட்டுக்க ஆளாளுக்குப் பேசிகிட்டு இருந்தா பிறகு நாங்க எதற்குத் தலைவருன்னு இங்கே இருக்கோம்” என்றார்.
மழை பேய்ந்து ஓய்ந்தது போன்றதொரு அமைதி.
“என்னப்பா, வில்லங்கம், என்ன வேணும்?” என்றார் தலைவர்.
“ஐயா நான் இரண்டு வார்த்தைகள் பேசணும்”
“சரி, வில்லங்கம் பண்ணனும்னு வந்திட்டே, பேசு” என்றார், தலைவர் தணிகாசலம்.
“இந்த வெள்ளிக் கவசம் பற்றி ஒரு முடிவுச் சொன்னால் பரவாயில்லை! இரண்டு வருடம் போயிருச்சு. ஒன்னு இவுக செய்யணும் இல்லைன்னா.. எங்களுட்ட கொடுத்துரட்டும் நாங்க ஏழாம் மண்டகப் படி சார்பாகச் செஞ்சு கொடுக்கிறோம்” என்றார் வில்லங்கம்.
“அதான், அவுக பேசப் போராகள்ள; அதுக்குள்ளே என்ன பெரிய முந்திரிப் பருப்பாட்டம், இவரு பேசுறாரு” என்று முனங்கள் கூட்டத்தில் எழுந்தது.
“அது சரி, வெள்ளிக்காப்பு விசயமாக உனக்கு என்ன அவ்வளவு அக்கறை? அது அவுகளாக, முடிவெடுத்து முயற்சி செய்கிறாக நீங்க ஏன் அதுல மூக்கை நுழைக்கிறீக?” என்றார், தலைவர்.
“அதுக்கில்லை அவுகனாள முடியலன்னா, நாங்கச் செய்யலாம்ன்னுதான்” என்று இழுத்தார் வில்லங்கம் வீராச்சாமி.
“சரி வில்லங்கம். உன் அபிப்பிராயத்தை சொல்லிப்புட்ட, அவுக வந்து என்ன சொல்றாகன்னு பார்ப்போம்” னு சொல்லி; ஆறாவது மண்டகப் படி சார்பாக சுப்பையா கிளார்க்கை பேசச் சொன்னார், தலைவர் தணிகாசலம்.
அவரும் எழுந்து அம்பாளை வணங்கிவிட்டு பேச ஆரம்பித்தார். “நான் இங்கு முதலில் ஒன்றைக் கூற ஆசைபடுகிறேன். இந்த ஊருக்கு வயது 60 தான் எங்களது வயது அதனையும் தாண்டிவிட்டது. அதோடு இங்கு அமைக்கப்பட்ட இந்த பஞ்சாலையின் காரணமாகவே இந்த ஊர் உருப்பெற்றது. மேலும், இந்த அம்மனை ஸ்தாபித்து இந்த அம்பாளுக்கு இங்கு கோவிலைக் கட்டி குடமுழுக்கு செய்து வருடந்தோறும் திருவிழாவை நடத்தியும் வந்த பலருள் இன்றும் உயிரோடு இருப்பவர்கள் ஒருசிலரே என்னையும் சேர்த்து. மொத்தத்தில் இந்த ஊரில் வாழும் பெரும்பாலோனோர் தமிழகம் முழுவதில் இருந்து வந்து இந்தப் பஞ்சாலையில் பணியில் சேர்ந்து இங்கு குடி அமர்ந்தவர்களே. அப்படியிருக்க, இப்போது வேண்டுமானால் பக்கத்துக் கிராமங்களில் இருந்து இங்கு வந்து குடியிருந்து கொண்டு; இந்த ஊர் உங்களுக்கு சொந்தம் போலும் நாங்கள் எல்லாம் வெளியூர் போலவும் சிலர் பேசுவது தான் என்போன்றோருக்கு மிகவும் வருத்தம் தருகிறது. எனக்கு நன்குத் தெரியும்; இது போன்ற நல்ல காரியங்களை உண்மையாக, நேர்மையாக செய்பவர்களை இங்குள்ள ஒருசிலரைப் போன்றோர் நதிமூலம், ரிசிமூலம் பார்த்து அவர்களின் முயற்சிக்கு முட்டுக் கட்டையாக விளங்குவீர்கள் என்று அதற்கெல்லாம் பயப்படவில்லை பின்வாங்கவும் இல்லை; என்பதைக் கூறிக்கொள்கிறேன். நான் பிறந்தது தூத்துக்குடி. ஆனால், நான் பெரும்பாலும் எனது வாழ்நாளை இங்குதான் வாழ்ந்து கழித்திருக்கிறேன். இதுதான் எனது ஊர்; இந்த மண்ணிலேதான் எனது கட்டை வேகும்” என்று சற்று உணர்ச்சிபொங்கப் பேசினார் சுப்பையா.
அப்படியே அமைதியாக அனைவரும் கேட்டுக் கொண்டிருந்த நேரம் பார்த்து வில்லங்கம் மட்டும் தலைவரே. “இவரப் பேசச்சொன்னா?. இவர் என்னமோ ஏதேதோப் பேசுகிறார், என்னது?” என்றார்.
உடனே தலைவர், “எல்லாம் விசயமாகத்தான். நீ சும்மா இரு. அவர் பேசுவதில் உண்மை இருக்கிறது. அவைகளை நானும் கேள்விப்பட்டேன். நமக்கும் பக்கத்து கிராமம்தானே சொந்தம். ஆக சுப்பையாசார் சொல்வது போல் இந்த ஊர் அனைவருக்கும் பொதுதான். இவர்களைப் போன்ற படித்தவர்கள் பலரும் வெளியூரில் இருந்து வந்து இங்கு பலசேவைகளைச் செய்ததால், செழித்ததுதான் இந்த ஊர். 1947 -க்கு முன்பு அந்தக் காலத்திலேயே இது வெறும் நரியும், நாயும் சுத்தித் திரிந்த ஈச்சம்காடு. அதெல்லாம் உன்போன்ற இளசுகளுக்குத் தெரியாது. வேண்டுமென்றால் உங்க அப்பனிடம் சென்று கேள்” என்று வில்லங்கத்தின் வாயிற்கு நிரந்தரமான ஒரு பூட்டைப் போட்டார் தலைவர்.
“சார், நீங்க பேசுங்க!” என்றார் தலைவர். அதற்கு சுப்பையா, “நன்றி, நான் சொல்லவந்ததை தாங்களே கூறிவிட்டீர்கள். சரி விசயத்திற்கு வருகிறேன். வழக்கம்போல் எங்களுடைய மண்டகப்படியைச் சிறப்பாக நடத்தி விடுகிறோம். அதோடு அம்பாளுக்கு வெள்ளிகாப்பு செய்யும் பணியும் முடிந்து விடும்.”
தாங்கள் கூறியபடி அம்பாளுக்குத் தங்கள் மண்டகப்படி அன்று அபிசேக ஆராதனையோடு, வெள்ளிக்காப்பும் சாத்தப்படும் என்ற உறுதியையும் கூறி நிறைவு செய்தார்.
கூட்டம் முடிந்து. வீடு திரும்பிய அவர் அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்து போனார்.
மீனாக்ஷி அம்மாளின் வீட்டின் முன்பாக "ஆம்புலன்சு" வண்டி. அதைச் சுற்றி மக்கள் கூட்டம். சற்றே நிலை தடுமாறி அருகில் வந்து பார்த்தவருக்குப் பெரும் அதிர்ச்சி.. மீனாக்ஷி அம்மாளுக்கு "ஹார்ட் அட்டாக்" அதுவும் இது இரண்டாவது முறை.
இடிந்தேபோனார் சுப்பையா!. சற்று முன்னர் நன்றாக இருந்தார்களே “தாயே முத்துமாரி! எங்கள் பேசும் தெய்வத்தைக் காப்பாற்று” என்று வேண்டிக்கொண்டவர் கண்ணீர் ததும்பினார்.
அன்று முழுவதும் அன்ன ஆகாரம் இன்றி கவலையில் தோய்ந்திருந்தார் சுப்பையா. அவரின் மனைவி, எவ்வளவோ ஆறுதல் கூறியும் இவர் தேறுவதாக இல்லை.
தனது கணவருக்கு ஆறுதல் கூறினார் சுப்பையாவின் மனைவி முத்துலட்சுமி டீச்சர்.
“திருமணமாகி இங்கே வந்து, பிள்ளைகள் பெற்று அவர்களையெல்லாம் வளர்த்து; படிக்க வைத்து; திருமணம் செய்து கொடுத்து; பேரன் பேத்திகளை பார்க்கும் வரைக்கும்; தனக்கும் தன் குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டில் இருந்துக் கொண்டு ஒரு தாயாய் இருந்த மீனாக்ஷி அம்மாளுக்கு ஒன்றும் நடக்காது” என்று தன்னை அவர் தேற்றிக் கொண்டார்.
எது எப்படியோ, பிறந்தவர் ஒருநாள் மாண்டுதானே போக வேண்டும். சூரியன் மறைந்தது, சுடர் ஒளியும் பிரிந்து. மீனாக்ஷி அம்மாளும் மறைந்து காரியங்களும் முடிந்து மூன்று நாட்கள் ஆகியும் விட்டது.
சுந்தரம் தனது தந்தையை தன்னோடு அழைத்துச் செல்ல அவசரம் அவசரமாகப் பயணக் கடவுச் சீட்டு (Passport ) வெளிநாட்டு நுழைவு அனுமதி சீட்டு ( VISA ), விமானப் பயண சீட்டு (Flight ticket) என்று இவைகளை வாங்குவதில் மும்மரமாக இருந்தான்.
அப்போது சுந்தரத்தின் தந்தை தன் மகனிடம் கூறினார்.
“தம்பி, உன் அம்மா கடைசி நிமிடத்தில் என்னிடம் பேசும்போது, கவலைப்படாதீர்கள்; நான் போய்விட்டால் என்ன?, தம்பி சுந்தரம் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்றாள். அவள் இறக்கும் தருவாயிலும் என்னைப் பற்றிய அக்கரைதான்” என்று தனது வறண்டு போன விழிகளில் நீர் ததும்ப தழுதழுத்த குரலில் கூறினார். 82 வயது நிரம்பியவர் சுந்தரத்தின் அப்பா.
“தாங்கள் எதையும் நினைத்துக் கவலைப்படாதீர்கள். நாங்கள் இருக்கிறோம் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம்” என்றான் சுந்தரம்.
“இன்னொரு முக்கியமான விஷயம்; உன் அம்மாவின் விருப்பப்படி முத்துமாரி அம்பாளுக்கு வெள்ளிக்காப்பு செய்ய முன்தொகையாக போன வருசம் நீயும் ஒரு தொகையை கொடுத்தாய் அல்லவா?. ஆனால் அது இன்னும் செய்து முடிந்தபாடில்லை. இன்னும் கொஞ்சம் பணம் தேவைப் படுகிறது அதற்கு கூட உள்ளூர், வெளியூர் என்ற பெரும் சர்ச்சை எல்லாம் மகாசபைக் கூட்டத்தில் வந்து விட்டது. இருந்தும் உன் அம்மா கொடுத்த தைரியத்தில் சுப்பையா அண்ணனும் (சுந்தரம் அப்படித்தான் அவரை அழைப்பான்) கோவில் மகாசபைக் கூட்டத்தில் இந்த வருடமே அம்பாளின் வெள்ளிக்கவச வேலைகளை முடித்து விடுவதாக உறுதிகூறி வந்துவிட்டார். ஆக, ஆரம்பித்து வைத்தது உன் அம்மா,” என்று சுந்தரத்தின் அப்பா சொல்லி முடிக்கும் முன்பே. “சரி அப்பா, அதனால் என்ன நாமே அந்த மீதத்தொகையையும் தந்து அம்பாளின் வெள்ளிக்கவச வேலையை பூர்த்தி செய்து விடுவோம்” என்று கூறினான் சுந்தரம்.
“எப்படியோ உன் அம்மாவின் ஆசையும் நிறைவேறும், அவளின் ஆத்மாவும் சாந்தியடையும்” என்று கூறி; இருவரும் அப்போதே பக்கத்து வீட்டிற்குச் சென்று, சுப்பையாவைக் கண்டு, தேவையான மீதத் தொகையென; அவர்கூறிய ரூபாய் 36 ஆயிரத்தை எண்ணிக் கொடுத்தார்கள்.
அப்போது சுப்பையா சொல்வார், “தம்பி சுந்தரம் இது அம்மாவின் ஆசை; நான் கடைசியாக அவர்களிடம் பேசும் போது கவலைப் படாதீர்கள் தம்பியிடம் பேசி மீதத்தையும் தரச் சொல்கிறேன் என்று உறுதியாக சொன்னார்கள்.
இப்போது அம்மா சொன்னபடியே செய்துவிட்டார்கள்; ஆனால் இதை அவர்கள் இருந்து கொடுக்கும் முன் அந்த அம்பாள் அழைத்து கொண்டு விட்டாளே” என்று கூறியபடியே கண்ணீர் கன்னங்களில் தாரைத் தாரையாய் வடிய; கரங்கள் இரண்டும் நடுங்க சுந்தரம் தந்ததொகையைப் பெற்றுக்கொண்டார்.
தனது தாய் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, அவரின் ஆத்மாவையும் சாந்தமடையச் செய்து, தனது தந்தையோடு சுந்தரம் ஊருக்குப் புறப்பட்டான்.
விமானம் வான்வெளியில் பறந்தது. அவன் அங்கு பார்த்த மேகக் கூட்டங்களுக்குள் இருந்து தன் அம்மா மீண்டும் வரமாட்டாளா? அல்லது கையசைக்கவாது மாட்டாளா? என்ற இனம் புரியாத ஏக்கம் அவனை ஆட் கொண்டது.
எத்தனை வயதானாலும் பெற்றவள் இல்லையா! தாய் இல்லையா! தனது உதிரத்தை பாலாக்கித் தந்தவளில்லையா! எத்தனை நாட்கள், தான் கண்ணயராது நம்மைக் காத்திருப்பாள்!! என்ற எண்ணம் பலவாறு மோதி கண்களில் கண்ணீர் ஆறாய்ப்பெருகி ஓடியது. ஓடட்டும் அது தானே அவன் இதயத்தின் கனத்தைக் குறைக்க வல்லது. தனது தந்தையோடு விமானத்தில் அமர்ந்திருந்தவன் சிந்தை மட்டும், அவன் அம்மாவின் மறைவு நாள் நிகழ்ச்சியில் மட்டுமே உழன்றுக் கொண்டிருந்தது.
தனது தாயை தான் வாழும் நாட்டிற்கு அழைத்து சென்று கவனித்துப் பார்க்க ஆசைப் பட்டவன் சுந்தரம். ஆனால் அது கடைசிவரை நிறைவேறாமல் போய்விட்டது.
தாய் இறந்த அன்று ஊரே கூடி நின்று, “ அம்மா! அம்மா!! எங்களைவிட்டு சென்றுவிட்டீர்களே; இனி யாரிடம் போவோம்?” என்று கதறி அழுததை எண்ணிப்பார்த்த சுந்தரம், தனது தாய் எவ்வளவு உயர்ந்தவள் இப்படி ஒரு தாயிற்கு மகனாகப் பிறக்க நாம் எவ்வளவு புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று அந்த சோகத்திலும் ஒரு மயக்கம் கொண்டான்.
அத்தனை நினைவுகளும் அவன் இதயத்தை இறுக்கிப் பிழிந்த நேரத்தில் தான் தனது அம்மாவிற்கு முதன் முதலில் வாங்கித்தந்த. தனது அம்மாவிற்கு மிகவும் பிடித்த சந்தனமும் குங்குமமும் கலந்த நிறமுள்ள அந்தப் பட்டுப்புடவையும் அவளின் உடலோடு சேர்த்து அக்கினிக்கு வார்த்த அந்த துயரக் காட்சி மனதில் மின்னலாய்த் தோன்றி மறைந்தது. இதயத்தில் இடியாய் இறங்கியது.
அவனையும் மீறி சுந்தரம் துக்கம் தாங்காமல் சத்தமிட்டு அழுது விட்டான். அவன் அழும் சத்தத்தில் கண்விழித்த அவனது தந்தை. “சரி, அழுகாதே! ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டோர் வருவதில்லை" தைரியமாக இரு. என்று சுந்தரத்தின் கைகளை இறுக்கிப் பிடித்தார்.
இருந்தும், தனது அம்மாவை நினைத்து மீண்டும் மீண்டும் அழுதபடியே விமானத்தில் பயணமானான் சுந்தரம்.
சில மாதங்களுக்கு பிறகு சுப்பையா கிளார்க் அனுப்பிய ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் வெள்ளிக்கவசம் பூட்டிய படம் ஒன்றை பெற்று இன்றும் அதை வீட்டு பூஜை அறையிலே வைத்து வணங்கிவருகிரார்கள் சுந்தரம் குடும்பத்தினர்.
“தனக்கு மட்டும்தான் உறவு என்று கொள்ளமுடியாத ஓர் உயரிய தெய்வீக உறவு உனது உறவு அம்மா. உன் நினைவுகள் என்றும் என் உடல், உதிர அணுக்கள் ஒவ்வொன்றிலும் மட்டும் அல்ல என் ஆத்மாவிலும் நிலைத்து இருக்கும். இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு அம்மாவாக வேண்டும். இறைவியிடம் வேண்டிக்கொள்கிறேன்”
2 comments:
சிவயசிவ ....
வணக்கம் தோழரே..
வாழ்த்த வார்த்தைகள் வரவில்லை ..
அன்னைத்தமிழையே துணைக்களித்தேன்..
இதோ..
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே...
வாழ்த்துதுமே..
அன்னைத்தமிழ் வாழ்க.. வளர்க..
சிவனருள் முன் நிற்கட்டும் என வாழ்த்தும்.
அன்பன் சிவ. சி.மா.ஜா.
ஆஹா! ஆஹா!!...
நன்றி! நன்றி!! தோழரே...
அன்னைத் தமிழ்த்தாய் வாழ்த்துக்களுடன் வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி.
அன்பிற்கு வணக்கங்களும்.
Post a Comment