பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Friday, 13 April 2012

நந்தனத்திற்கு இதயம் கனிந்த வந்தனம்!

நந்தனத்திற்கு இதயம் கனிந்த வந்தனம்!
வந்தேபல செல்வங்களும் இங்கே தங்கணும்
நல்லாரும் வாழ்ந்திட; தீயோரும் திருந்திட 
பொல்லாரே இல்லாதுபோக வேண்டுமென்று  
எல்லாம் வல்ல இறைவனை இப்போதே 
இந்நாளில் பணிந்தே வணங்கு வோம்.

கல்வியும் கேள்வியும் சிறக்க வேண்டும்
கணினியின் அற்புதம் பெருக வேண்டும்
இல்லாதவர் இல்லாதொழிய வேண்டும்
இருப்பவர் யாவருக்கும் கொடுக்க வேண்டும்
வறுமையும் கொடுமையும் மடிய வேண்டும்
மனிதநேயம் எல்லோரிடமும் வளரவேண்டும்.

சொல்லால் கொல்லும் கொடுமை போகவேண்டும்
முள்ளாய் குத்தும் கவலையும் சாகவேண்டும் 
கல்லாய்ப் போன மனங்களும் கனியவேண்டும்
நில்லாது தொடரும் போரும் ஒழிய வேண்டும் 
கல்லாதுசெயும்  பொல்லா தொழிலதிபரும் திருந்தவேண்டும்
எல்லாம்வல்ல இறைவனும் அருளவேண்டும். 


அனைவருக்கும் இனிய நந்தன வருடத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இறைவன் அருள் பெற்று வாழ்க! வளமுடன்!!


Wednesday, 11 April 2012

தந்தையே இது விந்தையே!




பரமன் அழித்த முப்புரம் - மீண்டும்  
பரா(ரம)சக்திப் படைத்த அற்புதம்!


சோதியனே சுடர்மிகு ஞான வடிவானவனே 
வேதியனே வேதமாக நின்றொளிரும் தூயவனே 
தேவி ஒருபாகனே அண்டங்களாயிரம் கடந்த  
ஆதி அந்தமில்லா அமுதே

முதே அறிவே ஆனந்தமே - அடியார்
குமுத மனம் துதிக்கும் கோவே  
அமு(மிர்)தம் தரவே ஆலகாலம் உண்ட
குமுதவல்லி தொழும் தேவனே!

தேவனே தேவாதி தேவனே ஆதிமூலனே 
மூவரின் அன்னை முழுமுதற் காதலனே 
மூவாமருந்தே முப்புரம் அழித்தவனே எப்புறமும்
மேவ எங்கும்நிறை பிரம்மமே!

பிரம்மமே ஆதிஅந்த மில்லாத்தூய பேரொளியே  
பிரபஞ்ச அமைதியில்; விழைந்த விருப்பத்தால் 
பிரக்ஞை மேவி ஒளிகீற்றாய் உடைபட்டே 
பிராணனோடு ஆகாயம்சேர் ஞாயிறே!

ஞாயிறாய் ஒளிரும் அக்னிப் பரமனொடு 
ஞமர்சக்தியும் கொஞ்சிக் குலவி ஞெகிழிஒலிக்க
ஞமலிஉண்ட தோர்ஞஞ்சை மேவப்பெருங் கூத்தாடி 
ஞான்று ஞெகிழடுதீ பொங்கியதே!

(ஞமர் - பரந்து விரிந்த 
ஞெகிழி - சலங்கை 
ஞமலி – கள்  / மயில் 
ஞஞ்சை - மயக்கம்
ஞான்று - அந்த நேரம் / அப்பொழுது 
ஞெகிழடுதீ =ஞெகிழ் + அடுதீ = உருகிப் பெருகிய பெரும் தீ.




பொங்கிய பேரொளி பரவெளி எங்கும் 
தங்கிதோடு டையோன் உடுக்கை யொலியோடு 
சங்கும்பெரும் பறையும் சேர்ந்தொலிக்க வெடித்து 
வெங்கனல்தெறித்து சக்திசமைத்தது  முப்புரமே.

முப்புரமேவிய செந்தீப்பந்துகள் சக்கரமாயோடி முட்டிமோதி 
எப்புறமும் வியாபித்தேநிற்கும் சக்தியின் ஆளுமையிலே 
முப்பொழுதும் முடிவில்லா மூலத்தின் மேனியாக  
எப்பொழுது மெழில்கொஞ்சுகிற சோதியனே!